நேரு - போரும் சமாதானமும்| Dinamalar

நேரு - போரும் சமாதானமும்

Updated : பிப் 13, 2015 | Added : பிப் 13, 2015 | கருத்துகள் (2)
Advertisement
நேரு - போரும் சமாதானமும்

சோவியத் நாட்டில் காணப்பட்ட போருக்குப் பிந்தைய நிலைமைகளையும் நடமாட்டத்துக்கும் கலந்து பழகுவதற்கும் இருந்த கட்டுப்பாடுகளையும் ஒப்பிடுகையில், அமெரிக்காவில் நிலவிய எதையும் மூடி மறைக்காத வெளிப்படைத் தன்மையும், செல்வச் செழிப்பும் மாபெரும் அளவுக்கு வேறுபட்டிருந்தது. அமெரிக்காவில் விஜயலட்சுமி எல்லோருக்கும் நன்கு அறிமுகம் ஆகியிருந்தார். 1945-இல் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற மாநாட்டின்போது அரங்குக்கு வெளியே இந்திய விடுதலை இயக்கத்தின் அதிகாரபூர்வக் குரலாக முழங்கியவர் என்ற முறையில் அவர் ஆதரவையும் அனுதாபத்தையும் பெற்றிருந்தார். அந்த மாநாட்டில் இந்தியாவின் அதிகாரபூர்வ தூதுக் குழுவினராகப் பங்கேற்றவர்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டவர்கள். அதைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஐ.நா. பொதுப் பேரவைக் கூட்டத்தில் இந்தியத் தூதுக் குழுவின் தலைவராகப் பங்கேற்றவர் என்ற முறையில் அவர் முத்திரை பதித்திருந்தார். அமெரிக்காவில் அவருக்கு நல்ல நண்பர்கள் இருந்தனர். ட்ரூமன், ஐசனோவர் ஆகிய அமெரிக்க அதிபர்கள் இருவரின் தனிப்பட்ட மதிப்பையும் அவர் பெற்றிருந்தார். இந்தியத் தூதர் என்ற முறையில் தனது தகுதிப் பத்திரங்களை அவர் அதிபர் ட்ரூமனிடம்தான் அளித்தார். 1953-54-இல் ஐ.நா. பொதுப் பேரவைக் கூட்டத்தின் தலைவராக இருந்தார் என்ற முறையில் விஜயலட்சுமியை அதிபர் ஐசனோவர் பேசுவதற்கு அழைத்திருந்தார். ஆனால் வாஷிங்டனில் அவருக்கு அளிக்கப்பட்டிருந்த இந்தியத் தூதர் என்ற பணி உள்நாட்டுச் சூழல், சர்வதேசச் சூழல் ஆகியவற்றின் அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தது. பியர்ல் பக், லிலியன் ஹெல்மேன், திருமதி ரூஸ்வெல்ட் ஆகிய அமெரிக்க குடிமக்களை கம்யூனிஸ்ட் சார்புநிலை கொண்டவர்கள் என செனட்டர் மெக்கார்த்தியின் பிரசாரம் குற்றம்சாட்டியது. தொலை கிழக்கு விவகாரங்களில் தலைசிறந்த வல்லுநர் எனப் புகழ்பெற்ற ஓவன் லாட்டிமோரை உயர் அதிகாரம் படைத்த சோவியத் ஏஜென்ட் என்றும் அது பழி சுமத்தியது. நீதிபதி டோரத்தி கென்யோனுடைய நீதி விசாரணையை சென்று பார்வையிட்ட விஜயலட்சுமி அந்த விசாரணை நடத்தப்பட்ட விதத்தைக் கண்டு அதிர்ச்சியும் அச்சமும் அடைந்தார். 'அதிகரித்து வரும் வெறுப்பு அலை என்னை அச்சமடைய வைக்கிறது' என்று 1950 மார்ச் 27-இல் தனது சகோதரருக்கு எழுதிய கடிதத்தில் அவர் எழுதியிருக்கிறார். 'அது இந்தக் கரைகளையும் தாண்டிச் சென்று உலகத்தின் மற்ற பகுதிகளையும் மூழ்கடிக்கக் கூடிய மெய்யான ஆபத்து நிலவுகிறது' என்று அவர் கூறியிருக்கிறார்.அந்தக் காலகட்டத்தில், ஜப்பானிய அமைதி ஒப்பந்தத்துக்கான முன்வடிவு ஒன்று நீண்டகால விவாதத்தில் இருந்து வந்தது. ஆசியாவில் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு தளமாக ஜப்பானை ஆக்குவதற்கு ஒப்பந்தத்தில் கையெழுத்திடக்கூடிய நாடுகள் ஒப்புக் கொள்ள வேண்டும் என அமெரிக்கா விரும்பியது. ரஷ்யாவையும் சீனாவையும் விலக்கிவிட்டு செய்து கொள்ளும் அமைதி ஒப்பந்தம் தொலைக் கிழக்கில் பதற்றங்களைத் தணிப்பதற்கு எந்தவகையிலும் உதவாது என்று நேரு கருதினார். அமெரிக்க ஆக்கிரமிப்பு முடிவுக்கு வந்த பிறகு ஜப்பானில் வெளிநாட்டுப் படைகள் தொடர்ந்து இருப்பதை நேரு ஆதரிக்கவில்லை. கூட்டு ராணுவ உத்தரவாதத்தில் பங்கேற்பதற்கும் அவர் இணங்கவில்லை. அந்த ஒப்பந்தம் குறித்து பொதுவான கருத்தொற்றுமையும் ஐ.நா.வின் ஆதரவும் இருக்கும் எனில், இது போன்ற உத்தரவாதம் எதுவும் இருக்க வேண்டும் என்ற தேவை இல்லை. பாதுகாப்பு, பொருளாதார அம்சங்களுக்கும் அப்பால் அந்த அமைதி ஒப்பந்தத்தினால் ஜப்பானிய மக்களுக்கு என்ன விளைவுகள் ஏற்படும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று நேரு வலியுறுத்தினார். இந்தியாவின் தூதர்களாக சீனாவில் இருந்த பணிக்கர், ரஷ்யாவில் இருந்த ராதாகிருஷ்ணன், பிரிட்டனில் இருந்த கிருஷ்ண மேனன், வெளியுறவுத் துறை செயலராக இருந்த கே.பி.எஸ்.மேனன் ஆகிய அனைவரும் அமெரிக்காவால் வடிவமைக்கப்பட்ட அந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். அந்த ஒப்பந்த முன்வடிவில் மாற்றங்கள் எதையும் செய்வதை அமெரிக்கா ஏற்கவில்லை. தனது எதிர்ப்புகளைப் பதிவு செய்த பிறகு இந்தியா அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று விரும்பிய விஜயலட்சுமிக்கு நேரு பின்வருமாறு கடிதம் எழுதினார்:'எல்லா வாதங்களுக்கு உள்ளேயும் நான் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அந்த ஒப்பந்தத்தில் நாம் கையெழுத்திடுவதால் ஏற்படக்கூடிய நீண்ட கால விளைவுகளை நீ புரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். அவ்வாறு கையெழுத்திடுவது என்பது இதுவரையில் நாம் சொல்லி வந்ததற்கும் செய்து வந்ததற்கும் நேர் மாறானது என்று பொருளாகும். நிர்பந்தத்தினால் அல்லது அச்சத்தினால், தொலை கிழக்கிலும் ஆசியாவிலும் அமெரிக்கக் கொள்கைக்கு நாம் அடிபணிந்துவிட்டோம் என்று அர்த்தமாகும். அதில் கையெழுத்திடாவிடில் ஏற்படும் விளைவுகள் என்றால் அமெரிக்காவில் நமக்கு எதிராக பெரும் பகைமை உணர்வு ஏற்படும் என்று பொருளாகும். அதை நான் உணர்ந்திருக்கிறேன். ஆனால், அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடக் கூடாது என்பதில் என் மனம் இன்னமும் தெளிவாகவே இருக்கிறது... ஜப்பானுடன் எளிதான இருதரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு நாம் முன்னுரிமை அளிப்போம்' என்று கூறியிருந்தார்.
விவாதிப்பதற்காக காலைச் சிற்றுண்டிக்கு அழைத்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் பாஸ்டர் டல்லஸிடம் தனது அரசாங்கத்தின் கருத்தை விஜயலட்சுமி எடுத்துரைக்க வேண்டி இருந்தது. ஒப்பந்தம் தொடர்பாக வழிகாட்டுதலை வேண்டி இரவு முழுவதும் பிரார்த்தனை செய்ததாக அறையில் நிதானமாக நடந்தவாறு ஜான் பாஸ்டர் டல்லஸ் விஜயலட்சுமியிடம் குறிப்பிட்டார். அமெரிக்காவின் நிலைக்கு ஆண்டவனே ஆசிர்வாதம் வழங்கிவிட்டார் என்று என்னை அவர் நம்ப வைத்திருந்தாலும் வைத்திருக்கக் கூடும் என்று அதன் பிறகு தனது சகோதரரிடம் விஜயலட்சுமி தெரிவித்தார். 'எங்கள் பிரதமர் ஆண்டவனின் கருத்தை ஏற்கவில்லை என்பதை அவரிடம் விளங்க வைப்பது எனக்குப் பெரிதும் கடினமாக இருந்தது.'
ஜப்பான் அமைதி ஒப்பந்தம் 1951 செப்டம்பர் 8-இல் சான்பிரான்சிஸ்கோவில் கையெழுத்தானது. இந்தியா அதில் கையெழுத்திடவில்லை. அதே நாளில், ஒப்பந்தம் கையெழுத்தான உடனே, ஜப்பானுக்கு எதிரான போர் நிலையை முடிவுக்குக் கொண்டு வர விரும்புவதாக ஜப்பானிடம் இந்தியா தெரிவித்தது.
நிற வேற்றுமை என்பது வாஷிங்டனில் ஒரு அசிங்கமான யதார்த்தமாக இருந்தது. அமெரிக்க வெளியுறவுத் துறை இணை அமைச்சர் பதவியை ரால்ப் பஞ்ச் ஏற்க மறுத்துவிட்டது பரபரப்பு செய்தி ஆகியிருந்தது. அரசியல் விஞ்ஞானியான ரால்ப் பஞ்ச் 1947-இல் ஐ.நா.வின் நிரந்தர செயலகத்தில் அதனுடைய அறப்பணிகள் துறை இயக்குநராக சேர்ந்தார். 1949-இல் அரபு - இஸ்ரேல் போர் நிறுத்தத்துக்கு சமரசப் பேச்சில் தலைமை தூதராகப் பணியாற்றினார். அதற்காக அவருக்கு ஓராண்டுக்குப் பிறகு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
1949 இலையுதிர் காலத்தில் அமெரிக்காவுக்கு நேரு முதன்முதலாக வருகை தர இருப்பது தொடர்பாக திட்டமிடுவது பற்றி 1949 செப்டம்பர் 16-இல் நேருவுக்கு விஜயலட்சுமி பின்வருமாறு கடிதம் எழுதினார்: 'உங்கள் வருகையை எதிர்பார்த்து நாட்களை நான் எண்ணிக் கொண்டிருக்கிறேன்... தொலைவு மற்றும் நேரமின்மை காரணமாக நீக்ரோ பல்கலைக்கழகம் ஒன்றுக்கு நீங்கள் செல்வதற்கான வாய்ப்பை எங்களால் ஏற்படுத்தித் தர முடியவில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். நீக்ரோக்களுக்கு எதிராக அதிகரித்து வரும் பகைமை குறித்தும், அதிகரித்து வரும் படுகொலைகள் பற்றியும் அதிகாரபூர்வமற்ற தனிப்பட்ட முறையில் மிகவும் சுதந்தரமாகவும், வெளிப்படையாகவும் உங்களுடன் கூடிக் கலந்து பேசலாம் என்று ரால்ப் பஞ்ச், வால்டேர் ஒயிட் போன்ற சிலருக்காக சில யோசனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இப்போதைய உங்களது தகுதி நிலையில் இருந்து பங்களிப்பு செலுத்துவதற்கு இது பொருத்தமான விஷயமாக இருக்காது என்பதே என்னுடைய எண்ணம். ஆனால், முன்னணி நீக்ரோக்கள் சிலருடனும் திருமதி ரூஸ்வெல்ட் உள்பட இரண்டு மூன்று வெள்ளையர்களுடனும் முற்றிலும் தனியாக சந்தித்துப் பேசுவது பெருமளவுக்குப் பயனளிக்கும் என்று ரால்ப் பஞ்ச், ஒயிட் ஆகிய இருவரும் கருதுகின்றனர். அவர்கள் விவாதிக்க விரும்புகிற விஷயம் விலக்கி வைக்கப்பட்ட ஒன்றாக இருந்தாலும், ரால்ப் பஞ்சையும் மற்றவர்களையும் தனியாக, சாதாரண முறையில் சந்தித்துப் பேசுவது பயனுள்ளதாக இருக்கும் என்று கருதுகிறேன். பால் ராப்சன் பெரிய அளவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருப்பதால் அவரை நான் சந்திக்கவில்லை. சமீபத்தில் ஒரு நாள் என்னுடைய விமானம் விமான நிலையத்துக்கு சென்றிறங்கியபோது அவர் வெளியே வந்து கொண்டிருந்தார். அவரிடமிருந்து சில அடி தூரத்தில்தான் நான் இருக்கிறேன் என்பதை அவர் அறிந்ததால் அவர் என்னை சந்திக்க விரும்பியிருக்கிறார். ஆனால் பொது இடத்தில் அவரை நான் சந்திப்பேனா என்பது தெரியாமல் ஒதுங்கி இருந்திருக்கிறார். இது என்னை வருத்தமடையச் செய்கிறது. ஆனால் அமெரிக்காவுக்கும் பால் ராப்சனுக்கும் இடையிலான நிலைமை முற்றிலும் வினோதமாக இருக்கிறது...அவருடன் பேசுவது அல்லது அவருடன் சேர்ந்து அல்லது அவரது குடும்பத்தினருடன் சேர்ந்து காணப்படுவது அமெரிக்க வெளியுறவுத் துறைக்கு எதிரான விரும்பத் தகாத செயலாகக் கருதப்படுகிறது.'
=========நேரு : உள்ளும் புறமும் நயன்தாரா சகல்தமிழில்: ஜெயநடராஜன்கிழக்கு பதிப்பகம்பக்கம் 320 விலை ரூ 200இணையத்தில் புத்தகத்தை வாங்க : https://www.nhm.in/shop/978-93-5135-152-8.htmlஃபோன் மூலம் புத்தகத்தை வாங்க : 09445901234 / 09445979797வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ad Appavi - Periyakulam,இந்தியா
14-பிப்-201523:01:05 IST Report Abuse
Ad Appavi தங்களை தாங்களே அறிவாளிகள் என்று நினைத்து கொண்டு யாருக்கோ ஜால்ரா அடிக்க நினைத்து வரலாற்று பொருளாதாரம் ,அரசியல் அறியாமையில் இருப்பவர்கள் சுற்றியுள்ளவர்களை பற்றி தெரிந்து கொள்ளவும் மாட்டார்கள் , சுய சிந்தனையுடனும் இருக்க மாட்டார்கள்
Rate this:
Share this comment
Cancel
Narayan - Zurich,சுவிட்சர்லாந்து
13-பிப்-201513:18:24 IST Report Abuse
Narayan உங்கள நீங்களே சொல்லிக்கறீங்களா இல்ல இந்த புத்தகம் எழுதியவரை சொல்றீங்களா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X