நேருவின் உலகம்

Updated : மார் 12, 2015 | Added : மார் 12, 2015 | கருத்துகள் (1) | |
Advertisement
நேரு ஏன் படுகொலை செய்யப்படவில்லை? பெட்ரோலிய கச்சா எண்ணெய்ப் படிவங்களைக் கண்டறிவதற்காக முதலில் பிரிட்டிஷ், அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களின் ஒத்துழைப்பைக் கேட்டபோது அவை ஏற்றுக் கொள்ளமுடியாத நிபந்தனைகளை விதித்தன. அவற்றை இந்தியா நிராகரித்து விட்டது. சோவியத் நாட்டின் உதவியுடன் எண்ணெய் கண்டறியும் முயற்சியை முன்னெடுத்துச் சென்றது. நம் நாட்டின் முதல் எண்ணெய் துரப்பணக்
நேருவின் உலகம்

நேரு ஏன் படுகொலை செய்யப்படவில்லை? பெட்ரோலிய கச்சா எண்ணெய்ப் படிவங்களைக் கண்டறிவதற்காக முதலில் பிரிட்டிஷ், அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களின் ஒத்துழைப்பைக் கேட்டபோது அவை ஏற்றுக் கொள்ளமுடியாத நிபந்தனைகளை விதித்தன. அவற்றை இந்தியா நிராகரித்து விட்டது. சோவியத் நாட்டின் உதவியுடன் எண்ணெய் கண்டறியும் முயற்சியை முன்னெடுத்துச் சென்றது. நம் நாட்டின் முதல் எண்ணெய் துரப்பணக் கருவி ருமேனியாவில் இருந்து வந்ததாகும். சோஷலிஸ்ட் என்று தன்னை வெளிப்படையாக அறிவித்துக் கொண்ட நேருவின் 'கலப்புப் பொருளாதாரம்' வெளிநாட்டு முதலீட்டுக்கு கட்டுப்பாடுகள் அற்ற அனுமதி எதையும் வழங்கிவிடவில்லை. அவர் சுயமாக ஆலோசித்தார். சர்வதேசப் பிரச்னைகளில் எது பொருத்தமானது என்று கருதினாரோ அந்தக் கொள்கையையே அவர் பின்பற்றினார். அது பலதடவை வல்லரசுகளை நேரடியாக எதிர்ப்பதாக இருந்தது. மேற்கத்திய ஆதிக்கத்துக்கு ஓர் அச்சுறுத்தலாக இருக்கிறார் என்ற வகையில் அவரும் குறிவைக்கப்பட்டிருக்கக் கூடும். எனினும் 1950-களின் மத்தியில் சமரசத் தூதர், அமைதிச்சிற்பி என்ற முறையில் சர்வதேச நெருக்கடிகளில் நேரு ஆற்றிய செயலூக்கமான பங்களிப்பானது அவரை விவேகம், நன்கு ஆராய்ந்து அறிதல், போரில்லா உலகை உருவாக்குவதற்கான பொது வேட்கை ஆகியவற்றின் உருவகமாகப் பார்க்க வைத்தது. மேற்கத்திய நாடுகளுடனான இந்தியாவின் உறவுமுறை வளர்ச்சி அடைந்தது.காமன்வெல்த் அமைப்புடனான இந்தியாவின் இணைப்பை பிரிட்டன் மதித்துப் போற்றியது. அந்த அமைப்புக்குள் நேருவுக்கு இருந்த செல்வாக்குக்காக மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது. தெவிட்டவைக்கும் பாராட்டு எதிர்பாராத பிரிட்டிஷ் வட்டாரத்தில் இருந்து வந்தது. பிரிட்டனுக்கான இந்தியத் தூதர் என்ற முறையில் விஜயலட்சுமி பண்டிட் 1955 மார்ச் 22-ஆம் தேதி பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலை முதல் தடவையாக முறைப்படி சென்று சந்தித்தார். இதுபற்றி மறுநாள் அவர் தன் சகோதரருக்கு இவ்வாறு எழுதினார்:கடந்த காலத் தவறுகளை அவர் பெரிதும் உணர்ந்திருக்கிறார். ஆனால் காமன்வெல்த் மாநாட்டுக்குப் பின்னர், நேருவை சந்தித்துப் பேசியதற்குப் பிறகு, 'ஆசியா நம்முடன் இருக்கிறது' என்ற நம்பிக்கை அவருக்கு ஏற்பட்டிருப்பதாக அவர் கூறினார். 'இதை ஏற்படுத்தியது நேருதான். சிறந்தவற்றை அவர் விளக்கி உரைக்க முடியும். அவரை ஆசிய மக்களுக்கு நாம் கொடுத்திருக்கிறோம். நேரு ஆசியாவின் ஜோதி... ஆம் புத்தரைக் காட்டிலும் மகத்தான ஒளி' என்று அவர் சொன்னார். இதை நினைவில் வைத்துக் கொண்டு அப்படியே உங்கள் பிரதமரிடம் திருப்பிச் சொல்லுங்கள் என்று அவர் என்னைக் கேட்டுக் கொண்டார்... என்று எழுதியிருக்கிறார்.கடைந்தெடுத்த ஏகாதிபத்தியவாதியான ஒருவரிடம் இருந்து வந்த இந்த தீவிரமான மறுமதிப்பீடு இன்னும்கூட மேலே சென்றது. வெறுப்பு, அச்சம் என்ற மனிதகுலத்தின் இரண்டு படுமோசமான எதிரிகளை அவரின் சகோதரர் வெற்றி கண்டிருக்கிறார் என்று அவரிடம் சர்ச்சில் சொன்னார். இன்னொரு சந்தர்ப்பத்தில், பிரிட்டிஷ் பிரதமருடன் பகல் உணவு விருந்துக்கு விஜயலட்சுமி பண்டிட் அழைக்கப்பட்டிருந்தார். 'நாங்கள் உங்கள் கணவரைக் கொன்றுவிட்டோம், இல்லையா? ' என்று அப்போது சர்ச்சில் திடீரெனக் கேட்டபோது அவர் அதிர்ந்து போனார். மீண்டும் இயல்புநிலைக்குத் திரும்பிய அவர் 'இல்லை, ஒவ்வொரு மனிதரும் அவரவர்க்கு விதிக்கப்பட்ட காலம் வரையில்தான் வாழ்கிறார்கள்' என்று அளித்த பதில் அவருக்கே கேட்டது. 'பெருந்தன்மையுடன் பேசுகிறீர்கள்' என்று சர்ச்சில் அதற்கு பதில் அளித்தார்.ஒரு 'கடந்தகாலத் தவறை' சர்ச்சில் உணர்ந்திருக்காமல் இருந்திருக்கக் கூடும். ஆனால் விஜயலட்சுமி பண்டிட் அதை அவருக்கு நினைவுபடுத்தினார். 1857 கிளர்ச்சிக்குப் பிறகு இந்தியாவில் பிரிட்டிஷார் பின்பற்றிய பிரித்து வைக்கும் கொள்கைதான் அது. ஆட்சிக்கும் அதன் ஆதரவாளர்களுக்கும் இடையே வரம்புக்கு உட்பட்ட முறைப்படியான கலந்துறவாடலைத் தவிர வேறு சமுதாயக் கலந்துறவாடல் எதுவும் இல்லை. வருவது போவது என்ற இயல்பான முறையில் சமுதாயக் கலந்துறவாடல் இருந்திருக்கும் எனில் மனங்களின் சந்திப்பு நிகழ்த்திருக்கக் கூடும். விருந்தை ஒட்டியோ அல்லது கலந்துரையாடலை ஒட்டியோ ஆளுமைகளுக்கு இடையே ஈர்ப்பு ஏற்பட்டிருக்கக் கூடும். வரலாறு முற்றிலும் வேறுவிதமாக இருந்திருக்கக் கூடும். தன்னுடைய எதிரியிடம் தான் முழு மனதாக வியந்து போற்றுகிற ஒரு மனிதர் அடங்கி இருப்பதை சர்ச்சில் காலங்கடந்தே கண்டறிந்தார்.சரி சமமானவர்கள் என்ற நிலையில் நெருங்கி வருவது எல்லையற்ற வாய்ப்புகளைத் திறந்துவிடும் என்பதை சர்ச்சில் தம்பதியுடன் மலர்ந்த சிறந்த நட்பில் விஜயலட்சுமி கண்டறிந்தார். ஒரு முறை தேநீர் அருந்தும் நேரத்தில் அவர்களது இல்லத்துக்கு விஜயலட்சுமி சென்றிருந்தார். அப்போது தன் மகள் வின்னி பிராந்தியை தொடாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ள முயலுமாறு விஜயலட்சுமியை சர்ச்சில் சீமாட்டி கேட்டுக் கொண்டார். வின்னி எரிச்சலடையும் வகையில் வழக்கமான தேநீர் கோப்பைகள் அடங்கிய தட்டு வந்து சேர்ந்தது. அதே நேரத்தில் விஜயலட்சுமிக்கு வந்த தொலைபேசி அழைப்பு, டோக்கியோவில் உள்ள அவரின் இளைய மகள் ரீட்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கும் தகவலை தெரிவித்தது. ரீட்டாவின் கணவர் டோக்கியோவில்தான் தூதராகப் பதவியில் இருக்கிறார். 'இதை எடுத்துக் கொண்டு போங்கள்' என்று தேநீர் தட்டைப் பார்த்து கர்ஜித்த வின்னி, 'விஜயலட்சுமி பண்டிட்டுக்கு பேரன் பிறந்திருக்கிறான். நமக்கு இப்போது சாம்பெய்ன்தான் வேண்டும்' என்று கூறியதைப் பார்க்க வேண்டுமே.பிரிட்டனது அரசியல் அரங்கின் இன்னொரு எல்லையில், பிரிட்டிஷ் விஞ்ஞானியான ஜே.பி.எஸ்.ஹால்டேன் நேருவின் இந்தியாவைப் பற்றி 1956 ஜனவரியில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் சோஷலிஸ்ட் மன்றத்தில் பேசினார். இந்தியாவில் இருக்கும்போது 'உயர்ந்த பண்புகள் கொண்ட ஒரு சமுதாயத்தில் இருக்கின்ற முழுமையான எண்ணம்தான் ஒருவருக்கு ஏற்படும். சில ஐரோப்பிய நாடுகளிலும் பெரும்பாலான அமெரிக்க நகரங்களிலும் இருந்ததைக் காட்டிலும் சொந்த நாட்டில் இருப்பது போன்ற உணர்வு எனக்கு இந்தியாவில் ஏற்பட்டது. 1892-இல் நான் பிறந்தேன். தானாகவே விக்டோரியா ராணியின் ஆட்சிக்கு உள்பட்ட குடிமகன் ஆகிவிட்டேன். இப்போது எலிசபெத் ராணியின் ஆட்சிக்கு உள்பட்டவனாக இருக்கிறேன். இந்த இரண்டுமே நான் சொந்தமாக தேர்ந்தெடுத்தது அல்ல. அவர்கள் என்னை ஏற்றுக் கொள்வார்கள் எனில், இந்தியக் குடியரசின் குடிமகனாக நான் இறப்பதற்கு முற்றிலும் வாய்ப்பிருக்கிறது ' என்று அவர் குறிப்பிட்டார்.
பேராசிரியர் ஹால்டேன் இந்தியக் குடிமகனாக வரலாம் என்று வரவேற்கப்பட்டார்.எகிப்துக்கு எதிரான ஆங்கிலேயே-பிரெஞ்சு ஆக்கிரமிப்பை இந்தியா கண்டனம் செய்தது, பிரிட்டனுடன் அதன் உறவுகளைப் பாதிக்கவில்லை. அந்தோனி ஈடனால் இழைக்கப்பட்ட பாதிப்பை சரிசெய்ய முயல்பவராக நேரு பார்க்கப்பட்டார். அவருடன் பரஸ்பர மரியாதையுடன் கூடிய உறவை நேரு வைத்திருந்தார். ஈடனின் 'மடமைச் செயலை' தொடர்ந்து தாக்கி வந்த எதிர்க்கட்சியான பிரிட்டிஷ் தொழிலாளர் கட்சி, நேருவின் கவலைகளைப் பகிர்ந்துகொண்டது. பால் ஜான்சனின் 'சூயஸ் போர்' என்ற நூலுக்கு அளித்த முன்னுரையில் அனியுரின் பெவான் பின்வருமாறு எழுதியிருக்கிறார்: 'எகிப்தில் அஸ்வான் அணை கட்டுவதற்கான நிதி உதவிகளை அமெரிக்காவும் அதைத் தொடர்ந்து பிரிட்டனும் விலக்கிக் கொண்டதால், நம்மில் சிலர் நம்பிக் கொண்டிருந்த ஆக்கபூர்வமான அமைதிக் கொள்கைக்கான ஆரம்பங்கள் தகர்க்கப்பட்டன... அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் எண்ணெய் நிறுவனக் கோடீசுவரர்களை உருவாக்குவதற்கும், மேற்கு ஐரோப்பாவில் உயர்ந்த வாழ்க்கைத் தரங்களை பாதுகாப்பதற்கும் தங்கள் நாடுகளில் இருந்து செல்வ வளங்கள் வெளியேறுவதை மத்திய கிழக்கு நாடுகளின் மக்கள் தொடர்ந்து உணர்வின்றி பார்த்துக் கொண்டே இருப்பார்கள் என்றும், அதே வேளையில் தங்கள் பங்கினைக் கேட்க மாட்டார்கள் என்றும் கற்பனை செய்வது முட்டாள்தனமானது' என்று குறிப்பிட்டிருக்கிறார்.=========நேரு : உள்ளும் புறமும் நயன்தாரா சகல்தமிழில்: ஜெயநடராஜன்கிழக்கு பதிப்பகம்பக்கம் 320 விலை ரூ 200இணையத்தில் புத்தகத்தை வாங்க : https://www.nhm.in/shop/978-93-5135-152-8.htmlஃபோன் மூலம் புத்தகத்தை வாங்க : 09445901234 / 09445979797

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X