புதுசு புதுசா வருது காரு... பழசாவே இருக்கு ஊரு!| Dinamalar

புதுசு புதுசா வருது காரு... பழசாவே இருக்கு ஊரு!

Added : பிப் 24, 2015
Share
''அம்மா....அம்மா...அம்மா...நீயே என் அம்மா...உன்னை விட்டா எனக்கு வேறு யாரு அம்மா?,''ஹோம் தியேட்டரில் வீடெங்கும் எதிரொலித்த தனுஷின் குரலில் பாசம் வழிந்தோடியது.''என்னடி! உங்க வீட்லயும் இந்தப் பாட்டு தானா? தெருவுல எங்க போனாலும், 'அம்மா' பாட்டு தான்!,'' என்றபடி, மித்ராவின் வீட்டிற்குள் நுழைந்தாள் சித்ரா.''காதுல கேக்குறது மட்டுமில்லை; கண்ணுல பாக்கிற காட்சியெல்லாம்
புதுசு புதுசா வருது காரு... பழசாவே இருக்கு ஊரு!

''அம்மா....அம்மா...அம்மா...நீயே என் அம்மா...உன்னை விட்டா எனக்கு வேறு யாரு அம்மா?,''ஹோம் தியேட்டரில் வீடெங்கும் எதிரொலித்த தனுஷின் குரலில் பாசம் வழிந்தோடியது.''என்னடி! உங்க வீட்லயும் இந்தப் பாட்டு தானா? தெருவுல எங்க போனாலும், 'அம்மா' பாட்டு தான்!,'' என்றபடி, மித்ராவின் வீட்டிற்குள் நுழைந்தாள் சித்ரா.''காதுல கேக்குறது மட்டுமில்லை; கண்ணுல பாக்கிற காட்சியெல்லாம் 'அம்மா'தான். முக்கியமான ஒரு விஷயத்தைக் கவனிச்சியா அக்கா...நிறையா சுவர் விளம்பரத்துல, மேயர், அமைச்சர் பேர்களோட, செ.ம., பேரும் எழுதிருக்கு பார்த்தியா?,'' என்றாள் மித்ரா.''அந்தக் கதை ஒனக்குத் தெரியாதா? அந்த சுவர்களையெல்லாம் மாநகர் மாவட்டத்துக்காரங்க, 'ரிசர்வ்' பண்ணி வச்சிருந்திருக்காங்க. அதுல, செ.ம., ஆளுங்க, விளம்பரம் எழுதிட்டாங்களாம். கேட்டதுக்கு, 'அதெல்லாம் நாங்க காலம் காலமா எழுதுற சுவர்'ன்னு சொல்லிருக்காங்க. அப்புறமா, செ.ம.,பேரை அழிச்சிட்டு, மூணு பேரோட பேரையும் எழுதிருக்காங்க,'' என்றாள் சித்ரா.''செம ஐடியாவா இருக்கே! ஆனா...மத்திய மண்டலத்தலைவர் ஆதி நாராயணன், தன்னோட ஏரியாவுல அஞ்சு இடத்துல பிரமாண்டமா பிளக்ஸ் வச்சிட்டு, திடீர்ன்னு எடுத்துட்டாரு தெரியுமா?,''''ஆமா! நானும் அந்த பிளக்ஸ்களை பார்த்தனே...ஜெ.,வுக்கு முன்னால, இவர் மண்டி போட்டு வணங்குறது மாதிரி படம் வச்சிருந்தாரே... அது தான?,''''அதே தான்! ஆனா, பிரச்னையே அந்த படம் தான். பிளக்சைப் பாத்துட்டு, கட்சிக்காரங்க எல்லாம், 'இவரு எப்ப சென்னை போனாரு. அம்மாட்ட எப்ப ஆசி வாங்குனாரு?'ன்னு கிண்டலடிக்க ஆரம்பிச்சிட்டாங்க. அது மட்டுமில்லாம, எந்த விளம்பரத்துலயும் கட்சிக்காரங்க படம் வரக்கூடாதுங்கிற தலைமை உத்தரவை மீறுனதா 'பெட்டிஷன்' தட்டிட்டாங்க...! அப்புறம் தான், பயந்து போய், பிளக்சை எடுத்திருக்காரு,'' என்றாள் மித்ரா.''வெவரமான அண்ணாச்சி தான். இத்தனை வருஷமா, சாதாரண கார் வச்சிருந்த அவரு, இப்போ 'எக்கோ ஸ்போர்ட்' வண்டியில வர்றாரு...கவனிச்சியா?,'' என்று கேட்டாள் சித்ரா.''ஓ...! பார்த்தனே...இத்தனை வருஷமா சேர்மனா இருந்து, அந்த வண்டி கூட வாங்கலைன்னா, ஊர்ல யாருக்கா அவரை மதிப்பாங்க?. நம்ம கார்ப்பரேஷன் டி.சி., மேடத்துக்கே புது 'ஸ்கார்பியோ' வந்துருச்சே. மூணு மாசத்துக்கு முன்னாடி தான், கவுன்சில்ல தீர்மானம் போட்டாங்க. அதுக்குள்ள வண்டி வந்துருச்சு,''''அவுங்க பின்னணி அப்பிடி! ஆனா, மூணு வருஷத்துக்கு முன்னாடி, மக்களுக்காக...கவுன்சில்ல போட்ட பல தீர்மானம்... அப்படியே கிணத்துல போட்ட கல்லு மாதிரி கெடக்குது!?,''''அதை விடு....! ஜெர்மன்ல இருந்து வந்தாரே... யெஸ்லிங்கன் ஆம்நெக்கார் சிட்டியோட மேயர் சீகர்... நம்மூரைச்சுத்திப் பாத்துட்டு என்ன சொன்னாராம்...?,'' என்றாள் மித்ரா.''முதல்ல....அவரு நம்ம கார்ப்பரேஷன் அழைப்புலயே இங்க வரலை...இங்க வந்து எந்த எம்.ஓ.யு., ம் 'சைன்' பண்ணவுமில்லை. ஜி.டி.,குரூப்போட, அவுங்களுக்கு 75 வருஷ 'அக்ரிமென்ட்' இருக்கு. அது தொடர்பா வந்தவுங்களை, இங்க கூப்பிட்டு வந்து 'சீன்' காமிச்சிட்டாங்க!,'' என்று விவரமாய்ச் சொன்னாள் சித்ரா.''சரி...ஊரைப்பத்தி என்ன சொன்னாங்களாம்?,''''அவுங்க சிட்டியில 9 லட்சம் பேரு தானாம். இங்க ரெண்டு மடங்கு மக்கள் இருக்காங்க. ஆனா, இந்த ஊரு மாதிரி பிளாஸ்டிக் குப்பைகளை எங்கயுமே பாத்ததில்லைன்னு சொல்லிருக்காங்க. ரோடு, டிரெயினேஜ் எல்லாமே பாலித்தீன் குப்பையா இருக்கிறதைப் பாத்துட்டு, மெரண்டுட்டாங்க,''''உண்மை தான்! புது மேயரு, புது கமிஷனரு வந்தும், ஒரு மாற்றமும் நடக்கலியே. ஊரு இன்னும் பழசாத்தானே இருக்கு. அரசியல், லஞ்சத்தைத் தவிர, வேற எந்த வேலையுமே நடக்கிறதில்லையே,'' என்று வேதனைப்பட்டாள் மித்ரா.''கரெக்ட் மித்து! அந்த ஜெர்மன் குழுவை வரவேற்கிறதுக்கு, கார்ப்பரேஷன் வாசல்ல பெருசா தாமரைக் கோலம் போட்டிருந்திருக்காங்க. அதைப் பாத்துட்டு, உடனே அழிக்கச் சொல்லிட்டாங்களாம். தண்ணிய ஊத்தி அழிச்சிட்டு, வேகவேகமா வேற பூக்கோலம் போட்ருக்காங்க,'' என்றாள் சித்ரா.''இன்னோரு மேட்டர் தெரியாதா ஒனக்கு? அந்த ஜெர்மன் குரூப்புக்கு, நம்ம ஊரு ஃபைவ் ஸ்டார் ஓட்டல்ல, பார்ட்டி கொடுத்திருக்காங்க. அதுல, நம்ம கார்ப்பரேஷன் மக்கள் பிரதிநிதிங்க மூணு பேரு, 'கிளாஸ' சோட இருக்கிற படம், ஏடிஎம்கே சர்க்கிள் 'வாட்ஸ் ஆப்'ல வேகமாப் பரவிட்டு இருக்கு. அதை வச்சு, மேல ஏதாவது 'பெட்டிஷன்' தட்டலாமான்னு 'டிஸ்கஸ்' ஓடிட்டு இருக்காம்,'' என்றாள் மித்ரா.''அதை விட பெரிய காமெடி...இவுங்க போன பிறகு, மும்பை கவுன்சிலர்ஸ் வந்தாங்களே. அதுல லேடி கவுன்சிலர்ங்க, லெக்கின்ஸ், கலர்ஃபுல் டாப்ஸ்ல வந்ததைப் பாத்துட்டு, 'எப்பிடி இருக்காங்க பாருங்க...நம்ம ஊர்லயும் இருக்காங்களே'ன்னு கவுன்சிலர் குரூப் ஒண்ணு 'கமென்ட்' அடிச்சிருக்கு,'' என்றாள் சித்ரா.''குரூப்ன்னா, எனக்கு காங்கிரஸ் ஞாபகம் தான்... சிதம்பரம் கோஷ்டியைச் சேர்ந்த 6 பேரை, கட்சியை விட்டு நீக்குனாங்களே.. என்னாச்சு?,'' என்றாள் மித்ரா.''அதுக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடி தான், அந்த 6 பேரும் மதுரைக்குப் போய், முகுல் வாஸ்னிக்கைப் பாத்திருக்காங்க. அவரு, 'இவிகேஎஸ்சைப் பாருங்க'ன்னு அனுப்பிட்டாராம்!,''''இவிகேஎஸ்சைப் பார்த்தாங்களா?,''''பாத்த பிறகு தான், கட்சியை விட்டு, நீக்கிருக்காங்க! அகமது படேல்ட்ட சிதம்பரம் பேசிருக்காராம். சீக்கிரமே திரும்பவும் சேத்துக்குவாங்கன்னு நம்பிக்கையா இருக்கிறாங்க,'' என்றாள் சித்ரா.''ஜி.கே.,வாசன் நடத்துன வாகன பேரணிக்குக் கூட்டம் பரவாயில்லைன்னு சொன்னாங்களே?,''''ஆமாமா...நானும் பார்த்தேன். ஒரு ஆளுக்கு பெட்ரோலுக்கு 300 ரூபா, கையில 300 ரூபான்னு கொடுத்தாங்களாம்!,''''என்னக்கா! நம்ம பல்கலை வித்தகரைப் பத்தி, ஒரு தகவலும் இல்லியான்னு காலேஜ் வட்டாரத்துல ஒரே விசாரிப்பா இருக்கு!,'' என்றாள் மித்ரா.''எத்தனையோ புகாருக்கு அப்புறமா...புதுசா ஆள் எடுக்கக்கூடாதுன்னு, அபூர்வமா செகரட்டரியே ஒரு உத்தரவு போட்டாங்க. ஆனா, இன்டர்வியூ நடத்திட்டாரே. கடைசியில அவுங்க தான், 'அனுமதி கொடுத்துட்டோம்'னு 'ஜகா' வாங்க வேண்டியதாயிருச்சே!,'' என்றாள் சித்ரா.''அது ஏன்னு தெரியுமா? இன்டர்வியூக்கு முன்னாடியே, ஒரு 'போஸ்ட்டிங்'குக்கு, 25, 30, 35 லட்சம்னு பேசி வாங்கிட்டாராம். இப்போ, 'செகரட்டரி லெவல்'ல முட்டுக்கட்டை போட்டதும், 'பெரிய்ய்ய' பொறுப்புல 'டம்மி'யா உக்காந்திருக்கிற வி.வி.ஐ.பி.,யோட பையனைப் பிடிச்சு, ரெண்டு 'சி' கொடுத்து, அத்தனை பிரச்னையையும் 'ஆஃப்' பண்ணிட்டாராம்,'' என்றாள் மித்ரா.''ஓ! நம்ம மாவட்டத்து வி.ஐ.பி.,யைக் கூட, அவரு சுத்தமா மதிக்கிறதேயில்லையாம். அதுக்கு இதுதான் காரணமா இருக்குமோ?,'' என்றாள் சித்ரா.''அக்கா! நம்மூர்ல கிழக்கே இருக்கிற முக்கியமான போலீஸ் ஆபீசரைப் பத்தி ஒரு புகாரு. பல கோடி ரூபா சொத்து சேத்துட்டாரு; கரூர்ல அவருக்கு தியேட்டர், ஸ்கூலு இருக்கு; பல கோடி ரூபாய்க்கு புதுசா பங்களா கட்றாருன்னு ஆதாரப்பூர்வமா ஒரு 'பெட்டிஷன்' வந்திருக்கு. அதைப் பத்தி, 'என்கொயரி' நடந்துட்டு இருக்கு!,'' என்றாள் மித்ரா.''பெருசா பங்களா கட்டுறதுக்கு அவரென்ன வெள்ளைக்கார துரையா? கொள்ளைக்கூட்ட பாஸா? இல்லேன்னா... வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவரா?,'' என்றாள் சித்ரா.''அதெல்லாம் ஒண்ணுமில்லை. அவிநாசி ரோட்டுல ஒரு 'அப்பார்ட்மென்ட்'ல பத்து 'ஃபிளாட்'கள்ல இருந்து காசு வருதுன்னு சொன்னனே...அவரே தான். பூர்வீகச் சொத்தும் கிடையாதாம். ஏன்னா, பேரு, விலாசத்தோட 'பெட்டிஷன் போட்ருக்கிறதே, அவரோட மச்சினன் தான்!,'' என்றாள் மித்ரா.''மித்து! சொத்துன்னா எனக்கு ஆர்.டி.ஓ.,க்கள் ஞாபகம் தான் வரும். நம்மூருல புதுசா ஆரம்பிச்ச ஆர்.டி.ஓ., ஆபீஸ்ல ஒரே பிரச்னையாம். இனிமே பிரச்னையே வரக்கூடாது; பெருசா வருமானம் மட்டும் தான் வரணும்னு, சிவராத்திரியன்னிக்கு அதிகாலையில 'சத்ருசம்ஹார வேள்வி' நடத்திருக்காங்க!,'' என்றாள் சித்ரா,''அக்கா! ஆர்.டி.ஓ.,ன்னதும், எனக்கு இன்னொருத்தரு ஞாபகம் வந்துருச்சு. டிஎம்கே கவர்மென்ட்ல, தன்னோட வலது கரத்துக்கு வலது கரமா இருந்த இவரை, திருச்சியில பக்கத்துலயே வச்சிக்கிட்டாரு மினிஸ்டரு. அதேபோல, இப்ப இருக்கிறவருக்கும் இவரு தான் ரொம்ப நெருக்கமாம். டிரான்ஸ்பர், போஸ்ட்டிங் எல்லாம் இவர் மூலமா தான் நடக்குதாம்...யாருன்னு தெரியுதா?,'' என்றாள் மித்ரா.''ஓ...நல்லாத் தெரியுதே. ஆனா, பேசுனதுல நமக்கு 'டைம்' போனது தான் தெரியலை. சரி...கிளம்பு. ஏடிஎம்கேல மூணு 'டீம்'ல எந்த 'டீம்' நல்லா விளம்பரம் பண்ணிருக்குன்னு பாத்துட்டு வரலாம்,'' என்று மித்ராவைக் கிளப்பினாள் சித்ரா.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X