திருமண ஆசை காட்டி ஆன்-லைனில் மோசடி; "வலை விரித்து ஏமாற்றும் இளம்பெண்| Dinamalar

தமிழ்நாடு

திருமண ஆசை காட்டி ஆன்-லைனில் மோசடி; "வலை' விரித்து ஏமாற்றும் இளம்பெண்

Added : பிப் 12, 2015
Share

திருப்பூர் : இணைய தளத்தில் பெண் தேடும் இளைஞர்களை குறி வைத்து, பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டுள்ள சென்னையை சேர்ந்த இளம்பெண்ணால், பலரும் பணம் இழந்து தவிக்கின்றனர்.
மேட்டூர், மாசிலாபாளையத்தை சேர்ந்தவர் பிரான்சிஸ் சேவியர், 30. "குவாலிட்டி கண்ட்ரோலராக', திருப்பூரில் பணியாற்றுகிறார். திருமணம் செய்ய, பெண் தேடி, இணையதளத்தில் பதிவு செய்தார். கடந்த நவ., மாதம் தொடர்பு கொண்ட சென்னையை சேர்ந்த இளம்பெண், தன்னை ஜெலின் சிந்தியா, 22 என கூறி, தொடர்ந்து பேசியுள்ளார். "சாப்ட்வேர்' நிறுவனத்தில் பணிபுரியும் தனக்கு, ஒரு "புராஜெக்ட்'டுக்கு பணம் தேவை; தாய் மருத்துவ சிகிச்சைக்கு பணம் அவசரம் என கூறி, 1.21 லட்சம் பணம் பெற்றுள்ளார். அதன் பின்னரே, அவர் திருமணமானவர், பெயர் அனிதா என தெரியவந்துள்ளது. சில நாட்களுக்குபின், ஏமாற்றப்பட்டதை அறிந்த சேவியர், அனுப்பர்பாளையம் போலீசில் புகார் செய்தார்.அனிதா மேலும் பணம் கேட்டபோது, தர்மபுரிக்கு வருமாறு அழைத்தார். நேரில் வராத அனிதா, தங்கை என சோனியா, 16 மற்றும் நண்பர் ராஜேந்திரன், 20, ஆகியோரை அனுப்பியுள்ளார். அவர்களை தர்மபுரி போலீஸ் உதவியுடன் பிடித்து, அனுப்பர்பாளையம் அழைத்து வந்தார். சம்பந்தப்பட்ட அனிதா இல்லாமல், எதுவும் செய்ய முடியாது என போலீசார் திருப்பி அனுப்பி விட்டனர்.
மோசடி செய்யப்பட்டது தொடர்பாக, "பேஸ்புக்'கில், அனிதா குறித்த விவரங்களுடன் சேவியர் பதிவு செய்தார். அதை பார்த்து, சேலத்தை சேர்ந்த சாமி என்பவர், அதே அனிதாவிடம், தான் ஏமாந்த பிரச்னையை தெரிவித்தார். பழைய பொருட்கள் விற்பனை செய்வதாக, இணைய தளத்தில் விளம்பரம் செய்து, தனது மொபைல் போன் மற்றும் "டிவி'யை விற்பதாக அனிதா தந்த விளம்பரத்தை பார்த்து, ஆயிரக்கணக்கில் பணம் அனுப்பி, அவர் ஏமாந்துள்ளார்.
சேவியர் மற்றும் சாமி ஆகியோர் கூறுகையில், "பலவிதங்களில் இப்பெண் பலரையும் மோசடி செய்துள்ளார். வேறு யாரும் அவரிடம் ஏமாறாமல் இருக்க வேண்டும். வக்கீல்கள் மற்றும் அடியாட்களுடன் அவர் வலம் வருவதாகத் தெரிகிறது. போலீசிடம் புகார் செய்தாலும், முறையாக விசாரிப்பதில்லை. முதல்வர் தனிப்பிரிவுக்கு அனுப்பிய மனு மீதும் நடவடிக்கை இல்லை. எங்களை போல் பலரும் அவரிடம் பணம் இழந்திருக்க வாய்ப்புள்ளது. அவர், இணைய தளத்தில் தொடர்ந்து விளம்பரம் செய்து வருகிறார். போலீசார், விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X