எங்கும் அமைதி பரவ வேண்டும்

Added : மார் 15, 2015
Advertisement
 எங்கும் அமைதி பரவ வேண்டும்

இன்று உலகத்தின் அடிப்படை பிரச்னைகளுள் ஒன்று அமைதியின்மை. இந்தச் சூழலுக்கு உலக அளவில் ஏற்படுகின்ற வன்முறை கலாசாரம், பயங்கரவாதம், நக்சலிசம், பசி பட்டினி, இயற்கை சீற்றங்களால் மக்கள் பாதிப்பு, வேலையில்லா திண்டாட்டம், போர் ஒத்திகைகள். மக்களிடம் பரவும் புதுவித கலாசாரம் போன்றவை காரணமாக உள்ளன.

அனைவரும் அமைதியாகவும், இயற்கையோடு ஒன்றி வாழவும் எண்ணுகின்றனர். ஆனால் அவ்வாறு வாழ முயற்சிப்பது இல்லை.நாம் அழிவுக்கு தான் அதிகம் செலவு செய்கிறோம். ஆக்கம், அமைதிக்கு செலவு செய்வது மிக குறைவு. நாட்டுக்கு நாடு ராணுவத்திற்கான ஆயுதங்கள், நீர்மூழ்கி கப்பல்கள், போர் ஒத்திகைகள், அணுகுண்டு சோதனைகள் ஆகியவற்றிற்காக செலவு செய்யும் தொகை அதிகரித்து கொண்டே செல்கிறது.


அச்சுறுத்தல் :

உலகில் 60 ஆயிரம் ஆயுதங்கள் இருக்கிறது. இது பூமியை 30 க்கும் அதிகமான தடவை அழிக்கக்கூடியது. ஒவ்வொரு தனிமனிதனும் 3 டன் வெடிமருந்து வைத்திருப்பதற்கு சமம்.60 மில்லியன் மக்கள் ராணுவ பணியில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஈடுபட்டு வருகின்றனர். உலகில் 25 மில்லியன் போர் வீரர்கள் மற்றும் 10 மில்லியன் பாரா வீரர்கள் எந்த நேரத்திலும் போரில் ஈடுபட தயாராக இருக்கின்றனர்.50 ஆயிரம் தலைசிறந்த அறிவியல் அறிஞர்கள் மற்றும் பொறியாளர்கள் 24 மணி நேரமும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய அழிக்கும் ஆயுதங்களை உருவாக்கி கொண்டிருக்கின்றனர்.உலக அளவில் 1,100 பில்லியன் டாலர்கள் பாதுகாப்பு, உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கிற்கு செலவிடப்படுகிறது என, ஐ.நா., சபையின் ஒரு புள்ளி விபரம் கூறுகிறது. 1945 வரை 200 பெரிய உலக போர்கள் நடந்துள்ளன. இதில் 30-40 பில்லியன் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அமெரிக்க அரசு ஒரு மில்லியன் டாலர்களை ஒவ்வொரு நிமிடமும் ராணுவத்திற்கும், அதன் சம்பந்தப்பட்ட துறைக்கும் செலவு செய்கிறது.ஆசியா, மத்திய கிழக்கு நாடுகள், லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆப்ரிக்கா போன்ற நாடுகளுக்கு 66.7 சதவீதம் வரை ராணுவம் சம்பந்தப்பட்ட பொருட்களை விற்பனை செய்கிறது.


எட்டாத ஆரம்பக்கல்வி :

உலகில் ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்க்கை நடத்த போராடி வருகின்றனர். இவர்களுக்கு ஒரு நாளைக்கு வருவாயாக ஒரு டாலருக்கும் குறைவாக கிடைக்கிறது. ஐந்து குழந்தைகளுக்கு ஒரு குழந்தை ஆரம்ப கல்வியை கூட எட்ட முடியாத நிலை. 2001 ம் ஆண்டு கணக்கின்படி 14 மில்லியனுக்கும் மேற்பட்ட குழந்தைகள் தாய் அல்லது தந்தையை அல்லது இருவரையும் எய்ட்ஸ் நோயினால் இழந்து தவித்து கொண்டிருக்கின்றன. பசியினால் 800 மில்லியன் மக்கள் அவதிப்படுகின்றனர். அரை மில்லியன் பெண்கள் வயிற்றுக்குள் குழந்தை இருக்கும்போது அல்லது குழந்தை பிறக்கும்போது இறந்து விடுகின்றன.ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், இங்கிலாந்து, சீனா ஆகிய 5 ம் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளன.ஆனால் இந்த நாடுகள் தான் அதிகமான ராணுவ கருவிகள், போருக்கு தேவையான ஆயுதங்களை மற்ற நாடுகளுக்கு வினியோகித்து வருகின்றன.20 ம் நுாற்றாண்டில் மட்டும் 191 மில்லியன் மக்கள் வன்முறையினால் கொல்லப்பட்டுள்ளனர். இது மனித வரலாற்றில் இல்லாத ஒன்று. சமீபத்திய ஈராக் போர், 28 நாடுகள் பங்கேற்ற ஒரு சிறிய உலக போர் போன்று இருந்தது. இதிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.


அமைதி, ஆக்கத்தை உண்டாக்குதல் :

அமைதி ஏற்படுத்துவதற்கான பணியை செய்தாலே, நமக்கு அமைதி உண்டாகும். காந்தியால் துப்பாக்கி, பீரங்கி இன்றி சுதந்திரம் வாங்கித்தர முடிந்தது எப்படி என சிந்திக்க வேண்டும்.நமது நாடு அதிகளவு மனிதவளங்களை கொண்டது. அதிலும் குறிப்பாக 40 சதவீதத்திற்கு மேல் இளைஞர்களை கொண்ட நாடு. இளைஞர்களிடம் அமைதி, ஆக்கத்திற்கான விதைகளை துாவினால் எதிர்காலத்தில் அமைதியான உலகத்தை உருவாக்க முடியும்.ஜாதி, மத பேதமின்றி சமத்துவ, சமதர்ம உலகை உருவாக்க பாடுபட வேண்டும். கிராம சுயராஜ்யத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். கிராமம் முன்னேறினால் நாடு முன்னேறும். நாடு முன்னேறினால் உலகம் வளர்ச்சி அடையும். உலக மக்கள் அமைதியாக வாழ முடியும்.
-ரா.மணி,
இணை பேராசிரியர்,
காந்திய சிந்தனை மற்றும் அமைதியியல் துறை,
காந்திகிராம பல்கலை.
94862 09819

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X