தூத்துக்குடி : திருச்செந்தூர் அருகே கடலில் குளிக்கச் சென்ற இருவர், நீரில் மூழ்கி உயிரிழந்தனர். திருச்செந்தூர் அடுத்த உடன்குடி, கிறிஸ்தியா நகரம் இம்மானுவேல் மகன் யோவான்(17). பிளஸ் 2 மாணவரான இவர், நண்பர்களுடன் தீபாவளியையொட்டி நேற்று முன்தினம் மதியம், மணப்பாடு கடல் பகுதியில் குளித்துக் கொண்டிருந்தார். திடீரென அங்கு ஆழமான பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்ட யோவான், நீரில் மூழ்கி மூச்சுத்திணறி பலியானார். மற்றொரு சம்பவம்: நெல்லை, வடக்கன்குளம் ஜெஸ்லின் தனது குடும்பத்தினருடன், நேற்று முன்தினம் மதியம் மணப்பாடு கடல் பகுதிக்கு வந்தார். அவர்கள், கடலில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தபோது, அவரது மகள் சித்த மருத்துவ மாணவி ஜெஸி(19), நீரில் மூழ்கி பலியானார். இரண்டு சம்பவங்களும், அருகருகே அடுத்தடுத்து நடந்தன. குலசேகரன்பட்டணம் போலீசார் விசாரித்தனர்.