உலக அறிஞர்கள் வியந்த குறள்| Dinamalar

உலக அறிஞர்கள் வியந்த குறள்

Added : மார் 06, 2015 | கருத்துகள் (3)
Advertisement
 உலக அறிஞர்கள் வியந்த குறள்

“தமிழன் திருக்குலத்தில் தமிழ்த்தாய் திருவயிற்றில்தமிழ்த்திரு வள்ளுவனார் - கிளியேதமிழாய்ப் பிறந்தா ரடி!”என்பது திருவள்ளுவர் கிளிக்கண்ணி. எனினும் திருவள்ளுவர் படைத்த நுாலில் 'தமிழ்', 'தமிழர்' என்னும் சொற்களோ, அவற்றைப் பற்றிய குறிப்புக்களோ இடம்பெறவில்லை. பல நுாற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த கவிஞர், ஜாதி, மதம், நிறம், மொழி, இனம் முதலான குறுகிய எண்ணங்களுக்கு இடம் தராமல், எவ்வகைச் சார்பையும் கடந்து, எல்லோருக்கும் பொதுவான ஒரு நுாலைப் படைத்துத் தந்திருப்பது பெரிய வியப்பு. இதனாலேயே, திருக்குறள் 'உலகப் பொதுமறை' எனச் சிறப்பிக்கப்படுகிறது.
ஆல்பர்ட் சுவைட்சரின் புகழாரம் ஆல்பர்ட் சுவைட்சர் மருத்துவம், தத்துவம், இசை என்னும் துறைகளில் முத்திரை பதித்த ஜெர்மன் அறிஞர். கார்ல் கிரவுல் என்பவரின் திருக்குறள் ஜெர்மானிய மொழிபெயர்ப்பினைப் படித்தவர் அவர். 'இந்தியச் சிந்தனையும் அதன் வளர்ச்சியும்' என்னும் தம் புகழ் பெற்ற நுாலில் அவர் 33 குறட்பாக்களை மேற்கோள் காட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.
திருவள்ளுவரின் சிந்தனைகளை இந்தியச் சிந்தனைகளுடன் ஒப்பிட்டு - குறிப்பாக, வேதம், சமணம், பவுத்தம், மனுநீதி, பகவத் கீதை போன்றவற்றுடன் ஒப்பிட்டு - ஆல்பர்ட் சுவைட்சர் எழுதி இருக்கும் கருத்துக்கள் சிறப்பானவை. “வாழ்வுக்கு உரிய அன்பு நெறியைக் கூறும் உயர்ந்த நுால். உயர்ந்த ஞானத்தைப் புகட்டும் செம்மொழிகளின் தொகுப்பு. இது போல் உலக இலக்கியத்தில் வேறு எங்கும் இல்லை” எனத் திருக்குறளை உளமாரப் போற்றும் சுவைட்சர், 'திருக்குறள் ஒப்புயர்வற்ற நுால்' என அறுதியிட்டு உரைக்கின்றார். திருவள்ளுவரிடம் ஆல்பர்ட் சுவைட்சர் காணும் சிறப்பு - உலக இலக்கியத்தில் வேறு எந்த அறநுாலிலும், தத்துவ இயலிலும் காணப்படாத தனிப்பெருஞ் சிறப்பு - அவரது உடன்பாட்டுக் கொள்கை ஆகும்; உலகு, வாழ்வு பற்றிய எதிர்மறைச் சிந்தனையை - வள்ளுவரிடம் மருந்துக்கும் கூடக் காண முடியாது.
ஆல்பர்ட் சுவைட்சரின் உள்ளத்தினைக் கவர்ந்த சில குறட்பாக்கள்...“தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்மெய்வருத்தக் கூலி தரும்”(ஊழின் காரணத்தால் ஒரு செயல் முடியாமல் போகுமாயினும், முயற்சி தன் உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலியையாவது கொடுக்கும்.)“ அன்புஇலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்என்பும் உரியர் பிறர்க்கு.”(அன்பு இல்லாதவர் எல்லாப் பொருளையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வர்; அன்பு உடையவர் தம் உடம்பையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர்.)
டால்ஸ்டாயின் உள்ளம் கவர்ந்த குறள் சிந்தனை மேதை டால்ஸ்டாயின் உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்த நுாலாகத் திருக்குறள் திகழ்ந்தது. டால்ஸ்டாய் 'இந்து ஒருவருக்கு' என்னும் தலைப்பில் எழுதிய கடிதத்தில் திருக்குறள் காட்டும் வாழ்க்கை நெறியைச் சுட்டிக்காட்டியுள்ளார்; 'இன்னா செய்யாமை' அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள ஆறு குறட்பாக்களை மேற்கோள் காட்டி, தம்முடைய உள்ளத்தைக் கவர்ந்தனவாகக் குறிப்பிட்டுள்ளார்.
“ஒருவன் தனக்குத் தீங்கு செய்தவர்களைத் தண்டிப்பதற்கு உரிய சிறந்த வழி, தீங்கு செய்தவர்களே வெட்கப்படுமாறு அவர்களுக்கு நன்மை தரும் செயல்களைச் செய்து, அவர்கள் செய்த தீங்கினையும், தான் செய்த நன்மையினையும் மறந்து விடுவதே ஆகும்” என்ற கருத்தினைப் புலப்படுத்தும் வகையில் அமைந்த குறட்பா வருமாறு:“ இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாணநன்னயம் செய்து விடல்.”இக்குறட்பா உளவியல் நுட்பம் வாய்ந்ததாக டால்ஸ்டாய் குறிப்பிட்டுள்ளார். பெர்னார்ட் ஷாவின் மேற்கோள் ஜார்ஜ் பெர்னார்ட் ஷா உலகப் புகழ் பெற்ற ஆங்கில நாடக ஆசிரியர்; 94 ஆண்டுக் காலம் வாழ்ந்தவர். அவர் 'காய்கறி உணவு முறையே சிறந்தது' என்னும் கொள்கையினை கடைப்பிடித்து வந்தவர்.
“கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பிஎல்லா உயிரும் தொழும்”என்னும் குறட்பாவின் கருத்தினை அவர் அடிக்கடி எடுத்துரைப்பதுண்டு.1948-ல் 'டைம்ஸ் ஆப் லண்டன்' என்னும் பத்திரிகை ஒரு கருத்துப் படத்தினை வெளியிட்டது. அதில் பெர்னார்ட் ஷா ஒரு நாற்காலியில் அமர்ந்து இருப்பார். அவருடைய காலடியில் ஆடு, மாடு, மான், பன்றி, புறா போன்ற விலங்குகளும் பறவைகளும் நன்றிஉணர்வோடு அவரைப் பார்த்த வண்ணம் படுத்துக் கொண்டும் நின்று கொண்டும் இருக்கும். அவரைச் சுற்றிலும் சிங்கம், புலி, கரடி போன்ற கொடிய விலங்குகள் அமைதியாக நின்று கொண்டு அவரை ஆர்வத்தோடு நோக்கிய வண்ணம் இருக்கும். இந்தக் கருத்துப் படம் வள்ளுவருடைய 'கொல்லான் புலாலை மறுத்தானை' என்னும் குறட்பாவின் கருத்தினைப் புலப்படுத்துவதற்காக வரையப்பட்டது.
பொருள் பொதிந்த இந்தக் கருத்துப் படத்தினை டில்லியில் இருந்து வெளிவரும் 'ஷங்கர்ஸ் வீக்லி' 1949-ல் அப்படியே வெளியிட்டு, படத்தின் கீழே மேலே காட்டிய திருக்குறளைக் குறிப்பிட்டிருந்தது. 'புலால் உணவு உண்பதையே தம் வாழ்க்கைப் போக்காகக் கொண்டுள்ள மேற்கத்திய மக்கள் இடையே புலால் உண்ணாமையே சிறந்த வாழ்க்கை நெறி என்பதனை உணர்த்துவதற்காகப் பெர்னார்ட் ஷா இந்தத் திருக்குறளை மேற்கோள் காட்டி விளக்கி வந்தார்' என்பதனை உணர்த்தவே இந்தக் கருத்துப் படம் வெளியானது.
ஜி.யூ.போப்பின் பாராட்டு 1886-ல் திருக்குறளை ஆங்கிலத்தில் முழுமையாக மொழிபெயர்த்து வெளியிட்டவர் ஜி.யூ.போப். அந்நுாலில் அவர் திருவள்ளுவரைப் போற்றிப் பாடியுள்ள ஆங்கிலக் கவிதை குறிப்பிடத்தக்கது. அதில், “உலகில் உள்ள பொருள்கள் எல்லாம் மாறுகின்றன ஒருநாள் மறைகின்றன. ஆனால், திருவள்ளுவருடைய புகழ் மங்கவில்லை; பெருகிக் கொண்டே போகின்றது” என திருவள்ளுவரைப் பாராட்டியுள்ளார்.இப்படி திருக்குறளைப் பற்றி உலக அறிஞர்கள் போற்றிக் கூறியுள்ள கருத்துக்களை காணுகின்ற பொழுது,“வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்துவான்புகழ் கொண்ட தமிழ்நாடு”என்று பாரதியார் பாடியிருப்பது உண்மை, வெறும் புகழ்ச்சி இல்லை என்பது உறுதியாகிறது.-முனைவர் நிர்மலா மோகன்தகைசால் பேராசிரியர், காந்தி கிராம பல்கலை94436 75931

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Prasanna - Chennai,இந்தியா
06-மார்-201514:24:49 IST Report Abuse
Prasanna மெய்சிலிர்த்தது... கண்கள் கலங்கின.. வாழ்க வள்ளுவ பெருந்தகை.. வாழ்க தமிழ்.. வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
adithyan - chennai,இந்தியா
06-மார்-201506:14:49 IST Report Abuse
adithyan "மழித்தலும் நீட்டலும் வேண்டா, உலகம் பழித்தது ஒழித்துவிடின்" என்ற வள்ளுவர் பெருமான் ஜடா முடி தாடி மீசையுடன் இருந்திருப்பாரா? இன்று அவரை உலக அளவில் புகழும் பகுத்தறிவாளர்கள் ஏன், "கொல்லான் புலாலை மறுத்தானை" என்ற குறளுக்கு எதிராக கோழி பிரியானியாக வழங்குவது?
Rate this:
Share this comment
Cancel
p.raj-chennai - chennai,இந்தியா
06-மார்-201505:10:04 IST Report Abuse
p.raj-chennai மிக்க மகிழ்ச்சி. வான் புகழ் வள்ளுவம் இந்த புவி இருக்கும் வரை வாழும் வாழ வேண்டும். இன்றைய தமிழன் தமிழை, தமிழனை உணர்ந்தபாடு இல்லை என்பது வருத்தமே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X