வாழ்வின் அற்புத தரிசனங்கள்! : உலக நாடக தினம்

Added : மார் 27, 2015 | கருத்துகள் (3)
Advertisement
 வாழ்வின் அற்புத தரிசனங்கள்! : உலக நாடக தினம்

உலக நாடக தினம் இன்று (மார்ச் 27) சர்வதேச அளவில் நாடகத்தில் ஈடுபாடு கொண்ட நாடகச் செயல்பாட்டாளர்களால் கொண்டாடப்படுகிறது. நாடகப்பள்ளிகள், நிகழ் கலை சார்ந்த நிறுவனங்கள், நாடகக்குழுக்கள், தனித்த நாடகக் கலைஞர்களுக்கு என அனைவராலும் ஒரு பொது செய்தியுடன் இந்த நாடகத்தினம் அனுசரிக்கப்படுகிறது.நாடகம் அல்லது கலை உலகில் தொலைநோக்குப் பார்வையுடன் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்த ஒரு கலைஞரிடம் ஒவ்வொரு ஆண்டும் ஒரு செய்தி தரப்பட்டு இருபது மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட ஊடகங்களின் வழியாக வெளியிடப்படுகிறது.
1961 ல் சர்வதேச நாடக நிறுவனம் என்ற அமைப்பு நாடகக்கலை மற்றும் கலைஞர்கள் மீதுள்ள அக்கறையால் " உலகநாடக தினம்” ஒன்றை ஆண்டுதோறும் அனுசரிக்க முடிவுசெய்தது. 1962ல் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ழான் கத்தேயூ ”தேசங்களின் அரங்கு” என்ற தலைப்பில் உலக நாடக தினத்திற்கான முதல் செய்தியை வழங்கினார். அதன் மரபு தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்பட்டு 2015 க்கான செய்தியை "க்ரிஸ்டோவ்ப் வார்லிகோவ்ஸ்கி” என்ற கலைஞர் மிக அருமையாக உருவாக்கியுள்ளார். நாடகம் தற்காலத்தில் எதிர்கொள்ளும் சவால்கள், மூத்த நாடக மேதைகள் மாறிவரும் உலகச் சூழலில் சந்திக்கும் பிரச்னைகளை முன் வைத்து
மதிப்பிட்டிருக்கிறார்.
நாடக விளக்கம்
'வாழ்வு முற்றிலும் புரிந்துகொள்ள முடியாதபடியே கவித்துவ தன்மையோடு இருக்கிறது. ஏனெனில் அது உண்மையோடு வேரூன்றி நிற்கிறது. உண்மை, தன்னை எப்பொழுதும் முன்னிலைப்படுத்துவதில்லை; விளக்கப்படுத்துவதுமில்லை. இதே வார்த்தைகள் நாடகம் என்ற கலைவடிவத்தை விளக்க மிகச்சரியாக பொருந்துகிறது' என்கிறார் க்ரிஸ்டோவ்ப் வார்லிகோவ்ஸ்கி.நாடகமும், வாழ்வும் அதில் நாம் தரிசிக்கும் உண்மையும் வேறு வேறல்ல. உண்மை எவ்வாறு தன்னை விளக்க முயற்சிப்பதில்லையோ அதுபோல் தான் நாடகமும். அது பிரச்னைக்கு ஒருபோதும் தீர்வை முன்வைப்பதில்லை.பிரச்னைகள் பற்றிய பார்வைகளை பகிர்ந்துகொள்கிறது. மனிதர்கள் சுவர்கள் மற்றும் வேலிகளால் தங்களைப் பிரித்துக்கொண்டு நிலங்களை உரிமைகொண்டாடி, வெற்றிகளை 'பாரம் ஏற்றிய விலங்குபோல்' சுமந்து செல்கிறார்கள். வாழ்வின் அற்புதங்களை தவறவிடுகிறார்கள். மனிதன் தவறவிடும் அற்புதங்களை, வாழ்வின் தரிசனங்களை நாடகம் மீட்டெடுக்கிறது. அது ஒருபோதும் மனித மாண்புகளை சீர்குலைப்பதல்ல, நெறிப்படுத்துகிறது.சமரசம் செய்யாத கலைஞர்கள்
நாடகமும், நாடகக்கலைஞர்களும் கலைப்பயணத்தில் சமரசம் செய்து கொள்ளாத ஒரு உதாரண தருணத்தை இந்த உலக நாடக தினத்தில் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
2012 டிசம்பரில் தேசிய நாடகப்பள்ளி மாணவர்கள் நாற்பது நாள் மரபுக்கலை பயிலரங்கத்திற்காக சென்னை மகாபலிபுரத்திற்கு அருகே வந்திருந்தார்கள்.
துவக்க விழாவில் புரிசை சம்பந்தத் தம்பிரானின் திரௌபதி வஸ்திராபரணம் எனும் கூத்தை ஏற்பாடு செய்திருந்தோம். தேசிய நாடகப் பள்ளி இயக்குனர் பேராசிரியர் அனுராதா கபூர், பயிலரங்க இயக்குனர் பேரா. ராசேந்திரன் ஆகியோர் முன்னிலை வகிக்க நிகழ்வு துவங்கியது. சம்பந்தன், துச்சாதனனாக மேடையில் அமர்ந்திருக்கிறார். நாடகம் துவங்கும் முன்பு கட்டியக்காரனாக நடிக்கும் நண்பர் நாடக கம்பெனியை அறிமுகப்படுத்தும் பொழுது, 'புரிசை கண்ணப்பத் தம்பிரான் தெருக்கூத்து மன்றம் வழங்கும் திரௌபதி வஸ்திராபரணம் நாடகம்! இந்த கம்பெனியின் ஓனர் சம்பந்த தம்பிரான்' என அறிவித்தார். உடனே துச்சாதனனாக வேடம் ஏற்றிருந்த சம்பந்தன் கோபமுற்றவராக மெல்லிய குரலில் 'ஆசிரியர்னு சொல்லுடா' என பார்வையாளர்கள் அறியாதபடி எச்சரித்தார். உரிமையாளர் - ஆசிரியர் குறித்த மதிப்பீடு எதேச்சையாக ஒரு வாக்கியத்தில் வெளிப்பட்ட விதம் அவர்கள் ஏற்று நிற்கும் வாழ்வியலை முன்வைக்கிறது. சூதில் தோற்றவனின் மனைவியை சொந்தம் கொண்டாடும், திரௌபதி வஸ்திராபரணம் நாடகத்தில் நடிக்கும் கலைஞர், உரிமையாளர் குறித்து நாடகத்தின் துவக்கத்தில் போறபோக்கில் கூறியது மரபுக் கலைஞர்களின் வாழ்வியல் குறித்த புரிதலை வெளிப்படுத்துகிறது.
இருவேறு பார்வைகள் 'புத்தகம்' என்ற நூலில் மிர்தாத் பின்வருமாறு குறிப்பிடுவார். '' எல்லாப் பொருட்களும் ஆவலற்றவர்களுக்கு சட்டபூர்வமானவை. ஆவல் கொண்டவன் தனக்கே சட்டத்திற்குப் புறம்பானவற்றை செய்து கொள்வான்.”"விளைந்த வயலைப் பார்க்கும் இருவரில் ஒருவர், தானிய மூடைகளாலும், தங்கம், வெள்ளியாலும் கணக்கிடுகிறார். மற்றவர் வயலின் பசுமையை கண்களால் கணிக்கிறார். ஒவ்வொரு இலையையும் தன் எண்ணத்தால் முத்தமிடுகிறார். இரண்டாவது மனிதரே அந்த வயலுக்கு சொந்தமாகும் தகுதிபெற்றவர். முதலாமவர் அதன் உரிமையாளராக இருந்தாலும் கூட..... "உரிமையாளர் என்பவர் பண, லாப - நஷ்டங்களுடன் வியாபாரியாகிறார். வாழ்வின் அனுபவத்தை தரிசிப்பவர் கலைஞர் ஆகிறார்.இன்று தாராளமய சந்தையில் பணமே வெற்றியின் அடையாளமாகக் கணக்கிடப்படுகிறது. இது வாழ்வின் பன்முகப்பட்ட தரிசனத்தை மறுத்துவிடும். படைப்பாற்றலை வெளிப்படுத்தும் திறனை சிதைத்துவிடும். அடுத்த தலைமுறையினருக்கு வாழ்வு குறித்த சரியான புரிதலை முன்வைக்க அல்லது வளர்த்தெடுக்க கலைசார் நிகழ்வுகள் அவசியமானது. அதில் நாடகம் மிகச்சிறந்த பங்களிப்பை செய்ய முடியும் என்ற நம்பிக்கையை எனது அனுபவத்தின் அடிப்படையில் பதிவு செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.-நடிகர் சண்முகராஜா,நிறுவனர், நிகழ் நாடக மையம், மதுரை.0452-327 0900 nigazh@gmail.com..

வாசகர்கள் பார்வை

நோய் தீர்க்கும் சிரிப்பு
என் பார்வையில் வெளியான 'சிரிப்பு யாருக்கு சொந்தம்' கட்டுரை படித்தேன். சிரிப்பை மறந்தால் நம்மை தேடி வரும் நோய்கள் குறித்து, குறிப்பாக ரத்த கொதிப்பு தீர அருமருந்து சிரிப்பு தான் என்பதை உணர்த்தியது.- ச.கண்ணகி, வத்தலகுண்டு.

மனித வளம்
என் பார்வையில் வந்த 'மனித குலம் வாழ காடுகளைக் காப்போம்' கட்டுரை படித்தேன். மனித வளங்களைப் பாதுகாக்க காடுகள் தான் மிகவும் உதவியாக இருக்கிறது என்பதை புரிந்து காடுகளை காக்க வேண்டும்.- ரா.ரங்கசாமி, வடுகப்பட்டி.

அருமையான பழம்

என் பார்வையில் வெளியான 'கோடையின் கொடை வள்ளல்' கட்டுரை படித்தேன். கோடையில் இருந்து நம்மை காத்திடும் அனைவரும் விரும்பும் அருமையான பழம் தர்பூசணி என்பதை தெரிந்து கொண்டோம்.- ஜி.ஜெயபாலன், மதுரை.

காடுகளின் மகத்துவம்

உலக வன நாளை முன்னிட்டு 'மனித குலம் வாழ காடுகளை காப்போம்' கட்டுரை படித்தேன். டாக்டர் ராஜ்குமார் காடுகளின் மகத்துவத்தை பல கோணத்தில் ஆய்வு செய்துள்ளார்.
- அ.முகமது இஸ்மாயில், தேவகோட்டை.

வாக்கு விகிதம்

'ஜனநாயக ஆணி வேருக்கு தேவை ஆப்பரேஷன்' கட்டுரை படித்தேன். நாம் யாருக்கு வாக்களித்தாலும் விகிதாச்சார முறையில் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியது.
- என். எஸ். முத்துகிருஷ்ணராஜா, ராஜபாளையம்.

வாசகர் அக்கறை
என் பார்வை கட்டுரைகள் வாசகர்களின் மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. தினமலர் வாசகர்கள் மேல் கொண்டுள்ள அக்கறையின் வெளிப்பாடு தான் வாசகர் பார்வை. தொடரட்டும் உங்கள் சேவை.
- எஸ். காவியா, காரைக்குடி.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mukesh - chennai,இந்தியா
27-மார்-201510:50:17 IST Report Abuse
Mukesh அது சண்முகராஜாவின் "குதிரை முட்டை" நாடகம். மிக மிக அருமை.
Rate this:
Share this comment
Cancel
Mukesh - chennai,இந்தியா
27-மார்-201510:38:14 IST Report Abuse
Mukesh நிகழ் நாடக மையத்தின் நிறுவனர் சண்முகராஜா அவர்கள் குழுவின் நாடக ஒத்திகையை மதுரை ஊமச்சிகுளம் அருகே 5 வருடங்களுக்கு முன் பார்த்திருக்கிறேன்.மதுரை திருப்பாலையில் உள்ள ஒரு கல்லூரியில் அரங்கேற்றம் செய்தார்கள். முட்டாள் குரு, சீடர்கள் சம்பந்தமான நாடகம். மிகவும் அருமை.
Rate this:
Share this comment
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
27-மார்-201509:29:41 IST Report Abuse
Sampath Kumar மிக சரியாக சொன்னீர்கள் ஷண்முக ராஜா சார் வாழ்க உங்கள் புகழ் வளர்க உங்கள் தொண்டு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X