லஞ்சம் தரலைன்னா அடி... விஜிலென்ஸ் வைக்குமா வெடி?| Dinamalar

லஞ்சம் தரலைன்னா அடி... விஜிலென்ஸ் வைக்குமா வெடி?

Added : மார் 11, 2015
Share
''மித்து! இந்த வருஷம் மகளிர் தினத்துக்கு, கோயம்புத்துார்ல ஏகப்பட்ட நிகழ்ச்சி வச்சு, கலக்கீட்டாங்கள்ல...!'' என்றபடியே, 'கூல் காஃபி'யை மெதுவாய் உறிஞ்சினாள் சித்ரா.பந்தயச்சாலையில், மெல்லிய வெளிச்சம் பரவியிருந்த அந்த 'காஃபி ஷாப்'பில், இருவரும் உற்சாகமாய்ப் பேசிக் கொண்டிருந்தார்கள்.''அதுலயும் கனிமொழி நடத்துன மகளிர் மாநாடு, ரொம்ப ஸ்பெஷல் தான். அதென்னக்கா...
லஞ்சம் தரலைன்னா அடி... விஜிலென்ஸ் வைக்குமா வெடி?

''மித்து! இந்த வருஷம் மகளிர் தினத்துக்கு, கோயம்புத்துார்ல ஏகப்பட்ட நிகழ்ச்சி வச்சு, கலக்கீட்டாங்கள்ல...!'' என்றபடியே, 'கூல் காஃபி'யை மெதுவாய் உறிஞ்சினாள் சித்ரா.பந்தயச்சாலையில், மெல்லிய வெளிச்சம் பரவியிருந்த அந்த 'காஃபி ஷாப்'பில், இருவரும் உற்சாகமாய்ப் பேசிக் கொண்டிருந்தார்கள்.''அதுலயும் கனிமொழி நடத்துன மகளிர் மாநாடு, ரொம்ப ஸ்பெஷல் தான். அதென்னக்கா... தே.மு.தி.க., செயற்குழு, இந்திய கம்யூனிஸ்ட் பொதுக்குழு, அமித் ஷா ஆலோசனைக் கூட்டம், தி.மு.க., மகளிர் மாநாடு எல்லாமே கோயம்புத்துார்ல நடத்திட்டு இருக்காங்க...எல்லாருக்கும் திடீர்னு நம்ம ஊரு மேல ஏன் கரிசனம் பொங்குது?,'' என்றாள் மித்ரா. ''டிஎம்கே பீரியட் முடியறப்ப, முத முதலா கோயம்புத்துார்ல அந்தம்மா நடத்துன ஆர்ப்பாட்டம் தான், அ.தி.மு.க.,வுக்கே 'டர்னிங் பாயின்ட்'டா இருந்துச்சும்பாங்க. அதனால...கோயம்புத்துார் ராசின்னு நினைக்கிறாங்களோ என்னவோ?,'' என்றாள் சித்ரா.''என்ன ராசியோ....ஆனா, கனிமொழி நடத்துன மாநாட்டை வேணும்னே முக்கிய உடன் பிறப்புக புறக்கணிச்சிட்டாங்க. பொங்கலுார்க்காரரு இடத்துல நடத்துனதும் அதுக்கு ஒரு காரணம். ஸ்டாலின் வர்றப்ப கூட்டம் காட்டுனாப் போதும்னு உத்தரவாம். வீரகோபால் வந்தாரு. அவுங்க ஆளுங்க வரலை. லேடி கவுன்சிலர்களே அங்க எட்டிப் பார்க்கலை!,'' என்றாள் மித்ரா.''ஆளுக்கு ஆளு இங்க வந்து கூட்டம் நடத்துறது சரி...அதுக்கு மறுபடியும் மறுபடியும் இங்க இருக்கிற இண்டஸ்ட்ரிகாரங்க, பிஸினஸ் பண்றவுங்ககிட்டதான, வசூலைப் போடுறாங்க. அவுங்கள்லாம் நொந்து போயிக் கெடக்குறாங்க. பவர்கட், டாக்ஸ் பிரச்னைன்னு எதுக்காவது, நமக்கு ஆதரவா போராடுறாங்களா? காசு மட்டும் மெரட்டி கேக்குறாங்களேன்னு குமுறுறாங்க!,''''மகளிர் தினத்துக்கு எத்தனை நிகழ்ச்சி நடந்து என்ன பிரயோஜனம்? இன்னமும் பொண்ணுங்களுக்கு எங்க பாதுகாப்பு இருக்கு?,''''என்னடி! இவ்ளோ விரக்தியாப் பேசுற... என்ன விஷயம்?,'' என்றாள் சித்ரா.''நம்மூர்ல அவிநாசி ரோட்டுல, கவர்மென்ட் இடத்துல பெருசா ஒரு ஓட்டலைக் கட்டிருக்காங்களே. போன வாரம் அந்த ஓட்டல்ல, விபசாரம் நடக்குறதாத் தகவல் வந்து, போலீஸ் 'ரெய்டு' பண்ணுனதுல, ரெண்டு காலேஜ் பொண்ணுங்க சிக்குனாங்க...ஞாபகமிருக்கா?,'' என்றாள் மித்ரா.''ஓ...! நல்லா ஞாபகமிருக்கே. அதுல ஒரு பொண்ணு சொன்ன ஸ்டேட்மென்ட்...!,''''அதேதான்க்கா... அந்தப் பொண்ணு, கூடப்படிக்கிற பையனை 'லவ்' பண்ணிருக்கா. அவனோட எங்கேயோ போயிருக்கா. அப்ப வீடியோ எடுத்து வச்சிக்கிட்ட அந்தப்பையன், அந்தப் பொண்ணுகிட்ட அதைக் காட்டி, 'காசு தரலைன்னா, நெட்ல போட்ருவேன்'னு மெரட்டி, ஒன்றரை லட்ச ரூபா பறிச்சிருக்கான். கையில, காதுல இருக்கிறதைக் கொடுத்தும், மறுபடியும் காசு கேட்டு மெரட்டுனதால, வேற வழியில்லாம இப்பிடிப் போயிருக்கா!,'' என்றாள் மித்ரா.''அடப்பாவி! அவனை சும்மாவா விட்டாங்க?,'' என்று சீறினாள் சித்ரா.''என்ன நடந்துச்சோ தெரியலை. இப்பவரைக்கும் அந்தப் பையன் மேல, போலீஸ் எந்த ஆக்ஷனும் எடுக்கலை. அந்தப் பையன், இன்னும் அதே காலேஜ்ல தான் படிக்கிறான்!,'' என்றாள் மித்ரா.''உண்மையிலேயே பொண்ணுங்க நிலைமை ரொம்ப பரிதாபம் தான் மித்து! போலீசுக்கு, ஓட்டல்காரங்க எல்லாருக்கும் அவுங்கவுங்க வருமானம் தான் பெருசா இருக்கு!,''''அதுலயும் நம்ம ஊர்ல இருக்கிற போலீஸ் ஆபீசர்க சிலரோட வருமானம், பல கோடிகளைத் தாண்டிப் போயிட்டு இருக்கு!,''''எனக்கு அதுல 'டவுட்'டே இல்லை... நம்ம ஊரு இன்ஸ்பெக்டர்கள் யாருமே, சென்னைக்கு ஐகோர்ட்டுக்கோ... ஆபீஸ் விஷயமாவோ போனா, டிரெயின்ல, பஸ்சுல எல்லாம் போறதில்லை. ஒன்லி ஆகாய மார்க்கம் தான்!,'' என்றாள் சித்ரா.''இன்ஸ்பெக்டர்களை விடு...சில போலீஸ்காரங்க பண்ற வேலையிருக்கே... சுந்தராபுரத்துல ஒரு ஷாப்பிங் காம்பளக்ஸ்ல இருக்கிற கடைகளுக்கு வர்ற வண்டிங்களை உள்ளே விடுறதேயில்லை. வெளிய தான் நிறுத்தணும். அதனால, அந்த இடத்துல ஏகப்பட்ட 'டிராபிக்'... இதுக்காக, அந்தக் கடைக்காரங்ககிட்டயிருந்து, மாசத்துக்கு 60 ஆயிரம் ரூபா, டிராபிக் போலீசுக்கு மாமூல் போகுது. பேருலயே 'குண்டு' வச்சிருக்கிற ஒரு போலீஸ்காரர் தான், அதை வசூல் பண்ணித்தர்றாரு. அவருக்கு அதுல 15 ஆயிரம் கமிஷனாம்!,'' என்றாள் மித்ரா.''மாமூல் தரலைன்னா என்ன பண்ணுவாங்களாம்?,''''ரோட்டோரத்துல நிறுத்துற வண்டிங்களை துாக்கிட்டுப் போவாங்க. பூட்டுப் போடுவாங்க. மாமூல் வந்துட்டா...அடுத்த நாளே இந்த நடவடிக்கையெல்லாம் இருக்காது!,''''நீ 'டிராபிக்'ன்னு சொன்னதும் தான், ஞாபகம் வந்துச்சு. போன சனிக்கிழமை, இளைஞர் இளம்பெண் பாசறை எழுச்சிப் பேரணின்னு சொல்லி, சிட்டி முழுக்க பல மணி நேரம் 'டிராபிக் ஜாம்' பண்ணி, மக்களைப் பாடாப்படுத்திட்டாங்களே!,'' என்றாள் சித்ரா.''அன்னிக்கு நடந்த பேரணியில, சிடிசி ஜப்பாருக்கும், செ.ம.,வுக்கும் நேரடியா மோதலாயிருச்சு தெரியுமா?,'' என்றாள் மித்ரா.''நானும் கேள்விப்பட்டேன். அந்தப் பேரணியில, பிரச்னை பண்ணி, மாவட்டச் செயலாளருக்கு கெட்ட பேரை ஏற்படுத்தணும்னே, 'பிளான்' பண்ணி, சிலர் வந்ததா ரத்தத்தின் ரத்தங்கள் பேசிக்கிட்டாங்க. அந்த பேரணிய நடத்துன பாசறை பொறுப்பாளருக்கு, பேனர்லயிருந்து வண்டி வாடகை வரைக்கும், எல்லாமே செலவு பண்ணுனது... பதவி பறி போனவர் தானாம்!,''''பழைய இடத்தைப் பிடிக்க அரசியல்வாதிங்க பாடாப்படுறாங்க. ஆனா...ஆபீசருங்க மட்டும் ஈஸியா திரும்ப வந்துர்றாங்களே!,''''கரெக்ட் மித்து! ஹவுசிங் போர்டுல நம்மூர்ல இருந்து, 'கம்ப்ளைன்ட்' பேருல 'டிரான்ஸ்பர்' ஆன ஒரு இன்ஜினியர் ஏட்டன், கான்ட்ராக்டர் காசுலயே, இங்க திரும்ப வந்துட்டாரு!,'' என்றாள் சித்ரா.''ஏன்... அவ்ளோ நல்ல இன்ஜினியரா?,'' என்று ஆச்சரியமாய்க் கேட்டாள் மித்ரா.''நீ வேற... அவருக்கு 'எம் புக்' கூட எழுதத் தெரியாதாம். ஆனா, கான்ட்ராக்டர்களுக்குத் தேவையான எல்லா வேலையையும் கச்சிதமா செஞ்சு கொடுப்பாராம். பழைய 'டவுன் டாடி'க்கு இவரு, ரொம்பவே நெருக்கமா இருந்து, 'பல' வேலைகளைப் பண்ணிக் கொடுத்தவரு. இப்போ யாரு 'சப்போர்ட்'ன்னு தெரியலை!,''''மித்து! கோயம்புத்துார்ல மார்ச்சுக்குள்ள பத்தாயிரம் பேருக்காவது பத்திரம் கொடுத்துடணும்னு, போர்டுல மேல 'டார்கெட்' கொடுத்திருக்காங்க. ஆனா, இங்கயிருக்கிற ஆபீசுல புரோக்கர்க இல்லாம, எந்த வேலையும் ஆவுறதில்லை. முக்கா சென்ட் இடத்துக்குப் பத்திரம் வாங்க, அம்பதாயிரம் லஞ்சம் கேக்குறாங்கன்னு, ஏழைங்க புலம்புறாங்க!,''''பெரிய இன்ஜினியரு, இந்த புரோக்கர்களைத் துரத்தப் பார்த்தாரே?,'' என்று கேட்டாள் சித்ரா.''ம்ஹூம்...ஒண்ணும் நடக்கலை. ஏன்னா... அந்த புரோக்கர்களை 'செட்டப்' பண்ணி, அவர் மேலயே சென்னையில 'கம்ப்ளைன்ட்' கொடுக்கப் பார்த்திருக்காங்க,'' என்றாள் மித்ரா.''அந்தளவுக்கு தைரியமா, அவருக்கு எதிரா வேலை பாக்குறது யாரு?,''''ஒரு முறைகேடுல சிக்கி, 'சஸ்பெண்ட்' ஆனாரே, ஆளும்கட்சி கவுன்சிலரோட ஹஸ்பெண்ட்... அவரோட தங்கச்சி தான், இதுக்கெல்லாம் தலைமையாம். அவருக்கு ஒத்தாசையா, அதே ஆபீஸ்ல வேலை பாக்கிற ஒரு சின்ன வயசு பையனும் சேர்ந்து, பத்திரம் கேட்டு வர்றவுங்ககிட்ட மெரட்டி மெரட்டி பணம் பறிக்கிறாங்களாம்!,''''இவுங்களாவது பத்திரத்துக்கு பணம் கேட்டு மெரட்டுறாங்க. பெரியநாயக்கன்பாளையத்துல, பத்திரம் பதிய வர்றவுங்களை, அடிச்சுப் பணம் பறிக்கிறாராம் ஒருத்தரு'' என்றாள் சித்ரா.''அட ராமா! இதுக்குப் பேரு வழிப்பறியாச்சே!,'' என்று கொந்தளித்தாள் மித்ரா.''அப்பிடியும் வச்சுக்கலாம். அந்த ஆபீஸ்ல ஆளும்கட்சி எக்ஸ் எம்எம்ஏவோட பிரதர் ஒருத்தரு இருக்காரு. அவரு தான், கேட்ட லஞ்சத்தைத் தரலைன்னு ஒருத்தரை அடிச்சிருக்காரு. விஜிலென்ஸ் என்கொயரி இப்போ நடக்குது. இதுக்கு முன்னாடி, ரெண்டு ஆபீஸ்ல இதே மாதிரி மூணு பேரை அடிச்சிருக்காராம் இவரு!,''''லஞ்சம் வாங்குறவுங்க...பொணத்துட்ட காசு இருந்தாலும் எடுத்துருவாங்க!,''''பொணம்னு நீ சொல்லவும், வேற ஒரு ஞாபகம் வந்துச்சு. ஜி.எச். மார்ச்சுவரியில பொண வாடையை விட, சரக்கு வாடையும், 'தம்' ஸ்மெல்லும் தான் துாக்குது!,'' என்றாள் சித்ரா.''அது பழைய மேட்டராச்சே...ஆபீஸ்லயே லுங்கி கட்டிக்கிட்டு, சரக்கு, 'தம்' போட்டுக்கிட்டே... அங்க ஒருத்தர் பண்ற அலும்பு இருக்கே... உள்ளே போகவே பயப்படுறாங்க வுமன் போலீஸ்!,'' என்ற மித்ரா, ஏதோ நினைவுக்கு வந்தவளாய், ''அக்கா! அந்த கட்டிட மேட்டர்...!,'' என்று கேட்க, ''அதை அப்புறம் பேசுவோம். லேட்டாயிருச்சு!,'' என்று எழுந்தாள் சித்ரா.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X