வாசித்தால் யுகம் எல்லாம் சுகமே...!| Dinamalar

வாசித்தால் யுகம் எல்லாம் சுகமே...!

Added : மார் 05, 2015 | கருத்துகள் (1)
வாசித்தால் யுகம் எல்லாம் சுகமே...!

புத்தகங்கள் நம் இரண்டாவது இதயங்கள். நம் ஆன்மாவை ஆனந்த மயமாக்கும் காகித ஆலயங்கள். பரந்தவானில் பறந்த பறவை ஓய்வெடுக்கக் கூடு திரும்புமே அதைப்போன்று, நாம் என்ன வேலைசெய்தாலும் நம் மனம் நிம்மதியடைவது புத்தகங்களை வாசிக்கும்போது மட்டும்தான். சூடுதான் சூரியனின் அடையாளம்; புத்தக வாசிப்புதான் உயிர்வாழ்தலின் அடையாளம். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் உலகில் கட்டப்பட்ட கட்டடங்கள் சிதிலமடைந்திருக்கலாம். ஆனால் அன்று எழுதப்பட்ட புத்தகங்கள் சுவடிகள் தாண்டி,அச்சு இயந்திரம் தாண்டி இதோ நம்தொடுதிரை அலைபேசிகளிலும் இணையப் பக்கங்களிலும் இன்னும் இளமையோடு நம் மனதோடு மவுனமாய் பேசிக்கொண்டிருக்கிறதே. காலத்தைக் காலமாக்கிய இந்தச் செப்படி வித்தை எப்படி நடந்தது? மனிதவாழ்க்கை புத்தாக்கம் பெற்றதே புத்தகங்களால்தானே! வாசிப்புதான் வசிப்பின் அடையாளம். வாசிக்காத நாள், இப்புவியில் நாம் வசிக்காதநாள். வாசிப்பதை நிறுத்தும் சமுதாயம் மனிதர்களின் நேசிப்பையும் நிறுத்தத்தான் செய்யும். நம் அறிவுவாசலின் படிகள் புத்தகங்களால் கட்டமைக்கப்படுகின்றன. வாழும்கலையைக் கற்றுத்தருவதே புத்தகங்கள்தான். வாசித்தல், காலையில் நம் வீட்டுக்கதவில் செருகப்பட்டிருக்கும் செய்தித்தாளின் புதுவாசத்திலிருந்து தொடங்குகிறது. எந்த நூலையும் வாசிக்காத நாளின்இரவு, நெருக்கமான ஒருவர் நம்மைவிட்டுப் போன நிசப்த நாளின் நீண்ட இரவைப்போல் அது சோகமாகவே அமைகிறது. வாசிக்கும் மனது தேக்கிலைபோல் விரியும். நான் தினமும் வாசிக்கும், நேசிக்கும் நூல்களில் சிலவற்றை தருகிறேன்.


என் சரிதம்:

தமிழ்த்தாத்தா உ.வேசா. வின் சாதனைகளை நாம் புரிந்து கொள்ள அவர் எழுதிய சுயசரிதையான " என் சரிதம்” உதவுகிறது. இன்றும் மனம் தளரும்போது என்சரிதம் நூலின் சில பக்கங்களைப் படித்தால் மனம் உற்சாகமாகிறது. வாய்ப்புகளின் வாசலில் காத்துக்கிடக்காமல் தடைகளைத் தாண்ட முயல்வதே வெற்றியாளர்களின் அடையாளமாகும் என்பதை என் சரிதம் விளக்குகிறது.


பாரதியார் கவிதைகள்:

பள்ளிப்படிப்பு முதலே பாரதி ஷெல்லியை வாசித்திருக்கிறார். அதனால்தான் "நீதிநூல் பயில்”, என்றும் "கல்வியதை விடேல்”என்றும் பாரதியால் புதிய ஆத்திசூடியில் சொல்ல முடிந்தது. பத்திரிகையாளனாய் மாறியபின் "எமக்குத் தொழில் கவிதை இமைப்பொழுதும் சோராதிருத்தல்” என்று பாரதி உறுதியாய் சொல்லக்காரணம் உலக இலக்கியங்களை வாசித்ததும், உடனடியாய் உள்வாங்கித்தமிழுக்கு அவற்றைத் தந்ததும்தான்.


திருவள்ளுவம்:

திருக்குறளின் கி.வா.ஜகந்நாதன் ஆராய்ச்சிப்பதிப்பு 955 பக்கங்களோடு அரைநூற்றாண்டுகளுக்கு முன் பதிப்பிக்கப்பட்டுத் தினமும் நான் மனனம் செய்யும் உன்னதமான நூலாகத் திகழ்கிறது. இந்த ஆராய்ச்சி நூலை வாசிக்க வாசிக்க வள்ளுவப்பேராசானின் பல்துறை ஆற்றல் ஆழமாகப் புரிகிறது.


கீதாஞ்சலி:

தாகூரின் தாய்மொழியான வங்க மொழியில் 157 பாடல்களாக எழுதப்பட்ட கீதாஞ்சலி,ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு மூன்றே ஆண்டுகளில் உலகின் பார்வைக்கு வந்து நோபல் பரிசை வென்றதென்றால் தாகூரின் ஆத்மார்த்தமான புத்தகவாசிப்பும், ஆழமான சிந்தனையும், அழகான கவித்துவமுமே காரணம். தாகூரின் கீதாஞ்சலியைப் பலநூறு முறை வாசித்திருக்கிறேன் ஒவ்வொரு முறையும் ஏதேனும் ஒரு புதிய பொருளைத் தந்துகொண்டே இருக்கிறது.


நூறு பேர்:

மலைகளையும் குன்றுகளையும் தாண்டித்தான் கடலாக முடிகிறது நதியும் கூட! சிக்கல்கள் சிரமப்படுத்தும்போதும் கூடச் சிந்திக்கத் துடிக்கிறவன் ஒருநாள் வெற்றியைச் சந்தித்தே தீருவான் என்பதை மைகேல் ஹெச்.ஹார்ட் எனும் ஆசிரியர் எழுதிய புதிய வரலாறு படைத்தோரின் வரிசைமுறை "நூறுபேர்” என்ற உன்னதமான நூல் காட்டுகிறது. அறிவியல் தமிழ் அறிஞர் மணவை முஸ்தபா பதிப்பித்துள்ள "நூறுபேர்” எனும் நூல் உலகின் நூறு சாதனையாளர்களைப் பட்டியலிடுகிறது. நூறு முறைக்கு மேல்படித்தும் இன்றும் புதிதாய் இருக்கிறது.


அக்னி சிறகுகள்:

வெற்றியின் நெற்றியில் திலகமிடப் பிறந்த மனிதன் மட்டும் தோல்வியின் தோள்களில் தொங்கிக்கொண்டிருக்கிறானே என்று நான் நினைக்கும் போது எனக்கு அப்துல்கலாமின் அக்னி சிறகுகள் நூல் முன்வந்து நிற்கும். நம் உருக்கெடுக்கும் தாழ்வுமனப்பான்மையை அவரின் பெருக்கெடுக்கும் உற்சாகவரிகள் மாற்றிவிடும். செயல்களைப் புயல்களாய் மாற்றி இலக்குநோக்கி இயங்கு என்று கற்றுத்தந்த நூல். சலித்துக்கொள்வதில் இல்லை வாழ்க்கை; நல்லனவற்றைச் சலித்தெடுப்பதில் உள்ளது.


உன்னதமான உலக இலக்கியங்கள்:

உலகப்பந்து முழுக்க உன்னதமான நன்நூல்கள் உண்டு. டி.எஸ்.சொக்கலிங்கத்தால் அரை நூற்றாண்டுக்கு முன் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட லியோ டால்ஸ்டாயின் "போரும் அமைதியும்” யதார்த்தத்தை சித்திரமாய் வரைகிறது. ஷேக்ஸ்பியரின் இறவாப் புகழ் பெற்ற நாடகங்கள், தன்வாழ்வைத் தானே கூர்ந்துநோக்கி அரிஸ்டாட்டில் எழுதிய அருமையான நூல்கள், 22 வயதில் பீகிள் கப்பலில் பயணத்தைத் தொடங்கி உலகைச் சுற்றிவந்து சார்லஸ் டார்வின் எழுதிய ஒப்பற்ற நூல்கள், காரல்மார்க்சின் உலகப் புகழ் பெற்ற மூலதனம் எனும் நூல், மாக்ஸிம் கார்க்கியின் தாய், மகாத்மா காந்திஜியின் சத்திய சோதனை எனும் நூல்கள் இன்றும் என்றும் நம்மை புதுப்பித்துக் கொண்டிருக்கும் நூல்கள். தனிமைக் கொடுமையை நீக்கும் உயர்வரம் புத்தகங்களே. மன அழுத்தம் குறைக்கும் மாமருந்தும் கூட. அழியும் நிலையிலிருந்த சுவடிகளை நம்பியாண்டார் நம்பியைக் கொண்டு பன்னிருதிருமுறைகளாய் தொகுக்க ஆணையிட்ட மன்னன் ராஜராஜசோழன் வாழ்ந்த தமிழகத்தில் "கடைவிரித்தேன் கொள்வாரில்லை” என்ற நிலையில் வாசிப்புலகம் இருப்பது நல்லதன்று. கிழிந்து கிடக்கும் சமுதாயத்தை அறிவு ஊசியால் இணைத்து தைக்கும் நூல்களை வாசிப்போம். வாசித்தலை இல்லத்தின் இயக்கமாக்குவோம். கடித்துப் பார்த்தால்தான் கரும்பின் சுவை தெரியும்; படித்துப் பார்த்தால்தான் புத்தகங்களின் அருமை தெரியும். வாசிப்பவனுக்கு யுகமெல்லாம் சுகமே!

- முனைவர் சௌந்தர மகாதேவன், தமிழ்த்துறை தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி 99521 40275

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X