பங்களா காம்பவுண்டு உசரமாச்சு... பவரு எல்லாம் அங்கே போச்சு!| Dinamalar

பங்களா காம்பவுண்டு உசரமாச்சு... 'பவரு' எல்லாம் அங்கே போச்சு!

Added : மார் 24, 2015
Share
''அக்கா! ரொம்ப நாளாச்சு...ஏதாவது 'பாரஸ்ட்' பக்கம் போயிட்டு வரலாமா?''இளங்காலைப் பொழுதில், மஞ்சள் வெயில் தழுவ, வனக்கல்லூரி வளாகத்தில், வேகமாய் நடந்து கொண்டே கேட்டாள் மித்ரா.''ஏன்டி! 'ஃபாரஸ்ட் டே' வந்ததும், காடு ஞாபகத்துக்கு வந்துருச்சா? காடெல்லாம் காஞ்சு கெடக்குது. இப்போதைக்கு சொர்க்கம், கோயம்புத்தூர் தான்!'' என்றாள் சித்ரா.''அது தான்...கோவைப்புதூருக்கே
பங்களா காம்பவுண்டு உசரமாச்சு... 'பவரு' எல்லாம் அங்கே போச்சு!

''அக்கா! ரொம்ப நாளாச்சு...ஏதாவது 'பாரஸ்ட்' பக்கம் போயிட்டு வரலாமா?''இளங்காலைப் பொழுதில், மஞ்சள் வெயில் தழுவ, வனக்கல்லூரி வளாகத்தில், வேகமாய் நடந்து கொண்டே கேட்டாள் மித்ரா.''ஏன்டி! 'ஃபாரஸ்ட் டே' வந்ததும், காடு ஞாபகத்துக்கு வந்துருச்சா? காடெல்லாம் காஞ்சு கெடக்குது. இப்போதைக்கு சொர்க்கம், கோயம்புத்தூர் தான்!'' என்றாள் சித்ரா.''அது தான்...கோவைப்புதூருக்கே தினமும் காட்டு யானை வர்றதுலயே தெரியுதே!,'' என்றாள் மித்ரா.''அது என்ன இப்ப மட்டுமா வருது?'' என்று கேட்டாள் சித்ரா.''ரொம்ப நாளாத்தான் வருது. ஆனா, மாவட்ட ஆபீசருக்கு, எந்தெந்த வேலையில, எவ்ளோ கமிஷன் பாக்குறதுன்னு, கணக்கு பாக்கிறதுக்கே நேரமில்லைங்கிறாங்க.'' என்றாள் மித்ரா.''அவருக்கு மட்டுமா? கார்ப்பரேஷன்ல இருக்கிற ஒரு லேடி ஆபீசருக்கு, உளவு பாக்கவே நேரமில்லையாம். அவுங்க 'ஆக்டிவிட்டி' எல்லாமே, ரொம்பவே மர்மமா இருக்காம். அவர் பங்களாவுல இருந்த கார்ப்பரேஷன் ஆளுங்களை எல்லாம் அனுப்பிட்டாங்க. காம்பவுண்டை திடீர்னு உசரமாக்கிட்டாங்க.'' என்றாள் சித்ரா.''அது மட்டுமா? அந்த பங்களாவுக்கு எதிர்ல இருந்த 'அயர்ன்' கடை, பழைய கார் விக்கிற கம்பெனி எல்லாத்தையும் தூக்கிட்டாங்க...தெரியாதா?'' என்றாள் மித்ரா.''அடடா...அது வேறயா...கார்ப்பரேஷன்ல முக்கியமான 'பைல்' எல்லாமே, அந்தம்மா பார்த்த பிறகு தான், கமிஷனர், மேயரே பார்க்கணும்னு வி.ஐ.பி., உத்தரவு போட்ருக்காராமே!'' என்றாள் சித்ரா.''பில்டிங் அப்ரூவல், ரோடு கான்ட்ராக்ட்...இதைத்தவிர, பெருசா என்ன 'பைல்' வரப்போகுது?'' என்றாள் மித்ரா.''கரெக்ட் மித்து! ஆபீசர்களும், காசு பண்றதைத் தவிர, வேற வேலை பாக்குறாப்புல தெரியலையே.''''வேலை தெரிஞ்சு பாக்காதது ஒரு வகை. வேலையே தெரியாம, ஓட்டுறது இன்னொரு வகை. சிட்டியில இருக்கிற முக்கியமான இன்ஜினியர், இந்த ரெண்டாவது வகைங்கிறாங்க.''''ஓ...! அந்த 'டைகர் பிஸ்கட்' பார்ட்டியா? அவர்ட்ட, பிஸ்கட் கேட்டு, நோகடிக்கிறதையே, சில இன்ஜினியர்க வழக்கமா வச்சிருக்காங்க. செம்ம ஓட்டு ஓட்றாங்க.'' என்று சிரித்தாள் சித்ரா.''ஓட்டுறதுன்னா கரெக்டா ஓட்டணும்? சிட்டிக்கு நடுவுல இருக்கிற சேர்மன், புதுசா வாங்குன 'எக்கோ ஸ்போர்ட்' வண்டியை, எல்லாரும் கண்ணு வச்சுட்டாங்க போலிருக்கு. மண்டல ஆபீஸ்ல, வண்டியை 'ரிவர்ஸ்' எடுத்து, ஸ்டைலா ஓட்டுறப்ப, லட்ச ரூபாய்க்கு மேல செலவு வச்சிருச்சாம். நொந்து கெடக்காவ அண்ணாச்சி.'' என்று நெல்லைத்தமிழில் பேசினாள் மித்ரா.''நீ அண்ணாச்சின்னு சொன்னதும், எனக்கு மளிகைக் கடை ஞாபகம் வந்துருச்சு. நம்ம ஊர்ல மட்டும், மளிகைச் சாமான் விலையெல்லாம் தாறுமாறா ஏறிருச்சுங்கிறாங்க மித்து.''''அதுக்குக் காரணமே...நம்ம டிஸ்ட்ரிக்ட்ல இருக்கிற, 'சப்ளை' ஆபீசர்தான்னு சொல்றாங்க. அத்தியாவசியப் பொருட்கள் விலைவாசியைக் கட்டுப்படுத்துற 'பவரு' அவருக்கு இருக்காம். அதைக் கண்டுக்காம இருக்கிறதுக்கு...குறிப்பா, 'சம்பா' ரவைக்கு மட்டுமே, சரியான மாமூல் போகுதாம்.''''மாமூல் கிடைக்குதுன்னா, சில ஆபீசருங்க 'என்ன' வேணும்னாலும் பண்ணுவாங்க போலிருக்கு.'' என்று சற்று உஷ்ணமாய்ப் பேசினாள் சித்ரா.''என்னக்கா! திடீர்னு டென்ஷ னாயிட்ட...மேட்டரைச் சொல்லு''''சிட்டிக்குள்ள, காலேஜ் பொண்ணுங்களை வச்சு, 'தொழில்' பண்ணுன ஒரு புரோக்கரைப் பிடிச்சாங்களே. அந்தாளு யாருன்னு தெரியுமா?''''ஆமாக்கா...நானும் கேள்விப்பட்டேன். ஏதோ பெரிய இடத்துப் பிள்ளையாமே.''''கரெக்ட் மித்து! பிரபலமான சிமென்ட் கம்பெனிக்கு, தமிழ்நாட்டுலயே அவர் தான் முக்கியமான டீலரு. காலேஜ் பொண்ணுங்களை ஏமாத்தி, படமெடுத்து, அப்புறம் அதை வச்சே, மிரட்டி, தொழில்ல இறக்கி விடுறது தான் அந்தாளு வேலையாம்.''''சரி! இதுக்கு எதுக்கு ஆபீசருங்க மேல நீ கோபப்படணும்?,'' என்றாள் மித்ரா.''அந்த ஆளு...ரகசியமா கொடுத்திருக்கிற வாக்குமூலத்துல, எந்தெந்த ஏ.சி., இன்ஸ்பெக்டருக்கு எவ்ளோ 'மாமூல்' கொடுத்தேன்னு சொல்லிருக்காரு.'' என்றாள் சித்ரா.''நீ ஏதோ, ஏ.சி., இன்ஸ்பெக்டர் லெவலுக்குப் போயிட்ட. செல்வபுரத்துல இருக்கிற எஸ்.ஐ., ஒருத்தரு போடுற ஆட்டத்துல, அங்கயிருக்கிற போலீஸ்காரங்களே கொந்தளிச்சிட்டு இருக்காங்க. வீரப்பனைப் பிடிக்கப்போன 'டீம்'ல இருந்ததுக்காக, இவருக்கு 'புரமோஷன்' கொடுத்திருக்காங்க. அவரு தான், மத்த போலீசையெல்லாம் வாட்டி வதைக்கிறாராம்.'' என்றாள் மித்ரா.''ஏன் மேலயிருக்கிற ஆபீசர்கள்ட்ட சொல்ல வேண்டியது தான?,'' என்று கேட்டாள் சித்ரா.''அதுல தான் பிரச்னையே. பல கேசுங்களை, கட்டப் பஞ்சாயத்து பண்ணியே, செம்ம கலெக்ஷன் ஓட்டிருவாராம். மேலயும் கரெக்டா 'கப்பம்' கட்டிர்றதால, அவுங்க கண்டுக்கிறதில்லையாம்.'' என்றாள் மித்ரா.''வடிவேலு சொன்ன மாதிரி...எல்லாம் ஒரு குரூப்பாத்தான் அலையுறாங்களோ?''''நல்லா மேட்டரை எடுத்துக் கொடுக்குறியே...நஞ்சப்பா ரோட்டுல, டவுன் அண்ட் கன்ட்ரி பிளானிங் ஆபீஸ் இருக்கே. அங்க இருக்கிற ஓ.ஏ., தலைமையில, இப்பிடித்தான் ஒரு குரூப், ஒவ்வொரு பைலுக்கும் வலுவா வசூல் போடுதாம்.''''எல்.பி.ஏ., ஆபீசை விட, அந்த ஆபீஸ் கொஞ்சம் பரவாயில்லைம்பாங்களே.'' என்றாள் சித்ரா.''பெரிய ஆபீசர், நல்லவர் தான். ஆனா, டிராப்ட்ஸ்மேன், சூபர்வைசர்னு ஒரு வசூல் குரூப்பே, இவரு தலைமையில தான் இயங்குதாம். ஆபீசுக்கு எதிர்த்தால இருக்கிற, ஒரு ஓட்டல் மாடியில தான், பங்கு பிரிச்சுக்கிறாங்களாம்.'' என்றாள் மித்ரா.''ஓட்டல்ன்னு சொன்னதும், எனக்கு ராமலிங்கம் காலனியில இருக்கிற மெஸ்களோட ஞாபகம் வந்துருச்சு.''''அங்க என்னக்கா ஸ்பெஷல்?''''அந்த ஏரியாவே மெஸ்சுக்கு தான் ஸ்பெஷல். அந்த ஒரே ஏரியாவுல மட்டும், கிட்டத்தட்ட அம்பதுக்கு மேல, மெஸ்சு இருக்கு. எல்லாமே வீடு மாதிரிதான் இருக்கும். குடிசைத் தொழில் மாதிரி நடக்குது. ஏதோ காலேஜ் புள்ளைங்களுக்கு சாப்பாடு செஞ்சு போட்டு, சில குடும்பங்க பிழைக்குது. அவுங்களையும் மெரட்டி, காசு பிடுங்குறாராம் கார்ப்பரேஷன் ஆளு.'' என்றாள் சித்ரா.''என்ன...பிராப்பர்டி டாக்ஸ் அதிகமாப் போடுவேன்னு மெரட்டுறாரா?'' என்று 'அசால்ட்'டாகக் கேட்டாள் மித்ரா.''மித்து! வரவர...நீ ரொம்ப தேறிட்ட...நீ சொன்னது கரெக்ட் தான். அந்த மெஸ்களுக்கு, பல ஆயிரம் ரூபா டாக்ஸ் போடுவேன்னு மெரட்டி, ஒரு மெஸ்சுக்கு அஞ்சாயிரம் ரூபா வாங்கிருக்காரு. ஆனா, ஆயிரம் ரூபாய்க்கு தான் டாக்ஸ் போட்ருக்காரு. இதைத் தட்டிக்கேட்ட ஒரு பெரியவரோட வீட்டுக்கு, 32 ஆயிரம் 'பிராப்பர்டி டாக்ஸ்' போட்டுப் பழி வாங்கிருக்காரு.'' என்றாள் சித்ரா.''இந்த ஆபீசர் துரைங்க எல்லாம் திருந்தவே மாட்டாங்களாக்கா?''''ம்ஹூம்...திருநெல்வேலியில ஆபீசர் தற்கொலை பண்ணுன விவகாரத்துல, ஒரு அமைச்சர் பதவியே பறிபோச்சு. அதே டிபார்ட்மென்ட்ல, கோயம்புத்தூர்ல இருக்கிற ஒரு ஆபீசரு, டிராக்டர்க்கு மானியம் கொடுக்க, விவசாயிகள்ட்ட பதினைஞ்சாயிரம் ரூபா 'கமிஷன்' பிடுங்குறாராம்.''''கரப்ஷனை விடுக்கா. நம்ம மேயர், நேத்துலயிருந்து டாக்டராயிட்டாரு தெரியுமா?'' என்றாள் மித்ரா.'' பி.எச்.டி., முடிச்சிட்டாரா?,'' என்று ஆர்வமாய்க் கேட்டாள் சித்ரா.''ஆமாக்கா! நேத்து 'வைவா' முடிஞ்சது. அவரு எடுத்துக்கிட்ட 'சப்ஜெக்ட்'டே, 'அம்மா' பத்துனது. நல்லாப் பண்ணிருந்தார்ன்னு கேள்விப்பட்டேன்.''''இதெல்லாம் நல்ல விஷயம் தான். இதே வேகத்துல, ஊருக்கு ஏதாவது நல்லது செஞ்சா சரி.''''அதுக்கு அவரை, சுதந்திரமா விடணுமே? பெட்டிஷன் மேல பெட்டிஷனாப் போட்டு, தாக்கு தாக்குன்னு தாக்குனா, அவரும் என்ன தான் பண்ணுவாரு?'' என்றாள் மித்ரா.''ஆளுங்கட்சி ஆபீசையே 'பார்' ஆக்கிட்டாங்கன்னு, அங்க வேலைக்கு இருந்த ஆளே, இப்ப 'பெட்டிஷன்' போட்ருக்காரு. விசாரிச்சா, அவரு ஆபீசுக்குள்ளயே, தண்ணி அடிக்கிறதைக் கண்டு பிடிச்சு, வெளிய அனுப்பிருக்காங்க. அதுக்கு தான், இப்பிடி ஒரு 'பெட்டிஷன்' போட்ருக்காரு.'' என்றாள் சித்ரா.''அக்கா! நம்ம ஊருல இருக்கிற பல்கலை வித்தகர் மேல ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கலைன்னு, சம்மந்தப்பட்ட மினிஸ்டரைக் கூப்பிட்டு, 'அம்மா' காய்ச்சி எடுத்துட்டாங்களாம். அநேகமா, சீக்கிரமே நல்ல 'ரிசல்ட்' வரும்னு புரபசரெல்லாம் காத்திருக்காங்க.'' என்றாள் மித்ரா.''சரி மித்து! எனக்கு 'டயர்டு' ஆயிருச்சு...வண்டியைக் கிளப்பு. வீட்டுக்குப் போய், சூப்பரா ஒரு குளியலைப் போடணும்.'' என்றாள் சித்ரா. இருவரும் வண்டியை நோக்கித் திரும்பினார்கள்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X