"டிவி'யில் கிரிக்கெட் மேட்ச் ஓடிக்கொண்டிருந்தது. அதைப்பார்த்துக் கொண்டே, நாளிதழ்களை புரட்டிய சித்ராவுக்கு, சுடச்சட அப்பள பஜ்ஜி, இஞ்சி டீ கொடுத்து உபசரித்தாள் மித்ரா.பஜ்ஜியை எடுத்து மென்றவாறு, ""அரசு பஸ் டிரைவர்களுக்கு கட்டாயமா கண் பரிசோதனை செய்றாங்களாமே,'' என, கேள்வி எழுப்பினாள் சித்ரா.""ஒவ்வொரு வருஷமும் டிரைவர்களின் கண் பார்வை திறனை சோதிக்க பரிசோதனை செய்றாங்க. ஆனா, பரிசோதனைக்கு செல்லும் டிரைவர்களுக்கு, "ஆன் டூட்டி' போட மறுக்கிறாங்க. திருப்பூர்ல ரெண்டு கிளை இருக்கு; ஒண்ணுல மட்டும் அனுமதிக்கிறாங்க; இன்னொன்னுல அனுமதி தர்றதில்லை. இதனால, ஊழியர்களுக்குள் புகைச்சலா இருக்கு,'' என்றாள் மித்ரா.""அதெல்லாம் சின்ன பிரச்னை; காலையில் இருந்து நைட் வரைக்கும் ரெண்டு "ஷிப்ட்' வேலை செய்ற ஊழியர்களுக்கு சம்பளம் ஒழுங்கா கொடுக்கறதில்லைன்னு சொல்றாங்க. ஒவ்வொருத்தருக்கும் 600க்கு மேல் சம்பளம் கொடுக்கணும்; 400 ரூபாய்தான் தர்றாங்க. ஒரு நாள் முழுக்க உழைச்ச சம்பளத்திலும், "கட்டிங்' போட்டுடுறாங்க. அதனால், முழு நாள் பணிபுரிய, போக்குவரத்து கழக ஊழியர்கள் விரும்புறதில்லை; முடிஞ்சவரை தவிர்க்கப் பார்க்குறாங்க. "கட்டிங்' பணத்தை பத்தி, தொழிற்சங்கத்தினரும் காது கொடுத்து கேக்குறதில்லைன்னு, ஊழியர்கள் புலம்பிக்கிட்டு இருக்காங்க,'' என்றாள் சித்ரா.""போலீஸ் சமாசாரம் ஏதாவது இருக்கா...'' என, பொடி வைத்தாள் மித்ரா.""அதுதான், சென்னையில் ஒரு உதவி கமிஷனர், பெண் போலீசிடம் போன்ல பேசி, காவல் துறை அதிகாரிகளின் மானம் காத்துல பறந்துச்சே,'' என்றாள் சித்ரா.""அது நடந்தது, சென்னையில்! அதே மாதிரி, திருப்பூர்ல ஏதாவது நடந்துச்சா,'' என துருவினாள் மித்ரா.""அப்படி எதுவும் நடக்கலை; சென்னை சம்பவம், "வாட்ஸ் ஆப்' மூலமா, திருப்பூர் போலீஸ் வட்டாரத்துல பரவுச்சு. அதனால், மகளிர் போலீசாரிடம், "கடலை' போடுற, ஆண் போலீசார் உஷாராகிட்டாங்க. தொந்தரவு இல்லாம, மகளிர் போலீசார் நிம்மதியா இருக்காங்க,'' என்றாள் சித்ரா.""தேசிய தரச்சான்று குழு, அரசு மருத்துவமனைக்கு வரப்போகுதாமே,'' என, கடைசி மேட்டருக்கு தாவினாள் மித்ரா.""ஆமாப்பா... அதுக்கு முன்னாடி, ஆலோசனை கூட்டம் நடத்துனாங்க. ஏகப்பட்ட நிதி ஒதுக்கீடு செஞ்சும், தேவையான வசதி செஞ்சு கொடுத்தும், மருத்துவமனை செயல்பாடு சரியில்லைன்னு அதிகாரிகள் வருத்தம் தெரிவிச்சிருக்காங்க. அதை உறுதிப்படுத்துற மாதிரி, மறுநாளே ஒரு சம்பவம் நடந்துச்சு,'' என, சித்ரா சொல்லி முடிப்பதற்குள், ""என்னாச்சுக்கா... யாராவது லஞ்சம் வாங்கி மாட்டிக்கிட்டாங்களா,'' என, மித்ரா கேட்க, ""அதில்லை. ஒரு பெண்ணுக்கு எடை குறைவா குழந்தை பிறந்தது. அந்த குழந்தை இறந்தே பிறந்ததுன்னு, "சர்ட்டிபிகேட்' கொடுத்துட்டாங்க. புதைக்கப்போற நேரத்துல, அந்த குழந்தை கொட்டாவி விட்டுச்சுன்னு, திருப்பி எடுத்துட்டு வந்துட்டாங்க. மறுபடியும், பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பிரிவில் "அட்மிட்' செஞ்சாங்க. தகவல் வெளியே கசிஞ்சிருச்சு. என்ன செய்றதுன்னு தெரியாம, உயரதிகாரிகளுக்கு கூட தகவல் சொல்லாம, கையை பிசைஞ்சுக்கிட்டு இருந்தாங்க. பத்திரிக்கைக்காரங்க, உயரதிகாரிகளை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டதும், ஆடிப்போயிட்டாங்க. அதுக்கப்புறம் என்ன நடந்துச்சுன்னு தெரியலை... சாயங்காலம், அந்த குழந்தை "நெஜமாலுமே' இறந்திருச்சுன்னு சொல்லி, உடலை கொடுத்திருக்காங்க. அதுக்கப்புறம்தான், டாக்டர்கள் நிம்மதி அடைஞ்சிருக்காங்க,'' என, நீண்ட விளக்கம் கொடுத்தாள் சித்ரா.""இவ்ளோ நடந்துருக்கு... இனியும், திருப்பூருக்கு தரச்சான்று கெடைக்கும்னு எனக்கு நம்பிக்கையில்லை,'' என, சொல்லிவிட்டு, "டிவி'யில் சேனலை மாற்ற ஆரம்பித்தாள் மித்ரா.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE