பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே துணை சுகாதார நிலையத்திற்குட்பட்ட இடத்தில் குடியிருப்பவர்கள் மாற்று இடம் கேட்டு எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணனிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லூர் துணை சுகாதார நிலையத்திற்குட்பட்ட இடத்தில் மேலக்குப்பத்தை சேர்ந்த சுமார் 20க்கும் மேற்பட்டவர்கள் குடிசை வீடுகள் கட்டி குடியிருந்து வருகின்றனர். துணை சுகாதார நிலையத்திற்கு போதுமான கட்டடங்கள், சுற்றுச்சுவர் கட்ட இட வசதி இல்லை. இதனால் துணை சுகாதார நிலைத்திற்குட்பட்ட இடத்தில் குடியிருப்பவர்களை காலிசெய்ய வலியுறுத்தப்பட்டதால் அவர்கள் எம்.எல்.ஏ., விடம் முறையிட்டனர். அதனைத் தொடர்ந்து நேற்று பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ., துணை சுகாதார நிலையத்திற்குச் சென்று பார்வையிட்டு, மாற்று இடம் ஒதுக்கித்தர ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார். வருவாய் ஆய்வாளர் பிரகாஷ், மாவட்டக்குழு உறுப்பினர் ஜெயசீலன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் முகமது ஆசாத், நிர்வாகிகள் பரமானந்தம், கலைச் செல்வன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.