தேனி : டாஸ்மாக் கடையில் டொம்புச்சேரி, வருஷநாடு பகுதியில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் ஏழு பேர் காயமடைந்தனர். தாக்குதலில் ஈடுபட்டவர்களில் மூவரை போலீசார் கைது செய்தனர். டொம்புச்சேரி மெயின் ரோட்டில் டாஸ்மாக் மதுபான கடை உள்ளது. அப்பகுதியை சேர்ந்த இருளப்பன்(18), வரதராஜன்(20), செந்தில்குமார்(24) ஆகியோர் மது அருந்தி விட்டு பாட்டிலை கீழே போட்டு உடைத்தனர். பாட்டில் சிதறல்கள் அங்கிருந்த மதியழகன்(32), மாரியப்பன்(28) ஆகியோர் மீது பட்டு காயம் ஏற்பட்டது. இதை தட்டிக்கேட்டதால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த இருளப்பன், வரதராஜன், செந்தில்குமார் ஆகியோர் ஊருக்கு சென்று தனது ஆதரவாளர்கள் ஆண்டவர், கனி, தங்கராஜ், அய்யர், குமார், விஜி, நாகராஜ் மற்றும் சிலருடன் காரில் கடைக்கு வந்தனர். மதியழகன், மாரியப்பனை உருட்டு கட்டை, கம்பியால் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த இருவரும் தேனி மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்படும் நிலை ஏற்பட்டதால் டி.எஸ்.பி., சேது தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பழனிசெட்டிபட்டி போலீசார் இருளப்பன், வரதராஜன், செந்தில்குமார் ஆகியோரை கைது செய்தனர். வருஷநாடு: பொன்னகரை சேர்ந்தவர் ராஜா(37). இவர், ஒட்டணையில் மது அருந்திய போது அங்கிருந்த மலைராஜாவுடன் தகராறு ஏற்பட்டது. ராஜா தனது உறவினர்கள் கோட்டைச்சாமி(19), குமார்(17), செந்தில்குமார் ஆகியோருடன் சுமோ காரில் உருட்டு கட்டை மற்றும் ஆயுதங்களுடன் வந்து மலைராஜாவையும், அவரது ஆதரவாளர் முருகனையும் தாக்கினர். இதில் காயமடைந்த இருவரும் தேனி மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மலைராஜா, முருகன், முத்துவீரன், ஈஸ்வரன் ஆகியோர் திருப்பி தாக்கியதில் ராஜா, செந்தில்குமார், கோட்டைச்சாமி ஆகியோர் காயமடைந்தனர். வருஷநாடு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.