'திராவிட இயக்கங்கள் பிறப்புக்குப் பின், தமிழகத்தில் அரசியல் நாகரிகம் இல்லாமல் போய்விட்டது' என, தாய் கழகமான திராவிடர் கழகம் வருத்தப்பட்டு உள்ளது.
தமிழகத்தை, அரை நூற்றாண்டாக, தி.மு.க.,வும் - அ.தி.மு.க.,வும் மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன. இரு கட்சியினரும், ஒருவர், மற்றொருவரின் சுக, துக்கங்களில் கூட பங்கு கொள்ளாத அளவுக்கு, எதிரும் புதிருமாக நிற்கின்றனர்.
பரிந்துரை: ஆனால், வட மாநிலங்களில் இந்நிலை இல்லை. நேர் - எதிர் அரசியல் எதிரியாக இருந்தாலும், அவர்கள் வீட்டில் நடக்கும் சுக, துக்கங்களில் பங்கேற்கும் பண்பு உள்ளவர்களாக இருக்கின்றனர். பா.ஜ.,வை கடுமையாக சாடி வரும், முலாயம் சிங் யாதவின் இல்லத் திருமணத்தில், பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். ஆஸ்துமாவுக்கு சிகிச்சை பெற, தான் சிகிச்சை பெறும் மருத்துவரை, டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு, மோடி பரிந்துரைத்து உள்ளார். இதுபோன்ற நாகரிகம், தமிழகத்தில் இல்லை. எதிர்க்கட்சியினரை, நேரில் சந்திப்பதைக் கூட தவிர்க்கின்றனர். திராவிட இயக்கத்தின் பிறப்புக்குப் பின், இந்த நிலை என்பது கசப்பான உண்மை என, திராவிடர் கழகம் கூறியுள்ளது.
இதுகுறித்து, தமிழக அரசியல் கட்சியினர் கருத்து:
அ.தி.மு.க., தலைமை கழக பேச்சாளர் ஆவடி குமார்: மனதுக்குள் ஒன்றை வைத்து, மற்றவர்களுக்காக நாடகம் போடுவது
போலியான கலாசாரம். எதிரி வீட்டு சுக, துக்கங்களில் பங்கேற்று விட்டு, அவரது
காலைவாரி விடுவதும் சரியல்ல. அதனால், மனதுக்குள் என்ன உள்ளதோ, அதை நேர்மையாக வெளிப்படுத்துகின்றனர்;
இதில் தவறில்லை. பாசாங்கு செய்யத் தேவையில்லை. எதிரி என்றால், அரசியலில்
மட்டுமல்ல; அனைத்திலும் என முடிவெடுத்து தான், எதிரி வீட்டு சுக,
துக்கங்களையும் தவிர்க்கின்றனர். முலாயம் வீட்டு திருமணத்துக்கு மோடி
சென்றார் என்றால், ராஜ்யசபாவில், பா.ஜ.,வுக்கு மெஜாரிட்டி இல்லை. அதற்கு,
தாஜா செய்ய வேண்டிய நிர்பந்தம் மோடிக்கு இருக்கிறது. அதற்காக, அவர்
சென்றிருக்கக் கூடும்; மேலோட்டமாக பார்த்து, எதையும் தீர்மானிக்க முடியாது.
தி.மு.க., - எம்.பி., கே.பி. ராமலிங்கம்: 'தமிழகத்தில், அரசியல் நாகரிகம் இல்லை; இதற்கு, திராவிட இயக்கங்கள் காரணம்' என, பொதுவாக சொல்லக் கூடாது. யார் காரணம் என்பதை, திராவிடர் கழகம் தெளிவாகச் சொல்ல வேண்டும். தி.மு.க., தலைவர் கருணாநிதி, அ.தி.மு.க., முன்னாள் பொதுச் செயலர் எம்.ஜி.ஆர்., ஆகியோர், அரசியல் எதிரிகளாக இருந்தாலும், அரசியல் நாகரிகத்தை கடைபிடித்தனர். மாற்றுக் கட்சியினரை சந்தித்ததற்கோ, பேசியதற்கோ, கட்சியிலிருந்து யாரும் ஓரம் கட்டப்படவில்லை. அவர்கள் இருவரும், கட்சித் தொண்டர்களுக்கு அது போன்ற
கட்டளையையும் பிறப்பிக்கவில்லை.
கொள்கை பிடிப்பு: கட்சி மற்றும் அரசியலில், ஜெயலலிதா அதிகாரத்துக்கு வந்த பின் தான், இதுபோன்ற நிலை ஏற்பட்டுள்ளது. மாற்றுக்
கட்சியினரை சந்திக்கக் கூடாது என நிர்வாகிகளுக்கோ, தொண்டர்களுக்கோ,
ஜெயலலிதா உத்தரவிடுகிறாரா எனத் தெரியவில்லை. கொள்கையில் பிடிப்பும்,
லட்சியமும் உள்ளவர்கள் எங்கு சென்றாலும், அவர்கள் கொள்கையில் தெளிவாக
இருப்பர். கொள்கைப் பிடிப்பு இல்லாதவர்கள் தான், நட்பு, உறவு என, கொள்கையை இழந்து விடுவர்.
மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., பால கிருஷ்ணன்: திராவிட இயக்கம்பிறப்புக்குப் பின், அரசியல் நாகரிகம் கெட்டுவிட்டது என, திராவிடர் கழகம் வருத்தப்படுவது நியாயமே. குறிப்பாக, தி.மு.க.,விலிருந்து பிரிந்து அ.தி.மு.க., உதயமான பின்பே, இப்போக்கு தீவிரமானது. தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் அவர்களுக்குள், பரஸ்பரம் நாகரிகத்தை கடைபிடிக்காமல் இருப்பது அவர்களுக்கு மட்டுமல்ல; தமிழகத்தின் நலனையே பாதித்துள்ளது. இவர்களின் தனிப்பட்ட விரோதம், தமிழகத்தின் பொது பிரச்னைகளான, காவிரி, முல்லைப் பெரியாறு போன்றவற்றிலும் பிரதிபலிக்கிறது. பிற மாநிலங்களில், எதிர் எதிர் கட்சிகள் இருந்தாலும், மாநில நலனைக் காப்பதில் ஒருமித்து இருப்பர். ஆனால், தமிழகத்தில் அது போன்ற நிலை இல்லை. இதனால், மாநில அரசியலைத் தாண்டி, தமிழகத்தின் உரிமைகளைப் பெறுவதிலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினார்.
- நமது சிறப்பு நிருபர் -