காலாப்பட்டு : சின்ன முதலியார்சாவடியில் கடல் அரிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அங்கு வசிக்கும் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் சின்ன முதலியார்சாவடியில், கடல் அரிப்பின் தாக்கம் அதிகமாக உள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக சின்ன முதலியார்சாவடியில், நேற்று அதிகாலை 3 மணிக்கு கடல் சீற்றம் தீவிரமடைந்தது. கரையோர பகுதிகளில், 15 மீட்டர் தொலைவிற்கு கடல் நீர் சீறிப் பாய்ந்தது. அலையின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல், கடற்கரையோரம் இருந்த 40 லட்ச ரூபாய் மதிப்புள்ள மீன் வலை உலர்த்தும் கட்டடம் கடலில் சரிந்து உருக்குலைந்தது. கரையோரம் இருந்த இரண்டு தென்னை மரங்களும் கடலில் அடித்து செல்லப்பட்டன. அதிகாலையில் கடலின் கோர தாண்டவத்தை பார்த்த மீனவர்கள், கரையோரம் இருந்த குடிசை வீடுகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டனர்.
நேற்று மாலை வரை கடல் சீற்றம் ஆக்ரோஷமாக இருந்ததால், அப்பகுதி மீனவர்கள் வீடுகளை காலி செய்துவிட்டு பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்தனர். சின்ன முதலியார்சாவடியில், கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ஐந்து மீட்டர் தொலைவிற்கு கடுமையான கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. வாரத்திற்கு 10 அடி நீளத்திற்கு கடற்கரை மணலை கடல் நீர் அரித்து வருகிறது. கடல் சீற்றத்தால் இதுவரை எட்டுக்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன. தற்காலிகமாக கடற்கரையோரம் மரக்கிளைகள், மணல் மூட்டைகளை கொண்டு கடல் அரிப்பை தடுத்து வருகின்றனர். கடலில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டிருந்த, 50க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தந்திராயன்குப்பம் கடற்கரைக்கு கொண்டு செல்லப்பட்டன.
சின்ன முதலியார்சாவடி மீனவ பஞ்சாயத்தாரின் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், கடல் அரிப்பை தடுக்க போர்கால அடிப்படையில் தூண்டில் முள்வளைவு முறையில் கருங்கற்கள் கொட்ட வேண்டும் எனவும், இதை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடத்துவதென முடிவு எடுக்கப் பட்டது. கடல் அரிப்பை தடுக்க போர்கால நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், சின்ன முதலியார்சாவடி உட்பட அப்பகுதியையொட்டியுள்ள மீனவ கிராமங்கள் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Advertisement