பண்பாட்டு அடையாளம்... பாட்டன்கள் சொத்து..!| Dinamalar

பண்பாட்டு அடையாளம்... பாட்டன்கள் சொத்து..!

Added : பிப் 23, 2015 | கருத்துகள் (1)
பண்பாட்டு அடையாளம்... பாட்டன்கள் சொத்து..!

ஒரு நாட்டில் மக்களால் பேசப்படும் மொழி வளமை, விருந்தோம்பல் பாங்கு, கலைவளம் ஆகியவற்றை வைத்தே அந்த நாட்டின் பண்பாட்டை அளவிட இயலும். ஏனெனில் மொழி, விருந்தோம்பல், கலை மனித சமூகத்தின் பரிணாம வளர்ச்சியின் உயிர் நாடியாக இருந்து வந்துள்ளது என்று வரலாற்றுப்பதிவுகள் நமக்கு உணர்த்துகின்றது. ஒரு இனத்தையும், அவ்வினத்தின் அடையாளங்களையும் அழித்து விட வேண்டுமென்றால், அந்த இனத்தின் மீது ரத்தத்தை உறைய வைக்கும் அணுகுண்டுகளை வீசத் தேவையில்லை. அந்த இனத்தின் மொழியை மட்டும் அழித்தால் போதும். அந்த இனம் தன்னைத்தானே அழித்து கொள்ளும் என்பார்கள். அவ்வாறு ஒரு மொழி தன் ஆற்றலை இழக்கும்போது, அம்மொழி பேசும் மக்களின் கலைகள், கலாசார பதிவுகள், வாழ்க்கை அனுபவ பதிவுகள் கொஞ்சம் கொஞ்சமாக மங்கத் தொடங்குகிறது. 'கலை' என்பது நாடு, மொழி, இனம், மதம் போன்ற அனைத்து எல்லைகளையும் கடந்தது. வெவ்வேறு தன்மைகளுடையது. சாமானியர்களின் வாழ்வியலை வெகுஜன மக்களுக்கு தெரிவிக்கும் ஊடகமே கலை வடிவங்கள்.
நாட்டுப்புற கலைகள் நமது கலாசாரம் பண்பாட்டின் முகவரியாகத் திகழும் கிராமங்களில் தெய்வங்களுக்கு எடுக்கப்படும் திருவிழாக்களிலும், பிற ஊர் பொது நிகழ்வுகளிலும், ஓய்வு நேரங்களிலும், உழைத்து களைத்துப்போன பாமரர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பாடல், ஆட்டம், கதை, நாடகம் என பல வடிவங்களில் நிகழ்த்திக் காட்டியுள்ளனர். அவையே நாட்டுப்புற கலைகள் என கருதலாம். அக்கலைகள் உழைத்து அலுத்துப்போன உடலுக்கும், உள்ளத்திற்கும் புத்துணர்வு ஊட்டியது. அதற்கு காரணம் அக்கலைகளில் மிளிர்ந்த மண் மனம் மாறா மக்களின் யதார்த்த வாழ்க்கை பிரதிபலிப்பு தான்.ஆடல் கலைகளான ஒயிலாட்டம், கும்மியாட்டம், பொம்மலாட்டம், தேவராட்டம், குறவன் குறத்தியாட்டம் போன்றவை அக்காலத்தில் சமூக வீரம், காதல், போர், உழவு, உணர்வு, கடவுள் பக்தி ஆகியவற்றை பாரெங்கும் மக்களுக்கு எளிமையாக பறைசாற்றும் ஒரு வலிமையான கலைவடிவங்களாக இருந்தது.கும்மிப்பாட்டு, வில்லுப்பாட்டு, நையாண்டிப்பாட்டு, தாலாட்டு, ஒப்பாரி போன்ற நாட்டுப்புற பாடல் கலைகள் உடல் நோக உழைக்கும் மக்களின் உணர்வோடு கலந்த உயிரோட்டமாக இருந்தது. இந்த பாடல்களில் இடம் பெறும் சொல்லாட்டங்கள், நம் முன்னோர்களின் மொழிவளம் மற்றும் பண்பட்ட வாழ்க்கை முறையினை தெரிந்து கொள்ளும் ஆவணங்களாக உள்ளது.காணாமல் போன கலைகள் ஒரு நாட்டில் கலைகள் மங்குகின்றதென்றால் அந்த நாட்டின் பண்பாடும், கலாசாரமும் சீரழிந்து கொண்டிருக்கிறது என்றே அர்த்தம். அங்கொன்றும் இங்கொன்றுமாக விஞ்சி இருக்கும் அந்த மண்வாசனை பாமரனின் கலைவடிவங்கள் தான் நமது பண்பாட்டின் கண்ணாடிகள். அன்று வயலில் பாடிக்கொண்டே விதை விதைத்த நம் உழவன், விதையோடு பண்பாடு என்ற வேரையும் சேர்ந்தே நட்டான். ஆனால் இன்று தான் உண்டு தன் வேலையுண்டு என்று தினமும் பரபரப்பாக சுழன்று கொண்டிருக்கும் மக்களின் நகர வாழ்க்கையில் உல்லாச விடுதிகள், திரையரங்குகள், மது விடுதிகள், அவர்களின் கலைத்திறன்களை ஊனப்படுத்தி விட்டது.உழவிடும் போதும்...பயிரிடும் போதும்...தோட்டத்தில் பறவைகளை விரட்டும் போதும்...விளை நிலங்களை பாழ்படுத்தும் காட்டு மிருகங்களை விரட்டியபோதும்...பயிர் அறுக்கும் போதும்...தலைச்சுமையாய் நெற்கதிர்களை வரப்பில் சுமந்து செல்லும்போதும்...
உணவுக்காக நெல்குத்தும்போதும்...நல்விளைச்சலுக்கு ஆதாரமான கதிரவனுக்கு நன்றி சொல்லும் போதும்...கடவுள் நம்பிக்கையில் கால்நடையாய் களைப்பின்றி தொலைதுாரம் நடக்கும்போதும்... கலைகளுடன் பயணித்தவர்கள் நாம்.சுருக்கமாக 'உழவு முதல் கழவு வரை' ஒவ்வொரு நொடியிலும் கலைகளுடன் திளைத்தவர்களை கண்டுகொள்ள இன்று நாதியில்லை. அவர்களின் கலைகளும் காணாமல் போய் விட்டது.
கலைகள் மீட்பு :'தமிழன் என்றோர் இனமுண்டு. தனியே அவனுக்கோர் குணமுண்டு' என்பார்கள். அதுபோல 'தமிழன் என்றோர் இனமுண்டு கலைகள் பல அவனிடமுண்டு' எனலாம். விடுகதைகள் விதைத்து அறிவை வளர்க்கும் வில்லுப்பாட்டுண்டு...வேர்ட்ஸ்வொர்த்தே வியக்கும் தாலாட்டுப்பாடல் வரிகளுண்டு...பூமியன்னையை போற்றும் கும்மியுண்டு...உழைத்து, களைத்து, சலித்துப்போன உடலையும் துள்ள வைக்கும் பறையாட்டமுண்டு. அரசன் ஆணைகளை மக்களுக்கு தெரிவிக்கும் பறைக்கருவியுண்டு. சான்றோர் மரித்தாலும் அவரின் சாதனைகளை ஓங்கி ஒலிக்க ஒப்பாரியுண்டு. போர்க்களத்தில் பகைவன் உயிர் வாங்க ஒயில் உண்டு.மேலைநாட்டு கராத்தே, குங்பூவுக்கு தாய்க்கலை போல் சிலம்பு உண்டு...தமிழரின் உயிராம் கற்பின்
இலக்கணம் கூறும் கண்ணகி கூத்துண்டு...விண்ணுலக நிகழ்வாம் சிவன் பார்வதி திருமண நிகழ்வை நினைவு கூறும் தேவராட்டமுண்டு. வந்தே மாதரம் முழங்கி நாட்டுப்பற்றை கிராமத்து மண்ணில் விதைத்த பொம்மலாட்டமுண்டு. மண் மனம் மாறாக் காதல் சொல்லும் நையாண்டி பாடலுண்டு என்பதை நினைவு கூர்ந்து நமது பாட்டன்களின் சொத்தான பண்பாட்டு அடையாளங்களான கலைகளை மீட்டெடுத்து வளர்ப்போம். தமிழர் பண்பாடு காப்போம்.- முனைவர் சி.செல்லப்பாண்டியன்,வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர்,தேவாங்கர் கலைக்கல்லுாரி,அருப்புக்கோட்டை,78108 41550

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X