சித்ராவும், மித்ராவும் "டிவி'யில் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் பார்த்துக் கொண்டிருந்தனர். கோஹ்லி சதம் அடித்ததும் சந்தோஷப்பட்ட மித்ரா, வந்த வேகத்தில் தோணி திரும்பிச் சென்றதும் சோகமானாள். அதே சோகத்தோடு, ""இவ்ளோ நடந்தும், சிறப்பு கூட்டம் கூட்டி விவாதிக்காம, அவுங்கவங்க வேலையை மட்டும் பார்த்துட்டு இருக்காங்க,'' என புலம்பினாள்.""என்ன நடந்துடுச்சுனு இவ்ளோ டென்ஷன் ஆகுறே...?,'' என கேட்டாள் சித்ரா.""டெங்கு காய்ச்சல் பரவியதால், ஊரெல்லாம் பீதியா இருக்கு. மாநகராட்சி அதிகாரிகள் வீதி வீதியா போயி, மக்களை சந்திக்கிறாங்க. நிலவேம்பு கசாயம் வழங்குறாங்க. வேறெந்த வேலையும் பார்க்காம, ஒரு மாசமா டெங்கு தடுப்பு வேலையை செஞ்சுக்கிட்டு இருக்காங்க. மக்கள் பிரதிநிதிகள் கண்டுக்காம இருக்காங்க. மாமன்றத்தில் சிறப்பு கூட்டம் போடலையே?'' என்று மித்ரா முடிப்பதற்குள், ""அதான், இடைத்தேர்தல் வேலைக்கு போயிருந்தாங்களே?'' என்று சித்ரா கிண்டல் செய்தாள்.""போன மாசம் நடத்த வேண்டிய கூட்டமே நடக்கலை. ஸ்ரீரங்கம் போனவங்களும், போன புதன்கிழமை சாயந்திரமே வந்திட்டாங்க. ஸ்ரீரங்கம் தொகுதி மீது காட்டுற அக்கறையை, நம்மூர் மக்கள் மீதும் காட்டணுமில்லையா? எந்தெந்த ஏரியாவுல டெங்கு காய்ச்சல் பரவுச்சு; தடுப்பு நடவடிக்கையா இன்னும் என்னென்ன செய்யணும்னு கூட்டம் போட்டு விவாதிச்ச, அரசாங்க உதவியை நாடலாமே... அத விட்டுட்டு...'' என, மித்ரா இழுத்தாள்.""வேறென்ன... மறுபடியும் கலெக்சனை ஆரம்பிச்சிருப்பாங்க... அதானே...'' என்றாள் சித்ரா.""ஆமாக்கா... கரெக்டா சொல்லிட்டீங்க... ஜெ., பிறந்த நாள் விழாவை தடபுடலா கொண்டாட போறாங்களாம். ஒரு லட்சம் பேருக்கு அன்னதானம் கொடுக்கப் போறதா தீர்மானம் நிறைவேத்தியிருக்காங்க. ஒவ்வொரு அணி சார்பிலும் பங்ஷன் நடத்தணும். ஆடம்பரமா நடத்தாம, நலத்திட்ட உதவி வழங்குற மாதிரி இருக்கனும்னு உத்தரவிட்டிருக்காங்க. அதனால, ஒவ்வொரு அணியும், அவங்க சக்திக்கு தகுந்த மாதிரி, "வேட்டை'யை ஆரம்பிச்சிட்டாங்க,'' என்றாள் மித்ரா.""விழாவை சந்தோஷமா நடத்தட்டும்; அவுங்களோட, சொந்தக்காசை செலவழிக்க வேண்டியதுதானே... ஊரெல்லாம் எதுக்கு கலெக்சன் போடுறாங்க,'' என சித்ரா அலுத்துக் கொள்ள, ""கட்சிக்காரங்க... அப்படித்தானே... எந்தக்காலத்துல சொந்தக்காசை செலவழிச்சிருக்காங்க... "காம்ரேட்' கட்சிக்காரங்களும், வசூலில் மும்முரமா இருக்காங்க,'' என்றபடி, டிக்கெட் புக்கிங் செய்ய ரயில்வே ஸ்டேஷனுக்கு புறப்பட்டாள் மித்ரா.ஸ்கூட்டரை சித்ரா ஓட்ட, பின்னால் ஒக்கார்ந்து கொண்டாள் மித்ரா. வழக்கத்தை விட மெதுவாக ஊர்ந்து சென்றது வண்டி.""என்னாச்சுக்கா... வண்டியில ஏதும் பிரச்னையா?,'' என, மித்ரா கேட்க, ""அதெல்லாம் இல்லை... மாநகராட்சி சந்திப்பில இருந்து மங்கலம் ரோடு முழுவதும் சாயந்திரமான, நூத்துக்கணக்குல பிளாட்பாரக் கடைகள் வந்துருது. ஏற்கனவே குறுகலான ரோடு, இதுல ரெண்டு பக்கமும் கடைகள்; கடைக்கு வர்றவங்க ரோட்டிலேயே பைக், கார்களை நிறுத்துறாங்க. மெதுவாக்கூட வண்டியை ஓட்டிட்டுப் போக முடிலை,'' என, புலம்பினாள் சித்ரா.""ஆமாக்கா... ராத்திரி பத்தரைக்கு மேல திறந்திருக்கற கடை மீது வழக்கு போடுறதுல போலீசார் காட்டும் அக்கறையை, போக்குவரத்துக்கு இடையூறா இருக்கற கடைகள் மீது நடவடிக்கை எடுக்கறதுல காட்டலாம்,'' என்றாள் மித்ரா.""அந்தந்த ஸ்டேஷன் எல்லைக்குள் பகுதி வாரியா போலீஸ்காரங்களை நியமிச்சு, அந்த பகுதியில் என்ன பிரச்னை என்றாலும், அவங்கதான் பொறுப்புன்னு, பழைய சிட்டி கமிஷனர் சொல்லியிருந்தார். ஸ்டேஷன் போன் நம்பர், இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., மற்றும் அந்த பகுதி பொறுப்பு போலீஸ்காரங்க ளோட மொபைல் எண்ணையும் வெளியிட்டாங்க. நாளடைவில் அந்த திட்டம் காணாம போயிடுச்சு. தூசி தட்டி, மறுபடியும் அந்த திட்டத்தை செயல்படுத்தணும்,'' என சித்ரா சொல்வதற்கும், ரயில்வே ஸ்டேஷன் வருவதற்கும் சரியாக இருந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE