சலாம் நேரு| Dinamalar

சலாம் நேரு

Updated : பிப் 26, 2015 | Added : பிப் 26, 2015 | கருத்துகள் (1)
Advertisement
சலாம் நேரு

கருத்துக் கோணங்கள் நாம் தேர்ந்தெடுக்கும் மொழியில் உள்ளடங்கியும் பதிந்தும் இருக்கும். பேரரசைப் பற்றிய புராணக்கதையை உருவாக்குவதிலும், அதன் ஒழுக்க நெறியை உயர்த்திப் பிடிப்பதிலும் மொழி ஒரு முக்கியப் பாத்திரம் வகித்திருக்கிறது. சொற்களாலும் படிமங்களாலும் அமைந்த ஒரு மகத்தான சாரக்கட்டு தனிப்பட்ட பண்பாக அந்த நிறுவனத்தை அழகுபடுத்திக் கொண்டிருந்தது. 'நம்பிக்கைக்கும் பெருமைக்கும் உரிய நாடு' என்பது, நாடுகளை பிரிட்டன் போரிட்டு வென்றதை புகழந்து பேசுகிற, அந்த ஆக்கிரமிப்பை கடவுளின் ஆசியுடன் புனிதப்படுத்துகிற போற்றிப் பாடலும் போர்க் குரலும் சேர்ந்த ஓர் உணர்ச்சிக் கலவையாக இருந்தது. 1930-களின் காதல் நாவலில், பேரரசின் காவல் சாவடி ஒன்றில் தான் சந்தித்த கறுப்பு நிறக் கதாநாயகனிடம் 'சொந்த நாட்டு' ரத்தத் துளி இருக்கிறது என்பதை ஆங்கிலேயக் கதாநாயகி கண்டறிந்தபோது, காதல் என்பது நம்பிக்கைக்கு இடமில்லாத, இதுவா அதுவா என்பதை முடிவு செய்ய முடியாத குழப்பத்துக்குரிய ஒன்றாக இருந்தது. ஆனால் அது ஸ்பானிஷ் ரத்தத் துளி என்பதாகத் தெரியவந்தபோது ஒரு சோக முடிவு தவிர்க்கப்பட்டது. மற்றவர்களை விடவும் தாங்கள் மேலானவர்கள் என்பதை வேறுபடுத்திக் காட்டும் பண்பு, 1930-களின் ஹாலிவுட் திரைப்படங்களில் இடம்பெற்றதை போல வேறு எதிலும் கண்ணைக் கவரும் வகையில் இடம்பெற்றதில்லை. 'கங்கா தின்' திரைப்படத்தில் நடிகர்கள் கேரி கிராண்ட்டும், டக்ளஸ் பேர்பாங்ஸ் ஜூனியரும் சரியாக மகாத்மா காந்தியைப் போல தோன்றும் வகையில் ஒப்பனை செய்யப்பட்ட வயதான கொடிய கொள்ளைக்காரனின் தலைமையிலான இந்திய கொள்ளையர்கள் கும்பலுடன் வீரதீரமாக சண்டையிடுவார்கள்! 1930-களின் சைகோனில் நடப்பதாக அமைந்த 'லேடி ஆப் தி டிராபிக்ஸ்' திரைப்படத்தில், பாதி உள்நாட்டவராகவும் (மீதி பாதி பிரெஞ்ச்) மயக்கும் மங்கையாகவும் வரும் நடிகை ஹெடி லமாரிடம் காதல் வயப்பட்ட தூய்மையாகத் தோற்றமளிக்கும் அமெரிக்கராக நடிகர் ராபர்ட் டெய்லர் நடித்திருப்பார். ஆனால் அவள் ஏமாற்றுக்காரியாகவும், வஞ்சிப்பவளாகவும் இருப்பாள். ஏனெனில் உடலில் 'உள்நாட்டு' ரத்தம் ஓடும் அவள் வேறு எந்த மாதிரியாகவும் இருக்க முடியாது. 'இந்த வகையில்தான் அவர்கள் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள்' என்று விரக்தி அடைந்த காதலனிடம் விவேகம் நிறைந்த கத்தோலிக்கப் பாதிரியார் விளக்கம் அளிப்பார். 'உண்மையில் அவர்களை உன்னால் புரிந்து கொள்ள முடியாது' என்று கூறுவார். மர்மமானவர்கள், புரிந்து கொள்ள முடியாதவர்கள், நம்பத் தகுதியற்றவர்கள் - அவர்கள்தான் 'உள்நாட்டு மனிதர்கள்' என்று அவரை நம்பும் அமெரிக்கனிடம் அவர் கூறுவார். அந்தப் பிரெஞ்சு பாதிரியார் கீழை நாடுகளில் நீண்டகாலமாக வாழ்ந்து வருபவர் என்பதால் அவர் என்ன பேசுகிறார் என்பது அவருக்குத் தெரியும்.இதுபோன்ற திரைப்படங்கள் ஆசியாவைப் பற்றிய அறியாமையை எங்கும் பரப்பி வந்தன. கதைகள், கதைகள் அல்லாத படைப்புகள், கற்றறிந்தோரின் ஆய்வுக் கட்டுரைகள், அரசு மதிப்பீடுகள், சாதாரண உரையாடல்கள் முதலியன எல்லாம் ஐரோப்பிய ஆட்சியும், வெள்ளை நிறத்தவர் மேலானவர்கள் என்பதும் இயல்பானவை என்றும், சாத்தியமான ஒரே நிலவரம் என்றும் தங்கள் விருப்பப்படி முடிவு செய்தன. இவற்றை எதிர்த்து எழுந்த தேசிய உணர்வுகளும், சுதந்தரத்துக்கான கோரிக்கைகளும் படை பலம் கொண்டு அடக்கி ஒடுக்கப்பட்டன. இது மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டும் தனிப்பண்பின் வெற்றியாக இருந்தது. இதுவே என்றென்றைக்கும் நிரந்தரம் என்பதாகத் தோன்றியது. இது சூரியக் குடும்பம் போல நிலையானதாகவும், பிரபஞ்ச அமைப்பின் ஒரு பகுதியைப் போலவும் தோற்றம் அளித்தது. 'சாட்டையுடனும் தடியுடனும் நாங்கள் இங்கு முந்நூறு ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகிறோம். இன்னும் முந்நூறு ஆண்டுகளுக்கு நாங்கள் இதையே செய்வோம்' என்று 1936-இல் இந்தோனேசியாவுக்கான டச்சு கவர்னர் ஜெனரலால் சொல்ல முடிந்திருக்கிறது. சாம்ராஜ்ஜியத்தின் இலக்கியத்தை உணர்ச்சி மயமும், கவிதை நடையும், ஆற்றல் மிக்க சொற்களும் அடங்கிய எந்த மொழி கட்டி அமைத்ததோ அதே மொழியில் நேருவினுடைய உலக வரலாறும் அவரது பிற படைப்புகளும் மாற்றுக் கருத்தையும் கண்ணோட்டத்தையும் தோற்றுவித்தன. அவை இந்தியாவுக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள வாசகர்களுக்கு இந்தியர்களுடன் நெருக்கமான பரிச்சயத்தை ஏற்படுத்தின. காந்தியை தவிர்த்து, வேறு எவரைக் காட்டிலும் இந்திய தேசியத்தை அவர்கள்தான் உருவகப்படுத்தினார்கள். 'விடுதலையை நோக்கி' என்ற அவரது சுயசரிதை நூலில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பின்வரும் பகுதிகள், 1934-இல் கல்கத்தாவில் உள்ள அலிப்பூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தது எப்படி இருந்தது என்பதை விவரிக்கின்றன:'மீண்டும் அதே கறுப்பு நிற மேரியா வேன் என்னை சிறைச்சாலைக்குத் திருப்பி அழைத்துச் சென்று கொண்டிருந்தது. எங்கள் வழியில் இயந்திரத் துப்பாக்கிகள், கவச வாகனங்கள் முதலியவற்றுடன் அணிவகுத்துச் சென்று கொண்டிருந்த ஏராளமான படைவீரர்களை நாங்கள் கடந்து போய்க் கொண்டிருந்தோம். எங்கள் சிறைச்சாலை வேனில் இருந்த சிறிய இடைவெளிகள் வழியாக அவர்களை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். கவச வாகனமும், டாங்கியும் எவ்வளவு அசிங்கமாக இருக்கின்றன என்று நான் நினைத்துக் கொண்டேன். அவை வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய ராட்சத விலங்குகளை எனக்கு நினைவுபடுத்தின... ' என்னுடைய சிறை அறைக்கும் சுற்றி உள்ள இடத்துக்கும் எதிரே உள்ள இரண்டு புகை போக்கிகள் அடர்த்தியான அளவில் கருநிறப் புகையை கக்கிக் கொண்டிருந்தன. சில நேரங்களில் அந்தப் புகையை காற்று என்னை நோக்கி வீசியடித்தது, பெரும்பாலும் என்னை மூச்சுத் திணற வைத்துக் கொண்டிருந்தது... ஏறக்குறைய சூரிய உதயத்தில் இருந்து சூரியன் மறையும் வரையில் நாங்கள் எங்கள் சிறைச்சாலை அறைகளுக்குள் பூட்டப்பட்டுக் கிடந்தோம். நீண்ட குளிர்கால மாலைப் பொழுதுகள் கடந்து செல்வது அத்தனை எளிதாக இல்லை. மணிக் கணக்கில் எழுதுவது அல்லது படிப்பதால் நான் களைத்துப் போவேன். அப்போதெல்லாம் அந்தச் சின்னஞ் சிறிய அறைக்குள்ளேயே மேலும் கீழுமாக நடக்கத் தொடங்குவேன்- முன்னோக்கி நான்கு, ஐந்து சிறிய அடிகள் எடுத்து வைப்பேன் பிறகு மீண்டும் பின்னோக்கி நடப்பேன். கூண்டுகளுக்கு உள்ளேயே மேலும் கீழுமாக கால்களை அழுத்தி நடக்கும் கரடிகளை நான் நினைத்துக் கொள்வேன்... உயர் அதிகாரிகள் அவர்களிடம் வரும்போதெல்லாம் சிறைக் கைதிகள் உரத்த குரலில் எழுப்பும் கூப்பாடு, பிரிட்டிஷ் பேரரசின் வலிமையை நிரந்தரமாக நினைவுபடுத்துவதாகவும், அதன் அடையாளச் சின்னமாகவும் இருந்தது. 'சர்க்கார் சலாம்' என்பதுதான் அந்தக் கூப்பாடு. நீண்டு ஒலிக்கும் அந்தக் கூப்பாட்டுடன் உடலின் குறிப்பிட்ட சில அங்க அசைவுகளும் சேர்ந்து கொண்டிருக்கும். இந்தக் கூப்பாட்டை உரத்து ஒலிக்கும் சிறைக் கைதிகளின் குரல்கள், சுற்றுச் சுவரைக் கடந்து ஒரு நாளில் பல முறை, அதிலும் குறிப்பாக நாள்தோறும் சிறைக் கண்காணிப்பாளர் கடந்து செல்லும்போது, என்னை வந்து சேரும். அணிவகுத்து நடந்து செல்லும் சிறைக் கண்காணிப்பாளருக்கு மேலே பிடித்துச் செல்லப்படும் பெரிய அரச குடையின் உச்சியை மட்டும் ஏழடி உயர சுவருக்கும் மேலாக என்னால் பார்க்க முடியும்.''திடீரென அலிப்பூர் சிறையில் உள்ள அந்த அறையில் நான் மிகவும் தனியாக இருப்பதாக உணர்ந்தேன். வாழ்க்கை கவலை தருகின்ற ஒன்றாக, பாலைவனத்தில் தனித்து இருப்பது போன்ற ஒன்றாகத் தோன்றியது. நான் கற்றுக் கொண்ட பல கடினமான படிப்பினைகளிலேயே மிகவும் கடினமான, மிகவும் வேதனை அளிக்கிற ஒன்று இப்போது என்னை எதிர்கொண்டிருக்கிறது: எந்த ஒரு முக்கிய விஷயத்திலும் எவரையும் சார்ந்திருப்பது இயலாத ஒன்று என்பதுதான் அது. வாழ்க்கையில் ஒருவர் தனியாகத்தான் பயணம் செய்ய வேண்டும். மற்றவர்களை சார்ந்து இருந்தால் பெரும் மன வேதனையைத்தான் வரவழைத்துக் கொள்ள நேரும்.' பிறருக்கு நலன் செய்யும் தாராள குணம் கொண்டது என பேரரசைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு, இதுபோன்ற வார்த்தைகள் அந்தப் பேரரசுடன் மோதியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை நினைவுபடுத்துவதாக இருக்கும்.பிறவற்றில் இருந்து வேறுபடுத்திக் காட்டும் தனிப் பண்பு என்பது, அதாவது விடுதலைக்காகப் போராடும் தனிப் பண்பு என்பது நேருவின் கண்ணோட்டத்திலும் கூட வலிமையான அம்சமாக இருந்தது. இது - ஒரு கருத்து, அடையாளம், ஆதர்சம் என்ற வகையிலும், எல்லாவற்றுக்கும் மேலாக இந்திய மக்களுடன் ரத்தமும் சதையுமாக வாழும் பிணைப்பு என்ற வகையிலும் - இந்தியாவுக்கும் அவருக்கும் இடையே ஏற்படுத்தியுள்ள உறவுப் பிணைப்புதான் அவரை அப்படிப்பட்டவராக உருவாக்கி இருந்தது. அவரது இந்திய தரிசனம் நூல் இந்தியாவின் கடந்த காலத்தை நாம் தெளிவாகப் பார்க்கும்படி நம் கண் முன் உயிர்ப்பித்துக் கொண்டு வந்து நிறுத்தியது - 'நாம் மிகவும் பழமையானவர்கள். தடம் கண்டறிய முடியாத நூற்றாண்டுகள் நம் காதுகளில் ரகசியம் பேசுகின்றன. ' அதே வேளையில், அதிலிருந்து எழுகின்ற எதிர்காலம் எத்தகையதாக இருக்க்க வேண்டும் என்பதிலும் அந்த நூல் அக்கறை கொண்டிருந்தது.=========நேரு : உள்ளும் புறமும் நயன்தாரா சகல்தமிழில்: ஜெயநடராஜன்கிழக்கு பதிப்பகம்பக்கம் 320 விலை ரூ 200இணையத்தில் புத்தகத்தை வாங்க : https://www.nhm.in/shop/978-93-5135-152-8.htmlஃபோன் மூலம் புத்தகத்தை வாங்க : 09445901234 / 09445979797

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Narendran.G - tirupur,இந்தியா
02-மார்-201516:42:05 IST Report Abuse
Narendran.G மத்திய அரசின் இந்த பட்ஜெட் வரவேற்கதக்கது, இதனை குறை கூறிவரும் தமிழக கட்சிகளில் சமீபத்தில் முன்னால் முதல்வர் ஜெயலலிதா விமர்சனம் செய்து இருந்தார். ஆனால் தமிழகத்தின் நிலைமை????
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X