பாடி பாடி மழை தந்தவர்: இன்று முத்துச்சாமி தீட்சிதர் பிறந்த தினம்| Dinamalar

பாடி பாடி மழை தந்தவர்: இன்று முத்துச்சாமி தீட்சிதர் பிறந்த தினம்

Added : மார் 23, 2015 | கருத்துகள் (7)
பாடி பாடி மழை தந்தவர்: இன்று முத்துச்சாமி தீட்சிதர் பிறந்த தினம்

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவராக விளங்கும் முத்துச்சாமி தீட்சிதர் 1776 ல் பங்குனி கார்த்திகை நாள் திருவாரூரில் பிறந்தார். இளமையிலேயே சமஸ்கிருதம், தெலுங்கு மொழிகளில் புலமை பெற்று இசையிலும் ஞானம் உடையவராக விளங்கினார்.சிதம்பரநாதயோகி என்ற ஞானி முத்துச் சாமி தீட்சிதர் மீது அன்பு கொண்டு அவரைத் தன் சீடராக ஏற்றுக் கொண்டு காசிக்கு அழைத்துச் சென்றார். காசியில் முத்துச்சாமி தீட்சிதர் 5 ஆண்டுகள் தங்கி இந்துஸ்தானி இசையைக் கற்றார். அதோடு சமஸ்கிருத மொழியின் மாண்பையும் புரிந்து கொண்டு மந்திர ரூபமாக பாடல்களை புனைவதில் ஆற்றலும் பெற்றார். இதை உணர்ந்த குரு, அவரை தமிழ் நாட்டிற்கு சென்று திருத்தணி முருகப் பெருமானை வழிபடுமாறு உணர்த்தினார்.


சம்பந்தரும், தீட்சிதரும்:

திருத்தணி வந்த போது, தவ வேட வடிவில் வந்த முருகன் 'முத்துஸ்வாமி' என்று அழைத்து அவரது வாயில் ஒரு கற்கண்டை போட்டு மறைந்தார். அப்போது தீட்சிதர் ஒரு கிருதியை மாயா மாளவ கவுளை ராகத்தில் பாடினார். அன்று தொடங்கி தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு திருத்தலங்களுக்கு சென்று அங்கிருக்கின்ற இறைவன் மீது கிருதிகளை இயற்றி பாடத் தொடங்கினார். சுப்பிரமணியரின் அருளைப் பெற்றதால் தன்னுடைய பாடல்களில் குகனையே குருவாகக் கொண்டு 'குருகுஹ' என்ற முத்திரையை அமைத்துள்ளார். ஏழாம் நுற்றாண்டில் தோன்றி, தமிழகம் முழுவதும் பாடல்கள் மூலமாக பக்தி நீரூற்றி இசையையும் தமிழையும் வளர்த்தவர் திருஞானசம்பந்தர். இவருடைய பாடல்களை பாடினாலும் வாசித்தாலும் அளவற்ற பலன்களை அளிக்கக்கூடியது. தமிழ்நாட்டில் உள்ள சிவத்தலங்களுக்கு சென்று பதிகங்களை பண்ணோடு பாடி, பின்னர் அங்கிருக்கின்ற அடியார்களுடைய துயரையும் நீக்கி சமுதாயப்பணியையும் செய்தவர் சம்பந்தர். விநாயகர் வழிபாட்டை தமிழ்நாட்டில் தொடங்கி வைத்தவர் சம்பந்தர் என்றால் அது மிகையல்ல. சம்பந்தரைப் போலவே முத்துச்சாமி தீட்சிதரும் விநாயகர் வழிபாட்டை தொடர்ந்து வலியுறுத்தினார்.

'வாதாபி கணபதிம் பஜேஹம்' என்ற கிருதியில் திருவாரூரில் உள்ள விநாயகரை ஹம்சத்வனி ராகத்தில் பாடியதால் தமிழ்நாட்டிற்கு விநாயகர் வழிபாடு வந்த விதத்தை நாம் அறிய முடிகிறது. வழிபாட்டை எப்படி செய்ய வேண்டும் என 'சித்தி விநாயகம்' என்ற கிருதியை சண்முகப்பிரியா ராகத்தில் பாடி வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து திருவலஞ்சுழி என்னும் தலத்தில் இந்திரன் வழிபட்ட விநாயகரை 'ஸ்ரீகணேசாத்பரம்' என்ற கிருதியில் பாடி சமஸ்கிருதத்தில் உள்ள இலக்கிய அணிகளையும் பாடல்களில் வைத்தார். மேலும் தோடி ராகத்தில் 'மகாகணபதிம் வந்தே' என்ற பாடலில் பல்வேறு மந்திர சொருபங்களை இசையுடன் பாடினார்.


ஒன்பது கிருதிகள்:

இவர் திருவாரூர் கமலாம்பாள் மீது ஒன்பது கிருதிகளை பாடியதால் அவை 'நவா வர்ணம்' என்று அழைக்கப்பட்டன. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு ராகத்தில் அமைந்து அளவற்ற நல் பயன்களை வழங்க கூடியது. பஞ்சலிங்க ஸ்தலங்களாக விளங்கும் திருவண்ணாமலை, திருக்காளத்தி, திருவானைக்காவல், காஞ்சிபுரம், சிதம்பரம் ஆகிய ஊர்களுக்கு சென்று பஞ்ச பூதங்களாக விளங்கும் நெருப்பு, காற்று, நீர், மண், ஆகாயம் தொடர்பாக கிருதி பாடி இசை வழிபாடு செய்துள்ளார். நவக்கிரகங்கள் மீது ஒன்பது கிருதிகளை பாடி வழிபட்டுள்ளார். தமிழ் நாட்டில் உள்ள திருத்தலங்களில் சைவ, வைணவ பேதம் பாராட்டாமல் அனைத்து தெய்வங்களையும் மந்திர சொரூபமாக இசை வடிவில் வழிபட்டவர் தீட்சிதர். திருநெல்வேலி காந்திமதி அம்பாள் மீது 'ஸ்ரீகாந்திமதிம்' எனத் தொடங்கும் ஹேமாவதி ராக கிருதியை பாடி வழிபட்டதை நெல்லையப்பர் கோயிலில் உள்ள கல்வெட்டுக்கள் மூலம் அறியலாம். நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி வைஷ்ணவ கோயிலில் லட்சுமி வராஹர் அருள்பாலித்து வருகிறார். அவரை போற்றும் விதமாக 'ஸ்ரீலட்சுமி வராஹம் பஜேஹம்' எனத் தொடங்கும் ஆபோகி ராக பாடலில் தீர்த்தமாக விளங்கும் தாமிரபரணியையும் குறிப்பிட்டு பாடியுள்ளார்.

திருநாவுக்கரசர் 'மந்திரமும் தந்திரமும் மருந்துமாகி தீரா நோய் தீர்த்தருள வல்லான் தன்னை' என்று பாடியதற்கேற்ப புள்ளிருக்கு வேலூர் என்ற திருத்தலம் வைத்திஸ்வரன் கோயில் எனப் பெயர் பெற்றது. தீட்சிதருடைய தந்தையார் ராமசாமி தீட்சிதருக்கு 40 ஆண்டு காலம் வரை பிள்ளைப் பேறு இல்லை. தம்பதியர் இத்தலத்திற்கு வந்து 48 நாட்கள் விரதம் இருந்து வழிபட முத்துச்சாமி பிறக்கிறார். தான் பிறப்பதற்கு காரணமாக இருந்த தலத்தில் 'குருகுக ரூப முத்துக்குமார ஜனனிம்' என்ற வரிகளில் வரலாற்றையும் இணைத்து இசை வடிவில் வடித்துள்ளார்.


மழைக்காக பாட்டு:

திருஞானசம்பந்தரைப் போலவே பல அற்புதங்களை நிகழ்த்தியவர் தீட்சிதர். ஒரு முறை சாத்தூர் என்னும் ஊருக்கு வரும் போது அங்குள்ள மக்கள் தண்ணீர் பஞ்சத்தை தெரிவித்தனர். தீட்சிதர் ஒரு பாடலை 'அமிர்தவர்ஷினி' ராகத்தில் பாட மழை பொழிந்தது. மக்களின் இன்னல் தீர்த்த தீட்சிதர் தனது யாத்திரையை தொடர்ந்தார். இவரது பாடல்கள் பொருள் வளம் நிரம்பியும், அருள்வளம் பெருகியும் இருப்பதை இசை வாணர்களும் பாடல்கள் கேட்போரும் உணர்வர். தற்கால இசை மேடைகளிலும், மிகவும் திறமை பெற்ற இசைக் கலைஞர்களால் மட்டுமே இவருடைய பாடல்களை பாட முடிகிறது. முத்துச்சாமி தீட்சிதர் 1835 அக்டோபர் 21ல் எட்டையபுரத்தில் இயற்கை எய்தினார். இவர் மதுரை மீனாட்சி அம்மன் மீது பாடிய 'மீனாட்சி மேமுதம்' என்ற பாடலில் வரும் 'மீனலோட்சனி பாசமோட்சனி' என்ற வரியை சிஷ்யர்கள் பாடும் போது 'நாதஜோதியான' தீட்சிதர் உயிர் பிரிந்தது.

- கலைமாமணி முனைவர் தி.சுரேஷ்சிவன் இசைத்தமிழ் ஆராய்ச்சியாளர் மதுரை. 94439 30540 sureshsivan70@gmail.comWe use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X