காளஹஸ்தி கணேசன்...
தமிழர்கள் அதிகம் சென்று வழிபடக்கடிய திருத்தலங்களில் ஆந்திரா மாநிலம் சித்துார் மாவட்டத்தில் உள்ள பிரபலமான ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலும் ஒன்று. இந்த கோவில் வாசலையொட்டிய ஒரு தள்ளுவண்டி கடையில் இருந்து வரும் குரல் அனைவரையும் இழுக்கிறது.
வாங்கோ...வாங்கோ... நாலு இட்லி ஒரு வடை இருபது ரூபாய், இரண்டு தோசை வடை இருபது ரூபாய், மிளகு பொங்கல் வடை இருபது ரூபாய். பிரமாதமா இருக்கும் சாப்பிட்டு பார்த்து காசு கொடுங்க என்ற அந்த குரலின் அழைப்பை கேட்டு பலர் தள்ளுவண்டி கடையை மொய்க்கின்றனர்.
வெங்காய சட்னி தேங்காய் சட்னி முருங்கைக்காய் சாம்பார்லாம் நல்லா கேட்டு வாங்கி சாப்பிடுங்க என்று சந்தோஷமாய் சிரித்து பேசியபடி அணைவரையும் சுறுசுறுப்பாக கவனிக்கிறார்.
நாலு இட்லி வடை சாப்பிட்டாலே வயிறு நிரம்பிவிடுகிறது சாப்பிட்ட அனைவருமே சந்தோஷமாக இருபது ரூபாயை கொடுத்துவிட்டு செல்கின்றனர் .நானும் அவரது பதார்த்தங்கள் அனைத்தையுமே சாம்பிளுக்கு ஒன்றாக வாங்கி சாப்பிட்டுவிட்டு நன்றாக இருக்கவே பாராட்டிவிட்டு பிறகு அவர் யார் என விசாரித்தேன்.
பெயர் கணேசன்
இப்போது 67 வயதாகும் கணேசன் தஞ்சாவூரில் இருந்து 37 வயதில் தனது மனைவி லீலாவதியுடன் பிழைப்பு தேடி ஊர் ஊராக சென்றவருக்கு காளஹஸ்தி பிடித்துப்போனது.
சின்னதாய் ஒரு வீடு பிடித்து வீட்டிலேயே இட்லி,பொங்கல்,தோசை மற்றும் வடை செய்து துாக்கு சட்டியில் கொண்டுவந்து கோயில் வாசலில் வியாபாரம் செய்ய ஆரம்பித்தார், அதையே இன்றுவரை தொடர்கிறார்.
ஆரம்பத்தில் காலை, மதியம் மற்றும் இரவு உணவு தயார் செய்தார், கோவிலுக்கு போகும் வழியில் ஒட்டல் வைத்திருந்தார் பிறகு கோவிலை விரிவுபடுத்தும் பணி காரணமாக ஒட்டலை இழக்க வேண்டியிருந்தது, ஒட்டலை இழந்தாலும் நம்பிக்கையை இழக்காத கணேசன் பழையபடி கோவில் வாசலில் தள்ளுவண்டியில் வைத்து வியாபாரத்தை தொடர்ந்தார்
இப்போது காலை வியாபாரம் மட்டுமே, வேண்டிய பொருட்களை மனைவி வாங்கி வைத்துவிடுவார். அதிகாலை 2 மணிக்கு எழுந்து சமையல் செய்ய ஆரம்பத்து காலை 4 மணிக்கு அனைத்தையும் முடித்துவிடுவார். பிறகு குளித்து பூஜை முடித்ததும் தனியாக எடுத்துவைத்த பதார்த்தங்களை முதலில் பசுவிற்கும் பிறகு காக்கைக்கும் கொடுத்துவிட்டு தள்ளுவண்டியோடு கோவில் வாசலுக்கு வந்துவிடுவார்.
காலை 7 மணியில் இருந்து 10 மணிக்குள் கொண்டுவந்து பொருள் எல்லாம் விற்றுவிடும் இதில் சில சாமியார்களை இவரது கடைக்கு வந்து சாப்பிட்டுவிட்டு காசுக்கு பதில் ஆசீர்வாதம் செய்துவிட்டு செல்கின்றனர் அதையும் சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறார் அதே போல இவ்வளவுதான் இருக்கிறது என ஐந்தும் பத்தும் கொடுக்கும் பிச்சைக்காரர்களிடம் அதையும் வாங்காமல் சாப்பிடச்சொல்கிறார்.
எல்லாம் சரி இருபது ரூபாய்க்கு எப்படி கட்டுப்படியாகிறது என்றால் கடை வாடகை இல்லை சம்பள ஆள் இல்லை சமையல் கூலி இல்லை எல்லாம் நானும் என் வீட்டாம்மாளும்தான் அதனால கட்டுப்படியாகிறது விற்றது தானம் செய்தது எல்லாம் போக ஒரு நாளைக்கு ஐநுாறு ரூபாய் மிஞ்சும் இதுக்கு மேலே வயதான எனக்கும், என் சம்சாரத்திற்கும் என்ன வேணும், மதியம் ஒய்வுக்கு பிறகு மாலையானதும் வீட்டம்மாளை கூப்பிட்டுக்கொண்டு அப்படியே கோவில் குளம்னு சுற்றி அவுக சந்தோஷத்திற்கு கூடவே இருப்பேன். பிறகு வீட்டிற்கு திரும்பும்போது மறுநாள் தேவைக்கு பொருட்கள் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சென்று மறுநாள் வியாபாரத்திற்கு தயாராக ஆரம்பிப்பேன்.
இதுதான் வாழ்க்கை இப்படித்தான் வாழ்க்கை என்று எதையும் திட்டமிட்டு செய்யவில்லை ஆகவே வாழ்க்கை ஒடும்வரை ஒடட்டும் இந்த வாழ்க்கையில் எந்த அளவு நாம் மற்றவர்களுக்கு தொந்தரவு தராமல் உபயோகமாக இருக்கிறோம் என்பதில்தான் நமது நிம்மதி இருக்கிறது நான் நிம்மதியாக இருக்கிறேன் என்று சொல்லும் கணேசனிடம் பேசுவதற்காக எண்: 08686473770 (காலை பத்து மணிவரை வியாபாரத்தில் பிசியாக இருப்பார் ஆகவே அதற்கு மேற்பட்ட நேரத்தில் இவருடன் பேசலாம்)
-எல்.முருகராஜ்.