சென்னை : மாணவனை கடத்திய வழக்கில் சிக்கிய இருவருக்கும் கடுமையான தண்டனை கிடைக்கும் வகையில் வழக்கு பிரிவுகள் மாற்றப்பட்டுள்ளன. சென்னை அண்ணா நகரை சேர்ந்த கீர்த்திவாசன் என்ற பள்ளி மாணவன் கடந்த திங்கள் கிழமை கடத்தப்பட்டு, மறுநாள் போலீசாரால் மீட்கப்பட்டான். கடத்திய இன்ஜினியரிங் மற்றும் எம்.பி.ஏ., பட்டதாரிகள் இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 98 லட்சத்து 73 ஆயிரம் ரூபாயையும் மீட்டனர். இருவரும் தற்போது புழல் ஜெயிலில் உள்ளனர். இவர்கள் மீது போலீசார் ஏற்கனவே மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருந்தனர். தற்போது வழக்கு பிரிவுகளில் போலீசார் சிறிய மாற்றத்துடன் கூடுதலாக ஒரு பிரிவையும் சேர்த்துள்ளனர். வழக்கின் தன்மை கருதி, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கடும் தண்டனை கிடைக்கும் வகையில் சட்டப் பிரிவுகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.