'திசை காட்டிகளின்' தார்மீக கடமை| Dinamalar

'திசை காட்டிகளின்' தார்மீக கடமை

Added : பிப் 17, 2015 | கருத்துகள் (2)
'திசை காட்டிகளின்' தார்மீக கடமை

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒருசில அடிப்படை கடமைகள் உண்டு. இவற்றை இரண்டு வகையாக பிரிக்கலாம். அவை சமுதாய கடமைகள், தனிமனித கடமைகள். இந்த இரு கடமைகளையும் ஓர் மனிதன் எப்போது செய்கிறானோ அப்போது தான் அவனுடைய வாழ்வில் முழு மகிழ்ச்சி நிறைந்திருக்கும். ஆனால், இன்றைய சூழலில் மனிதம் பல்வேறு பிரச்னைக்கு ஆளாகி, இறைவன் அளித்த இனிய வாழ்க்கையை நரகமாக்கிக் கொள்கிறான். இதற்கு அடிப்படை காரணம் ஒவ்வொரு மனிதனும் தனக்கான கடமைகளில் இருந்து தவறுவது தான்.


பெற்றோர் அரவணைப்பில்:

பள்ளி மாணவர்கள் இன்றைய சூழ்நிலையில் ஒட்டுமொத்தமாக பெற்றோர் அரவணைப்பில் வளர்கிறார்கள். எந்த பள்ளியில் படிப்பது, என்ன படிப்பது, எப்படி படிப்பது போன்ற அடிப்படை கல்வி குறித்து பல விஷயங்களை பெற்றோரே தீர்மானிக்கின்றனர். இன்றைய மேல்தட்டு மற்றும் நடுத்தர இளைஞர் சமுதாயம் பெற்றோரின் ஆளுமைக்கு உட்பட்டு ஒரு கருவிபோல் செயல்பட்டு வருகின்றன. மருத்துவம், பொறியியல் மற்றும் ஐ.ஐ.டி., போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு எதிர்காலம் பற்றிய திடமான திட்டம் தீட்டிக் கொடுக்கப்படுகிறது. அவர்களின் இலக்கு முழுமையாக நிர்ணயிக்கப்பட்டு அதனை நோக்கி அவர்களது கல்வி பயணம் தொடர்கிறது.


பட்டம் மட்டும் பிரதானம்:

ஆனால் கலை, அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் பெரும்பான்மையான மாணவர்கள் நிலை வேறு. போதிய வழிகாட்டுதலின்றி பெற்றோர் ஆதரவும், அரவணைப்பும் இல்லாமல் கல்வி பயிலும் மாணவர்களின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. ஏதாவது ஒரு கல்லூரியில் சேர்ந்து எப்படியாவது ஒரு டிகிரி வாங்கி விட்டால் போதும் என்ற நிலைமையில் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் தங்களின் நேரத்தையும், உழைப்பையும் வீணாக்குகின்றனர். அவர்களை அரவணைத்து நல்வழிப்படுத்தி கல்வி மற்றும் வாழ்க்கை பயணத்தை செம்மை செய்வதற்காக அவர்களுக்கு என மெனக்கெட யாரும் இல்லை. கல்வியறிவில்லாத பெற்றோர் தங்கள் மகன் எப்படியாவது படித்து ஒரு டிகிரி வாங்க வேண்டும் என எண்ணி கடன்பட்டு தன் சக்திக்கு மீறி மகன்கள் கேட்கும் பணத்தை கொடுக்கின்றனர்.


மாயையில் சிக்கும் மாணவர்கள்:

ஆனால் 'இரண்டும் கெட்டான்' சூழ்நிலையில் உள்ள கல்லூரி மாணவர்கள், ஒரு புதிய சுதந்திரத்தை அனுபவிக்கும் நோக்கில் தன் நிலையை மறந்து செயல்பட்டு, பல்வேறு சமூக சூழலில் சிக்கிக் கொண்டு தங்களுடைய வாழ்க்கையை வீணடிக்கின்றனர். கல்வியில் அக்கறையின்மை, சினிமா மோகம், மொபைல் ஆசை, காதல் வலை, தகுதிக்கு மீறிய மோட்டார் வாகனங்களில் மீதுள்ள ஆசை உள்ளிட்டவற்றால் பல்வேறு குற்ற பிரச்னையில் சிக்குகின்றனர். அரசியல் மற்றும் ஜாதிய தலைவர்களின் கட்டுப்பாட்டில் சிக்கியும் வாழ்வை அழித்துக்கொள்கின்றனர். ஆனால், இந்த இளைய சமுதாயத்தை நல்வழிப்படுத்த பல ஆசிரியர்களுக்கு நேரம் இல்லை.


தேவை கள ஆய்வு:

ஒரு கல்லூரியில் ஒரு குறிப்பிட்ட வகுப்பில் 40 மாணவர்கள் சேர்ந்தால் மூன்று ஆண்டுகள் கழித்து அக்கல்லூரி படிப்பை முடிக்கும்போது எஞ்சியிருப்பது 20 பேர் மட்டுமே. அதிலும் படிப்பை முழுமையாக முடித்து பட்டம் பெறுவது பத்து பேர் மட்டுமே. இந்த 10 மாணவர்களும் சமுதாயத்தில் என்ன செய்கின்றனர். என்பது பற்றிய முழுமையான ஆய்வு முடிவுகள் இல்லை. பட்டம் பெற்ற பல மாணவர்கள் ஆட்டோ ஓட்டுனர்களாகவும், சிறு வியாபாரிகளாகவும் தங்களுடைய வாழ்நாளை கழிக்கின்றனர். ஆட்டோ ஓட்டுனராக, பெட்டி கடை வியாபாரியாவதற்கு கல்லூரி கல்வி தேவையா?


எங்கே தகுதி:

அரசு வேலை பற்றிய விழிப்புணர்வோ அதற்கு எவ்வாறு தயாராக வேண்டும் என்ற எண்ணம் கூட அவர்களுக்கு கிடையாது. இன்று இந்தியாவில் பல்வேறு விதமான வேலை வாய்ப்புகள் உள்ளன. ஆனால், தகுதியான ஆட்கள் கிடைப்பது அரிது. ஏறக்குறைய 15 ஆண்டுகளை கல்வியில் செலவழித்து ஒரு மாணவன் அதன் மூலம் எந்தவித பயனையும் பெறாமல் போவது மிகவும் மோசமான ஒரு சமூக நிகழ்வு. குறிப்பாக ராணுவ துறையில் சேர்வதற்கு நம் மாணவர்களிடம் மிகுந்த ஆர்வம் உள்ளது. ஆனால் உயர் கல்வித் தகுதிகளை பெற்றிருந்தபோதும் அவர்களால் ராணுவத்தில் பெரிய பதவிக்கு செல்ல முடியவில்லை. ஏனென்றால் அவர்களுக்கு ஆங்கிலம், ஹிந்தி தெரிவதில்லை. வங்கி மற்றும் மத்திய அரசின் பல்வேறு துறைகளிலும் நம் மாணவர்கள் இதே நிலையில் தான் உள்ளனர்.


யாருக்கு உண்டு தார்மீக கடமை:

கல்லூரி மாணவர்களின் மேம்பாட்டிற்காக மத்திய அரசும், மாநில அரசும் பல கோடி ரூபாய் செலவழிக்கின்றன. இதில், 90 சதவீதம் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களின் சம்பளத்தில் கரைந்து விடுகிறது. இச்சமுதாயத்தை காக்க வேண்டிய உன்னதமான பொறுப்பு ஆசிரியர்களிடம் மட்டும் தான் உள்ளது. இந்த விஷயத்தில் பெற்றோர்களையும், மாணவர்களையும் நாம் எந்த விதத்திலும் குறை சொல்ல முடியாது. ஆகவே படித்தறிந்த ஆசிரியர்கள், திசைமாறி செல்லும் இந்த இளைஞர் சமுதாயத்திற்கு நல்வழி என்ற திசையை காட்டும் அடிப்படை மற்றும் தார்மீக சமுதாய கடமை உண்டு என்பதை ஒவ்வொரு ஆசிரியரும் உணர வேண்டும்.

- டாக்டர் எம்.கண்ணன், முதல்வர், சரஸ்வதி நாராயணன் கல்லூரி, மதுரை. 99427 12261.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X