காதலாகி... கசிந்துருகி... இன்று காதலர் தினம்| Dinamalar

காதலாகி... கசிந்துருகி... இன்று காதலர் தினம்

Added : பிப் 14, 2015 | கருத்துகள் (4)
Advertisement
காதலாகி... கசிந்துருகி... இன்று காதலர் தினம்

'காதல்' என்பது மனித வாழ்க்கையின் உன்னதமான அனுபவம். கவிஞர்களும், ஓவியர்களும், இலக்கியவாதிகளும், தத்துவமேதைகளும் காதல் வயப்பட்டு உணர்வுகளை அவர்களது நடையில் வெளிப்படுத்தி உள்ளனர்.'நம்முடைய ஆழ்மனதை மற்றொருவருக்குத் தரும்போது பரவசமான உணர்வு நம்மை வியாப்பிக்கிறது. அந்த உணர்வின் வெளிப்பாடுதான் காதல்' என்கிறார்கள் அறிஞர்கள். மனித இனத்திற்கு களங்கமில்லாத, சுயநலமில்லாத பரவசத்தைத் தரக்கூடியது காதல். அது ஏற்படுத்தும் மயக்கம் அற்புதமானது. உலகத்திலிருந்து விடுபட வைத்து இருவருக்கும் இடையே சுகமான உணர்வை ஏற்படுத்தக்கூடியது காதல்.


காதலுக்காக ஒரு தினம்:

கி.பி.207ல் ரோம் நாட்டை ஆண்ட இரண்டாம் கிளாடியஸ், ரோமானிய வீரர்கள் பிரம்மச்சாரிகளாக இருந்தால் சலனங்கள் எதுவும் இல்லாமல் முழு ஆவேசத்துடன் போர் புரிவார்கள் என கருதினார். ஆகவே படையில் சேரும் இளைஞர்களுக்கு 'திருமணம் ஆகியிருக்கக் கூடாது; காதலிக்கக்கூடாது!' என சட்டமிட்டார் மன்னர். காதலை எப்படி ஒதுக்கி வைக்க முடியும்? வீரர்கள் ரகசியமாகக் காதலித்தார்கள். அவர்களை ஆதரித்த வாலன்டைன் என்னும் பாதிரியார் இளைஞர்களுக்கு ரகசியமாக திருமணம் செய்து வைத்தார். விஷயம் தெரிந்து, பாதிரியார் சிறையில் தள்ளப்பட்டார். ஆனால், பாதிரியாராலேயே காதலிலிருந்து தப்ப முடியவில்லை. சிறை அதிகாரியின் பார்வை இழந்த மகள் அவருக்கு பணிவிடை செய்ய, காதல் மலர்ந்துவிட்டது. 'இறைவா! இந்தப் பெண்ணுக்கு பார்வை கொடு!' என்று வேண்டி சிறையில் தவம் இருந்தார் வாலன்டைன். பெண்ணுக்குப் பார்வை கிடைத்தது. இதையெல்லாம் கேள்விப்பட்ட மன்னர் கிளாடியஸ் கோபம் கொண்டு பாதிரியாரின் தலையைச் சீவும்படி ஆணையிட்டார். அதே ஆண்டு பிப்ரவரியில் தண்டனை நிறைவேற்றப்பட்டது. அவர் நினைவாகக் கொண்டாடப்படுவதுதான் 'வாலன்டைன்ஸ் டே!'.


இலக்கியங்களில் காதல்:

சங்க இலக்கியங்களில் காதல் மணம் பற்றி கூறப்பட்டுள்ளது. பழந்தமிழர் காதலைப் போற்றியுள்ளனர். 'உடன் போதல்' திருமணத்திற்கான ஒரு கவுரவமான வழி என போற்றப்பட்டுள்ளது. வள்ளுவர் காமத்துப்பாலில் அன்பின் ஆழத்தைப் புலப்படுத்தியுள்ளார். 'குறிப்பு அறிதல்' என்ற அதிகாரத்தில் 'கண்ணொடு கண்இணை நோக்கு ஒக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும்இல' என்கிறார். (காதலர் இருவரின் கண்களும் பார்வையால் ஒன்றாகிவிட்டால் அங்கே வாய்ப்பேச்சு தேவையில்லை). 'காதல் சிறப்பு உரைத்தல்' என்ற அதிகாரத்தில் 'உடம்பொடு உயிரிடை என்னமற்று அன்ன மடந்தையொடு எம்மிடை நட்பு' என்கிறார். (எனக்கும் என் மனைவிக்கும் உள்ள தொடர்பு உடம்புக்கும், உயிருக்கும் உள்ள தொடர்பு போன்றது). கம்ப ராமாயணத்தில் 'அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள்' என ராமன்-சீதையின் முதல் காதலை கம்பர் அழகாகச் சித்தரித்துள்ளார்.

'சொர்க்கம் நரகம்


இரண்டில் ஒன்று


இங்கேயே நிச்சயம்


காதலித்துப்பார்' என்கிறார் கவிஞர் வைரமுத்து.

'காதல் மகிழ்ச்சியையும், நிம்மதியையும் தெளிவையும் எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு நல்ல சிநேகிதியையும் கொடுக்குமாயின் சாகும்வரை காதலித்துக் கொண்டே இருக்கலாம்' என்கிறார் பாலகுமாரன்.


காதல் ஒரு வரம்:

'நம் எண்ணங்களையும், ஆசைகளையும், கனவுகளையும், தாபங்களையும், எதிர்பார்ப்புகளையும் பகிர்ந்துகொள்ள ஒரு காதலி அல்லது காதலன் கிடைத்துவிட்டால், வாழ்க்கை முழுமையாகிவிடும்' என்கிறார்கள் உளவியல் அறிஞர்கள். வாழ்க்கையின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டவர்களுக்கே காதலின் சக்தி புரியும். ஒருவருக்கொருவர் உடமையாவதும், உரிமை கொண்டாடுவதும், ஆளுமை செலுத்துவதும் அல்ல காதல்; இரு உள்ளங்கள் சங்கமிக்கும் நிகழ்வு அது. உண்மையில், காதலுக்காக சுயநலத்தையும், அகந்தையையும் இழப்பதில்தான் வாழ்க்கையின் ரகசியமே அடங்கியிருக்கிறது. காதலின் ஆச்சரியங்களில் ஒன்று சரணாகதி. எல்லாவற்றையும் காதலுக்கு அர்ப்பணிக்கும்போது காதலர்கள் புதுப்பிறவி எடுக்கிறார்கள். இதைப் புரிந்தவர்கள் புளகாங்கிதம் அடைகிறார்கள். தோற்றவர்கள் சபிக்கிறார்கள்.


காதல் என்பது என்ன?

ஒரு ஆணும், பெண்ணும் வாழ்க்கைப்பந்தம் ஏற்படுத்தி, ஒருவருக்கு ஒருவர் என வாழ, மற்ற உயிரினங்களில் இருந்து வேறுபட, அன்பின் அடிப்படையில் உருவான பந்தம் தான் காதல். ஆனால் இனக்கிளர்ச்சியை காதல் என உள்ளர்த்தம் செய்து கொண்டு இளைய சமுதாயம் பயணித்து வருகிறது. தமக்கு 'பாய் பிரண்ட்' 'கேர்ள் பிரண்ட்' இல்லையென்றால், நண்பர்கள் மத்தியில் சமூக அங்கீகாரம் கிடைக்காதோ என்ற ஏக்கத்தில் காதல் உருவாகி வளர்ந்து வருகிறது. இது திருமணம் வரை செல்வதில்லை. ஆபத்தில்லாமல் இருக்கும் வரை இக்காதலை கண்டு கொள்ளாமல் விட்டுவிடலாம். கதையில், கவிதையில், சினிமாவில் ரசிக்க மட்டுமே இவ்வகை காதல். இவை வாழ்வின் கனவுக் காட்சிகள்; அசை போடலாம். ஆனால், வாழ்க்கைக்கு உதவாது. ஆனால், வாழ்க்கை என்பது ரியாலிட்டி. காதல் உணர்வை இயற்கை அளித்திருந்தாலும், அறிவைக் கொண்டு ஆராய்ந்து வாழ்க்கை முழுவதும் நிலையான இன்பம் துய்க்க ஏற்றவாறு முறைப்படுத்திக் கொள்வது அவசியம். ஆணோ, பெண்ணோ பொருளாதார சுதந்திரம் பெற்ற பின் காதலியுங்கள். அப்போது உங்களுக்கு ஓரளவு அனுபவம் ஏற்பட்டிருக்கும்.


காதலில் ஜெயிப்பது எப்படி?

திருமணம் ஒரு முடிவு அல்ல, ஆரம்பம் என்கிற நம்பிக்கை வந்தால் திருமணத்திற்கு பிறகும் காதலை தொடர முடியும். திருமணத்திற்கு முந்தைய காதலும், பிந்தைய காதலும் ஒன்று என்கிற தவறான எண்ணம்தான் பிரச்னைக்குக் காரணம். தற்போதுள்ள பணிச்சுமை, பொருளாதார நெருக்கடி, விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கு இல்லாமைதான் காதல் மணமுறிவிற்கு அடிப்படை காரணம். கணவன், மனைவியான பிறகு தங்களின் மன அழுத்தங்களையும் வெறுப்புகளையும் வெளியேற்றும் வடிகாலாக ஒருவரையொருவர் பயன்படுத்திக்கொள்கிறார்கள். இவ்வாறு செய்வது காதலுக்கு தரும் மரியாதை அல்ல. சுதந்திரமான 'ரொமான்டிக்' காதல் வேறு. இல்லறத்தில் புதுப்பிறவி எடுக்கும் காதல் வேறு என்பதைப் புரிந்துகொண்டாலே உங்கள் வாழ்க்கையில் குளிர்ச்சியான தென்றல் வீசும். உங்களது இணையை நேசிக்கவும், மதிக்கவும் கற்றுக்கொள்ளுங்கள். எவ்வளவு நேசம் வைத்துள்ளீர்கள் என்பதை வெளிப்படுத்துங்கள். காதலில் ஜெயித்தவர்களைவிட தோற்றவர்கள் அதிகம். கடந்த காலத்தையே நினைத்து பரிதவித்துக்கொண்டு இருந்தால், நிகழ்காலம் கைவிட்டுப் போய்விடும். மாற்றம் என்பது முடிவல்ல, முற்றுப்புள்ளியும் அல்ல; புதிய ஆரம்பம் என்று புரிந்துகொள்ள வேண்டும்.

- அ.செந்தமிழ்ச்செல்வி, தனி வட்டாட்சியர், திருப்புத்தூர். ksriramece@gmail.com

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Selva - Calabar,நைஜீரியா
14-பிப்-201514:10:28 IST Report Abuse
Selva காதல் காமத்தின் மறு பெயர். பெற்றோர்களை ஏமாற்றி தன் தலையில் தானே மண்ணை போட்டு கொள்ளுவது மெரினா கடற்கரை யோரம் போனால் எல்லாருக்கும் புரியும். மனதை வருடும் நிகழ்ச்சிகள்.
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
14-பிப்-201510:11:21 IST Report Abuse
K.Sugavanam கள்ளக் காதலர் தினமா?இல்லை காதல் செய்யும் காதலர்கள் தினமா?இல்லை காமுகர்கள் காதல் செய்யும் தினமா?பப்ளிக்கில காதல் பண்ணலாமா?ஆக தினவெடுப்பவர்கள் சொறிந்துகொள்ளும் தினம்..
Rate this:
Share this comment
Cancel
ganesan bala - karaikal,இந்தியா
14-பிப்-201507:28:51 IST Report Abuse
ganesan bala உடல் மேல் இச்சை கொண்டு திரியும் இன்றைய காதலர்க்காக தெய்வீக காதலை வெளிப்படுத்த பாடிய நாயன்மார் பாடலை தயவு செய்து பயன்படுத்தாதீர்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X