இந்தியாவும் உலகமும்| Dinamalar

இந்தியாவும் உலகமும்

Updated : பிப் 19, 2015 | Added : பிப் 19, 2015 | கருத்துகள் (1)
Advertisement
இந்தியாவும் உலகமும்

அணி சேராக் கொள்கையில் இந்தியா உறுதியாக நின்றது. அதே வேளையில், இரண்டு வல்லரசுகளிடமும் ஒத்துழைப்பை நாடியது. சுதந்தரத்துக்குப் பிறகு பத்தாண்டுகள் ஆன பிறகும் இரு வல்லரசுகளுடனும் கொள்கை வேறுபாடுகள் தொடர்ந்து இருந்து வந்தன. என்றாலும், இரு வல்லரசுகளும் அவை ஒன்றுக்கொன்று வைத்திருந்த நம்பிக்கையைக் காட்டிலும் நேருவின்மீது பெரும் நம்பிக்கை வைத்திருந்தன. ஒன்றுக்கொன்று பகைமை காட்டிவரும் இரு வல்லரசுகளுடனும், அவற்றின் சிந்தாத்தங்கள் என்னவாக இருந்தபோதிலும், நாகரிகமான பேச்சுக்கும் ஒத்துழைப்புக்கும் வாய்ப்புள்ள செயல்பாட்டு உறவுகளுக்கான மாதிரி உருவாகி இருந்தது.1964 மே 27-இல் நேரு மறைந்தபோது சோவியத் மக்கள் தெரிவித்த கருத்துகள் எனக்குக் கிடைக்கவில்லை. ஆனால் அப்போது அவருக்கு அமெரிக்கர்கள் அஞ்சலி செலுத்தி வெளியிட்ட செய்திகள் கிடைத்துள்ளன. அவற்றில் இரண்டை கீழே தந்துள்ளேன். முதலாவது, அட்லாய் ஸ்டீவன்சன் தெரிவித்தது. இரண்டாவது கிறிஸ்டியன் சயின்ஸ் மானிட்டர் பத்திரிகை வெளியிட்டது. இரண்டுமே வழக்கத்துக்கு மாறான வகையில் பெரிதும் மனதை நெகிழவைப்பதாக இருந்தன:நம் காலத்தில் இறைவனால் படைக்கப்பட்ட மாபெரும் படைப்புகளில் அவரும் ஒருவர். விடுதலை பற்றிய, எப்போதும் விரிந்து கொண்டே இருக்கும் எல்லா மனிதர்களுக்குமான வளவாழ்வு பற்றிய அவரது கனவும், அவரது நாடும்தான் அவரது நினைவுச் சின்னம்.பழங்கால தேசம் நவீன தேசமாக உருமாற்றம் பெற்றிருக்கிறது. இந்த வாழும் இந்தியாவும், அதன் செயல் வேகம், ஆற்றல், உணர்வு ஆகியவையும்தான் நேருவின் தனிச்சிறப்பான தலையாய சாதனைகள்.நேருவின் மறைவுக்கு சில வாரங்களுக்கு முன்பு, 1964 ஏப்ரல் 6 அன்று ஓவன் லாட்டிமோரிடம் இருந்து விஜயலட்சுமி பண்டிட்டுக்கு வந்த கடிதம் தவறுக்கு வருத்தம் தெரிவிக்கும் வகையில் துன்பத்தைத் தரும் வகையில் அமைந்திருந்தது. ஆசிய விவகாரங்களை கண்டுணரும் திறனும் அறிவாற்றலும் மிக்க ஆய்வாளரான ஓவன் லாட்டிமோர், செனட்டர் மெக்கார்த்தியின் மிகக் கொடிய தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர். ஆசிய, சர்வதேச உறவுகள் குறித்து பன்னிரண்டுக்கும் மேற்பட்ட புத்தகங்களையும் எண்ணற்ற கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். மாயைகளை அடிப்படையாகக் கொண்ட கொள்கைகளைக் கைவிடுமாறு அமெரிக்காவை அவர் வலியுறுத்தி வந்திருக்கிறார். 'சில மாயைகளை நாம் உதறித் தள்ளும் வரையில், 1948-இல் சீனாவில் நாம் தடுமாறி விழுந்ததைப் போன்ற அதேமாதிரியான குளறுபடிகளில் நாம் தடுமாறி விழுவது நிச்சயம்' என 1949-இல் வெளியான ஆசிய நிலவரம் என்ற இதழில் அவர் எழுதியிருக்கிறார். 1949-இல் அவர் இந்தியாவுக்கு வந்தார். நேருவை சந்தித்த அவர் நேருவின் வேண்டுகோளின்படி காஷ்மீருக்குச் சென்று வந்தார்:கடந்த முறை, 1949 கிறிஸ்துமஸ் வேளையில், நான் இந்தியாவில் இருந்தபோது நேரு என்னை சந்தித்துப் பேசினார். காஷ்மீர் வரையில் என்னை அனுப்பி வைத்தார். கர்னல் பிலிம்ப், லாய் ஹெண்டர்சன் ஆகியோரின் அற்பத்தனமான செயல்களுக்கு இடையிலும், அப்போது விஷயங்கள் நன்கு நடந்து கொண்டிருந்தன. அங்கு நம்பிக்கை நிலவியது. வாய்ப்புகள் பெரிய அளவுக்கு இருந்தன. ஆனால் அதிலிருந்து விஷயங்கள் பெருமளவுக்கு தவறாகப் போனதற்கு அமெரிக்கர்களாகிய நாங்கள்தான் பொறுப்பு எனக் கசப்புடன் உணர்கிறேன். உங்கள் சகோதரருக்கு ஏற்பட்டுள்ள சந்தேகமும் தப்பெண்ணமும் மிகச் சிறப்பானது. என்னைப் போன்ற நிலையில் உள்ள ஒரு மனிதனால் செய்யக்கூடியது எதுவுமில்லை. ஏனெனில், சீனாவைப் பற்றி தவறான நிலைப்பாட்டில் வைக்கப்பட்டுள்ள காரணத்தால், இந்தியாவைப் பற்றி நான் சொல்கின்ற எதுவும் சந்தேகத்துடனேயே பார்க்கப்படும். அமெரிக்காவின் கொள்கையைப் பொறுத்தவரையில் இரண்டு முக்கிய விஷயங்கள் தவறானவை. எந்தத் தரப்பையும் சாராத அணுகுமுறை என்ற போர்வையின் கீழ் உண்மையில் நாங்கள் காஷ்மீர் பிரச்னையில் எப்போதும் பாகிஸ்தானுக்கு சார்பானவர்களாகவே இருந்து வருகிறோம். தீர்வு ஏற்படாமல் தடுப்பதற்கு உதவும் முறையில் தீர்வை வலியுறுத்தி வருகிறோம்.இந்தியாவின் பொருளாதாரத் திட்டத்தில் சமுதாயமயம் ஆக்கப்பட்ட துறை பற்றிய எங்களது சந்தேகம் இன்னும் அதிக அடிப்படையானது. குறிப்பிட்ட முதலீட்டின் பயன்களைப் பற்றிக் கருதாமல், தனியார் தொழிலுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலமாக இந்தியாவின் பொருளாதாரச் சமநிலையை நிலைகுலைப்பதற்கு நாங்கள் தொடர்ந்து முயன்று வந்திருக்கிறோம். கம்யூனிஸ்டுடுகள் குற்றம் சாட்டுவதைப் போல மாக்கியவெல்லியின் தந்திரத்தில் பாதி வால்ஸ்ட்ரீட்டுக்கு இருந்திருக்குமானால், இந்தியாவில் அரசு துறை நிறுவனங்களுக்கு உதவியளிக்கும் வகையிலான குறுகிய கால விரைவு செயல்திட்டம் ஒன்றுக்கு வாஷிங்டனில் அது ஆதரவு திரட்டியிருக்க முடியும். குறித்த காலத்தில் பொருளாதரத்தில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு அது ஒன்றே வழி என்ற முறையிலும், அதன் அடிப்படையில் பின்னர் தனியார் தொழிலுக்கு வழி திறந்துவிட்டிருக்க முடியும் என்ற வகையிலும் அவ்வாறு செய்திருக்க முடியும். தனியார் தொழில்களால் தூண்டப்பட்ட போட்டி, அதிகரித்த உற்பத்தி ஆகியவற்றால் பயன்கள் கிடைத்திருக்கும்.இப்போது நாங்கள், (அ) காஷ்மீர் பிரச்னையைத் தீவிரப்படுத்துதல் (ஆ) அதிதீவிர-தேசபக்தி என்ற திரைமறைவின் கீழ் உங்கள் சகோதரரின் வாழ்நாள் பணியை சிதைப்பதற்கும், பரஸ்ரப பகைமைக்கும் அதிகாரத்தில் தாங்கள் காலூன்றுவதற்கும் முயலுகின்ற சக்திகளுக்கு உதவியும் ஆதரவும் அளித்தல் என்ற முறையில் திபெத்திய எல்லைப் பிரச்னையில் எங்கள் வலுவைப் பயன்படுத்துவதன் மூலம் எங்களது முந்தைய தவறுகளை நாங்கள் மேலும் அதிகப்படுத்திக் கொண்டே போகிறோம் என்று நான் அஞ்சுகிறேன்.1964 ஏப்ரலில் எழுதப்பட்ட ஓவன் லாட்டிமோரின் இந்தக் கடிதம், அந்தக் காலகட்டத்தின் அதிகார ஆட்டத்தை, இந்த இடத்தில், காஷ்மீரிலும் திபெத்திலும் மேற்கத்திய தலையீட்டை பிரதிபலிக்கிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, சாம்ராஜ்ஜியங்கள் தகர்ந்து விழுகின்ற வரையிலும், பெரும்பகுதி ஐரோப்பாவின் கட்டுப்பாட்டில் இருந்த ஆசியாவை, அது ஒரு தனிப் பகுதி என்பதை மேற்கத்திய நாடுகள் புறக்கணித்து வந்திருக்கின்றன. எனினும், இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தபோதிலும் அந்த இடத்தை பனிப் போர் பிடித்துக் கொண்ட காரணத்தால், ஆசியாவின் விவகாரங்களில் திசைவழி எப்படி இருக்க வேண்டும் என்பதை ஆணையிடுவதற்கான முயற்சிகள் தொடர்ந்து கொண்டிருந்தன. அவை ஆசியப் பகுதியில் நிலையற்ற தன்மையை ஏற்படுத்திக் கொண்டிருந்தன. வல்லரசுகளின் திட்டங்களுக்கான சோதனைக் களமாக அதை ஆக்கிக் கொண்டிருந்தன.0ஏகாதிபத்திய ஆதிக்கம் மேலோங்கியிருந்த காலகட்டத்தில், ஐரோப்பிய வல்லரசுகள் ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் அவற்றுக்குள்ள உடைமை மண்டலங்களை அல்லது செல்வாக்கு மண்டலங்களை ஒன்றுக்கொன்று அங்கீகரித்து வைத்திருந்தன. இந்தப் பழைய கால அமைப்பானது , அவை தங்களது அடிமைநாடுகளின் செல்வத்தைச் சுரண்டுவதற்கும், தடையின்றி அவற்றை மேற்கு நோக்கி அனுப்பி வைப்பதற்கும் தேவையான மாற்றமில்லாத நிலையை உறுதிப்படுத்தியது. முதல் உலகப் போரின்போது ஒன்றை ஒன்று பகைத்துக்கொண்ட நிலையில், தோற்றுப்போன வல்லரசுகள் அவற்றின் காலனிகளை இழந்தன. வெற்றி பெற்ற கூட்டணி நாடுகள் போர்க்காலத்தில் அவை ஆக்கிரமித்திருந்த பகுதிகளை லீக் நாடுகளின் ஆசிபெற்ற ஆணைகளின் கீழ் அதிகாரபூர்வமாக தங்களது ஆட்சி அதிகாரத்துக்கு உள்பட்ட பகுதிகளாக ஆக்கிக் கொண்டன. இராக்கும், பாலஸ்தீனமும் பிரிட்டனுக்கு சொந்தமாயின. சிரியா பிரான்சுக்கு சொந்தமானது. இந்த ஆணைகளை 'நாகரிகத்தின் புனிதமான நம்பிக்கைகள்' என லீக் சித்திரித்தது. வெல்லஸ்லி கல்லூரியில் என்னுடைய வரலாற்றுப் பாட நூலில் இந்த உன்னத நோக்கம் பின்வரும் சொற்களில் விவரிக்கப்பட்டிருந்தது: 'அரசியல் சுதந்தரத்தை நோக்கியும், அமைப்பு சார்ந்த சர்வதேச சமுதாயத்தில் உறுப்பினர் ஆவதை நோக்கியும் அரபு நாடுகளை வழிநடத்தும் பொறுப்பை கிரேட் பிரிட்டனும் பிரான்சும் ஏற்றுக் கொண்டிருக்கின்றன' என்று. ஜவஹர்லால் நேரு அவரது உலக வரலாறு நூலில் இதை வேறு விதமாகக் குறிப்பிட்டிருக்கிறார். 'பசுக்கள் அல்லது மான்களின் நலன்களைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்புக்கு புலியை' நியமித்திருப்பது போல இந்த ஏற்பாடு இருக்கிறது என அவர் ஒப்பிட்டிருக்கிறார். ஒரு மாற்று வரலாறு எழுதப்பட வேண்டியிருந்தது. ஒரு மாற்றுக் கண்ணோட்டம் முன்வைக்கப்பட்டது. ஆதிக்கம் செலுத்திய கண்ணோட்டத்தை மாற்றியமைப்பதற்கு வேறு சொற்கள் தேர்வு செய்யப்பட்டு இணைக்கப்பட்டன.=========நேரு : உள்ளும் புறமும் நயன்தாரா சகல்தமிழில்: ஜெயநடராஜன்கிழக்கு பதிப்பகம்பக்கம் 320 விலை ரூ 200இணையத்தில் புத்தகத்தை வாங்க : https://www.nhm.in/shop/978-93-5135-152-8.htmlஃபோன் மூலம் புத்தகத்தை வாங்க : 09445901234 / 09445979797

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Murugan - Boissy- saint- leger,பிரான்ஸ்
19-பிப்-201513:20:33 IST Report Abuse
Murugan அற்புதமான படைப்பு. பல கோடி நன்றி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X