ப.வேலூர்: மக்கும் குப்பையில் இருந்து மண்புழு மற்றும் இயற்கை உரம் தயாரிப்பதில், தமிழக அளவில் முன்மாதிரியாக, ப.வேலூர் டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் செயல்படுவதால், மற்ற மாவட்ட அதிகாரிகளிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
நாமக்கல் மாவட்டம், ப.வேலூர் டவுன் பஞ்சாயத்தில், 18 வார்டுகளில், 25,000 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இங்கு, வெற்றிலை, வாழை, தேங்காய் சாகுபடி, விவசாய இயந்திரங்கள் உற்பத்தி, கால்நடைகள் வளர்ப்பு உள்ளிட்ட தொழில்களில், முன்னிலையில் வகிக்கிறது. தினமும், டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் மூலம், வீடு மற்றும் வணிக நிறுவனங்களில், எட்டு டன் மக்கும் மற்றும் மக்காத குப்பை தனித்தனியாக சேகரிக்கப்படுகிறது.இவை, ப.வேலூர், பழைய பைபாஸ் ரோட்டில் உள்ள குப்பை கிடங்கில், தினமும், மக்கும் மற்றும் மக்காத குப்பையாக பிரித்து வைக்கப்படும். மக்கும் குப்பைகளான, காய்கறி கழிவுகள், உணவு கழிவுகள், வேளாண் கழிவுகள், கால்நடை கழிவுகள் ஆகியவற்றை, ஒன்றாக கலக்கி, சாணம் தண்ணீர் தெளித்து, 15 நாள் வெளியில் ஊறவைக்கின்றனர்.அதன்பின், ஊறவைக்கப்பட்ட மக்கும் குப்பைகளை, இதற்காக பிரத்யோகமாக வடிவமைக்கப்பட்ட தொட்டியில் கொட்டி, 45 நாள் நிழலில் போட்டு, சாணி தண்ணீர் தெளித்து பராமரித்து வருகின்றனர். தொடர்ந்து, 45 நள் கழித்து, மக்கும் குப்பையாக இருந்த கழிவுகள், மண்ணாக மாறி உரமாகி விடுகிறது. இதை, மணல் சளிக்கும் சல்லடையில் போட்டு, சலிக்கின்றனர். அதில் கிடைக்கும் இயற்கை உரத்தை, கிலோ, ஒரு ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்கின்றனர்.
சலிக்கும் போது மீதாமான குப்பை மற்றும் கழிவுகளை, மீண்டும் தொட்டியில் போட்டு ஊறவைக்கின்றனர். அதில், மண் புழுவை விடுகின்றனர். அந்த மண் புழுக்கள் குப்பையை சாப்பிட்டு, அது வெளியிடும் மலக்கழிவில், மண்புழு உரமாக மாறுகிறது. இவ்வாறு தயாரிக்கப்படும் மண்புழு உரம், கிலோ, மூன்று ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வீட்டில் வளர்க்கும் பூ மற்றும் காய்கறி செடிகள் வளர்ப்போர், மண்புழு உரத்தை பெருமளவு வாங்கிச் செல்கின்றனர். டவுன் பஞ்சாயத்து நிர்வாகம், ஐந்து தொட்டிகள் அமைத்து, இயற்கை மற்றும் மண்புழு உரத்தை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது. தற்போது, மேற்கண்ட உரங்களின் தேவை அதிகரித்து விட்டதால், 32 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய கலன் அமைக்கும் பணி, அதேபகுதியில் நடக்கிறது.
செயல் அலுவலர் சந்திரன் மற்றும் துப்புரவு ஆய்வாளர் ராஜகணபதி கூறியதாவது: தமிழகத்தில், பத்து டவுன் பஞ்சாயத்தில் மட்டுமே, மக்கும் குப்பையில் இருந்து மண்புழு மற்றும் இயற்கை உரம் தயாரிக்கும் பணி நடக்கிறது. அதில், அதிகப்படியான உற்பத்தி மற்றும் விற்பனையில், ப.வேலூர் முதலிடத்தில் உள்ளது. மாதம் தோறும், இயற்கை மற்றும் மண்புழு உரம், 1.50 டன் அளவிற்கு உற்பத்தி செய்யப்பட்டு, லாப நோக்கமின்றி சேவை மனப்பான்மையோடு விற்பனையாகிறது.ப.வேலூர் மட்டுமல்லாது, கரூர், ஈரோடு, சேலம் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளும், உரங்களை வாங்கிச் செல்கின்றனர். முன்மாதிரியான திட்டம் என்பதால், பல உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகள், தொழில்நுட்பத்தை ஆய்வு செய்து செல்கின்றனர். குறைந்த ஆட்களை கொண்டே, உரங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.