பிஞ்சு நெஞ்சில் நஞ்சா| Dinamalar

பிஞ்சு நெஞ்சில் நஞ்சா

Added : ஏப் 11, 2015 | கருத்துகள் (1)
பிஞ்சு நெஞ்சில் நஞ்சா

பிரியா எனக்கு அறிமுகம் ஆன போது அவள் வயது பத்து. அதிர்ந்து கூட பேசாத மென்மையான குழந்தை. இரண்டு, மூன்று முறை என்னிடம் கவுன்சிலிங் வந்தாள். எல்லா பத்து வயது குழந்தையை போல் தான் பிரியாவும் தோன்றினாள், அவளது மணிக்கட்டை பார்க்கும் வரை. அதில் சிவப்பாய் ஒரு பெரிய வெட்டுக்காயம் இருந்தது.பிரியாவுக்கு என்ன நடந்தது? கோபத்தில் ஒரு நாள் வீட்டில் உள்ள 'டிவி' யை தள்ளி சாய்த்து விட்டு அடுத்த வினாடி உடைந்த கண்ணாடி துண்டை எடுத்து தன் கையையே கீறிக்கொண்டாள். தந்தை ஊரில் பெரிய டாக்டர். தாய் குழந்தைகளே உலகம் என்று வாழ்பவர். மூன்று வயது தங்கை, பெரிய வீடு, பிரபலமான பள்ளி என எல்லாம் நிரம்ப கிடைத்த பிரியாவிற்கு என்ன பிரச்னை? பள்ளியில் 'ஏ' கிரேடு வாங்கிக் கொண்டிருந்தவள், என்னிடம் கவுன்சிலிங் வந்த போது, 'சி' கிரேடிற்கு சறுக்கியிருந்தாள். அறிவான அமைதியான தங்கள் குழந்தைக்கு என்ன நேர்ந்து விட்டது. விடையறிந்த போது, அந்த பிஞ்சு நெஞ்சுக்குள் எத்தனை உணர்ச்சி போராட்டங்கள், குழப்பங்கள்.


தனித்த வாழ்க்கை:

இயற்கையிலேயே கூச்ச சுபாவம் கொண்ட பிரியாவுக்கு, இரண்டு ஆண்டாக புதிய பள்ளியில் மற்ற குழந்தைகளுடன் சகஜமாக பழக தெரியவில்லை. தோழி இல்லாமல் தனித்தே வாழ்ந்தாள். அந்த வயதிற்கே உரிய சில குழப்பங்கள். 'நான் ரொம்ப குண்டாய் இருக்கிறேன். அதான் பள்ளியில் யாருக்கும் என்னை பிடிக்கவில்லை' என்பது போன்ற எண்ணங்கள் கொண்டிருந்தாள். தன் தங்கை மேல் பொறாமை கொண்டால், உடனே தங்கையின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என பிரியாவின் ஆழ்மனதில் எப்படியோ ஒரு நம்பிக்கை உருவாகி உள்ளது. பெரியவர்கள் ஏதோ நல்ல கருத்து சொல்லப்போக, அது மருவி தவறாய், விஷமாய் மனதில் பதிந்து இப்படி ஒரு நம்பிக்கை ஏற்பட்டிருக்கலாம்.

பிரியா எதற்காகவோ தன் தங்கையுடன் போட்டி போட, அந்த நேரம் எதேச்சையாக தங்கையின் உடல் நலம் குன்றிப்போனது. இதனால் பிரியாவின் அந்த நம்பிக்கை எண்ணம் இன்னும் ஆழப்பதிய தொடங்கியது. இயற்கையாகவே குழந்தைகளுக்குள் ஏற்படும் காழ்ப்புணர்ச்சியை பிரியாவால் தடுக்கவும் முடியவில்லை. அவளால் தான் தங்கையும், பெற்றோர்களும் சிரமப்படுகின்றனர் என்ற குற்ற உணர்ச்சியே அவள் மனஅழுத்தத்திற்கு காரணமாக இருந்தது. ஆனால் தங்கை இயல்பாகவே ஆஸ்துமாவால் அவதிப்படுகிறாள் என்பதெல்லாம் அவளுக்கு புரியவில்லை.


நல்லதை விதைப்போம்:

குழந்தைகளின் மனம் ஒரு வளமான நிலம். அதில் எந்த கருத்தை விதைத்தாலும் விருட்சமாய் வளரும். பல நேரங்களில் நாம் குழந்தைகளிடம், 'கோபப்படாதே, தம்பி மேல் பொறாமைப்படாதே, என்ன இந்த வயசுல சோகம், காதல் என்றால் என்னவாம்? இது என்ன கேள்வி? என்றெல்லாம் கூறி அவர்களின் உணர்ச்சி வெளிப்பாட்டை தடை செய்கிறோம். இப்படி தடை செய்தால், அது தவறான இடத்தில், தவறான நேரத்தில், தவறான விதத்தில் வெளிப்படும். எப்படி குழந்தைக்கு சுத்தமாக இருக்க பழக்குகிறோமோ அதேபோல் உணர்ச்சிகளை சரியான முறையில் வெளிக்காட்டவும் கற்றுக்கொடுக்க வேண்டும். இன்று எத்தனை குழந்தைகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஆசிரியையை குத்திக் கொல்லும் அளவிற்கு வன்மம் ஏன் வந்தது. இன்று எங்களிடம் கவுன்சிலிங் வருபவர்களில் மனநோய் என்று வருபவர்கள் சிலர் மட்டுமே. மற்ற அனைவரும் ஏதோ ஒரு உணர்ச்சி போராட்டத்தால், மன அழுத்தம், அதன் விளைவாக படிப்பில் கவனம் இல்லாமை, இயல்பான குணத்தில் இருந்து மாற்றம் என்றே வருகின்றனர். ஒரு மனிதனின் வாழ்வின் வெற்றியை உறுதிப்படுத்துவது அறிவாற்றல் மட்டுமின்றி, அவர்களின் உணர்வு சார் நுண்ணறிவே. வெளிநாட்டு பள்ளிகளில் இதனை உணர்ந்தே இவை பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. குழந்தைகள் உணர்ச்சி பற்றி கற்க, காண நடைமுறைப்படுத்தி பழக, ஓர் பள்ளிக்கூடமாய் கூட்டுக்குடும்பங்கள் இருந்தன. பாட்டி, அத்தை, அக்காள் என்று மூன்று தலைமுறையினர் ஆசிரியர்களாக இருந்து வழிநடத்தினர். கால மாற்றத்தில் ஒரு குடும்பம், ஒரு குழந்தை என்று மாறியது. கம்ப்யூட்டர், மொபைல் போன்என்று விஞ்ஞான முன்னேற்றங்களும் குழந்தை பருவத்தை சிதைத்து கொண்டு உள்ளன.


கதை சொல்லுங்கள்:

பிள்ளைகள் படித்து, நல்ல வேலையில் அமர்ந்து சிறந்த வாழ்க்கை வாழ வேண்டும் என்பது பெற்றோர் கனவு. இதற்காக படும்பாடு கொஞ்சம் இல்லை. நாம் தேர்ந்தெடுக்கும் வாழ்க்கையை பிள்ளைகள் முழுமையாக வாழ்கிறார்களா? அப்படி வாழ கற்றுத்தந்துள்ளோமா? பெற்றோரே, குழந்தையின் முதல் ஆசான். குழந்தையின் முதல் மூன்று ஆண்டுகள் பொக்கிஷம் போன்ற காலம். தண்ணீரை முழுமையாக உறிஞ்சும் ஸ்பான்ச் போன்று, குழந்தையின் மூளை அத்தனையையும் கிரகித்துக் கொள்ளும் சக்தி படைத்தது. குழந்தையின் இயற்கையான குணம் மரபு அணுக்களால் நிர்ணயம் செய்யப்படுகிறது என்றாலும், நாம் வளர்க்கும் விதத்தில் அதனை உருவாக்கலாம். பிறந்த நான்கு மாதத்தில் இருந்தே குழந்தைகளுக்கு கதை கேட்பதும், பாட்டு கேட்பதும் பிடித்தமான விஷயம். வார்த்தைகள் புரியாவிட்டாலும், தாயின் குரல், தொடுதல், அருகாமை மட்டுமே குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு போதுமானது. ஒரு வயதில் இருந்தே புரிந்து கதை கேட்பார்கள். கதை கூறுதல் ஒரு சக்தி வாய்ந்த யுக்தி. பல வார்த்தைகளில் சொல்லக்கூடிய கருத்தை குழந்தைகள் ஒரு குட்டிக்கதை மூலம் புரிந்து கொள்வார்கள். குழந்தைகளின் கேட்கும் திறன், கற்பனை வளம் மூலம் பல புதிய ஆற்றல்களை உருவாக்கலாம். 'டிவி' பார்க்க வைத்து சோறு ஊட்டுவதை விட, கதை கூறி, வாழும் கலை கூறி சோறு ஊட்டலாம். ஆறு மாதத்தில் இருந்தே குழந்தைக்கு புத்தகங்களை அறிமுகம் செய்யுங்கள்.


விளையாட்டு:

ஒன்றரை வயது முதல் பொம்மை போனில் பேசுவது, பொம்மையை குளிக்க வைப்பது போன்று தங்களை சுற்றி நடக்கும் விஷயங்களை கிரகித்து புரிந்த அளவில் வெளிக்காட்டிக்கொள்வார்கள். இதுவே அவர்களுக்கு சமூக திறனை கற்றுக் கொடுக்கும் பயிற்சி. குழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்படாமல் இருக்க இதுவே சிறந்த பயிற்சி. விதவிதமான பொம்மைகளை வாங்கிக் கொடுத்து அதனை எப்படி விளையாட வேண்டும் என்று கற்றுக்கொடுங்கள். இந்த யுக்திகள் எளிதாக தெரிந்தாலும், குழந்தையின் உணர்வு சார் நுண்ணறிவு வளர்ச்சிக்கு இதுவே அஸ்திவாரம். "நாளை ஒரு மனிதனின் வாழ்க்கையை செப்பனிடுதலை காட்டிலும், இன்றே சிறப்பாக ஒரு குழந்தையை வளர்க்கலாமே”

- வி.ரம்யவீணா, குழந்தைகள் மனநல நிபுணர், சென்னை. 88700 02060.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X