""அப்பப்பா... என்ன வெயில்... என்ன வெயில்...'' என, புலம்பியபடி வீட்டுக்குள் நுழைந்தாள் சித்ரா.""வாங்க... வாங்க... ஒங்களைத்தான் எதிர்பார்த்துக்கிட்டு இருந்தேன்,'' என்றபடி, நன்னாரி சர்பத் டம்ளரை நீட்டினாள் மித்ரா."டிவி'யை "ஆன்' செய்த சித்ரா, வடிவேலு நகைச்சுவையை பார்த்து, கை தட்டி ரசித்தாள்.அதைப்பார்த்த மித்ரா, ""ஆளுங்கட்சி நடத்திய கூட்டத்துல, கை தட்டாததுக்கு, வறுத்தெடுத்துட்டாங்களாமே,'' என்றாள்.""ஆமாம்ப்பா... போக்குவரத்து கழக அண்ணா தொழிற்சங்கம் சார்புல, நலத்திட்ட உதவி வழங்குற நிகழ்ச்சி நடந்துச்சு. மாநில செயலாளர் சின்னசாமி கலந்துக்கிட்டார். கூட்டத்துல கலந்துக்கிட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் கை தட்டவே இல்லை. நீலநிற சட்டை போட்டிருக்கிற யாருமே கை தட்டாம ஒக்கார்ந்துட்டு இருக்காங்க. கை தட்டுனா குறைஞ்சு போயிடுவீங்களா என ரொம்ப கோபமா திட்டுன பிறகே, பேச்சை ஆரம்பிச்சார். அப்பவும், ஸ்டிரைக் நடந்த அன்னைக்கு வேலைக்கு வராதவங்களை துரோகிங்க... என வசைபாடிக் கொண்டே இருந்தார்,'' என, விளக்கினாள் சித்ரா.""ஏனாம்... இவ்வளவு கோபம்,'' என, மித்ரா கேட்க, ""விழா சம்பந்தமா அச்சடிச்ச நோட்டீஸ்ல, "போட்டோ மார்ப்பிங்' செஞ்சு, அவரது படத்தை சேர்த்திருக்காங்க. அதைப்பார்த்த, மத்த நிர்வாகிங்க, சிக்கலாயிட போகுது; நம்ம அரசாங்கம் வெளியிட்ட போட்டோவுல, இப்படியெல்லாம் செய்யாதீங்கன்னு "அட்வைஸ்' பண்ணியிருக்காங்க,'' என்றாள் சித்ரா.""அப்படி... என்னத்த பெரிசா செஞ்சிட்டாங்க,'' என, மித்ரா அப்பாவியாய் கேட்க, ""ஜெ., முதல்வரா இருந்தப்ப, கோவில்களில் அன்னதான திட்டத்தை துவக்குனாங்க. அந்த போட்டோவுல, அமைச்சருக்கு பக்கத்துல, இவர் இருக்கிற மாதிரி, வேறொருத்தர் தலையை எடுத்துட்டு, இவரது தலையை சொருகிட்டாங்க. இதுதான், ஏகத்துக்கும் களேபரத்தை உருவாக்கிடுச்சு,'' என்றாள் சித்ரா.""அரசியல்வாதிகள் எப்பவுமே அப்படித்தான். "கட்டிங்' சரியா வந்தா, கூலாயிடுவாங்க. பாவம்... ஒவ்வொரு மாசமும் சம்பளம் லேட்டாகுதுன்னு கோர்ட் ஊழியர்கள் புலம்புறாங்க,'' என, அடுத்த மேட்டருக்கு தாவினாள் மித்ரா.""ஏன்... கோர்ட்டுலதான் ஏகப்பட்ட ஊழியர் இருக்காங்களே... சீக்கிரமா சம்பள பில் தயாரிக்க வேண்டியதுதானே,'' என கேட்டாள் சித்ரா.""ஆள் இருந்து என்ன பிரயோஜனம். இப்பத்தான் ஆன்-லைன்ல சம்பள பில்லை பதிவு செய்ற நடைமுறை இருக்கே. ஆனா, கோர்ட் ஊழியர்களுக்கு பயிற்சியும் தரலை; அதற்கான வசதியும் செஞ்சு தரலை. வெளியிடங்களுக்கு போய் சம்பள பில்லை ஆன்-லைன்ல பதிவு செய்ய வேண்டியிருக்கு. இதனால, சம்பளம் தாமதமாகுதுன்னு பேசிக்கிறாங்க,'' என்றாள் மித்ரா.""நம்மூர் சப்-கலெக்டர் திடீர்னு "டிரான்ஸ்பர்' ஆயிட்டார் தெரியுமா?'' என ஆச்சரியத்துடன் கேட்டாள் சித்ரா.""ஆமாக்கா, ஆதார் விஷயமா தாலுகா ஆபீசு போயிருந்தப்ப கேள்விப் பட்டேன். "டிரான்ஸ்பருக்கு' காரணம் தெரியலை,'' என்றாள் மித்ரா.""வேறென்ன காரணம்? டெங்குதான். டெங்கு காய்ச்சல் பரவியபோது, பல்லடம் தாலுகாவுல ஒருவர் இறந்தார். சப்-கலெக்டர் போயி பார்க்கவே இல்லை. சுகாதாரத்துறை சிறப்பு செயலர், திருப்பூரில் ரெண்டு நாள் ஆய்வு செஞ்சப்ப, "கலெக்டர் போயி பார்த்திருக்காரு; நீங்க ஏன் போகலை'னு கேட்டார். "கலெக்டர் எனக்கு சொல்லவே இல்லை,' என, பொறுப்பு இல்லாமல் பதில் சொன்னார். எப்போதும் அமைதியாக காணப்படும் கலெக்டர் டென்ஷனாகி, ஏகத்துக்கும் சத்தம் போட்டார். சிறப்பு செயலர் தலையிட்டு, சமாதானம் செஞ்சு வச்சார். அதன் எதிரொலியா, "டிரான்ஸ்பர்' உத்தரவு வந்திருக்கு... ஒசூருக்கு மாத்தியிருக்கிறதா, பேசிக்கிறாங்க,'' என்றாள் சித்ரா.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE