என் பார்வை : கடனாளி மாணவனா? அறிவாளிமாணவனா?| Dinamalar

என் பார்வை : கடனாளி மாணவனா? அறிவாளிமாணவனா?

Added : ஏப் 09, 2015 | கருத்துகள் (1)
 என் பார்வை : கடனாளி  மாணவனா? அறிவாளிமாணவனா?

'கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்குமாடல்ல மற்றை யவை' கல்விச் செல்வத்தைக் காட்டிலும் பெரியதொரு செல்வம் இந்த உலகத்தில் இல்லை என்று வள்ளுவர் வியந்துரைக்கிறார். ஒருவரை அடையாளம் காட்டும் தனிக்கூறுகளில் கல்விக்கே முதன்மைப் பங்கு. இதன் பொருட்டே அவ்வையும் 'கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு' என்கிறார்.
கிழக்கிந்தியக் கும்பலிடமிருந்து விடுதலை பெற்ற இந்தியா, கல்வியின் அருமையை உணர்ந்ததால்தான் கல்வி என்பது அடிப்படை உரிமை எனும் சிந்தனைக்கு அடித்தளமிட்டது. இதன் பொருட்டே, முதலாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் தொழில் உருவாக்கம், அடிப்படைக் கட்டமைப்பு வசதி ஆகியவற்றோடு கல்விக்கும் முதன்மையளித்து செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டன.தமிழகத்தைப் பொறுத்தவரை மாபெரும் கல்விப் புரட்சிக்கு கால்கோளிட்டவர் காமராஜரே. அவர், தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்ற காலத்தில் கல்வியறிவு வெறும் 13 சதவீதம். உணவைக் காரணம் காட்டி கல்வி கற்க வராமல் இருந்துவிடக்கூடாது என்பதற்காக, மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்து வியக்க வைத்தவர்.
இன்றைய நிலை
கல்வியைக் கற்று அறிவாளியாய் சமூகத்திற்கு கிடைக்க வேண்டிய மாணவன், கடனாளியாய்த் திரும்புகிறானென்றால், நம் கல்வி முறை எதை நோக்கி பயணம் செய்கிறது என்பதுதான் இன்றைய கேள்வி. கல்வி வணிக
மயமானது ஒருபுறமென்றாலும், அதனை நியாயப்படுத்தும் விதத்திலான அரசின் கொள்கை முடிவுகள் மற்றொருபுறம். நிர்வாகம், பொறியியல், மருத்துவம் போன்ற படிப்புகளை செல்வந்தர் குழந்தைகள் மட்டுமே கற்க முடியும் என்ற நிலையிருந்ததை மாற்றி, ஏழைக் குழந்தைகளும் கற்கும் விதமாக கல்விக்கடன் வழங்கி மத்திய அரசு மாற்றத்தை தொடங்கி வைத்தது. ஆனால் அக்கல்விக் கடன் வழங்குவதிலும், நடைமுறைப்படுத்துவதிலும் ஏகப்பட்ட குளறுபடிகள். விளைவு, உலகக் கடனாளியாக நிற்கும் இந்தியாவின் பிரதிபலிப்பாக ஒவ்வொரு மாணவனும் 'மாணவக் கடனாளி'யாக கூனிக்குறுகி நிற்கின்றான்.கல்வி வழங்குவது அரசின் கடமை என்ற நிலையிலிருந்து விலகி, அது ஒரு விற்பனைப் பண்டம் என மாற்றம் பெற்ற உலகமய சிந்தனையை ஒட்டி, இந்திய அரசு நடைபயிலத் தொடங்கி இருபது ஆண்டுகளைக் கடந்து விட்டது. இன்றைய தலைமுறையினருக்கு வழங்கப்படும் கல்வி என்பது எதிர்கால இந்தியாவின் வளர்ச்சியைத் தீர்மானிக்கும் காரணி என்பதை ஏனோ அரசுகள் உணரவில்லை. வளர்ச்சிக்கான, சமூக மாற்றத்துக்கான அடித்தளம் என்பது கல்வி முறையிலிருந்து தொடங்க வேண்டும். ஆனால் நடைமுறை அவ்வாறு உணர்த்தவில்லை.
எப்படி பெறுவது
அரசு வழங்கும் கல்விக்கடன் மூலம், அதிகபட்சமாக உள்நாட்டில் பயில
ரூ.10 லட்சமும், வெளிநாட்டில் பயில ரூ.20 லட்சமும் பெற முடியும். இதில் ரூ.4 லட்சம் வரை பெற்றோரின் ஒப்புகைக் கையொப்பமும், ரூ.4 லட்சத்திற்கு மேல் ரூ.7.5 லட்சம் வரை பெற்றோரின் கையொப்பத்தோடு, மூன்றாவது நபரின் பிணைக் கையொப்பமும் தேவை. ரூ.7.5 லட்சத்திற்கு மேல் பெறும் கடனுக்கு சொத்துக்கள் அடமானமாகப் பெறப்படுகின்றன. கல்விக்கடன் பெறும் மாணவன் கல்வி நிறைவடைந்த காலத்திலிருந்து ஓராண்டுக்குப் பிறகு, அடுத்து வரும் பத்தாண்டுகளில் 120 மாதத் தவணைகளில் வங்கி நிர்ணயம் செய்துள்ள வட்டியின்படி கடனை திரும்பச் செலுத்த வேண்டும்.
வங்கிகளின் நிர்ப்பந்தம்
வங்கிகள் இதற்கு நேர்மாறாகச் செயல்படுவதுதான் வருத்தம் தருகி றது. படிக்கும் காலத்திலேயே கடனை திருப்பி செலுத்த சொல்லி கொடுக்கின்ற நிர்ப்பந்தம் மாணவர்களுக்கு மன உளைச்சல் தருகிறது. கடனுக்கான வட்டியை நிர்ணயம் செய்வதில் வங்கிகளுக்கிடையே வேறுபாடும் காணப்படுகிறது. குறைந்தபட்சம் 11 சதவிகிதத்தில் இருந்து 16 சதவீதம் வரை வட்டி வித்தியாசப்படுகிறது.
மாணவர்கள் இந்த தேசத்தின் வளர்ச்சியைத் தீர்மானிக்கும் எதிர்காலச் சிற்பிகள் என்ற மனநிலையிலிருந்து அரசும், வங்கிகளும் மாணவர்களை அணுகத் தவறி நிற்கின்றன. கல்விக்கடன் நிலுவை எனச் சொல்லி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் நிழற்படத்தை ஒரு வங்கி வெளியிட்டு அசிங்கப்படுத்தியது மனிதமாண்புக்கு எதிரான செயலன்றோ? மாணவன் விரும்பும் கல்வியை அவனது தன்மானத்திற்கும், மரியாதைக்கும் இழுக்கின்றித் தரும் கடமை அரசுக்கு உண்டு.
இதுஒருபுறமிருக்க, உரிய நேரத்தில் வழங்கப்படாத கல்விக்கடனால், தற்கொலை செய்து கொண்டவரும் உண்டு. நல்ல கல்வியைப் பெற வேண்டும் என்பதற்காகவே சொத்துக்களை பிணையாகக் கொடுத்த ஏழைக் குடும்பங்கள் நடுத்தெருவிற்கு வந்த கதைகளும் நிறைந்துதான் கிடக்கின்றன.
பெருந்தொழில் நிறுவனங்கள் தர வேண்டிய கடன் தொகை ரூ.5 லட்சம் கோடிக்கும் மேல் உள்ளதாக மத்திய அரசே கூறியுள்ளது. வங்கிகளையும், அரசுகளையும் ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கத்திலேயே இயங்கும் அவர்களையல்லவா வங்கிகள் சந்திக்குக் கொண்டு வந்து நிறுத்த வேண்டும்? பிற வாராக்கடன்களோடு ஒப்பிடும்போது கல்விக் கடன் கடுகளவு தானே.
கடந்த 2013--2014 ம் நிதியாண்டில் பல்வேறு வகைகளில் வங்கிகள் வழங்கிய கடன் தொகை ரூ.2 லட்சத்து 36 ஆயிரத்து 600 கோடி. இவற்றில் வசூல் செய்யப்பட்டது 30 ஆயிரத்து 590 கோடி. கடந்த 2000-2013க்கு இடைப்பட்ட 13 ஆண்டுகளில் வங்கிகளால் தள்ளுபடி செய்யப்பட்ட கடன் தொகை ரூ.2 லட்சத்து 4 ஆயிரம் கோடி. இத்தொகையின் மூலமாக 15 லட்சம் குழந்தைகளுக்கு கல்லூரி வரை இலவசமாக தரமான கல்வியை வழங்கியிருக்க முடியும்.
கல்விக்கடனை தள்ளுபடி செய்யவோ அல்லது வட்டியை குறைத்துக் கொள்ளவோகூட மாணவர் தரப்பிலிருந்து கோரிக்கை எழவில்லை. வழங்குகின்ற கடனை அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு நேர்மையாக, உரிய தவணைக்கெடுவில் திரும்பத் தருவதற்கே விருப்பம் கொண்டுள்ளனர் எனும்போது, வங்கிகளின் நிர்ப்பந்தங்கள் எதற்காக? லோக் அதாலத், கல்விக்கடன் தீர்வு முகாம் என்ற பெயரில் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் தொடர்ந்து கொடுக்கப்படும் நெருக்கடி எதற்கு?
கல்விக்கடன் பெற்ற மாணவர்கள் குறித்த பட்டியலை, இந்திய கடன் தகவல் ஆணையத்தில் பதிவு செய்வது மற்றொரு அபத்தம். கல்விக்கடன் தொடர்பான கொள்கைகளையும், நடத்தை நெறிமுறைகளையும் அரசு வகுக்க வேண்டும். இந்த தேசத்திற்குத் தேவை அறிவாளி மாணவனே தவிர, கடனாளி மாணவன் அல்ல என்பதை உணர்ந்து வங்கிகளும் செயல்பட வேண்டும்.--இரா.சிவக்குமார்எழுத்தாளர். 99948 27177 rrsiva@yahoo.com

வாசகர்கள் பார்வை

பரவச சிந்தனை

என் பார்வையில் வந்த 'நம்மைச் சுற்றி நான்காயிரம் சொர்க்கபுரிகள்' கட்டுரை படிக்க படிக்க பரவசமாய் இருந்தது. பயணத்தின் போது நம்மை நாம் எப்படி மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற சிந்தனையை பதிவு செய்து மெய்மறக்க செய்துவிட்டீர்கள். இனி ஒவ்வொரு முறை பயணிக்கும் போதும் இந்த கட்டுரை தான் நினைவிற்கு வரும்.- ரா.ரங்கசாமி, வடுகப்பட்டி.

மாற்றம் ஏமாற்றம்

என் பார்வையில் வெளியான 'நான் ஒரு ஞானப்பழம்' கட்டுரை படித்தேன். அருமையிலும் அருமை.முட்டாள்கள் முட்டாள்களாக ிறப்பதில்லை, ாலப்போக்கில் ுட்டாள்களாக்கப்படுகின்றனர் என்பதே உண்மை. ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர் இருக்க தான் செய்வார்கள் என்பதை புரிந்து கொண்டோம்.-வி.எஸ்.மோகன், மதுரை.

ஆரோக்கிய அறிவுரை

உலக சுகாதார தினத்தை முன்னிட்டு என் பார்வையில் வெளியான 'சுத்தம் நூறு போடும்'
கட்டுரை ஆரோக்கிய அறிவுரையாக அமைந்தது. மருந்திற்கு கட்டுப்படாத நோய் கிருமிகள்
இவ்வளவு இருக்கிறதா என எண்ண வைத்தது. கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என
உணர்த்தியது.-கே. மீனாகுமாரி, தேனி.

இனிய பயணம்

என் பார்வையில் வெளியான 'நம்மைச் சுற்றி நான்காயிரம் சொர்க்கபுரிகள்' கட்டுரை படித்தேன்.
சுற்றுலா என்பது வெற்றுலா அல்ல, பயணங்கள் ஆன்மாவின் ஆனந்த சயனங்கள் என விவரித்து கொண்டே போனது வியக்க வைத்தது. பயணங்கள் எவ்வளவு இனிமையானது என சிந்திக்க வைத்தது.-எஸ்.பார்வதி மீனாட்சி சுந்தரம், பழநி.

புகழுக்கு மயங்காதவர்
என் பார்வையில் வெளியான 'கோடி கொடுத்து குடியிருந்த வீடும் கொடுத்த கல்வி வள்ளல்' கட்டுரை அழகப்பரின் கல்வி சேவையை வெளிப்படுத்தியது. ஆங்கிலேயர் கொடுத்த 'சர்' பட்டத்தை உதறி தள்ளினார் என படிக்கும் போது புகழுக்கு மயங்காத இவரின் நேர்மையை புரிந்து கொள்ள முடிந்தது.- எஸ்.சுஜாதா, ராமேஸ்வரம்.

தகவல்கள் பலவிதம்

என் பார்வையில் வெளியாகும் அறிவு சார்ந்த கட்டுரைகள் அனைத்தும் பலவித தகவல்களை
தருகின்றன. தலைவர்கள், அறிஞர்கள், தத்துவ மேதைகளின் வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொள்ள உதவுகிறது என் பார்வை பகுதி.- என். நந்திதா, திண்டுக்கல்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X