கொடுப்பதற்கு ஒரு மனம் இருந்தால்...| Dinamalar

கொடுப்பதற்கு ஒரு மனம் இருந்தால்...

Added : மார் 04, 2015 | கருத்துகள் (1)
கொடுப்பதற்கு ஒரு மனம் இருந்தால்...

பொன்னா? பொருளா? மதுவா? சூதா? போதையா? அணியா? மணியா? எது உண்மையான இன்பம்? புலமைச் சான்றோரும், மேன்மை ஆன்றோரும் பொன்னோ, பொருளோ, பிறவோ உண்மையான இன்பம் தராது என்பதை ஆணித்தரமாக வலியுறுத்தியுள்ளனர்.
உலக வாழ்க்கைக்குப் பொருள் தேவை தான். 'பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை' என்பது வள்ளுவர் வாக்கு. ஆனால் பொருள் ஆசை எல்லை மீறும் போது எஞ்சுவது துன்பமே. ஆசைக்கு ஒரு அளவில்லை என்பார் தாயுமானவர். வரம்பு மீறிய ஆசை ஒருவனை ஒழுக்க வரம்பையும் மீறச் செய்யும்; பிறரைக் கெடுத்தாவது தான் முன்னேற வேண்டும் என நினைக்க வைத்து, நேர்மை கோட்டைத் தாண்டச் செய்யும். அப்படியெல்லாம் அவன் சேர்த்த பொருள் அவனுக்கு உண்மையான இன்பத்தை தந்து விடுமா?


ஈத்துவக்கும் இன்பம்:

ஈகை ஒருவனுக்கு உண்மையான இன்பத்தை கொடுக்கும். கை பெற்றதன் பயன் ஈகை செய்வதே. நம்மிடம் வரும் ஏழை, எளியோருக்கு இல்லை எனக் கூறாது கொடுக்க வேண்டும். கொடுப்பவருக்கும் இன்பம், பெறுபவருக்கும் இன்பம். இதனை ஈத்துவக்கும் இன்பம் எனப் பேசுவார் நக்கீரர். ஈகை என்றும், தானம் என்றும், கொடை என்றும் பல சொற்களால் கூறப்படும் செயல், உண்மையில் இன்பம் தரும் செயலாகும். பொருளை கொடுப்பது மட்டும் தான் தானமா? துன்பத்தில் சோர்ந்த ஒருவனிடம் ஆறுதல் வார்த்தை பேசுவதும் தானமே. பிறருக்காக உழைப்பதும் தானமே. இருக்கும் போது ரத்த தானம், இறந்த பின் கண்தானம் என்பது இன்றைய தாரக மந்திரம். சிவலிங்கம் கண்ணிலிருந்து கொட்டும் குருதியை தடுக்க தன் கண்ணையே கொடுத்து கண்ணப்பரானார் வேடர்குலத் திண்ணன், 'நாள் ஆறில் கண்ணிடந்து அப்பவல்லேன் அல்லேன்' என இந்த கண்தானத்தை சிறப்பித்து பாடுகிறார் பட்டினத்தார். இன்றைய மருத்துவ துறை மூளைச் சாவு அடைந்த பின் ஒருவரது கண், சிறுநீரகம், இதயம், கல்லீரல், தோல் போன்ற உறுப்புகளை பிறருக்கு தானம் செய்யும் அளிவிற்கு முன்னேறியுள்ளது. மூளைச் சாவு அடைந்த மகன் ஹிதேந்திரனது உடல் உறுப்புக்களை தானம் செய்த டாக்டர் தம்பதியின் தியாக உள்ளத்தை மறக்க முடியுமா? மரணத்திற்கு பின் தங்கள் உடலையே மருத்துவ மாணவர் படிப்பிற்கெனத் தானம் செய்யும் நல்ல உள்ளங்களை பற்றியும் அறிய முடிகிறது.


பணமா ? மனமா ?

கொடுப்பதற்கு என்ன தேவை பணமா ? மனமா ? பணம் வேண்டும் தான். ஆனால் வசதியுள்ளவர்கள் எல்லாம் தானம் செய்வர் எனக் கூற முடியாது. கொடுப்பதற்கு மனம் வேண்டும். அத்தகைய மனம் கொண்டவர்களை மனம் மகிழ்ந்து இவ்வுலகம் இசை பாடுகிறது. பாரி, காரி, ஓரி, ஆய், அதியன், நள்ளி, பேகன் போன்ற வள்ளல்களை வாழ்த்துகிறோம். கர்ணனோடு கொடை போயிற்று எனக் கர்ணன் மீது புகழ் பாடுகிறோம். கலியுகக் கர்ணன் எனச் சிலரை கவி பாடி பாராட்டுகிறோம். கலைமாமணி எம்.எஸ்.உமர் எழுதிய 'கலை உலக சக்கரவர்த்திகள்' என்ற நூலின் இரண்டாம் பாகத்தில் உள்ள செய்தி: எம்.ஜி.ஆர்., யானைக் கவுனியில் குடியிருந்த காலத்தில் ஒரு நாள் 'வாக்கிங்' செல்லும் வழியில் பிட்டு விற்கும் பாட்டியிடம் 'பிட்டு என்ன விலை' எனக் கேட்டார். பாட்டி விலை சொல்ல 'நாளை வந்து வாங்குகிறேன்' என்கிறார் எம்.ஜி.ஆர். 'இன்றே வாங்கு' எனப் பாட்டி சொல்ல, 'அம்மா அண்ணன் எல்லோருக்கும் சேர்த்து வாங்கணும் காசு இல்லை' என்கிறார் எம்.ஜி.ஆர். 'பரவாயில்லை நாளைக்கு காசு கொடு' என்றார் பாட்டி. 'நாளைக்கு நா வராமல் ஏமாற்றிவிட்டால் என்ன செய்வாய்' என எம்.ஜி.ஆர். கேட்டார். அதற்கு பாட்டி, 'வந்தால் வியாபார கணக்குல சேரும், வராவிட்டால் மூன்று பேர் பசி தீர்த்த புண்ணிய கணக்கில் சேரும்' என்றார். இது மக்கள் திலகத்தின் மனதில் அழுத்தமாகப் பதிந்து அவர் பிட்டு வாங்கி சென்று மறுநாள் வந்து காசு கொடுத்தார். அன்றாடம் பிட்டு விற்று வாழ்க்கை நடத்தும் ஏழ்மை நிலையிலுள்ள பாட்டி சொல்லும் பதில், அவரது உயர்ந்த மனதை காட்டுகிறது. பின்னாளில் பாட்டியை தேடிச்சென்று பொருள் உதவி செய்தார் எம்.ஜி.ஆர்.,


நம்மை சுற்றியும்:

சமுதாயத்தில் நம்மைச் சுற்றிக் கர்ணனாக வாரி வழங்கும் வள்ளல்கள் பலர் உள்ளனர். முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், வருகைப் பேராசிரியராக பணியாற்றிய அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவன் ஒருவன் காலில் செருப்புக் கூட அணியாதிருக்கும் நிலை கண்டு வருந்தினார். தம் சம்பளத்தை அப்படியே அந்த மாணவனின் கல்வி செலவிற்காக கொடுத்தார். இப்படி எத்தனையோ உத்தமர்கள், உதவிக்கரம் நீட்டி உன்னதப் பணியாற்றும் ஒப்பற்ற ஈகையாளர்களாக திகழ்கிறார்கள். ஈகை ஒருவனுக்கு மகிழ்ச்சியை மட்டுமா தருகிறது ? மனநிறைவைத் தருகிறது; ஆத்ம திருப்தியை தருகிறது. கொடுக்கும் மனம் பிறரைக் கெடுக்க நினைக்காது; அரசிற்கு வரிப்பணம் கட்டாமல் ஏமாற்றி பணத்தை 'சுவிஸ்' வங்கியில் பதுக்க நினைக்காது. தானம் செய்து பிறரை வாழ வைத்தவர்கள் மறைந்த பின்பும் மக்கள் மனதில் வாழ்கிறார்கள். அப்படி நாமும் வாழ்வோம்!

- முனைவர்.பா.நாகலட்சுமி, தமிழ்ப் பேராசிரியர் (ஓய்வு) விருதுநகர். 97875 83939.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X