அடிக்கடி மாயமாகுது கோப்பு... ஆளும்கட்சி ஓட்டுக்கு ஆப்பு!| Dinamalar

அடிக்கடி மாயமாகுது கோப்பு... ஆளும்கட்சி ஓட்டுக்கு ஆப்பு!

Added : ஏப் 16, 2015
Share
உக்கடம் பெரியகுளத்தையொட்டிய சாலையோரத்தில், டூ வீலரை ஓரம் கட்டி விட்டு, கரையில் நடக்கும் வேலையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர் சித்ராவும், மித்ராவும்.''மித்து! நம்மூர்ல வேகமா நடக்குற ஒரே வேலை, இது மட்டும் தான். இதே மாதிரி, எல்லாக் குளத்தையும் அழகு படுத்துனா, நல்லாயிருக்கும். முதல்ல, இந்த சாக்கடைக, கலக்குறதை நிறுத்தணும்.'' என்றாள் சித்ரா.''ஏன்க்கா! காந்திபுரம்
அடிக்கடி மாயமாகுது கோப்பு... ஆளும்கட்சி ஓட்டுக்கு ஆப்பு!

உக்கடம் பெரியகுளத்தையொட்டிய சாலையோரத்தில், டூ வீலரை ஓரம் கட்டி விட்டு, கரையில் நடக்கும் வேலையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர் சித்ராவும், மித்ராவும்.''மித்து! நம்மூர்ல வேகமா நடக்குற ஒரே வேலை, இது மட்டும் தான். இதே மாதிரி, எல்லாக் குளத்தையும் அழகு படுத்துனா, நல்லாயிருக்கும். முதல்ல, இந்த சாக்கடைக, கலக்குறதை நிறுத்தணும்.'' என்றாள் சித்ரா.''ஏன்க்கா! காந்திபுரம் பாலம் வேலை வேகமா நடக்குது. நஞ்சுண்டாபுரம் ரோட்டை, ஆறு கோடி ரூபாயில சரி பண்ணிட்டு இருக்காங்க.'' என்றாள் மித்ரா.''ஆனா, எந்த வேலையுமே, தரமா நடக்குறதாத் தெரியலை. நஞ்சுண்டாபுரம் ரோடு வேலைய, இப்பவே பல பேரு குறை சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க.'' என்றாள் சித்ரா.''சிட்டிக்குள்ள, பெரும்பாலான 'கான்ட்ராக்ட்'களை, குறிப்பிட்ட ஒரு 'குரூப்' ஆளுங்க தான் எடுக்கிறாங்க. அவுங்களை யாருமே, தட்டிக் கேக்க முடியாதாம்.'' என்றாள் மித்ரா.''நிஜம் தான் மித்து! நீ சொல்ற நாலஞ்சு கான்ட்ராக்டர்கள், ரெண்டு வருஷத்துல எடுத்துச் செஞ்ச வேலைகளைக் கணக்குப் போட்டா, அம்பது அறுபது கோடி தாண்டும். ஆனா, எத்தனை வேலையுமே சுத்தமா நடந்ததாத் தெரியலை.''''அக்கா! கார்ப்பரேஷன் லேடி ஆபீசரோட வீட்டுக்காரருக்கு, சிட்டிக்குள்ள 'போர்வெல்' போடுறதுக்கான 'கான்ட்ராக்ட்'டை மறைமுகமா கொடுத்திருக்காங்களாம். வேற கம்பெனி பேருல, அவருக்கு 'பங்கு' போகுதாம்.''''ஏன்டி! கார்ப்பரேஷன் ஆபீசர்களை, எப்பவுமே குறை சொல்லிட்டே இருக்கியே. மருதமலை அடிவாரத்துல, ரோட்டை ஆக்கிரமிச்சிருந்த தோப்புக்கு எப்பிடி வச்சாங்க பார்த்தியா ஆப்பு?'' என்று சீறினாள் சித்ரா.''விபரம் தெரியாமப் பேசாதக்கா...அந்த ஏரியாவுல, சீனியர் ஐ.ஏ.எஸ்., ஆபீசர் ஒருத்தரோட நெருங்குன சொந்தக்காரங்க இருக்காங்க. அவுங்க, அந்த ஆபீசர்ட்ட சொல்லி, அவரு, 'மாஸ் செகரட்டரி'க்குச் சொல்லி, அங்கயிருந்து உத்தரவு வந்ததால, அந்த இடத்தை அதிரடியா மீட்ருக்காங்க. இதே மாதிரி, சிட்டிக்குள்ள எத்தனை இடம் இருக்கு...அதெல்லாம் மீட்டாங்களா?'' என்றாள் மித்ரா. ''ஆமா மித்து! நம்ம மேயரு, கவுன்சிலராவும், மண்டல சேர்மனாவும் இருந்தப்ப, 'ரிசர்வ் சைட்' ஆக்கிரமிப்புகளைப் பத்திப் நிறையப் பேசுனாரு. ஆனா, அவரு மேயரான பிறகு, ஆக்கிரமிப்பு ஒண்ணைக் கூட எடுக்கலை. அது சம்மந்தப்பட்ட கேசுகளை, வேகமா முடிக்கவும் ஒண்ணுமே பண்ணலையே!'' என்றாள் சித்ரா.''அவரு என்ன பண்றது? அதான்...கார்ப்பரேஷன்ல சி.இ., டி.பி.ஓ., ரெண்டு மண்டல ஏ.சி., ன்னு முக்கியமான 'போஸ்ட்டிங்' எல்லாம் 'இன்சார்ஜ்'ல தான் ஓடுதே!''''மித்து! நீ மேயரை எதுவும் கிண்டல் பண்ணலையே...அவர் தான் கஜபூஜையெல்லாம் நடத்தி, கலக்குறாரே. ஆனா, 'பலன்' கிடைக்குமான்னுதான் தெரியலை''''நீ யாருக்கு 'பலன்' கிடைக்குமான்னு கேக்குற?'' என்றாள் மித்ரா.''ரெண்டு பேருக்குமே, விடுதலை கிடைக்கணும்கிறது தான், பூஜையோட நோக்கமா இருக்கும். பூஜை பண்ணுன பொருளையும், 'அம்மா'வைப் பத்தி இவரு பண்ணுன பி.எச்.டி.,யையும் எப்பிடியாவது, அவுங்ககிட்ட சேர்க்கணும்னு சென்னைக்குப் போய் 'ட்ரை' பண்ணிருக்காரு. ஆனா, கடைசி வரையும் முடியலையாம். இடையில, 'செக்' வச்சது யாருன்னு தான் தெரியலை.''''அந்தக் கட்சியில தான், 'பெட்டிஷன் சிட்டிசன்'க, எக்கச்சக்கமா இருக்காங்களே.'' என்றாள் மித்ரா.''அதென்னவோ உண்மைதான்! மேற்கால இருக்கிற முக்கியமான கவுன்சிலரோட கணவரைப் பத்தி, ஏகப்பட்ட 'பெட்டிசன்' பறக்குது. ஏரியா எம்.எல்.ஏ.,பேர்ல, அவரு போடுற ஆட்டம் தாங்கலையாம்.'' என்றாள் சித்ரா.''அக்கா! அந்த எம்.எல்.ஏ.,வோட உடம்பு நிலைமை, பொது நிகழ்ச்சிகள்ல கலந்துக்க முடியாத அளவுக்கு, ரொம்ப மோசமா இருக்காமே.'' என்றாள் மித்ரா.''பாவம் மித்து....! எம்.ஜி.ஆர்., காலத்துலயிருந்து, கட்சியில பல பதவிகள்ல 'மணம்' பரப்புனவரு. இப்போ, ஒடுங்கிப் போயிருக்காரு. ஆனா, நேத்து வந்த பல பேரு, தாறுமாறா ஆட்டம் போடுறாங்க.'' என்றாள் சித்ரா.''உண்மை தான்க்கா....ஒரு எம்.எல்.ஏ.,ன்னா எதுஎதுக்கு 'ரெகமண்ட்' பண்ணனும்னு தெரிய வேண்டாம்? சிங்காநல்லுார் ஏரியால, வீடு பிடிச்சு, அஞ்சு ஆறு...குட்டிகளை வச்சு, தொழில் பண்ணுன ஒரு கும்பலை 'ஸ்பெஷல் டீம்' பிடிச்சிருக்கு. ஆனா, வேற ஏரியா எம்.எல்.ஏ., ரெகமெண்டேஷன்னால, அந்த 'புரோக்கர்' மேல சாதாக்கேசைப் போட்டு தப்பிக்க விட்டுட்டாங்க.'' என்றாள் மித்ரா.''வரவர கோயம்புத்துார் ரொம்ப மோசமாயிட்டு இருக்குடி. கார்ப்பரேஷன் ஆபீசுக்கு எதிர்லயே, டுட்டோரியல் காலேஜ்ங்கிற பேருல, 'அந்த தொழில்' பண்ணிருக்காங்க. என்ன கொடுமை மித்து.''''இதென்னக்கா பிரமாதம்! செல்வபுரத்துல, போலீஸ் ஸ்டேஷனுக்கு எதிர்ல இருக்கிற, ஒரு லாட்ஜ்லயே, இந்த 'பிஸினஸ்' நடக்கிறதை இந்த 'டீம்' பிடிச்சிருக்கு. அதே ஸ்டேஷன்ல, ரொம்பக்காலமா இருக்கிற ஒரு எஸ்.ஐ., சப்போர்ட்ல தான் நடந்ததாத் தெரியுது. அவர்ட்ட கேட்டா, 'நான் பாட்டுக்க சிவனேன்னு இருக்கேன்'றாராம்.''''ஒவ்வொரு ஸ்டேஷன்லயும் ஐ.எஸ்.,ஆளுங்க இருக்காங்களே. அவுங்களுக்கு இதெல்லாம் தெரியாதா... அப்புறம் எப்பிடி 'ஸ்பெஷல் டீம்' மட்டும் கரெக்டா பிடிக்கிறாங்க?'' என்றாள் சித்ரா.''இந்த 'உளவுப்புலி'ங்களுக்கு, இப்போ வசூல் வேட்டையாடவே நேரமில்லை. மகாவீர் ஜெயந்தியன்னிக்கு, சரக்குக் கடைக்கெல்லாம் 'லீவு' விட்டுட்டாங்கல்ல... அன்னிக்கு மட்டும், ஐ.எஸ்., போலீஸ்காரங்க சில பேரு, 50 ஆயிரம், 60 ஆயிரம் சம்பாதிச்சிருக்காங்க.'' என்றாள் மித்ரா.''என்னடி சொல்ற...திருட்டு வியாபாரத்தை கண்டுக்காம இருக்க்கவா இவ்ளோ காசு?''''அதுக்கு மட்டுமில்லை. எப்போ, எங்க 'ஸ்பெஷல் டீம்'காரங்க, வர்றாங்கன்னு பாத்துச் சொல்லுற, மதிப்பு கூடுதல் சேவையை பண்ணுனதுக்கு தான் இந்த போனஸ். ஒரு டாஸ்மாக் 'பார்'ல, மூவாயிரத்துல இருந்து அஞ்சாயிரம் வரை வாங்கிருக்காங்க. இதே 'பார்'கள்ல, ராத்திரி சரக்கு விக்கிறதைக் கண்டுக்காம இருக்க, மாசமாசம் மாமூல் தனியா வாங்குறாங்க.''''நானும் இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டேன். பீளமேடு, ராமநாதபுரம், காந்திபுரத்துல தான் அதிகமான 'பார்'கள் இருக்கிறதால, அந்த ஏரியா உளவுப்புலிகளுக்கு தான், செம்ம வசூலாம். ரொம்ப நாளா ஒரே ஸ்டேஷன்ல இருக்கிறவுங்களை மாத்தி விட்டாத்தான் சரிப்படும்.'' என்றாள் சித்ரா.''காந்திபுரம்னதும், அங்க பஸ் ஸ்டாண்ட், பிளாட்பார்ம் கடைகள்ல வசூல் பண்றதையே முழு நேரத்தொழிலா பண்ணுற கவுன்சிலர் ஒருத்தரு ஞாபகம் வந்துச்சு. அவரு... நடைபாதை கடைக்காரர்கள் சங்கத்துக்கு அவைத்தலைவரா ஆனது மாதிரி, நோட்டீஸ் அடிச்சு, விநியோகம் பண்ணிருக்காரு.'' என்றாள் மித்ரா.''அடடா...'சோக்'கா வேலை செய்யுறாரோ குமாரு? அவரு மேல, அவுங்க செம்ம கடுப்புல இருந்தாங்களே!''''கரெக்ட்க்கா! கடைக்காரங்க, 'நம்ம எப்போ இவரை அவைத்தலைவரா எடுத்தோம்'னு, கரிச்சுக் கொட்றாங்க.''''மித்து! கரூர்க்காரருக்கு ரொம்பவும் வேண்டப்பட்ட பிரேக் இன்ஸ்பெக்டர் ஒருத்தரு தான், இங்க 'லஞ்ச ரேட்'டை நிர்ணயம் பண்றாருன்னு பேசுனோமே. அவரை 'சஸ்பெண்ட்' பண்ணிட்டாங்க தெரியுமா?'' என்றாள் சித்ரா.அவரு, 'பவர்ஃபுல்' ஆளாச்சே.'' என்றாள் மித்ரா.''அதெல்லாம் உண்மை தான். ஆனா, டிஎம்கேல சூப்பரா வாயடிப்பாரே 'மாஜி' துரை...அவரோட சொந்தக்காரரோட வெளிநாட்டுக் காருக்கு 'ரீ ரிஜிஸ்ட்ரேஷன்' பண்றதுல, ஏதோ முக்கியமான ரூல்சை 'பிரேக்' பண்ணிருக்காரு. அதைக் கண்டு பிடிச்சு, மேலிடத்துல இருந்து, அந்த பிரேக் இன்ஸ்பெக்டரோட சர்வீசை 'டெம்பரவரி'யா 'பிரேக்' பண்ணிட்டாங்க.'' என்றாள் சித்ரா.''அக்கா! 'சஸ்பெண்ட்'ன்னதும், ஹவுசிங் போர்டுல, 'சஸ்பெண்ட்' ஆன கவுன்சிலர் ஹஸ்பண்டோட ஞாபகம் வந்துச்சு.'' என்றாள் மித்ரா.''அவரா...வேலைக்கு வராமலே சம்பாதிக்கிறாரா?''''இல்லை. அதே ஆபீஸ்ல இருக்கிற அவரோட தங்கச்சி, அவருக்கும் சேத்து சம்பாதிக்கிறாங்க. சாதாரண 'ஜூனியர்' போஸ்ட்டிங்ல தான் இருக்காங்க. பத்திரம் கேட்டு யாராவது வந்தா, அவுங்க 'பைலை' எடுத்து ஒளிச்சு வச்சுக்குவாங்க. பல நாளு அலைய விட்டு, அப்புறமா, அம்பதாயிரம், அறுபதாயிரம்னு பேரம் பேசுவாங்க. கேக்குற பணம் கொடுத்தா, 'பைல்' வரும். இல்லேன்னா, அப்பிடியே மாயமாயிரும்.'' என்றாள் மித்ரா.''என்ன மித்து! பல ஆயிரம் குடும்பங்களுக்கு சீக்கிரமா பத்திரம் கொடுக்கச் சொல்லி, கவர்மென்ட் உத்தரவு போட்ருக்காம். இப்பிடிப் பண்ணுனா, அடுத்த எலக்ஷன்ல ஆளும்கட்சிக்கு மக்கள் 'ஆப்பு' வச்சிருவாங்களே.'' என்றாள் சித்ரா.''அக்கா! அதே ஹவுசிங் போர்டுல, வேற ஒரு வேலையும் நடக்குது. அதை அப்புறமா சொல்றேன். வெயில் கொளுத்துது. வா கிளம்புவோம்.'' என்று வண்டியைக் கிளப்பினாள் மித்ரா.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X