கோடை வெயில் வாட்டத்துவங்கிவிட்டது.
வெப்பத்தின் கொடுமையில் இருந்து தப்பிக்க மக்கள் தண்ணீர்,இளநீர்,பதநீர்,தர்பூசணி,மற்றும் பலவிதமான குளிர்பானங்கள் குடித்து தங்கள் தாகம் தீர்த்துக்கொள்கின்றனர்.
ஆனால் வெய்யிலின் அதே தாக்கத்திற்கு கொடுமைக்கும் உள்ளாகும் வாய் பேசாத ஜீவன்களான ஆடு மாடு நாய் போன்ற கால்நடைகளும் பறவை இனங்களும் எங்கே போய் தங்கள் தாகத்தை தீர்த்துகொள்ளும்.
நாய்க்கு மட்டுமே ஒரு நாளைக்கு இரண்டு லிட்டர் தண்ணீர் வேண்டும் பறவையோ அரைலிட்டர் தண்ணீரை தேடி பல கிலோமீட்டர் துாரம் பறக்கும். பறவையோ விலங்கோ உணவு கூட இல்லாமல் சமாளித்துவிடும் ஆனால் தண்ணீர் குடிக்காமல் அவைகளால் வாழ்வதற்கு சாத்தியமே இல்லை.
நவீன வாழ்க்கை முறை நமக்கு பறவைகளையும் விலங்குகளையும் பாரமரிக்க கற்றுத்தரவில்லை, அதனுடன் பாசத்துடன் பழக நாமும் குழந்தைகளுக்கு சொல்லித்தரவில்லை, மாறாக அவைகளை விரட்டியடிக்கும் அவலம்தான் இன்றைய சமூகத்தில் அதிகமாக அரங்கேறிவருகிறது.
எல்லோரையும் போல அவைகள் எப்படியோ தவித்து கிடக்கட்டும் என்று விட்டுவிடமுடியாத 'பீப்புள் பார் கேட்டில் இன் இந்தியா' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தார் சிமெண்ட் குவளைகள் செய்து அதை தங்களது வீடுகள் மொட்டை மாடிகள் நிறுவனங்கள் கடைகள் போன்ற இடங்களில் வைத்து நீர் நிரப்பி வருகின்றனர்.
சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்த அமைப்பின் உறுப்பினர்கள் விலங்குகள் மற்றும் பறவைகள் மீது மிகுந்த அன்பு கொண்டவர்கள்.எங்காவது சட்டத்திற்கு புறம்பாக விலங்குகள் வதைக்கப்படுமானால் அங்கே உடனே ஆஜராகிவிடுவார்கள்.
இதன் காரணமாக லாரிகளில் திணித்து கொண்டு போகப்படும் பலநுாறு மாடுகளை காப்பாற்றி உள்ளனர்.குரங்குகளை மீட்டு மீண்டும் காட்டுக்குள் விட்டுள்ளனர்.விபத்தில் அடிபட்டு கால்கள் முறிந்த பல நாய் கன்றுகளை ஆஸ்பத்திரிக்கு எடுத்துப்போய் குணப்படுத்தி உள்ளனர்.முறையாக பசுக்களுக்கு பிரசவ ஏற்பாடுகளை செய்கின்றனர்.
பராமரிக்க முடியாத விலங்குகளை இவர்களிடம் கொடுத்தால் அதை அதற்கான இடத்தில் வைத்து நன்கு பராமரிப்பார்கள்.எங்காவது ஒரு கால்நடை அடிபட்டாலோ வதைபட்டாலோ இவர்களுக்கு ஒரு போன் போட்டால் போதும் ஒடோடிவந்து விடுவார்கள்.
இந்த அமைப்பினர் விலங்குகள் மற்றும் பறவைகள் மீது கொண்ட பிரியம் காரணமாக சைவத்திற்கு மாறியவர்கள்.மாட்டின் பால் கன்றுக்கு மட்டுமே சொந்தம் என்ற கருத்து கொண்டவர்கள் என்பதால் பால் பொருட்கள் எதையும் சாப்பிடமாட்டார்கள்,பட்டு புழுவை கொன்றுதான் பட்டு வருகிறது என்பதால் பட்டு உடைகளை உடுத்தமாட்டார்கள், தேனீக்களின் கூட்டை அழித்துதான் தேன் எடுக்கப்படுவதால் தேன் பொருட்கள் எடுத்துக்கொள்ளமாட்டார்கள்.
தங்களது வேலை மற்றும் தொழில் மூலம் வரும் வருமானத்தையும் நண்பர்கள் உறுப்பினர்கள் தரும் நன்கொடையையும் கொண்டு செயல்படும் இவர்கள் இந்த வருடம் வெயில் துவங்கியதுமே மூன்று வகையான அளவுகளில் தண்ணீர் பிடிக்கும் படியான குவளைகள் தயார் செய்து தாங்கள் உபயோகிப்பதுடன் விரும்பும் பொதுமக்களுக்கும் கொடுத்து வருகின்றனர்.
வாயில்லாத ஜீவன்களுக்காக ஒரு குவளை தண்ணீர் தர நீங்கள் தயரா?அப்படியானால் தண்ணீர் தாங்கும் குவளை தர இவர்கள் தயார்.தேவை உள்ளவர்களும் இவர்களது சேவையை பாராட்ட நினைப்பவர்களும் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்:9884071136,9176338482.
-எல்.முருகராஜ்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE