எமனாக உருமாறும் கொசுக்கள் - டாக்டர். கு . கணேசன்

Added : பிப் 24, 2015 | கருத்துகள் (3)
Advertisement
எமனாக உருமாறும் கொசுக்கள் - டாக்டர். கு . கணேசன்

டெங்குகாய்ச்சல் பரவி பல குழந்தைகளைப் பலிவாங்கிய சூழ்நிலையில் கொசுக்களை ஒழித்தால் மட்டுமே உயிர்ப்பலிகளைத் தடுக்க முடியும் என்கிற விழிப்புணர்வு பொது மக்களிடம் துளிர்விட்டுள்ளது. இந்த நேரத்தில் கொசுக்களின் அரிச்சுவடிகளைத் தெரிந்து கொள்வதும் அவசியம் தானே. ஒற்றை ஜோடி ரெக்கைகளை வைத்துக் கொண்டு ஆகாய விமானம் போல் பறக்கின்ற கொசுக்களில் இன்று வரை 35ஆயிரம் இனங்கள் உள்ளதாக கண்டுபிடித்துள்ளனர். அவற்றுள் அனபிலிஸ், குயூலெக்ஸ், ஏடிஸ், மேன்சோனியா எனும் நான்கு வகைகள் மட்டுமே மனித இனத்துக்கு எமனாக உருமாறியுள்ளன. மலேரியா, டெங்கு காய்ச்சல், சிக் குன்- குனியா, யானைக் கால் நோய், ஜப்பானிய மூளைக் காய்ச்சல், மஞ்சள் காய்ச்சல் போன்ற நோய்களைப் பரப்பி ஆண்டு தோறும் பல மனித உயிர்களைப் பலி வாங்கி பீதியடையச் செய்கின்றன.


கொசுக்களின் வாழ்க்கை:

ஆண் கொசுக்கள் கொஞ்சம் புஷ்டியாக இருந்தாலும் ரொம்பவும் சாது. பறப்பதே தெரியாது; நம்மைக் கடிக்கவும் செய்யாது. பெண் கொசுக்கள் தான் நம் எதிரிகள். எந்திர வேகத்தில் பறந்து ரீங்காரம் செய்வதும் நம்மை கடித்துத் துன்புறுத்துவதும் இவை தான். ஆண் கொசுக்கள் பூ, பழத்தில் கிடைக்கின்ற தேன், தாவரச் சாறுகளை உண்ணும். பெண் கொசுக்கள் மனித ரத்தம் அல்லது மிருக ரத்தம் குடித்து உயிர் வாழும். பெண் கொசுக்களுக்கு முட்டைகளை உற்பத்தி செய்ய புரதச்சத்து தேவை. அதைப் பெறுவதற்குத்தான் டிராகுலா மாதிரி மனித ரத்தத்தை உறிஞ்சிக் கொள்கிறது. ஒரு கொசுவின் சராசரி வாழ்வுக் காலம் 2 வாரம். பெண் கொசுக்களைவிட ஆண் கொசுக்களுக்கு வாழ் நாள் குறைவு. காற்றின் வேகத்தோடு சுமார் 11 கி.மீ., சுற்றளவுக்குக் கொசுக்களால் பறக்கமுடியும். பொதுவாக எல்லாவகைக் கொசுக்களும் மாலை நேரத்திலும், இரவின் தொடக்கத்திலும் தான் மனிதரைக் கடிக்கும். டெங்கு காய்ச்சலை பரப்புகின்ற ஏடிஸ் கொசுக்கள் மட்டும் பகலில் கடிக்கும்.


கொசு கடிப்பதால் தான் கடித்த இடத்தில் வலி ஏற்படுவதாகப் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்; அப்படியில்லை. கொசு கடித்து ரத்தத்தை உறிஞ்சும் போது அந்த ரத்தம் உறைந்து விடாமல் இருக்க அதன் எச்சிலை நம் தோலில் துப்புகிறது. அந்த எச்சிலில் உள்ள ரசாயனம் தான் நமக்கு ஒத்துக் கொள்ளாமல் அரிப்பு, தடிப்பு, வலியை ஏற்படுத்துகிறது. வீடுகளில் இருட்டான மூலைகளில், சுவரில் தொங்கும் படங்களுக்கு மறைவில், கட்டிலுக்கு அடியில் கொசுக்கள் தங்கி ஓய்வெடுக்கும்; வீட்டுக்கு வெளியில் கிணறு, தேங்கும் தண்ணீர், சாக்கடை, செடிகொடி, தாவரங்கள், மாட்டுத் தொழுவம் போன்றவற்றிலும் தங்கும். தேங்கும் தண்ணீர், சாக்கடை போன்ற நீர் நிலைகளில் முட்டைகளை இடும்.


கொசுக்களைக் கொல்லும் மீன்கள்:

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் வரை நாட்டில் இந்த அளவுக்கு அதிகமாக கொசுக்கள் இல்லை. காரணம், ஏரிகள், குளங்கள் நிறைய இருந்தன. அவற்றில் மீன்கள் வளர்ந்தன. நீரில் மிதக்கும் கொசுக்களின் 'லார்வா'க்கள், மீன் குஞ்சுகளுக்கு உணவாகின. இதனால் கோடிக்கணக்கான கொசுக்கள் இயற்கையாகவே அழிக்கப்பட்டன. இப்போதோ ஏரி, குளங்கள் இருந்த நீர்நிலைகளை குடியிருப்புகளாக மாற்றிவிட்டோம். இயற்கை வழியில் கொசுக்கள் அழிவதை தடுத்து விட்டோம். நமது அழிவுக்கு நாமே காரணமாகிவிட்டோம். இன்றைக்கும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற நாடுகளில் குளம், குட்டை, பிற நீர்நிலைகளில் 'கம்பூசியாஅபினிஸ்' எனும் மீன்களை வளர்த்து கொசுக்களை ஒழிக்கிறார்கள். இந்த முயற்சி இப்போது நமக்கும் தேவை.


தடுக்க என்ன வழி?

வீட்டையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். ஜன்னல்களில் கொசுவலை பொருத்தலாம். வாசலில் நீண்ட திரைச் சீலைகளைத் தொங்கப்போடலாம். கொசுவர்த்தி, கொசு விரட்டி, கொசு ஸ்பிரே போன்றவையும் பலன் கொடுக்கும். கொசு எதிர்ப்புக் களிம்பை உடலில் பூசிக்கொள்ளலாம். கை, கால் முழுக்க மறைக்கும் பருத்தி ஆடைகளை அணியலாம்


வீட்டைச் சுற்றி சாக்கடை மட்டுமல்ல, சாதாரண தண்ணீர் கூட தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தெருக்களைச் சுத்தமாக வைத்துக் கொள்ள சுகாதாரப் பணியாளர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். வீட்டுச்சுவர்கள் மீது'டி.டி.டி.' அல்லது 'மாலத்தியான்' மருந்தைத் தெளித்தால் கொசுக்கள் ஒழியும். வீட்டைச் சுற்றியும், தெருவோரச் சாக்கடையிலும்'டெல்டா மெத்திரின்' மருந்தைத் தெளிக்க, கொசுக்கள் மடியும். தேங்கிய நீர் நிலைகள் அனைத்திலும் இந்தக் கொசு மருந்தை அடிக்க வேண்டியது முக்கியம். மக்கள் நெருக்கடி மிகுந்த குடியிருப்புகளில் 1000 கன அடி இடத்திற்கு 4 அவுன்ஸ் 'கிரிசாலை' புகைக்க கொசுக்கள் இறக்கும். குடிநீர்த் தொட்டிகளில் 'டெமிபாஸ்' மருந்தைத் தெளிக்க வேண்டும். தண்ணீரை, மூடி உள்ள பாத்திரங்களில் ஊற்றிவைப்பது பாதுகாப்பானது. குப்பைத் தொட்டிகள், தேங்காய் மூடிகள் ஆகியவற்றில் கூட தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டில் பாழடைந்த கிணறுகள் இருந்தால் மூடிவிட வேண்டும். வீட்டிலுள்ள தண்ணீர்த் தொட்டிகளை அடிக்கடி சுத்தம் செய்து, குறைந்தது இரண்டு மணி நேரம் காய வைக்க வேண்டும். தண்ணீர்த் தொட்டிகள், குடிநீர் மேல்நிலைத் தொட்டிகள், குளியலறைத் தொட்டிகள், பால்கனி, ஜன்னல்களின் 'சன்ஷேடு', ஏர்கூலர், பூந்தொட்டிகள், அழகுஜாடிகள், உடைந்த ஓடுகள், தகர டப்பாக்கள், தேங்காய் ஓடுகள், டயர்கள், பிளாஸ்டிக் வாளிகள், கப்புகள், பேப்பர் டம்ளர்கள், ஆட்டு உரல் ஆகியவற்றில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.


கொசுவலை கட்டுதல்:

கொசுவலை கட்டுதல் மூலம் கொசுக்கடியிலிருந்து தப்பிக்கலாம். படுக்கப்போகும் போது கொசுவலை கட்டினால் முழுபலன் கிடைக்காது. இருட்ட ஆரம்பிக்கும் போது தான் கொசுக்கள் தெருக்களிலிருந்து வீட்டின் மூலை முடுக்குகள், படுக்கைகள் ஆகியவற்றை வந்தடையும். ஆகவே அவை வீட்டிற்குள் வருவதற்கு முன்பாகவே மாலை 5 மணிக்கே படுக்கை அறையில் கொசுவலையைக் கட்டிவிட வேண்டும். அல்லது அப்போதே கதவு, ஜன்னல்களை மூடி விட வேண்டும். எட்டு மணிக்குப் பிறகு, ஜன்னல்களைத் திறந்துகொள்ளலாம்.

- டாக்டர். கு . கணேசன், பொதுநல மருத்துவர். ராஜபாளையம். gganesan95@gmail.com

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kooli - Chennai,இந்தியா
25-பிப்-201519:26:38 IST Report Abuse
kooli எல்லா ஜீவன்களையும் கபளீகரம் செய்து தான் மட்டுமே வாழவேண்டும் என்ற கீழ்க்குணத்து மானுடத்தை ஒடுக்கவே இறையவரது இச்சையுடன் இந்த கொசு விருத்தியோ?
Rate this:
Share this comment
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
25-பிப்-201511:41:39 IST Report Abuse
Sampath Kumar எல்லா கொசு மருந்துக்கும் தப்பும் கொசுவை உருவாகி காசு பாக்கும் கூட்டம் உள்ளவரை இந்த கொசுவை ஒழிக்க முடியாது
Rate this:
Share this comment
Cancel
Kundalakesi - Coimbatore,இந்தியா
25-பிப்-201511:23:25 IST Report Abuse
Kundalakesi ஒரு அரசின் அலச்சியதின் விளைவு இதுதான். இலவசங்களை ஒழித்து, சுகாதாரத்திற்க்கு செலவிட வேண்டும். என் வீட்டின் சாக்கடையை சோக் பிட் போட்டு விட்டேன். எல்லோரும் இதை கடைபிடியுங்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X