வேலூர் : வேலூரில் எம்.பி., கனிமொழி பெயரை பயன்படுத்தி லட்சக்கணக்கில் கடன் வாங்கித் தருவதாக மோசடி நடந்து வருவதாக, தி.மு.க.,வினர் போலீசில் புகார் செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் ஆற்காட்டில் 2,000 ரூபாய் கட்டினால் ஒரு லட்ச ரூபாய் கடன் வழங்குவதாகவும், அதற்கு முதலில், "400 ரூபாய்க்கு, "டிடி' எடுத்து அனுப்பி விண்ணப்பபடிவம் பெற வேண்டும்' என, ஆற்காடு பூபதி நகரை சேர்ந்த பெண் ஒருவர் பொது மக்களிடமும், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களிடமும் ஆசை வார்த்தை கூறி வசூல் செய்து வந்துள்ளார். இதற்கு வருமான சான்று, ஜாதிச் சான்று, இருப்பிடச் சான்று, தொழில் சான்று மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை இணைத்துத் தர வேண்டும். இந்த கடன் மனுவை சென்னைக்கு அனுப்பினால் மூன்று மாதம் கழித்து எம்.பி., கனிமொழி ஒரு லட்ச ரூபாய் கடன் வழங்குவதாக கூறி 300 பேரிடம் தலா 2,000 ரூபாய் வீதம் பூபதி நகரை சேர்ந்த பெண் வசூலித்து இருப்பதாக தி.மு.க.,வினருக்கு தகவல் வந்தது.
இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி ஆற்காடு நகர தி.மு.க., பொருளாளர் கோபு போலீசில் புகார் செய்தார். போலீசார் நடத்திய விசாரணையில், வேலூர் மாவட்டம் முழுவதும் இது போல மோசடி நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. இந்த மோசடிகள் மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் பலர் ஈடுபட்டு வருவதாகவும், 50 பைசா வட்டியில் ஒரு லட்ச ரூபாய் கடன் பெற 2,000 ரூபாயும், இரண்டு லட்ச ரூபாய் கடன் பெற 4,000 ரூபாயும், சென்னைக்கு போய் வர ஒரு நபருக்கு 1,500 ரூபாய் செலவாகும் என கூறி பலரிடம் பணம் லட்ச கணக்கில் வசூலித்து இருப்பது தெரிய வந்துள் ளது.