மனிதம் மறந்த கல்வி: ப.ராம் மோகன்,எழுத்தாளர், துணை ஆணையர், மத்திய கலால் மற்றும் சேவை வரித்துறை

Added : மார் 01, 2015 | கருத்துகள் (8) | |
Advertisement
கடந்த, 1990களில் ஆரம்பித்த தகவல் தொழில்நுட்ப புரட்சி, நம் கல்வித் திட்டத்தை மறு சீரமைத்தது என்று கூறினால் அது மிகையாகாது. தகவல் தொழில் துறை இன்று மிகப் பிரமாண்டமாக உருவெடுத்து, அனைத்துத் துறைகளிலும் காலுான்றி இன்றியமையாத சக்தியாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளது. கல்வித் துறையும் இதற்கு ஓர் விதி விலக்கல்ல.கல்வி என்றால் அது தகவல் தொழில் நுட்பம் சார்ந்ததாக இருந்தால்
மனிதம் மறந்த கல்வி:  ப.ராம் மோகன்,எழுத்தாளர், துணை ஆணையர், மத்திய கலால் மற்றும் சேவை வரித்துறை

கடந்த, 1990களில் ஆரம்பித்த தகவல் தொழில்நுட்ப புரட்சி, நம் கல்வித் திட்டத்தை மறு சீரமைத்தது என்று கூறினால் அது மிகையாகாது. தகவல் தொழில் துறை இன்று மிகப் பிரமாண்டமாக உருவெடுத்து, அனைத்துத் துறைகளிலும் காலுான்றி இன்றியமையாத சக்தியாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளது. கல்வித் துறையும் இதற்கு ஓர் விதி விலக்கல்ல.

கல்வி என்றால் அது தகவல் தொழில் நுட்பம் சார்ந்ததாக இருந்தால் மட்டுமே சிறக்க முடியும் என்ற கருத்தும் இன்று சமுதாயத்தில் வளர்ந்து, வேரூன்றி இருப்பதும் வருந்தத்தக்க ஓர் நிகழ்வேயாகும். மனிதநேயம், அடிப்படை அறிவியல், கலை, பண்பாடு, மொழியியல் மற்றும் இலக்கியம் சார்ந்த புலன்களில் குறைந்து வரும் மாணவர் சேர்க்கையும் இதற்குச் சரியான ஓர் எடுத்துக்காட்டு. தொழில் நுட்ப வளர்ச்சி துவங்கி, 20 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், சமுதாயத்திற்கும், மானுடத்திற்கும் கல்வித்துறை மூலமாக இதனால் என்ன பயன் கிட்டியது என்பது போன்ற பல வினாக்கள் இன்று எழுப்பப்படுகின்றன.

இந்த சூழலில் கல்வித்துறை தன்னை மேம்படுத்திக் கொண்டதா என்ற கேள்வியும் ஒருபுறம் எழுகிறது.தொழில்நுட்ப வளர்ச்சியால் நாம் அடைந்த நற்பலன் என்பன ஒருபுறம் இருந்தாலும், கல்வித் துறையும், இந்த தலைமுறையும் எதையோ இழந்து விட்டது போன்ற ஓர் நெருடல் இருப்பது ஒருவகையில் உண்மையே எனலாம்.

விவாதிப்போம்... ஏனெனில், சுயபரிசோதனைக்கு இதுவே மிகச் சரியான நேரம். கல்விச்சாலைகள் இன்று தெளிவான லாப நோக்கத்துடனேயே துவங்கப்படுகின்றன. தொழிற் கல்வியின் தேவை ஒருபுறம் இருந்தாலும், மேற்கூறிய கலை மற்றும் இலக்கியத் துறைகள் பின்னடைவு அடைந்திருப்பது நிச்சயமாக ஒரு நல்ல அடையாளம் அல்ல. அரசு பள்ளிகளிலும் இன்று தொழிற் கல்விக்குக் கிடைக்கும் முக்கியத்துவம், தாய் மொழி பயில்தலுக்குக் கிட்டாதது மிகவும் வருந்தத்தக்க நிலை. இதற்கான காரணம் எதுவென ஆராயும் போது, பெற்றோரின் ஆங்கில மோகமும், தங்கள் பிள்ளைகள் தொழில் அல்லது மருத்துவத்துறையில் புகுந்து பெரும்பொருள் ஈட்ட வேண்டும் என்ற ஆசை (பேராசை)யும் தான் மூலகாரணங்கள் எனலாம்.

தனிப்பட்ட எந்த ஒரு மனிதனும் தன் குடும்பம் மற்றும் பிள்ளைகள் குறித்து தன்னுடைய குறிக்கோள்களை வகுத்துக் கொள்வது இயல்பு தான். ஆனால், தமிழ் மாந்தர் யாவரும் இதே நோக்கில் பயணிக்க ஆரம்பித்தால், இவ்வுலகிலேயே மிகத் தொன்மையான மொழியாம் நம் தமிழ் மொழி மற்றும் அது சார்ந்த கலாசாரம், பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை கற்பவர் யார், கற்பிப்பவர் யார்? நம் இலக்கியங்களில் புதைந்து இருக்கும் உன்னத கூற்றுக்களையும், ஆழ்ந்த சிந்தனைகளையும் இந்த தலைமுறை பயில்வது இனி எக்காலம்?

இந்தக் கூற்றைப் படிப்பவர்கள், இது ஏதோ வெறும் ஒரு மொழி வெறி பிதற்றல் என்று கூட முடிவு செய்யலாம். ஆனால் இன்றைய நிகழ்வுகள் இந்த பிதற்றலிலும் ஒரு நியாயம் இருப்பதை உணர்த்தும். தொழில் மற்றும் தொழில் நுட்பம் வளர்ந்து என்ன பயனை நாம் கண்டு விட்டோம்? புலம் பெயர்ந்த தமிழர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருவதைக் காண்கிறோம்.
புலம் பெயரும் நோக்கத்தில் தொழிற்கல்வி கற்பவர்கள் பெரும்பாலும் தங்கள் இணக்கத்தை பல பன்னாட்டு நிறுவனங்களுக்கு அர்ப்பணிக்கின்றனரேயன்றி இந்த நாட்டுக்கோ, தங்கள் மொழிக்கோ, தங்கள் நன்றியுணர்வை காட்டுவது இன்று குறைந்து வருகிறது.

தொழிற் கல்வி வளர்ச்சி, மதிப்புக் கல்வியின் அவசியத்தை குறைத்து விட்டது என்பதை யாரும் மறுக்க இயலாத உண்மை. இதோடு புதைந்து போனது, மானுடமும், மொழி நேயமும் தான்.
தொழில் நுட்ப பள்ளி மாணவர்களின் கைகளில் உள்ள மடிக்கணினி அல்லது அலைபேசியில் உலகத்தில் நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும், கையடக்கத்தில் கொண்டு சேர்க்கும் தன்மை வாய்ந்தது.மாணவன் ஒருவன் அலைபேசியில் நீலப் படம் பார்த்து கொண்டு இருந்த போது சிலிப்புற்று, எதிரே வந்த பிஞ்சு மாணவி ஒருத்தியை சிதைத்தது, இன்றைய நாளின் கொடுமை.
காதலை ஏற்க மறுத்த பெண்ணின் முகத்தில் அமிலம் வீசும் கொடுமை கள் அதிகரித்து வருவதும், இந்தத் தொழில் நுட்ப வளர்ச்சியதின் காலகட்டத்தில் தான்.

தாய், தந்தையர் மீதுள்ள பாசமும், பெரியவர்கள் மீதான மதிப்பும், மரியாதையும் குறைந்து, பெருநகரங்களில் புற்றீசல் போல் வளர்ந்து வரும் மூத்த குடிமக்களுக்கான காப்பகங்களும் இன்றைய தலைமுறையின் சகிப்பு தன்மையற்ற, நன்னடத்தையற்ற வாழ்க்கை முறைக்கான உதாரணங்களில் ஒன்று. பணம் ஒன்றே வாழ்க்கை என்ற இலக்கு நோக்கி பயணம் செய்யும் போது, பாசத்திற்கும், மானுடத்திற்கும், மனித நேயத்திற்கும் இங்கே என்ன வேலை என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது.

தவறு என்பது இங்கே, இந்நாளில் துவங்கியது அல்ல! பெற்றோரின் பேராசையில், சிறு வயது முதல் பள்ளிகளில் நாம் புகுத்திய ஆங்கில மோகத்தாலும், தொழிற் கல்விக்கு நாம் கொடுத்த முக்கியத்துவத்தாலும், அதன் பொருட்டு அழிந்து போன மானுடம், மனிதநேயம் மற்றும் மதிப்பு சார் கல்வியும் காரணிகளாக இருக்கலாம்.

மறைந்து வரும் நம் பண்டைய இலக்கியங்களில் புதைந்திருக்கும் சகோதரத்துவம், மனிதநேயம், ஒழுக்கம், அன்பு, அருள் போன்ற உயரிய சிந்தனைகள் தற்காலத் தலைமுறைக்கு சென்று அடைய வேண்டிய காலம் கடந்து போய் கொண்டிருக்கிறது.நாம் விழித்துக் கொள்ள இதுவே சரியான தருணம். இனியும் காலம் தாழ்த்தாது செயல்படத் துவங்கிடுவோம். இதனால் நாம் தொழிற் கல்விக்கு எதிரானவர் என்று கொள்ள வேண்டாம்! தொழிற் கல்வியும் வேண்டும் தான்; அதனுடன் நம் தமிழ் இலக்கியங்களுக்கான உரிய மாண்பும், மரியாதையும் அளிக்கவும் பயிற்றுவிக்க வேண்டும். மானுடமும், தமிழினமும் தழைக்க வேண்டுமென இன்றே துவங்கிடவும் வேண்டும். வாழிய மானிடம் ! வாழிய தமிழ்மொழி!
இ-மெயில்: prmohan1969@yahoo.co.in

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறதுவாசகர் கருத்து (8)

Manian - Chennai,இந்தியா
05-மார்-201505:31:36 IST Report Abuse
Manian கட்டுரையாளர் சொல்லாமல் விட்டவை: ஜாதி, மதம் என்ற வெறுப்பு உணர்வு, கடவுள் பக்தி இருந்தால் திருடவும் முடியாது, திருடவும் விடமாட்டார்கள் என்ற நுண் மதியால், 1955 க்கு பிறகு இந்த திருடர்கள் கூட்டம் அரசியலில் நுழைந்தது. அப்போது பலரும், ஆகா இனி நம்ம பிள்ளைகளுக்கே வேலை எல்லாம் என்று உச்சி குளிர்ந்தனர். அதன் விளய்வாக எழமையிலும், பிறருக்கு கல்வி கற்று தர வேண்டும் என்ற நல்ல பண்பு கொண்ட ஆசிரியர்கள் வேறு வழ இல்லாமல் பிற மாநிலம், பிற வேலைகள் என்றேல்லாம் சென்று விட்டனர். அதை எதிர்க்காமல் இருந்ததாலேயே இன்று தமிழ் நாடு லஞ்சத்தில் முன் நிற்கிறது. வள்ளுவர் சொன்னார் - தந்தை மகற்காற்றும் உதவி அவையத்தில் முந்தி இருப்பசெயல், என்பது மாறி , லஞ்சத்தில் முந்தி இருப்பசெயல் ஆகிவிட்டது. ஆகையால், மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி, இவன் ஏன் பெற்றான், அவனை கொல் எனும் சொல்லாகி விட்டது. தகுதி இல்லாத ஆசிரியர்களால் நல்ல சமுதாயத்தை ஏற்ப்படுத்த முடியாது. 1955 பின் துள்ளியவர்கள் இன்று கதறுகிறார்கள். அத்தோடு, சிறந்தவர்களுக்கு எங்கும் வேலை கிடை தில்லே. அவர்கள் சேவை லஞ்சத்தின் முன் எடுபடுவதில்லை. கல்லூரிகளில் அவர்களுக்கு வீழி கிடைப்பதில்லை. ஏனன்றால் , அவர்களுக்கு யூஜ்சி முறைப்படி சம்பளம் வழங்க விருப்பம் இல்லாமல், இரண்டாம் ஆண்டு மாணவர்கள் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பாடம் நடத்துகிறார்கள். 3ம் ஆண்டு மாணவர்கள் 2ம் ஆண்டு மாணவர்களுக்கு ஆசிரியர்கள். லஞ்சம் செய்யும் உதவியால் பெரும்பாலான கல்லூரிகள் மாணவர்களின் விருந்து சாலையே. தனிப்பட்ட , சிறந்த, லஞ்சம் வாங்காத, தகுதியான ஆராய்சி மூலமே என்ன என்ன காரணங்களால் இந்த நிலைக்கு வந்துளோம் என்று புள்ளி விவரங்களுடன் ஆராச்சி செய்தல் மட்டுமே இதற்கு விடையும் கிடைக்கும். எமர்ஜன்சி வந்தால் மட்டுமே இது முடியும். அது வரை வெறும் கட்டுரை மட்டுமே எழுத முடியும். பணபலம், மன பலம், நம் நாடு என்ற பண்பாடுகள் கொண்ட தலைவர்கள் மட்டுமே இந்த நிலையை மாற்ற முடியும். சுய நலம் படிப்படியாகவே வந்தன. இதில் முழு சமுதாயத்திற்கும் பெரும் பங்குண்டு. இதே முதலில் ஏற்றுக்கொண்டால் மட்டுமே அடுத்த படி என்ன செய்ய வேண்டும் என்ற அறிவு வளரும். இது இனி நடக்குமா?
Rate this:
Cancel
mrsethuraman - Bangalore,இந்தியா
02-மார்-201521:47:23 IST Report Abuse
mrsethuraman  கட்டுரையாளரின் ஆதங்கம் நூற்றுக்கு நூறு உண்மை தான்.அதே சமயம் சில நிதர்சனமான உண்மைகளையும் நாம் நினைத்து பார்க்க வேண்டும்.தற்காலத்தில் பெரும்பாலானவர்களுக்கு படிப்பு தான் அவர்களின் வயிற்று பிழைப்புக்கான வழியாக அமைகிறது .அப்படி இருக்கும் போது ஒருவன் எந்த படிப்பு படித்தால் அவனுக்கு அதிக (உடனடி) வேலை வாய்ப்பு கிடைக்குமோ அதைதேர்ந்தெடுக்கிறான்.அவன் தொழில் கல்வியை தேர்ந்தெடுக்க இது தான் காரணம் ,.அதே போல் அவன் ஆங்கிலம் கற்பது ஆங்கில மோகத்தால் அல்ல.எந்த மொழி கற்றால் அவனால் நன்றாக பிரகாசிக்க முடியுமோ அதை கற்கிறான் . கணித மேதை ராமனுஜம் அரைகுறை ஆங்கிலத்தில் ப்ரொபசர் ஹார்டிக்கு எழுதிய கடித்ததால் தான் இந்தியர்களுக்கே அவர் திறமை தெரிய வந்தது.காந்திஜியின் ஆங்கில புலமை தான் அவரை உலகிற்கே அடையாளம் காட்டியது.தொழில் துறையில் எவ்வளவு சாதித்தாலும் ஆங்கிலத்தில் நல்ல புலமை இருந்தாலும் உணமையான தமிழன் தமிழை மறக்க மாட்டான்.அப்துல் கலாம் ,எழுத்தாளர் சுஜாதா போன்றவர்களே இதற்கு சான்று .
Rate this:
Cancel
Anantharaman - Porur, Chennai,இந்தியா
01-மார்-201523:18:16 IST Report Abuse
Anantharaman மோகன் சார் கூறுவதிலும் உண்மை இருக்கிறது......இன்றைய நிலைமையை ஆராய்ந்து தான் இக்கட்டுரை எழுதப்படிருகிறது....இதற்க்கான காரணங்கள்.....1. 90 களில் உயர்கல்வி படித்து வெளிவந்த முக்கால்வாசி தமிழ் இளைன்கர்கள் தொழிற்கல்வியை தேர்ந்தெடுத்தனர்....2. இதனால் அவர்களுடை தந்தை வழி முக்கியமான தொழில்களான விவசாயம், சிறுவணிகம், பால்பண்ணை மற்றும் ஆசிரியர் பணி போன்றவைகள் அவர்களோடு நின்றுவிட்டது....3. பெருவாரியான கிராமத்து/நடுத்தர நகரத்து இளைன்கர்கள் தமிழை தவிர வேறு எந்த மொழியும் அறியாததால் ...தொழிற்கல்வி தேர்ந்தெடுத்து (Computer Science, Electronics) கஷ்டப்பட்டு அதை படித்து ...பிழைப்புக்கு மற்ற மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் சென்று ...அவர்களுடை குழந்தைகள் இந்தகஷ்டதை படக்கூடாது என்று ஹிந்தி/ஆங்கிலம் இவற்றை முதல்/இரண்டாம் மொழியாகவும் தமிழை மூன்றாம் மொழியாக எடுத்ததினால் இன்று இந்த நிலைமை...4. சமுதாயத்தில் உள்ள வாழ்க்கை முறையின் அழுத்தம் வேறு...(Peer pressure) 5. இதற்க்கு தகுந்தாற்போல் அரசும் , கல்விமுறையும் வியாபரநோக்கதில் செல்படுகிறது...... இவற்றை எல்லாம் சரிசெய்ய இப்போதைய தேவை நல்ல தலைவர், நல்ல கல்வி முறை , நல்ல ஆசிரியர்கள், பேராசை இல்லாத பெற்றோர்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X