சண்டிகர்: ஏரியில் விழுந்த சிறுமியை, பஞ்சாப் - அரியானா மாநில உயர் நீதிமன்ற நீதிபதி காப்பாற்றி உள்ளார். பஞ்சாப் - அரியானா மாநில உயர் நீதிமன்ற நீதிபதி, ஜெயபால், 60, சுக்னா ஏரிப்பகுதியில், தினமும் காலையில் நடைபயிற்சி மேற்கொள்வார்.
சம்பவ தினத்தன்று, வழக்கம் போல், நீதிபதி நடைபயிற்சி மேற்கொண்ட போது, 15 வயதுள்ள சிறுமி, ஏரியில் தத்தளிப்பதை கண்டார்.உடனே சிறுமியை மீட்க, நீதிபதி ஏரியில் குதித்ததும், அவரது பாதுகாப்பு அதிகாரியும் நீரில் குதித்தார்; இருவரும் சேர்ந்து, சிறுமியை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.ஆம்புலன்சை வரவழைத்து, 16வது செக்டரில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து, சிறுமிக்கு தகுந்த சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்தார். சிறுமியை கவனித்துக் கொள்ளும்படி, பாதுகாப்பு அதிகாரி யஷ்பாலுக்கு உத்தரவிட்டார். மேலும், சிறுமியின் பெற்றோரை சந்தித்துப் பேசிய நீதிபதி ஜெயபால், மேல்படிப்புக்காக, 5,000 ரூபாய் வழங்கினார்.
சம்பவம் குறித்து, நீதிபதி ஜெயபால் கூறியதாவது: ஒருவருடைய உயிருக்கு இணையான பொருள், இந்த உலகத்தில் எதுவும் இல்லை. ஏரியில், ஒரு சிறுமி விழுந்து தத்தளிப்பதையும், சிலர் உதவிக்கு அழைப்பதைக் கண்டதும், உடனே சற்றும் யோசிக்காமல் நீரில் குதித்து விட்டேன்; என் வாழ்நாளில் இதுவரை இப்படி நடந்ததில்லை; இது, எனக்கு மறக்க முடியாத அனுபவம். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.