பள்ளி குழந்தைகளுக்கு கதை சொல்லும் பட்டதாரி இளைஞர்கள்: கிராமம், கிராமமாக தேடி செல்லும் ஆர்வத்திற்கு வரவேற்பு

Added : பிப் 15, 2015 | கருத்துகள் (4) | |
Advertisement
தமிழர்களின் இன்றைய ஒட்டுமொத்த வாழ்க்கை முறையும் மாறி விட்டது. கூட்டுக்குடும்பம் சிதைந்து விட்டது. தண்டட்டி ஆட்டியபடி, பேரன், பேத்திகளுக்கு கதை சொல்லும் பாட்டிகளின் வார்த்தைகளை கேட்காமலேயே, இரண்டு தலைமுறைகள் உருவாகி விட்டன.நகரத்து குழந்தைகள் மட்டுமல்லாது, கிராம குழந்தைகள் கூட, தொலைக்காட்சிகளில் வரும் கார்ட்டூன் தொடர்களுக்கு அடிமையாகி விட்டன. குறிப்பாக,
பள்ளி குழந்தைகளுக்கு கதை சொல்லும் பட்டதாரி இளைஞர்கள்: கிராமம், கிராமமாக தேடி செல்லும் ஆர்வத்திற்கு வரவேற்பு

தமிழர்களின் இன்றைய ஒட்டுமொத்த வாழ்க்கை முறையும் மாறி விட்டது. கூட்டுக்குடும்பம் சிதைந்து விட்டது. தண்டட்டி ஆட்டியபடி, பேரன், பேத்திகளுக்கு கதை சொல்லும் பாட்டிகளின் வார்த்தைகளை கேட்காமலேயே, இரண்டு தலைமுறைகள் உருவாகி விட்டன.

நகரத்து குழந்தைகள் மட்டுமல்லாது, கிராம குழந்தைகள் கூட, தொலைக்காட்சிகளில் வரும் கார்ட்டூன் தொடர்களுக்கு அடிமையாகி விட்டன. குறிப்பாக, அவர்களின் கற்பனை திறன் குறைந்து விட்டது. கேள்வி கேட்கும் சிந்தனையும் குறைந்து வருகிறது. இந்த சூழலில், பள்ளி குழந்தைகளுக்கு கதை சொல்லி, வாழ்வை விளக்கும் வகையில், பணிபுரிந்து வருகிறது, 'கதை சொல்றோம் வாங்க' அமைப்பு. இந்த அமைப்பில், முழுக்க முழுக்க, பட்டதாரி இளைஞர்களே சேவையில் ஈடுபடுகின்றனர். பாஸ்கர், பிரவீன், அபிலாஷ், நவீன் கிருஷ்ணன், தரணி, வெங்கட், சக்தி, அசோக், சதீஷ், துவரக் ஆகியோரைக் கொண்ட இந்த அமைப்பின் நிறுவனர், குமார். இதில், சேவை புரியும் அனைவரும் பத்திரிகையாளர், பொறியாளர், முழுநேர கதை சொல்லி, மென்பொருள் வல்லுனர் என, பல்வேறு துறைகளில் பணிபுரிகின்றனர். நேரம் கிடைக்கும் போதெல்லாம், குக்கிராமங்களுக்கு செல்கிறது, இந்த இளைஞர் அமைப்பு.

இதுகுறித்து, அந்த அமைப்பினர் கூறுகையில், 'நாங்கள் நகர்ப்புற பள்ளிக்கூடங்களை விட, குக்கிராமங்களின் பள்ளி களை தேர்வு செய்தே, பணிபுரிகிறோம். ஏனெனில், நகர்ப்புறங்களில் உள்ள மாணவர்களுக்கு, ஆயிரக்கணக்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால், குக்கிராமங்களில் உள்ள மாணவர்களுக்கு, அவற்றில் ஒரு சதவீதம் கூட கிடைப்பதில்லை' என்றனர்.

கிராம பள்ளிகளுக்கு சென்று, 1, 2, 3 வகுப்பு மாணவர்களை ஒரு பகுதியாகவும், 4, 5, 6 வகுப்பு மாணவர்களை ஒரு பகுதி யாகவும் பிரித்து, பள்ளி மைதானத்தில் அமர வைப்பர். அவர்களை, தனித்தனி குழுவாக பிரிப்பர். மொத்தமாக, 10 குழுக்கள் பிரிக்கப்படும். அனைவருக்கும் பொதுவான ஒரு கதை சொல்லப்படும். அந்தக் கதை பாதியில் நிறுத்தப்படும். மீதி என்ன ஆனது என்பதை மாணவர்கள், கதையாக சொல்ல வேண்டும். பின், ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு தலைப்பு கொடுக்கப்படும். அந்த தலைப்பில், கதை சொல்ல வேண்டும். பின், ஒவ்வொரு குழுவில் உள்ள ஒவ்வொருவரும், கதை சொல்ல வேண்டும். அந்த கதை என்ன மாதிரியும் இருக்கலாம். எந்த ஆட்சேபனையும் இல்லை. மாணவர்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை சொல்லலாம். அந்த அளவுக்கு சுதந்திரம். ஆனால், ஒவ்வொருவரும் கதை சொல்ல வேண்டும். அவ்வளவு தான். அதேபோல், ஏற்கனவே பிரிக்கப்பட்ட பிரிவுகளுக்கு, ஒரு தலைப்பு வீதம், 10 தலைப்புகள் கொடுக்கப்பட்டு, அவர்களே நாடகம் நடத்த வேண்டும்.

நாடகத்தின் கதாபாத்திரங்களை அவரவர்களே பிரித்துக் கொள்ள வேண்டும். அவர்களே கதை, அவர்களே திரைக்கதை, அவர்களே வசனம். அதுவும் ஒரு மணி நேரத்துக்குள் செய்து முடிக்க வேண்டும். பாதி நாடகம் நடித்தால் கூட, போதுமானது. ஆனால், அனைவரும் அதில் ஈடுபட வேண்டும் என்பது விதி. பின், ஒவ்வொருவராக, அரங்கேற்ற துவங்கும்போது, சிரிப்பலை மைதானத்தில் தவழும். ஆசிரியர்களின் பிரம்படிக்கு கத்திய உதடுகள், வயிறு வலிக்க சிரிக்கும். மனம் திறந்து சிரிக்கும். அதேபோல், அந்த வகுப்புகளுக்கான பாடத்திட்டத்தை கொடுத்து விட்டு, அதிலிருந்து கதையோ நாடகமோ நடத்த வேண்டும். ஆனால், ஒவ்வொருவரும் தனித்தனியாக சொல்ல வேண்டும். சரியோ தவறோ, கட்டாயம் கதை சொல்ல வேண்டும். இந்த உத்திக்கு, இவர்கள் செல்லும் இடமெல்லாம் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த அமைப்பினர், சென்னை, பழவேற்காடு, திருவண்ணாமலை, ஆழியாறு, மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில் உள்ள குக்கிராமங்களுக்கு சென்று, மாணவர்களுக்கு கதை சொல்லி இருக்கின்றனர். நகர்ப்புறங்களை விட, கிராமப்புறங்களை விட, குக்கிராமங்களில் இருக்கும் மாணவர்களின் கற்பனைத் திறன் அதிகளவில் இருப்பதாக, இந்த அமைப்பினர் கூறுகின்றனர். கதை சொல்வது மட்டுமின்றி, மாணவர்களுக்கு மைய கருத்து கொடுத்து, ஓவியம் வரைய வைப்பது, நாடகம் நடிக்க வைப்பது, பொம்மலாட்டம் நிகழ்த்தி காட்டுவது என, இவர்களின் சேவையின் நீளம் தொடர்கிறது.

அமைப்பின் நிறுவனர், குமார் கூறியதாவது:பாதி கதையை சொல்வதன் மூலம், மாணவர்களின் கற்பனை திறன் அதிகரிக்கிறது. அது ஒரு சோதனை அவ்வளவு தான். ஆனால், அந்த பாதி கதையை அவர்கள் நிரப்பி சொல்வதை கேட்க, ஆயிரம் காதுகள் வேண்டும். மாணவர்களை, 'படி, படி' என்று சொன்னால் மட்டும் போதாது. அவர்களின் தனித்திறமைக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், அவர்களின் கற்பனை திறன் வளரும்; அவர்களுக்கு பள்ளி பாடங்களும் எளிதில் புரியும். பின், அந்த ஆண்டில், எப்போது கேட்டாலும் அந்த பாடம் குறித்து மாணவன் பேசுவான். அந்த அளவுக்கு அது ஆழப்பதிந்து விடும். காரணம், ஈடுபாடு மட்டும் தான்.இவ்வாறு, அவர் தெரிவித்தார். தொடர்புக்கு: 99447 72911

- நமது சிறப்பு நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Hariharan - pudukkottai,இந்தியா
15-பிப்-201516:59:59 IST Report Abuse
Hariharan நல்ல முயற்ச்சி...புதியதோர் உலகம் செய்வோம் என்ற பாரதியின் வரிகள் மெய்படும்.
Rate this:
Cancel
P. SIV GOWRI - Chennai,இந்தியா
15-பிப்-201516:32:14 IST Report Abuse
P. SIV GOWRI 'கதை சொல்றோம் வாங்க' அமைப்பு. . உங்கள் இந்த சேவை மிகவும் பாராட்டுக்கு உரியது . நிஜமாவே இப்போ உள்ள குழந்தைகள் பாவம். படிப்பு, தொல்லை கட்சியை தவிர வேறு என்ன உள்ளது. மென்மேலும் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
Rate this:
Cancel
Anantharaman - Porur, Chennai,இந்தியா
15-பிப்-201508:38:51 IST Report Abuse
Anantharaman அருமை திரு குமார் அவர்களே....உங்கள் இந்த அறிய முயற்சிக்கு பாராட்டுகள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X