சிதம்பரம்: கடல்வாழ் உயிரியல் துறை ஆராய்ச்சி மாணவர்களுக்கு "கடல் பாசி வளர்த்தல்' குறித்த சிறப்பு பயிற்சி முகாம் பரங்கிப்பேட்டை உயராய்வு மையத்தில் நடந்தது. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகம் கடல்வாழ் உயிரியல் உயராய்வு மையம் மற்றும் ஹைதராபாத் தேசிய மீன் வளர்ச்சிக் கழகம் சார்பில் கடல் வாழ் உயிரினங்கள் ஆராய்ச்சித் துறை மாணவ, மாணவியர்களுக்கு "கடல்பாசி வளர்ப்பு' குறித்த 5 நாள் பயிற்சி முகாம் பரங்கிப்பேட்டை உயராய்வு மையத்தில் நடந்தது. பயிற்சிக்கு, சென்னை இந்திய நீர் வாழ் உயிரின வளர்ப்பு மைய தலைவர் சக்திவேல் தலைமை தாங்கி பயிற்சி முகாமைத் துவக்கி வைத்தார். சென்னை பல்கலைக் கழகம், சென்னை பச்சையப்பா கல்லூரி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம், காந்தி கிராமம் பல்கலைக் கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகம் ஆகிய ஆராய்ச்சி மாணவர்கள் 25 பேர் மற்றும் அண்ணாமலை பல்கலைக் கழக மாணவர்கள் பங்கேற்றனர். இவர்களுக்கு குஜராத் மத்திய உப்பு மற்றும் கடல்நீர் ஆராய்ச்சி மையம் துணை இயக்குனர் முனைவர் சுப்பா ராவ், இந்திய நீர் வாழ் உயிரின வளர்ப்பு மைய தலைவர் சக்திவேல், பாரதிதாசன் பல்கலைக் கழக நுண்ணுயிரியல் துறை தலைவர் தாஜூதீன், அழகப்பா பல்கலைக் கழக தொழில் நுட்பவியல் துறை பேராசிரியர் வீரரவி ஆகியோர் கடல் பாசி வளர்ப்பு முறை, வளரும் சூழ்நிலை, பயன்பாடுகள், சாகுபடி தொழில் நுட்பம், விற்பனை முறைகள் குறித்து கருத்துரை வழங்கினர். நிகழ்ச்சியில், அண்ணாமலை பல்கலைக் கழக பேராசிரியர்கள் வீரப்பன், சீனிவாசன், சண்முகம், சோமசுந்தரம், கலைச்செல்வம், அருளரசன் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். திட்ட ஒருங்கிணைப் பாளர் பேராசிரியர் ஆனந்தராமன் நன்றி கூறினார்.