மரம் நடுவது ஒரு சேவையா?

Updated : பிப் 16, 2015 | Added : பிப் 16, 2015 | |
Advertisement
மரம் நடுவதை சேவையாக நினைத்தால் யாரோ ஒரு சிலர் மட்டுமே செய்யட்டும் என்ற எண்ணம் வரும். ஆனால் மரம் நடுவது தற்போதைய தேவையாகவே உள்ளது.சுற்றுச்சூழல் பற்றிய கவனம் இல்லாமல் மனிதன் செய்யும் செயல்கள் அவனுக்கே தீங்காக விளைகிறது. உலகின் அனைத்துப் பகுதிகளிலும் குறைந்து வரும் நீர் ஆதாரங்கள், உயிர்ச் சத்து அற்றுப்போன மண் வளம், பருவ நிலை மாற்றங்கள், பல்கிப் பெருகியிருக்க வேண்டிய
மரம் நடுவது ஒரு சேவையா?

மரம் நடுவதை சேவையாக நினைத்தால் யாரோ ஒரு சிலர் மட்டுமே செய்யட்டும் என்ற எண்ணம் வரும். ஆனால் மரம் நடுவது தற்போதைய தேவையாகவே உள்ளது.

சுற்றுச்சூழல் பற்றிய கவனம் இல்லாமல் மனிதன் செய்யும் செயல்கள் அவனுக்கே தீங்காக விளைகிறது. உலகின் அனைத்துப் பகுதிகளிலும் குறைந்து வரும் நீர் ஆதாரங்கள், உயிர்ச் சத்து அற்றுப்போன மண் வளம், பருவ நிலை மாற்றங்கள், பல்கிப் பெருகியிருக்க வேண்டிய கானகங்களும், அவற்றில் வாழும் உயிரினங்களும் அழிந்துகொண்டு இருக்கும் சூழல் இவை உலகெங்கும் உள்ள சமுதாயங்களைப் பல வழிகளில் பாதிக்க ஆரம்பித்தன. அதிகமான வெப்பத்தால் உலகம் கொதிக்கிறது. பனிமலை உருகுகிறது. கடல்களின் நீர்மட்டம் உயர்கிறது.

இதைத் தடுக்க எளிய மற்றும் சிறந்த வழி ஏராளமான மரங்கள் வைத்துப் பசுமைப் போர்வையை அதிகப்படுத்துவதே. ஏனெனில், வெப்பத்துக்குக் காரணமாக உள்ள வாயுக்களில் முக்கியமானது கரியமில வாயு. அவற்றை மரங்கள் உள்வாங்கி மனிதன் சுவாசிப்பதற்காக ஆக்ஸிஜனை வெளி விடுகின்றன. எனவே, உலக நலனில் அக்கறைகொண்ட ஈஷா அறக்கட்டளை, சுற்றுச்சூழல் சீர்கேடுகளைக் களைவதை அடிப்படையாக வைத்து, 2004-ம் ஆண்டு ஜுன் மாதத்தில் பசுமைக் கரங்கள் திட்டத்தைத் துவக்கியது. இந்தத் திட்டத்தின் பல செயல்பாடுகளில் முக்கியமான செயல்பாடு... மரம் வளர்த்தல்.

மனிதனுக்கும் மரங்களுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. மனிதனின் வெளிமூச்சு, தாவரங்களின் உள்மூச்சு. தாவரங்களின் வெளிமூச்சு, மனிதனின் உள்மூச்சு. மனிதனுக்கும் தாவரத்துக்கும் உள்ள பந்தமான இந்த இயற்கைச் சுழற்சிதான் பல்வேறு நிலைகளில் மனிதர்களுக்குக் கனிகளாக, விலங்குகளுக்கு உணவாக, பல்வகை உயிரிகளின் ஆதாரமாக விளங்குகிறது. மேலும், மழையைத் தக்கவைத்து, மண் வளத்தை மேம்படுத்தும் கருவிகளாகச் செயல்பட்டு, மரங்கள் மனித சமூகத்தின் வரங்கள் என்பதனை உறுதி செய்கின்றன.

இதைத்தான் கவிப்பேரரசு வைரமுத்து,

மரங்கள் இல்லையேல் காற்றை எங்கே போய்ச் சலவை செய்வது?
மரங்கள் இல்லையேல் மழைக்காக எங்கே போய் மனுச் செய்வது?
மரங்கள் இல்லையேல் மண்ணின் மடிக்குள்ளே ஏதப்பா ஏரி?
என்று கேள்விக்கு மேல் கேள்வி கேட்டு மக்களை சிந்திக்கத் தூண்டுகிறார்.

ஆமாம், ஒரு மனிதர் சராசரியாக இரண்டு மரங்களை நட்டு வளப்பதற்குப் பொறுப்பேற்றால்கூட, தேவையான பசுமைப் பரப்பு நமக்கு இலகுவாக நிறைவேறிவிடும்.

மரம் நடுதல் பற்றி சத்குரு பேசும்போது...

“உங்களுக்கு எப்போதாவது தாகம் எடுத்தால் யாரையோ கெஞ்சியாவது ஒரு டம்ளர் தண்ணீர் வாங்கிக் குடிப்பீர்கள் அல்லவா? அதுபோல் சாலையில் நீங்கள் போகும்போது, ஏதாவது காய்ந்த செடியைப் பார்த்தால், பக்கத்தில் ஏதாவது வீட்டில் கெஞ்சி ஒரு குடம் தண்ணீர் வாங்கி ஊற்ற வேண்டும். தமிழ்நாட்டுக்கு மொத்தம் 12 கோடி மரங்கள் தேவைப்படுகின்றன. நம் தமிழ்நாட்டு ஜனத் தொகைக்கு ஒருவர் இரண்டு மரங்கள் வீதம் வைத்திருந்தாலே 12 கோடி மரங்கள் வைத்திருக்கலாம். இதை ஒரு மகத்தான வேலையாக நினைத்துக் கொள்கிறார்கள். சுற்றுப்புறத்து உயிர்களுடன் சிறிது ஈடுபாடுவைத்து வாழ்ந்து வந்திருந்தால், இது ஒரு பெரிய வேலையாக இருக்காது. இதை ஒரு விளையாட்டுபோலச் செய்ய முடியும்.

இன்று நீங்கள் மரக்கன்று வைத்து தண்ணீர் ஊற்றுவதை, ஒரு பெரிய சேவையாக நினைத்துச் செய்ய வேண்டாம். இதை நமது நன்மைக்குத்தானே செய்கிறோம். நீங்கள் இந்த உலகைவிட்டுப் போவதற்கு முன், நீங்கள் பிறந்தபோது எவ்வளவு மரங்கள் இருந்தனவோ, அந்த அளவு மரங்களாவது இந்த உலகில் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு மரம் நடுவது மட்டும்தான் தீர்வு என்று சொல்ல முடியாது. ஆனால், இயற்கை தன்னைச் சரிசெய்து கொள்வதற்கு நாம் ஒரு வாய்ப்பையாவது உருவாக்கித் தர வேண்டுமல்லவா!

மரம் நடுவதலை, அரசாங்கத்து வேலையாகவோ, ஈஷா வேலையாகவோ யாரும் எடுத்துக்கொள்ள வேண்டாம். இந்த உலகில் யார் யார் சுவாசிக்க வேண்டியிருக்கிறதோ, அவர்கள் எல்லோருக்கும் பொதுவான வேலை இது. எனவே, உற்சாகமாக, முழு ஈடுபாடாக, அனைவரும் இந்தப் பணியில் கைகோர்க்க வேண்டும்!"

ஈஷா பசுமைக்கரங்கள்

ஈஷா அறக்கட்டளை பசுமைக் கரங்கள் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் மொத்தம் 33 நாற்றுப் பண்ணைகள் உருவாக்கப்பட்டுள்ளது. ஈஷா நாற்றுப்பண்ணைகளில் மரக்கன்றுகள் மிகக் குறைந்த விலையில் (ரூ.5) விநியோகம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
உங்கள் ஊருக்கு அருகிலுள்ள ஈஷா நாற்றுப் பண்ணைகளில் மரக்கன்றுகளைப் பெறுவதற்கும், மரம் நடுதல் தொடர்பான வழிகாட்டுதல்களைப் பெறுவதற்கும் கீழ்க்கண்ட எண்ணைத் தொடர்பு கொள்ளவும். தொ. பே. 94425 90062

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X