கோடையின் கொடை வள்ளல்தர்பூசணி| Dinamalar

கோடையின் 'கொடை வள்ளல்'தர்பூசணி

Added : மார் 17, 2015
கோடையின்  'கொடை வள்ளல்'தர்பூசணி

வளமும் நலமும் மனித குலத்தின் இரு கண்கள். வளம் குன்றிய நலம், நலம் குன்றிய வளம் நம் வாழ்க்கையின் இன்ப பயணத்திற்கு வழி வகுப்பதில்லை. தனி மனித வாழ்க்கையில் வளங்கள் வளர் பிறையாய் ஒரு புறம் இருக்க, தற்கால மனிதனின் 'நலங்கள்' தேய்பிறையாய் மறுபுறம். காரணம் அறிவியலின் புரிதலில் 'அறியாமை' வளப்பட்டு போனது தான். பருவத்தே பயிர் செய், பசித்து புசி, உணவே மருந்து, காலத்திற்கேற்ற உணவு என அனைத்தையும் நாம் மறந்ததின் விளைவு! 30 வயதில் சர்க்கரை நோய்... 40 வயதில் இருதய நோய்.... இவை களையப்பட்டு நலமாய் வளமாய் வாழ பருவத்திற்கேற்ற உணவு முறையை அறிய வேண்டும். இயற்கை வழி விளைந்த காய்கறி, பழங்களை உண்ணும் முறைகளில் நாம் சற்று விழிப்புணர்வு பெற்றிருந்தாலும், கோடைக்கேற்ற உணவு முறைகளில் முன்னேற்றம் இல்லை. மற்ற பருவகாலங்களை விட கோடை, மனிதனின் நாடி நரம்புகளை வலுவிழக்க செய்யும். ஏனென்றால் கோடையின் வெப்ப மிகுதியால் மனித உடம்பிலிருந்து நீர்ச்சத்து வெகுவாய் வெளியேறும். நீர்ச்சத்து குறைந்த திசுக்கள் நோய் தொற்றுக்கு ஆளாகும். உடலின் பிற முக்கிய உறுப்பான மூளை, இருதயம், சிறுநீரகம், நுரையீரலின் செயல்திறன் பாதிக்கும். எனவே கோடையில் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம்.
கோடையின் காய்கறிகள்:பிற காலங்களை விட கோடையில், சத்துக்கள் நிறைந்த நீர் காய்கறிகளான சாம்பல் பூசணி, பரங்கி, பீர்க்கு, புடலை, சவ்சவ், முள்ளங்கி வகைகளை சாப்பிடும்போது, உடல் உறுப்புகள் சீர்பட இயங்கும். ஆனால், இக்காய்கறிகளை விரும்பி உண்ணும் பழக்கத்திற்கு நாம் இன்னும் வரவில்லை.கோடையில் இருந்து நம்மை காத்திடும், அனைவரும் விரும்பி உண்ணும், நீரையும் சத்துக்களையும் தன்னகத்தே கொண்ட ஒரே பழம் கோடையின் 'கொடை வள்ளல்' தர்பூசணி. அனைவரும் நன்கு அறிந்த தர்பூசணியை, 'தர்பீஸ்', கோசாப்பழம் எனவும் கூறலாம். இதன் பூர்வீகம் தென் ஆப்ரிக்கா.
நோயிலிருந்து காக்கும் தர்பூசணி 90 முதல் 100 நாட்களில் வளர்ந்து பயன்தரும். வைட்டமின் ஏ (28 மி.கி.,), வைட்டமின் சி (8.1மி.கி.,), சர்க்கரை 6.2 சதவீதம், நீர்ச்சத்து 91.40 சதவீதம், சுண்ணாம்பு 7 மி.கி, மெக்னீசியம் 10 மி.கி, பொட்டாசியம் 112 மி.கி, குறைவான கொழுப்பு மற்றும் சோடியம் 1 மி.கி ஆகிய சத்துக்கள் உள்ளன. மேலும், இதில் 'சிற்றுலைன்', 'கராட்டினாய்டு' மற்றும் 'லைகோபீன்' ஆகியவை உண்டு. இந்த அமினோ அமிலங்கள் மனிதனை நோய் தாக்குதலில் இருந்து காக்கும்.
பொதுவாக கோடை காலத்தில் உஷ்ண மிகுதியால் நமது உடம்பிலிருந்து அதிகமான நீர் வெளியேறும். இந்த விளைவின் காரணமாக பெருங்குடலில் உள்ள உஷ்ண நிலை பெருகி தீமை செய்யும் பாக்டீரியாக்களின் வேகம் தொற்றிக்கொள்ளும். இதன் காரணமாக அடிவயிற்றில் வலி, இளைப்பு, ரத்த நாளங்களில் சுருக்கம், உடலின் பொட்டாசியம் அளவு குறைதல் போன்ற நிகழ்வுகள் நடக்கும். இந்த நிகழ்வுக்கு காரணம் உடலின் வேதியியல் மாற்றத்தில் 'அர்ஜினைன்' என்ற இரண்டாம் நிலை அமினோ அமிலத்தின் அளவு வெகுவாக குறைவது தான்.உடலியல் கூறுகளில் இந்த 'அர்ஜினைன்' பிற உணவு பொருட்களில் இருந்து வேதியியல் மாற்றம் மூலம் கிடைக்கப்பெறும் என்றாலும் கோடை உஷ்ணத்தில் இதன் இழப்பீடு மிக விரைவாக இருக்கும். 'அர்ஜினைன்' பொதுவாக பழங்களில் இருந்து நேரடியாக உடம்பில் கிரகிக்கப்படுவதில்லை. 'சிற்றுலைன்' என்ற இரண்டாம் நிலை அமினோ அமிலம் நமது உடலில் சேரும் போது, அது 'அர்ஜினைன்' ஆக மாற்றப்பட்டு உடலின் பயன்பாட்டிற்கு வரும். இதற்கு 'சிற்றுலைன்' அமினோ அமிலத்தை அபரிமிதமாகக் கொண்ட பழங்களை சாப்பிடுவது நல்லது. இவற்றில் முதல் இடத்தை பிடிப்பது தான் தர்பூசணி.
தினமும் 250 கிராம் தர்பூசணியை தினமும் 250 கிராம் சாப்பிட்டு வரும் போது, ரத்த நாளங்கள் இயல்பு நிலைக்கு திரும்பி, சீரான சரியான ரத்த ஓட்டத்திற்கு வகை செய்கிறது. இதன் மூலம் உயர் ரத்த அழுத்தம் குறைக்கப்படுகிறது. ரத்த நாளங்களில் கொழுப்பு படிதலின் அளவை வெகுவாக குறைக்கிறது. இதன் மூலம் இதய கோளாறு ஏற்படா வண்ணம் காக்கிறது.நன்கு பழுத்த சிவப்பு வண்ணத்தை அடைந்த பழங்களில் 'லைக்கோபீன்' என்ற அமினோ அமிலம் உள்ளது. இதில், 'ஆண்டி ஆக்ஸிடண்ட்' என்ற புற்றுநோய் வராமல் தடுக்கும் வேதிக்கூறு உள்ளது. அமெரிக்கர்களின் விரும்பத்தக்க பழம் இது. வியட்நாம் அரசு புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது தர்பூசணி விதைகளை சாப்பிடும் பழக்கத்தை நடைமுறைப்படுத்தி உள்ளனர்.மேலும் 75 சதவீத பழத்துடன் 25 சதவீத சோற்று கற்றாழை ஜெல் கலந்து 5 நிமிடம் முகத்தில் பூசி பின் கழுவி வர முகம் பளபளக்கும். இளமையும், அழகும் பெருகும்.நாளும் நலம் பெற கோடையின் 'கொடை வள்ளலாம்' தர்பூசணியை இந்த கோடையில் பழமாய்... சாப்பிட்டும், பானமாய் பருகியும் கொண்டாடுவோம்.-- டாக்டர். எஸ்.செந்துார்குமரன்இணை பேராசிரியர்,வேளாண் அறிவியல் நிலையம்குன்றக்குடி.94438 69408.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X