uratha sindanai | மொழிக்கல்வியும் மொழி கலப்பும்; ஏ.ஆதித்தன் - மொழி அறிவியல் பேராசிரியர்மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்| Dinamalar

மொழிக்கல்வியும் மொழி கலப்பும்; ஏ.ஆதித்தன் - மொழி அறிவியல் பேராசிரியர்மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்

Added : ஏப் 19, 2015 | கருத்துகள் (8)
மொழிக்கல்வியும் மொழி கலப்பும்;  ஏ.ஆதித்தன் - மொழி அறிவியல் பேராசிரியர்மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்

சிறந்த குடிமக்களை உருவாக்குவதே கல்வியின் அடிப்படை நோக்கம். தன்னம்பிக்கைக்கும், புத்துருவாக்கத்திற்கும் வழிவகை செய்யாத கல்வி, வெற்றிடக் கல்வியாகவே கருதப்படுகிறது. ஆனால், இக்காலத்தில் தனிமனிதப் பொருளாதார முன்னேற்றத்திற்குத் துணைபுரியும் கருவி தான் கல்வி என, நம்பப்படுகிறது.

மாணவர்களை, வேலைச்சந்தைக்கு பயிற்சி அளிப்பதே கல்வி பயிற்றுவித்தல் எனவும், இதற்கு பயிற்சி அளிக்கும் நிறுவனங்களே கல்வி நிறுவனங்கள் எனவும் நம்பப்படுகிறது. பல்கலைப் பட்டங்கள், அறிவின் தேடலை விட, அகந்தையின் வெளிப்பாடாகவே அமைந்துள்ளன. பட்டங்களை பெருமையாகக் கொண்டாடும் நாட்டில், கல்வியின் தரம் கசப்பாகக் கருதப்படுகிறது.மொழி தான் மனிதனை விலங்கிலிருந்து வேறுபடுத்தி, சமூக அமைப்பின் அங்கமாக மாற்றுகிறது. மொழியை வெறும் கருத்துப் பரிமாற்றக் கருவியாகக் கருதியது அந்தக்காலம். மொழி என்பது ஓர் இனத்தின் அடையாளம்; மொழி இல்லையேல், சமுதாய அமைப்பும், மனித பண்பாடும் காணாமல் போய்விடும். தமிழ் சமூகம், தாய்மொழி மீதுள்ள நம்பிக்கையை மெல்ல மெல்ல இழந்து வருவதால், தமிழ்க் கல்வியையும், தமிழ்வழிக் கல்வியையும் வணிகச் சந்தையில் மதிப்பற்றதாகக் கருதத் துவங்கியுள்ளது. இதனால், தமிழ்க்கல்வி முற்றிலுமாகப் புறக்கணிக்கப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டு வருகிறது. உயர்மதிப்பெண் பெறுவதன் பொருட்டு, பள்ளிக் கல்வியில் ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாகவும், இந்தி, பிரெஞ்சு போன்ற மொழிகளை இரண்டாம் மொழியாகவும் ஏற்றுக் கொள்கிற போக்குதான் பெரிதும் காணப்படுகிறது. கல்வியில்கூட, மொழியின் அடிப்படையில் உயர்வு, தாழ்வு இங்குக் கற்பிக்கப்படுகிறது.

தாய்மொழிக் கல்வியின் உண்மை நிலையை உணர்ந்து கொள்ளாமையால், ஆங்கில வழிக் கல்விமீது பெரிதும் நாட்டம் கொண்டுள்ளோம். தாய்மொழியிலேயே உயர்கல்வியையும், ஆராய்ச்சியையும் வழங்குகிற சீன பல்கலைக்கழகம், உலகத்தர வரிசையில், 10க்குள் இடம் பெற்றிருப்பது பெரிதும் வரவேற்கத்தக்கது. தாய்மொழியில் ஆர்வம் இல்லாதவன், தன்னம்பிக்கையையும், சிந்தனை வளத்தையும் இழந்து, அடிமை வாழ்விற்கு ஆயத்தமாகிறான் என்பது அறிவாளர்களின் கருத்து. தமிழ்க் கல்வியின் பின்னடைவிற்கு இன்றைய பாடத்திட்டமும், மக்களின் மனநிலை யும் தான் பெரிதும் காரணம்.இலக்கியக் கல்வியையே மொழிக்கல்வியாகக் கருதி, பழமையைப் பெரிதும் பாதுகாக்கும் பாடத்திட்டத்தால், பயன்பாட்டுத்தமிழ் மறக்கடிக்கப்பட்டு வருகிறது. இதனால், மாணவர்களிடம் கருத்துப் பரிமாற்றத் தமிழ் காணாமல் போய்விட்டது. புதிய தேவைகளையும், அனுபவங்களையும் தெரிந்து கொள்ளும் வகையில், இயல்பான கருத்துப் பரிமாற்றத்திற்கு முதலிடம் அளிக்கும் பாடத்திட்டம் விரைவாகத் தேவைப்படுகிறது.

தமிழ்மொழி சார்ந்த கலாசாரப் பார்வை, மாணவர்களிடம் உருவாகும் வகையில் கல்வித்திட்டம் அமையாவிட்டால், தமிழன் தன் அடையாளத்தை இழக்க நேரிடலாம்.தாய்மொழியில் முழுமையான ஆளுமை இருந்தால் தான் பிறமொழியில் ஆளுமையினை வளர்க்க முடியும். மொழிக்கல்வியில் ஒரு மாணவன் சிறந்து விளங்கினால் தான் அம்மொழி வழியாகக் கற்கும் பிற பாடங்களையும் முழுமையாகப் புரிந்துகொள்ள இயலும் என்பது விவாதத்திற்கு அப்பாற்பட்ட அறிவியல் உண்மை.தமிழையும், ஆங்கிலத்தையும், 14 ஆண்டுகள் கற்ற பின்னரும், இவ்விரு மொழிகளிலும் கருத்துப் பரிமாற்றத்திறனும், படைப்புத் திறனும் இன்றி, மாணவர்கள் அல்லல்படுவதைப் பார்க்கும்போது, நம் மொழிக்கல்வியின் நிலையை அறிந்து கொள்ள முடிகிறது.இக்காலத்தில் மாணவர்களும், கற்றோரும் பெரிதும் ஆங்கிலம் கலந்த தமிழிலேயே உரையாடுகின்றனர். எந்த நிலையிலும் நம் பள்ளிகளும், கல்லுாரிகளும் ஆங்கிலம் கலந்த கலப்புத்தமிழைக் கற்றுக் கொடுப்பதில்லை. இவர்களைக் குறை கூறுவதைத் தவிர்த்து, இந்தச் சூழல் தோன்றுவதற்கான காரணத்தைக் கண்டறிந்து ஆவன செய்வது நலம் பயக்கும்.தமிழ் மொழித்திறன்களில் சிறப்பாகப் பயிற்சி அளிக்கும் ஆசிரியர்களின் பற்றாக்குறையும், பாடத்திட்டத்தில் பயன்பாட்டுத்தமிழ் பற்றிய பாடங்கள் இல்லாமையும், மாணவர்கள், கலவைத்தமிழைப் பயன்படுத்த அடித்தளம் அமைத்துள்ளன.

எந்த ஒரு வகுப்பிலும் மாணவர்களுக்கு எழுத்துகளின் ஒலிப்புமுறை பற்றிய பயிற்சியை வழங்காமல், மாணவர்கள் எழுத்துகளைத் தவறாக ஒலிக்கின்றனர் என்று கூறுவது வேதனைக்குரியது. வணிக நோக்கில் மக்களை ஈர்ப்பதன் பொருட்டுக் கலவைத் தமிழைக் கற்பிப்பதில், சில மின்னணு ஊடகங்களின் பங்கு மகத்தானது.வருவாய் சார்ந்த அணுகுமுறை யால், உலகப் பொதுமொழியாகக் கருதப்படும் ஆங்கிலத்தின் மீது கொண்டுள்ள விருப்பின் காரணமாக, தமிழ்ச் சொற்களான வடையையும், தோசையையும், வடமொழியாளர்களுக்காக வடா, தோசா என்று கூறும் போக்கு நகைப்புக்குரியது. தமிழ்மொழி பற்றிய தாழ்வு எண்ணம் மக்களிடம் நீடிக்குமானால், எதிர்காலத்தில் மாணவர்கள் தமிழைக் கற்றுக் கொள்வதற்குத் தங்கள் இல்லங்களில் சிறப்பு வகுப்பு ஏற்பாடு செய்ய வேண்டிய நிலை உருவாகிவிடும். ஆங்கிலத்தையோ, இந்தியையோ ஒரு மொழியாகக் கற்பது, பெரிதும் வரவேற்கத்தக்கது; ஆனால், இம்மொழிகள் வழியாகக் கற்றால் தான் வேலைவாய்ப்பு பெருகும் என்ற புனைந்துரையைப் பொய்யுரையாக்க வேண்டியது கல்வியாளர்கள் கடமை.தமிழ்க்கல்வி, தமிழகத்தில் புறந்தள்ளப்படும் நிலையை மாற்ற, தொலைநோக்குச் செயல்திட்டங்கள் உருவாக்கப்பெற வேண்டும். ஆங்கில மொழிக்கு மொழி முதன்மையிடம் அளிக்கும் தமிழர்களின் மனப்போக்கு மாறிடும் நிலையில், கலவைத்தமிழ் தன் இறுதியைச் சந்திக்கும்.
மின்னஞ்சல்: ing_mku@yahoo.comWe use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X