வாட்ஸ் அப் புகழ் கொண்ட தமிழ்நாடு: எஸ்.சிராஜ் சுல்தானா, முதுகலை ஆசிரியர்| uratha sindhanai | Dinamalar

'வாட்ஸ் அப்' புகழ் கொண்ட தமிழ்நாடு: எஸ்.சிராஜ் சுல்தானா, முதுகலை ஆசிரியர்

Added : ஏப் 11, 2015 | கருத்துகள் (10)
Share
'வாட்ஸ் அப்' புகழ் கொண்ட தமிழ்நாடு:  எஸ்.சிராஜ் சுல்தானா, முதுகலை ஆசிரியர்

அன்று வள்ளுவனால் வான்புகழ் கொண்ட தமிழகத்தில், 'வாட்ஸ் - அப்' மூலம் கேள்வித்தாள் வெளியாகி வான்புகழ் கண்டுள்ளது.தன் பிள்ளைகள் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்று பெற்றோரும், தன் மாணவன் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்று ஆசிரியர்களும், தான் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்று, ஒவ்வொரு மாணவனும் எண்ணித் தான் தேர்வுகளை சந்திக்கின்றனர்.

'எப்படியும் சாதித்து விட வேண்டும்' என்று, குறுக்கு வழியில் மாணவர்களை வழி நடத்திச் செல்லும் ஒரு சில ஆசிரியர்களால், ஒட்டுமொத்த ஆசிரியர் சமூகம்
வேதனைப்பட வேண்டியுள்ளது.'காப்பி' அடிப்பதை தடுக்க வேண்டிய ஆசிரியர்களே, மாணவனை காப்பியடிக்க தூண்டுவது, வேலியே பயிரை மேய்ந்த கதையானது.நூறு சதவீதம் தேர்ச்சி வேண்டும் என்பதற்காக, தமிழகத்தில் எல்லா தனியார் பள்ளிகளிலுமே, ஒன்பதாம் வகுப்பிலேயே, 10ம் வகுப்புப் பாடங்களை துவங்கி விடுகின்றனர். அதுபோல, பிளஸ் 1ல், பிளஸ் 2 பாடங்களை நடத்த துவங்கி விடுகின்றனர். மாநில அளவில் அல்லது மாவட்ட அளவில் தங்கள் பள்ளியின் சாதனைகளை விளம்பரப் படுத்தி, அடுத்த ஆண்டிற்கான வேட்டைக்கு தம்மை தயார்படுத்திக் கொள்கின்றனர்.ஒன்பதாம் வகுப்பு பாடத்தை படிக்காமல், 10ம் வகுப்பு பாடத்தை இரண்டு ஆண்டுகள் படிப்பதும், பிளஸ் 1 பாடத்தை படிக்காமல், பிளஸ் 2 பாடத்தை இரண்டு ஆண்டுகள் படிப்பதும், மாணவனை அடிப்படை தெரியாமல் படித்துச் செல்ல வழி செய்கிறது.ஒரு திரைப்படத்தில் கமல்ஹாசனுக்கு, கிரேசி மோகன் அலைபேசியில் விடைகள் சொன்ன கதையை மீறிவிட்டது, 'வாட்ஸ் - அப்' செயல்கள்.

அரசு பள்ளியில் பல ஆசிரியர்கள் டியூசன் நடத்தி, பணம் சம்பாதிக்கத் துவங்கி விட்டனர். தனியார் பள்ளிகளில் டியூசன் கட்டணமும் சேர்த்து, ஆண்டுக் கட்டணமாக லட்சக்கணக்கில் மாணவர்களிடம் வசூல் செய்யப்படுகிறது. தம் பிள்ளைகளின் எதிர்காலம் பாதிக்கக் கூடாது என்று எண்ணி பெற்றோர் பலர், அமைதியாக இருந்து விடுகின்றனர். சாதனையைக் காட்ட வேண்டி, தனியார் பள்ளிகள் சில, குறுக்கு வழியில் செல்லத் துவங்கி விட்டன.'தன் மகன் இந்த பள்ளியில் படிக்கிறான். இந்த ஆண்டு மருத்துவக் கல்லூரி அல்லது குறிப்பிட்ட பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்துவிடும்' என்று பெருமை பேசும் பல பெற்றோர், தங்கள் பிள்ளைகளை, புத்தக புழுக்களாக மாற்றி விட்டனர். தனியார் பள்ளிகளின் பேராசையும், பெற்றோரின் பேராசையும் மாணவர்களை பாதித்துக் கொண்டு இருக்கின்றன.தேர்வு வாரியத்தின் மூலம் அரசு பள்ளிகளுக்கு, ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதால், தனியார் பள்ளிகளில் பணிபுரிந்த பல ஆசிரியர்கள் தேர்வில் வெற்றி பெற்று, அரசு பள்ளி ஆசிரியர்களாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பல தனியார் பள்ளிகளில், தகுதியான அனுபவமிக்க ஆசிரியர்கள் இல்லாமல் போய் விட்டனர். உயர்தர மற்றும் நடுத்தர மக்கள், தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளியில் சேர்த்து விட, அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களோ ஏழை, எளிய மக்கள்.

காலை உணவு இல்லாமல், காலில் செருப்பு இல்லாமல், சீருடையை தவிர வேறு நல்ல துணி இல்லாமல், பஸ் பாசில் பள்ளி வந்து, பள்ளி விடுமுறை நாட்களில் வேலைக்கு செல்வது அல்லது பெற்றோரின் வேலைக்கு உதவுவது என்று இருக்கும் அரசு பள்ளி மாணவர்களும் சாதித்துக் காட்டுகின்றனர் என்பது உண்மையே.
ஒவ்வொரு மதிப்பெண்ணுக்கும், உயிரை கொடுத்து படிக்க வேண்டியுள்ளது. ஒரே ஒரு மதிப்பெண்ணால், மாணவனின் எதிர்காலம் தோற்கடிக்கப்பட்டு விடலாம். ஒரு மதிப்பெண் குறைந்தால், விரும்பிய பாடமோ, விரும்பிய கல்லூரியோ கிடைக்காமல் போய்விடுகிறது.கல்விக் கட்டணம் வாங்கும் அளவுக்கு, தங்கள் பள்ளி மாணவர்கள் மதிப்பெண்கள் பெற்றால் தான் மதிப்பு என்பதால், பல தனியார் பள்ளிகளில் விதிமுறை மீறப்படுகின்றன.பத்தாம் வகுப்பில், 500க்கு 500 எடுத்த தனியார் பள்ளி மாணவர்கள், மேல்நிலை வகுப்பில், 1,190க்கு மேல் மதிப்பெண்கள் எடுத்த மாணவர்கள், அகில இந்திய அளவில் ஏன் சாதிக்கவில்லை என்று பார்க்கும்போது, அவர்கள் சறுக்கிய இடம் எது என்று தெரியவரும்.'புத்திசாலித்தனம் என்பது அடுத்தவரை ஏமாற்றுவதில் தான் உள்ளது' என்னும் மாயை விலக வேண்டும்.

ஆசிரியர்கள், மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டியவர்கள். ஒவ்வொரு மாணவனும், தன் வாழ்நாளில் ஒரு ஆசிரியரை என்றும் மறப்பதில்லை. அன்று, குருகுல கல்வி. குருவும், மாணவனும் ஒன்றாக இருந்தனர்; மாணவனுக்கு தன் அனுபவத்தை கற்றுத் தந்தார் குரு.இன்று, கணினி யுகம். குறுக்கு வழியில் முன்னேற ஆசிரியரும், மாணவனும் துணிந்து விட்டனர். ஆசை, மனிதனை அடிமைப்படுத்தி, அவமானப்படுத்தி விட்டது.நாடு குடியரசு ஆகி, 65 ஆண்டு கள் முடிந்து விட்டன. அரசியல் அமைப்புச் சட்டத்தில் சொல்லப்பட்ட இலவச மற்றும் கட்டாய கல்வி என்பது, அரசின் கையில் இருந்து தனியாரிடம் கட்டாய கட்டண
கல்வியாக மாறி நிற்கிறது.இந்திய அளவில் கல்வி மேம்பாடு வளர்ந்து, குறைபாடுகள் நீக்கப்பட வேண்டும்.
* அகில இந்திய அளவில் தொடக்கப் பள்ளிகள் முதல், மேல்நிலைப் பள்ளிகள் வரை, ஒரே பாடத்திட்டம் கொண்டு வர வேண்டும்.
*தாய்மொழி பாடம் மற்றும் மாநில வரலாறு அல்லது பிராந்திய வரலாறு மட்டும் மாநில அளவில் இருக்க வேண்டும்.
*தமிழக பள்ளிகளில், 'இந்தி' விருப்பப் பாடமாக சேர்க்கப்பட வேண்டும்.
*எல்லா தேர்வு அறைகளிலும், ஓட்டுச்சாவடி போல, 'கேமரா' பொருத்தப்பட வேண்டும்.
*தேர்வை, 'அப்ஜெக்டிவ்' முறையில் கொண்டு வந்து, கணினி மூலம், 'ஆன் - லைன்' தேர்வை நடத்தலாம்.
*தேர்வு அறை மேற்பார்வையாளராக சமூக ஆர்வலர்களை நியமிக்க வேண்டும்.

இன்று, 'வாட்ஸ் - அப்' ஆசிரியர்கள் மூலம் வழிநடத்தப்படும் மாணவர்கள் தான், நாளைய இந்தியாவின் தூண்கள் என்ற நிலை மாறிட வேண்டும்.
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை. - (குறள்: 400)
'ஒருவனுக்கு அழிவில்லாத செல்வம் கல்வியே. அதை தவிர, மற்றப் பொருட்கள் சிறப்புடையவை அல்ல' என்னும் வான்புகழ் வள்ளுவன் வரிகளை, 'வாட்ஸ் - அப்' ஆசிரியர்கள் உணர வேண்டும்.
இ-மெயில்: ssirajsu@yahoo.com

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X