""ஆர்பிட்ரேஷனை இழுத்து மூடிருவாங்களோனு நினைச்சேன்; நல்லவேளை தப்பிச்சிட்டது,'' என்றபடியே, வீட்டுக்குள் நுழைந்தாள் சித்ரா.""எந்த "ஆர்பிட்ரேஷன்'; என்ன விஷயம்; கொஞ்சம் புரியும்படியா சொல்லுங்களேன்,'' என்றபடி, சமையல் அறையில் இருந்து வெளியே வந்த மித்ரா, குலோப் ஜாமூனை நீட்டினாள்.அதை வாங்கி "டேஸ்ட்' பார்த்த சித்ரா, ""தொழில் ரீதியான கொடுக்கல் - வாங்கல் பிரச்னைகளுக்கு "நாட்டாமை'யா இருந்து, நல்ல தீர்ப்பு வழங்கறதுக்காக, பனியன் சங்கங்கள் சேர்ந்து, "ஆர்பிட்ரேஷன் கவுன்சில்' அமைச்சாங்க. ஒவ்வொரு சங்கமும், சந்தா தொகையாக ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க கட்டணம் நிர்ணயிச்சாங்க. "சைமா' சங்கம், இடம் கொடுத்துச்சு; "ஆர்பிட்ரேஷன்' சிறப்பா நடந்துச்சு. "ஜாப்-ஒர்க்' கட்டணம் கிடைக்கலை; டைமுக்கு டெலிவரி கொடுக்கலைன்னு ஏகப்பட்ட பிரச்னைகள், "ஆர்பிட்ரேஷனை' நோக்கி வந்துச்சு. இரு தரப்பையும் அழைச்சு பேசி, சுமூக தீர்வு எட்ட வெச்சுது, "ஆர்பிட்ரேஷன்'.""சமீபகாலமா, வழக்கு எண்ணிக்கை குறைஞ்சு போச்சு; சந்தாவும் சரியா வசூல் ஆகறது இல்லை. தொழிலுக்கு ரொம்ப உறுதுணையா இருந்தாலும், பண நெருக்கடியால, "ஆர்பிட்ரேஷனை' மூடிடலாம்னு முடிவெடுத்திருக்காங்க. அப்போ, பெரிய சங்கம் ஒன்று, அதை கைப்பற்ற முயற்சி பண்ணியிருக்கு. உடனே, எல்லோரும் கூடி பேசி, "ஆர்பிட்ரேஷனை' தொடர்ந்து நடத்தலாம்னு முடிவு பண்ணிட்டாங்க; சந்தாவையும், 20 ஆயிரம் ரூபாயா உயர்த்திட்டாங்க,'' என, ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள் சித்ரா.அதைக்கேட்ட மித்ரா, ""10 ஆயிரம் ரூபாயையே கொடுக்காதவங்க; 20 ஆயிரம் ரூபாய் எப்படி கொடுப்பாங்க,'' என கேட்க, குலோப் ஜாமூனை சாப்பிட்டு முடித்த சித்ரா, ""மொத்தமுள்ள 10 சங்கத்துல, நிச்சயம் 5 சங்கமாவது சரியா சந்தா கொடுத்துடும். தேவையான தொகை கெடைச்சிடும்னு கணக்கு போட்டிருக்காங்க. கணக்கு எப்படியோ, "ஆர்பிட்ரேஷன்' தொடர்ந்து இயங்குனா சரி,'' என கூறி முடித்தாள்.""எங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கு? எல்லாத்தையும் பறிச்சிட்டாங்களேனு, வி.ஏ.ஓ.,க்கள் புலம்புறாங்க,'' என, அடுத்த மேட்டருக்கு தாவினாள் மித்ரா.""கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு என்ன குறைச்சல்; அவங்களுக்கு என்ன அதிகாரம் இல்லாம போச்சு?'' என, துருவிக் கேட்டாள் சித்ரா.""எதிர்காலத்தில் ஆட்சி மாறினால், கேபிள் "டிவி' வாரியத்தை கலைச்சிடுவாங்களோனு, வாரியம் மூலமாக பொது சேவை மையம் ஆரம்பிச்சிருக்காங்க. பொதுமக்கள் ஈஸியா சான்றிதழ் வாங்கற மாதிரி வசதி செஞ்சிருக்கு. இனி, ஒவ்வொரு ஆபீசா அலைய வேண்டியதில்லை; அதிகாரிங்ககிட்ட கெஞ்சிட்டு நிற்க வேண்டியதில்லை. சேவை மையத்துல, "அப்ளை' பண்ணிட்டு, சான்றிதழ் வாங்குற மாதிரி ஏற்பாடு செஞ்சிருக் காங்க. எல்லா சான்றிதழையும் சேவை மையத்தில் கொடுத்துட்டா, எங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கும்? "டம்மி பீஸ்' மாதிரித்தானே இருப்போம்னு வி.ஏ.ஓ.,க்கள் புலம்புறாங்க,'' என்றாள் மித்ரா.""எந்தவொரு விஷயமா இருந்தாலும், கவுன்சிலருங்க சிபாரிசு செஞ்சா... தேவையில்லாம இழுத்தடிக்கிறாங்க,'' என, கடைசி மேட்டருக்கு தாவினாள் சித்ரா.""கவுன்சிலருக்கு, அப்ப, என்னக்கா மரியாதை இருக்கு?'' என, அப்பாவியாய் கேள்வி கேட்டாள் மித்ரா.""மேட்டர் என்னான்னு முழுசா கேளு. வீடு கட்டுறதுக்கு வரைபட அனுமதி வாங்கி, கஷ்டப்பட்டு கட்டி முடிச்சாலு<ம், வரி விதிப்பு செய்றதுனா, பெரிய போராட்டமா இருக்கு. யாரா இருந்தாலும், எந்த ஆபீசரா இருந்தாலும், ஸ்பெஷலா கவனிச்சா, சீக்கிரமா வரி விதிப்பு செய்றாங்க. இல்லேனா, இழுக்குறாங்க.""இந்தக்கொடுமை, ஊராட்சியா இருந்து மாநகராட்சியான ஏரியாவுல அதிகம். மாநகராட்சி அளவுக்கு அதிகமா வரி போடுறதா? குறைந்த பட்சமா வரி போடுறதாங்கறது... மனுதாரர் "கவனி'க்கறதை பொறுத்துதாங்க இருக்கு. தனக்கு வேண்டியவங்க, சீக்கிரமா வரி போடுங்கனு கவுன்சிலர் பரிந்துரை செஞ்சிட்டா, கூடுதலா இழுத்தடிக்கிறாங்க,'' என்றாள் சித்ரா.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE