அன்புக்கு அடங்கும் ஆட்டிசம்: இன்று உலக ஆட்டிசம் தினம்| Dinamalar

அன்புக்கு அடங்கும் ஆட்டிசம்: இன்று உலக ஆட்டிசம் தினம்

Added : ஏப் 01, 2015 | கருத்துகள் (1)
Advertisement
அன்புக்கு அடங்கும் ஆட்டிசம்: இன்று உலக ஆட்டிசம் தினம்

உங்கள் குழந்தையைக் கூப்பிட்டால் திரும்பிப் பார்க்க வில்லையா? உங்கள் முகம் பார்த்துச் சிரிக்கவில்லையா? மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடவில்லையா?மழலைச் சொல் பேசவில்லையா?அல்லது ஏதேனும் சில வார்த்தைகளை அர்த்தமில்லாமல் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருக்கிறதா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் நீங்கள் 'ஆம்' என்று பதில் சொன்னால் உங்கள் குழந்தைக்கு 'ஆட்டிசம்' பாதிப்பு இருக்க அதிகவாய்ப்பு இருக்கிறது.


ஆட்டிசம் என்றால் என்ன?

ஆட்டிசம் என்பது குழந்தைகளுக்கு மூளைவளர்ச்சி குறைவதால் ஏற்படுகிற நோய் என்று தான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசும் மூளைவளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பட்டியலில் தான் ஆட்டிசக் குழந்தைகளைச் சேர்த்திருக்கிறது. ஆனால், ஈஈஜி, சிடி ஸ்கேன், எம் ஆர் ஐ ஸ்கேன் எனப் பல பரிசோதனைகளில் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மூளையைப் பரிசோதித்த போது அவர்களுக்கு மூளை பாதிப்பு இல்லை என்கிற உண்மை தெரியவந்தது. இது குழந்தைகளைப் பாதிக்கின்ற மூளை நரம்பு வளர்ச்சி சார்ந்த கோளாறுகளில் ஒன்று. இது பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைளைத்தான் அதிகம் பாதிக்கிறது. இந்தியாவில் தற்போது ஒரு லட்சம் குழந்தைகளுக்கு ஆட்டிசம் குறைபாடு உள்ளது. இந்த எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. சமீபத்திய புள்ளிவிவரப்படி ஆயிரத்தில் ஒரு குழந்தைக்கு ஆட்டிசம் உள்ளது. இது குழந்தையின் மொழித் திறன், பேச்சுத்திறன், சமூகத் திறன், ஒருங்கிணைப்புத்திறன் போன்ற நரம்பு சார்ந்த செயல்பாடுகளை வெகுவாக பாதிக்கிறது. இவர்களுக்கு அறிவு இருக்கும்.ஆனால் அந்த அறிவைப் பயன்படுத்தவோ, வெளிப்படுத்தவோ வழிதெரியாது. இவர்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை இவர்களால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் அந்தப்புரிதலை நமக்குப் புரியவைப்பதற்கான மொழிதான் தெரியாது.


ஏன் வருகிறது?

ஆட்டிசம் குறைபாடு ஒரு பரம்பரைக் கோளாறு. குழந்தையின் மரபணுவில் தோன்றும் பிழை காரணமாக இது ஏற்படுகிறது. நெருங்கிய உறவில் திருமணமான பெற்றோருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு இந்தக் குறைபாடு ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. மிகவும் தாமதமான திருமணம், தாமதமான குழந்தைப் பேறு, நீரிழிவு நோய் போன்றவை பெண்ணிடம் காணப்பட்டால் அந்தப் பெண்ணுக்குப் பிறக்கும் குழந்தைக்கு ஆட்டிசம் குறைபாடு ஏற்படலாம். கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிக்கு ருபெல்லா வைரஸ் தாக்கினால், தைராய்டு பிரச்னை இருந்தால் அல்லது போலிக் அமிலச்சத்து குறைவாக இருந்தால் குழந்தைக்கு இந்தக் குறைபாடு வரலாம். கர்ப்பிணியிடம் காணப்படும் மனஅழுத்தம், மது அருந்தும் பழக்கம், புகைபிடித்தல், வலிப்பு நோய் மற்றும் மன நோய்க்கான மாத்திரைகளைச் சாப்பிடுதல் போன்ற காரணிகள் இந்தக் குறைபாடு ஏற்படுவதை ஊக்குவிக்கின்றன. குழந்தையின் வயிற்றில் ஏற்படுகிற வளர்சிதை மாற்றப் பிரச்சினைகளும் இந்தக் குறைபாட்டை ஏற்படுத்தலாம் என்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று.


அறிகுறிகள் என்ன?

தாய் பாலூட்டும் போது தாயின் கண்களைப் பார்க்காது. ஆறு மாதம் ஆனால் கூட தாயின் முகம் பார்த்துச் சிரிக்காது. ஒன்பது மாதம் கடந்த பிறகும் ஒலி எழுப்பினால் அல்லது பெயரைச் சொல்லி அழைத்தால் திரும்பிப் பார்க்காது. கண்ணில்படும் பொருள்களை ஆர்வமாகப் பார்க்காது; அவற்றைத் தனக்கு விளையாடத் தரும்படி கேட்காது. டாட்டா காட்டுதல் போன்ற கை அசைப்பு இருக்காது. மழலைப் பேச்சு பேசாது. மற்ற குழந்தைகளுடன் விளையாட முயற்சிக்காது. குழந்தையின் வளர்ச்சிப்படிகளில் தாமதம் ஏற்படுவதும்உண்டு. மேற்சொன்ன அறிகுறிகள் தெரிந்தால் போகப் போகச் சரியாகிவிடும் என்று பெற்றோர்கள் எண்ணிவிடக்கூடாது. அதே வேளையில் இவற்றில் ஒருசில அறி குறிகளை மட்டும் வைத்துக் கொண்டு குழந்தைக்கு ஆட்டிசம் உள்ளது என்றும் கணித்துவிடக்கூடாது. பல அறிகுறிகள் இருந்து குழந்தையின் இயல்பான திறமைகள் பாதிக்கப்படுகின்றன என்றால் அப்போது குழந்தைக்கு ஆட்டிசம் ஏற்படுள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். ஆட்டிசம் உள்ள குழந்தைக்கு மூன்று வயதுக்கு முன்னரே மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெற்று சிகிச்சைகளை மேற்கொண்டால் அதனால் ஏற்படும் நன்மைகள் அதிகம்.


என்ன சிகிச்சை?

ஆட்டிசத்துக்கு குறிப்பிட்ட சிகிச்சை எதுவுமிலை. அன்பு ஒன்றே மருந்து. இந்தக் குழந்தைகளுடன் அன்போடு நெருங்கிப் பழகும்போது தான் நம்மை நெருங்கி வருவார்கள். அதனால் இவர்களோடு அதிக நேரம் செலவழிக்க வேண்டும். பூங்கா, கோவில், கடற்கரை, பொருட்காட்சி என்று பல இடங்களுக்கு இவர்களை அழைத்துச் செல்லவேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தைக்கு பல் தேய்த்தல், குளித்தல், சாப்பாடு, தூக்கம் என அன்றாடப் பழக்கவழக்கங்களை ஒழுங்குபடுத்தபயிற்சி தர வேண்டும். குழந்தைக்குப் புரிகிற விதமாக நிறையப் பேச வேண்டும். நீச்சல், சைக்கிள் ஓட்டுதல், ஸ்கேட்டிங் போன்ற பயிற்சிகள் தரப்பட வேண்டும். இப்பயிற்சிகள் அவர்களின் உடல்திறனை அதிகப்படுத்துவது மட்டுமன்றி, தன்னுடைய வேலைகளைத் தானே சுயமாகச் செய்யமுடியும் என்ற தன்னம்பிக்கையைத் தரும். உளவியல் சார்ந்த பயிற்சிகள், கல்விக்கான பயிற்சிகள், அறிவுத்திறன் பயிற்சிகள் என்று பலவற்றை முறைப்படி தர வேண்டும். இந்தக் குழந்தைகளுக்கு கம்ப்யூட்டர், லேப்டாப், அலைபேசி, டிவி போன்ற எலெக்ட்ரானிக் கருவிகளில் ஈர்ப்பு அதிகமாக இருக்கும் ஆனால், இவற்றிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சு இவர்களைப் பெரிதும் பாதிக்கும். எனவே கவனமாக இதைத் தவிர்க்கவேண்டும்.

- டாக்டர்.கு.கணேசன் பொதுநல மருத்துவர் ராஜபாளையம். gganesan95@gmail.com

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
maharishi - chennai,இந்தியா
06-ஏப்-201512:37:05 IST Report Abuse
maharishi இது உறவு முறை திருமணத்தில் அல்லது தாமதமான திருமணம் மற்றும் எவ்விதமான காரணங்கள் மருத்துவர்கள் சொன்னாலும் அவை அனைத்தும் ஏற்கனவே இருந்ததுதான் ஆனால் அப்போது எல்லாம் இல்லாத அல்லது மிக மிக குறைவாகவே இருந்த இந்த நோய் கடந்த 10-15 வருடங்களாகவே அதிகம் என்பதை நாம் ஏன் உணரவில்லை ???, நாம் எப்போது இலவச போலியோ சொட்டு மருந்து மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை குழந்தைகளுக்கு மிக அதிகமாக கொடுக்க ஆரம்பித்தோம் என்பதை நாம் அனைவரும் யோசித்தால் இதன் காரணம் அனைவருக்கும் நான் சொல்லாமலே விளங்கும். போலியோ சொட்டு மருந்தின் சேமிப்பு காலம் என்பது வெறும் 2 மாதங்கள் தான் எனவே அதை வருட கணக்கில் சேமிக்க மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் பயன்படுத்துவது பாதரசம் என்பது ஒரு அதிர்ச்சியான் தகவல். இந்த பாதரசம் வெளி பயன்பாட்டிற்கு ஒரு அருமருந்தாகவும் உள்பயன்பாட்டிற்கு ஒரு விஷமாகவும் இருக்கிறது, இது குழந்தையின் உடலில் சென்று நரம்பு மற்றும் மூளை சம்பந்தமான பாதிப்புகளை உருவாக்கிவிடுகிறது எனவே நாம் அனைவரும் இந்த நோய் எதிர்ப்பு மருந்துகள் விஷயத்தில் மிக கவனமாக இருக்கவேண்டும் இதுவே இந்த ஆட்டிசம் எனும் நோயை நிரந்தரமாக ஒழிக்க பயன்படும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X