என்னம்மா...நீங்க... இப்பிடிப் பண்றீங்களேம்மா!| Dinamalar

என்னம்மா...நீங்க... இப்பிடிப் பண்றீங்களேம்மா!

Added : மார் 17, 2015
Share
திருச்சி ரோட்டில், 'சிக்னல்' அருகே கூட்டம்...வரிசை கட்டி வாகனங்கள் நின்றன. வண்டியை சித்ராவிடம் கொடுத்து விட்டு, கூட்டத்திற்குள் சென்று விசாரித்து வந்தாள் மித்ரா. அதற்குள், கூட்டம் கலைந்து, வாகனங்கள் நகரத் துவங்கின.''அடிச்சதுல தப்பே இல்லை!.'' என்று சொல்லிக் கொண்டே திரும்பி வந்த மித்ரா, ''சிக்னல்ல நிக்கும்போது, பஸ்ல இருந்து ஒருத்தர் எச்சில் துப்ப, அது 'பைக்'ல
என்னம்மா...நீங்க... இப்பிடிப் பண்றீங்களேம்மா!

திருச்சி ரோட்டில், 'சிக்னல்' அருகே கூட்டம்...வரிசை கட்டி வாகனங்கள் நின்றன. வண்டியை சித்ராவிடம் கொடுத்து விட்டு, கூட்டத்திற்குள் சென்று விசாரித்து வந்தாள் மித்ரா. அதற்குள், கூட்டம் கலைந்து, வாகனங்கள் நகரத் துவங்கின.''அடிச்சதுல தப்பே இல்லை!.'' என்று சொல்லிக் கொண்டே திரும்பி வந்த மித்ரா, ''சிக்னல்ல நிக்கும்போது, பஸ்ல இருந்து ஒருத்தர் எச்சில் துப்ப, அது 'பைக்'ல போனவர் முகத்துல விழுந்துருச்சு. அவர், பஸ்ல இருந்தவரை இழுத்துப் போட்டு அடிச்சிட்டாரு.'' என்றாள்.''இ.பி.,போஸ்ட்டைப் பார்த்தா, நாய் ஒண்ணுக்கு அடிக்கிறது மாதிரி, நம்ம ஊர்ல தான், 'சிக்னல்'ல வண்டிகளை நிறுத்துறதே, எச்சில் துப்புறதுக்குதான்னு சில பேரு நினைச்சுக்கிறாங்க. பன்றிக்காய்ச்சல் பரவுறதுக்கே, இப்பிடி ரோட்டுல எச்சில் துப்புறது தான், முக்கியமான காரணம்னு சொல்றாங்க. மகாராஷ்டிராவுல, ரோட்டுல எச்சில் துப்புறவுங்களுக்கு ஜெயில்னு சட்டம் கொண்டு வர்றாங்க. அட்லீஸ்ட்... இங்க 'பைன்' போடுறதையாவது அமல்படுத்தலாம்.'' என்றாள் சித்ரா.''வட மாநிலத்துப் பசங்க, இங்க வந்த பிறகு தான், ரோட்டுல துப்புறது அதிகமாயிருச்சு.''''ஆனா, ரோட்டுல அடிச்சிக்கிர்றது, நம்ம ஊருக்கு புதுசா இருக்கே!,''''ரோட்டுல மட்டுமா அடிச்சிக்கிறாங்க. கவுன்சில் மீட்டிங்ல...டிஎம்கே கவுன்சிலர் மீனா லோகுவை, ஏடிஎம்கே கவுன்சிலர் அன்னம்மா அடிச்ச அடி இருக்கே....வடிவேலு பாஷையில சொல்றதுன்னா... என்னா அடி?,'' என்ற மித்ரா, 'டிராபிக் போகட்டும்' என்று வண்டியை ஓரம் கட்டினாள்.''நானும் அதை 'வாட்ஸ் ஆப்'ல பார்த்தேன். அந்த அடிதடி, 'டிவி'யில வர்றதுக்கு முன்னயே, 'வாட்ஸ் ஆப்'ல ச்சும்மா 'ஜிவ்'வுன்னு பரவிருச்சு. ஹய்யோ...என்னா டெரரா இருக்காங்க!'' என்றாள் சித்ரா.''அதுல தான், நம்ம மேயரே கடுப்பாயிட்டார்னு கேள்விப்பட்டேன். பட்ஜெட் கூட்டம்கிறதால, அன்னிக்கு 100 கவுன்சிலர்களும் வந்துட்டாங்க. ஆனா, 'மீடியா'காரங்க, நுாத்தம்பது பேருக்கு மேல இருப்பாங்க. எல்லாரும் நினைச்சது மாதிரியே, ஒரே களேபரமாயிருச்சு.'' என்றாள் மித்ரா.''முதல்ல நாமம் போட்டு வந்தது, மீனா லோகு தான். அவுங்க பேசுறதுக்கு முன்னாடியே, ஏடிஎம்கே கவுன்சிலர்க வெண்தாமரை பாலுவும், மணிமேகலையும், '2ஜி'யில மக்களுக்கு நீங்க போட்டது நாமம்; ஸ்ரீரங்கத்துல மக்கள் உங்களுக்குப் போட்டாங்க நாமம்'னு எழுதி, கழுத்துல கட்டிட்டு வந்தது தான், பிரச்னைக்கே முதல் காரணம்கிறாங்க!'' என்றாள் சித்ரா.''இருக்கலாம்...அடி வாங்குன கவுன்சிலரு, வெளிய வந்து தான் மயக்கம் போட்டாங்க. அப்போ, பக்கத்துல இருந்த டிஎம்கே கவுன்சிலர் நந்தகுமார், 'சும்மா 'சீன்' போடாத'ன்னு சொன்னாரே. அதான் செம்ம செல்ஃபி ஷாட்!.'' என்றாள் மித்ரா.''இதுல என்ன பெரிய கொடுமைன்னா...அடிச்ச அன்னம்மாவும், 'நானும் ஜெயிலுக்குப் போறேன்'கிறது மாதிரி, 'நானும் ஜி.எச்.க்குப் போறேன்'னு 'சீன்' போட்டுட்டுப் போனது தான்!'', என்றாள் சித்ரா.''அன்னம்மா...'என்னம்மா இப்பிடிப்பண்றீங்களேம்மா'ன்னு அவுங்க கட்சியில யாரும் கேக்கலையா? எல்லாம், அடுத்த வருஷம் 'சீட்' பிடிக்கிறதுக்கான வேலையாத்தான் தெரியுது!''''இன்னொரு விஷயமும் நல்லாத் தெரிஞ்சு போச்சு. மேயர் பேச்சை யாரும் மதிக்கிறதேயில்லை. அவர் 'அவ்ளோ' கத்தியும், ஆளும்கட்சி கவுன்சிலர்க யாருமே, இடத்துக்குப் போகலையே. இப்போ, பிஆர்ஓ மேல பழியைப் போட்டு, அந்தம்மாவை 'ரிலீவ்' பண்ணி விட்டுட்டாங்க!'' என்றாள் சித்ரா.''பட்ஜெட் அன்னிக்கு, மத்தியானம் கறி விருந்துக்கு, பிரஸ்காரங்க யாரையும் கூப்பிட்டுப் போகலைங்கிறது தான், அவுங்க மேல 'மெயின் கம்பிளைன்ட்'ன்னு சொல்றாங்க!.'' என்றாள் மித்ரா.''அது சரி மித்து! பட்ஜெட்ல பழசு 55, புதுசு 22ன்னு பட்டியல் வந்துச்சே. கவனிச்சியா?''''உண்மைதான்க்கா! ஆனா, அதுக்கு இப்ப இருக்கிற மேயரையும், கமிஷனரையும் மட்டுமே குறை சொல்ல முடியாதே. திட்டங்களுக்கு ஜி.ஓ., போடுறது, நிதி ஒதுக்குறது எல்லாமே, கவர்மென்ட் பாத்து செய்ய வேண்டியது. அவுங்க செய்யலைன்னா, இவுங்க என்ன செய்வாங்க?.''''முத முதலா, பட்ஜெட் செயலாக்கக்குழு அமைச்சிருக்கிறது நல்ல விஷயம். பட்ஜெட் போட்ட மறுநாளே, மேயரும், கமிஷனரும் ரேஸ்கோர்ஸ் நடைபாதை, குளமெல்லாம் 'இன்ஸ்பெக்ஷன்' பண்ணுனதைப் பார்த்தா, ஏதோ பண்ணனும்னு நினைக்கிறாங்கன்னு தெரியுது'' என்றாள் சித்ரா.''எனக்கென்னவோ, அப்பிடித் தோணலை.'' என்றாள் மித்ரா.''உண்மை தான்! கார்ப்பரேஷன் ஆபீசர்கள்ட்ட சம்பாதிக்கிறதுல தான் கடுமையான போட்டியா இருக்கு. அதுலயும் அந்த 'டவுன் ப்ளானிங்'ல இருக்கிற முக்கியமான ஆபீசர், சதுர அடிக்கு இவ்ளோன்னு வசூல்ல தட்டி எடுக்குறாராம். மேலிடத்துக்கு கரெக்டா 'கப்பம்' கட்றதால, அவரு கொண்டு போற 'பைல்' எதையும் 'பெண்டிங்' வைக்கக்கூடாதுன்னு, மேயரு, கமிஷனரு எல்லாத்துக்கும் 'ஸ்டாண்டிங் ஆர்டர்' போட்ருக்காங்களாம்!,'' என்றாள் சித்ரா.''அக்கா! கோயம்புத்துார் கார்ப்பரேஷன்னாலே 'கரப்ஷன் கேப்பிடல்'ன்னு ஆயிருச்சு. வேற ஏதாவது மேட்டர் சொல்றியா?'' என்று கடுப்பாய்க் கேட்டாள் மித்து.''கரெக்ட் மித்து! ஆனா, கார்ப்பரேஷன்ல மட்டும் தான், 'கரப்ஷன்' நடக்குதுன்னு சொல்றதை ஏத்துக்கவே முடியலை. பத்திரம் பதிய வந்தவரு...லஞ்சம் கொடுக்கலைன்னு ஒருத்தரை, ரிஜிஸ்டர் ஆபீஸ்ல இருக்கிற ஒருத்தரு, அடிச்சிட்டாருன்னு ஒருத்தரைப் பத்தி பேசுனோமே...அவரு தான், அடுத்து சூலுார் ஆபீசுக்கு போறாராம். அதுக்கு முப்பது லட்ச ரூபா கொடுத்திருக்காராம்!''''என்னக்கா ஆச்சரியமா இருக்கு. ஏ.ஐ.ஜி., ஒருத்தரு, டி.ஐ.ஜி.,யாகிறதுக்கே, 20 லட்ச ரூபா தான் கொடுத்தாருங்கிறாங்க. ஆனா, சூலுாருக்கு முப்பது லட்சமா?''''அட...ஆமாடி! அங்க தான், தினமும் 100, 150ன்னு பதிவாகுதே. அப்புறம் என்ன....ஈஸியா கலெக்ஷனை எடுத்துருவாருல்ல!'' என்றாள் சித்ரா.''கலெக்ஷன்னு பேசுனா...ஆர்டிஓ ஆபீசைப் பத்தி ஞாபகம் வராம இருக்குமா? அக்கா...நம்ம ஊர்ல இருக்கிற நாலு ஆர்டிஓ ஆபீஸ்லயும், இப்போ 'பேன்ஸி' நம்பர் வாங்குறதுக்கு பணம் கட்டுனாலும் முடியாதாம். ஆளும்கட்சி வி.ஐ.பி.,க்கு உதவியா சந்தோஷமா இருக்கிறவர்ட்ட போயி, 'காணிக்கை' கொடுத்தா தான் நம்பர் கிடைக்குமாம்!'' என்றாள் மித்ரா.''என்கிட்டயும் ஆர்டிஓ ஆபீஸ் நியூஸ் ஒண்ணு இருக்கு. வெஸ்ட்ல இருக்கிற ஆர்.டி.ஓ., ஆபீஸ்ல, 'ஹெவி லைசன்ஸ்'சை 'ரினிவல்' பண்ணப்போனா, 'டிரெயினிங்' எடுக்கிறதுக்கு, ஒரு டிரைவிங் ஸ்கூலுக்குப் போகச் சொல்றாங்க. அங்க போனா, 'பீஸ்' தவிர்த்து, ஒரு ஆளுக்கு 500 ரூபா வாங்குறாங்க. அதுல, அந்த ஆபீஸ்ல இருக்கிற ஒரு லேடி ஆபீசருக்கு மட்டுமே, 250 ரூபா போயிருதாம். மீதியை மத்தவுங்க பகிர்ந்துக்கணுமாம்!'' என்றாள் சித்ரா.''லாட்டரி விக்கிறவனே, ஸ்டேஷனுக்கு கரெக்டா பங்கு கொடுக்குறான்...சுந்தராபுரத்துல லாட்டரி வித்த ஒருத்தனை போலீஸ் பிடிச்சிருக்காங்க. அதுக்கு அவன்...'நான் தான் ஸ்டேஷன்ல 'குண்டு' போலீசுக்கு கரெக்டா பங்கு கொடுத்துட்டு இருக்கனே'ன்னு கொந்தளிச்சிருக்கான்!''''ஓ! அந்த காம்ப்ளக்ஸ்க்கு வெளியே 'பார்க்கிங்'கை வாடகைக்கு விட்ட போலீசா...அவரு, 'நான் யார் யாரை கவனிக்கணுமோ கவனிச்சிட்டேன். என்ன யாரும் அசைக்க முடியாது'ன்னு சவால் விடுறாராம். ஸ்டேஷன்லயே புலம்புறாங்க.''''அக்கா! ஹைவேஸ்காரங்களும் புலம்புறாங்க. காந்திபுரத்துல பாலம் கட்டுற வேலை, படுவேகமா நடக்குதுல்ல...அங்க இருக்கிற இ.பி., போஸ்ட், டிரான்ஸ்பார்மர், கோவிலு, கட்டடங்களை எடுத்தாத்தான், வேகமா வேலைய முடிக்க முடியும். ஆனா, இதைச் செஞ்சு கொடுக்கிறதுக்கு, மத்த டிபார்ட்மென்ட்காரங்க ஒத்துழைக்கிறதேயில்லையாம்!'', என்றாள் மித்ரா.''ஹைவேஸ்காரங்க பாடு...ரொம்பவே கஷ்டம் தான். திருச்சி ரோட்டுல, யுஜிடிக்கு தோண்டுறதுக்கு, என்.எச். டிபார்ட்மென்ட்ல பர்மிஷனே வாங்கலையாம். போன டிஎம்கே பீரியட்லதான், 39 கோடியில, அகலமாக்குன ரோடு. அதை அலங்கோலமாக்கிட்டாங்க. ஆனா, ஹைவேஸ்காரங்க 'கம்பிளைன்ட்' கொடுத்தா, எப்.ஐ.ஆர்., போட மாட்டேங்கிறாங்களாம். அந்த வேலை பாக்கிறவரு, ஆளும்கட்சி வி.ஐ.பி.,யோட 'பினாமி'யாம்!'', என்றாள் சித்ரா.''மேலயிருந்து கீழ வரைக்கும் எல்லாமே 'பினாமி' சுனாமியா இருக்கு!.'' , என்றாள் மித்ரா.''அதை விடு...நீ வண்டிய எடு... எங்கியாவது நிறுத்தி, ஒரு இளநி வாங்கிக் கொடு!'' என்று டி.ஆர்., பாணியில் சித்ரா உத்தரவிட, சிரித்துக் கொண்டே வண்டியைக் கிளப்பினாள் மித்ரா.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X