ஓவரா ஆடுறது யாரு? உளவு வேலை ஜோரு!| Dinamalar

ஓவரா ஆடுறது யாரு? உளவு வேலை ஜோரு!

Added : ஏப் 19, 2015
Share
பழங்களை வாங்கி வைத்துக் கொண்டு, அவிநாசி ரோட்டில் பிரபல மருத்துவமனைக்கு எதிர் புறம் காத்துக் கொண்டிருந்தாள் மித்ரா. கால் டாக்சியில் சித்ரா வந்து இறங்க, இருவரும் சேர்ந்து சாலையைக் கடக்க ஆரம்பித்தனர்.''அக்கா! இந்த இடத்தை ஜாக்கிரதையாக் கடந்தா, ஹாஸ்பிடல் போகலாம். இல்லேன்னா, ஹாஸ்பிடல் போகாமலே, மேல போயிரலாம். பார்த்து வா...!'' என்று எச்சரித்தாள் மித்ரா.''நம்மகிட்ட
 ஓவரா ஆடுறது யாரு? உளவு வேலை ஜோரு!

பழங்களை வாங்கி வைத்துக் கொண்டு, அவிநாசி ரோட்டில் பிரபல மருத்துவமனைக்கு எதிர் புறம் காத்துக் கொண்டிருந்தாள் மித்ரா. கால் டாக்சியில் சித்ரா வந்து இறங்க, இருவரும் சேர்ந்து சாலையைக் கடக்க ஆரம்பித்தனர்.''அக்கா! இந்த இடத்தை ஜாக்கிரதையாக் கடந்தா, ஹாஸ்பிடல் போகலாம். இல்லேன்னா, ஹாஸ்பிடல் போகாமலே, மேல போயிரலாம். பார்த்து வா...!'' என்று எச்சரித்தாள் மித்ரா.''நம்மகிட்ட படிக்கிற பசங்களுக்கு, பாதுகாப்பு வேணும்னு, ஒரு காலேஜ்காரங்களுக்குத் தெரியுது. ரோட்டை 'கிராஸ்' பண்ண விடாம, கவர்மென்ட்ல 'பர்மிஷன்' வாங்கி, ரோட்டுக்குக் குறுக்க, நடை பாலம் கட்றாங்க. அதேமாதிரி இங்கயும் செய்யலாமுல்ல?.'' என்றாள் சித்ரா.ஒரு சில ஹாஸ்பிடல்கள்ல நடக்குற மீட்டிங்குகள்ல, முக்கிய நிர்வாகிகள் பேசுறதைக் கேட்டா, அவ்வளவு தான், நெஞ்சே வெடிச்சிரும்கிறாங்க.'' என்றாள் மித்ரா.''ஆமா மித்து! கேன்சர் பேஷன்ட்களுக்கு 'கீமோ' கொடுக்கிறதுக்கான மருந்தெல்லாம், பல மடங்கு அதிகமா 'ரேட்' போடுறாங்களாம். மனிதாபிமானமிருக்கிற டாக்டர்கள், இதெல்லாம் பிடிக்காம, வெளிய போனா, அவுங்களுக்கு பல விதமா 'டார்ச்சர்' கொடுக்கிறாங்க.'' என்றாள் சித்ரா.''உண்மைதான்க்கா! ஒரு சில டாக்டர்களுக்கு இவுங்க கொடுக்குற சம்பளத்தையும், அவுங்களை வச்சு, ஹாஸ்பிடல் சம்பாதிக்கிறதையும் கணக்குப் போட்டா, மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசமா இருக்கும். அந்த டாக்டர்ஸ் வெளிய போனாலும், பொய்க்கேசைக் கொடுத்து, போலீசை வச்சு மெரட்டுற வேலையெல்லாம் நடக்குது.'' என்றாள் மித்ரா.''எனக்குத் தெரிஞ்ச ஒரு நல்ல டாக்டர், பல வருஷமா வெளிநாட்டுல இருந்து, இங்க வந்து வேலை பாத்துட்டு இருந்தாரு. அவரையும் இதே மாதிரி டார்ச்சர் பண்ணதுல, 'இந்த ஊரே வேணாம்'னு, குடும்பம் குட்டியோட மறுபடியும் வெளிநாட்டுக்குக் கிளம்பிட்டாரு.'' என்றாள் சித்ரா.இருவரும் பேசிக்கொண்டு நடக்கும்போதே, எதிரே அவர்களது தோழியின் தந்தை வந்தார்.''வாங்கம்மா! அனு நல்லாருக்கா. குழந்தையும் நல்லாருக்கு. இங்க பழமெல்லாம் உள்ள 'அலவ்' பண்ண மாட்டாங்கம்மா. நானே அப்புறமா , கொண்டு போய்க்கிறேன். நீங்க ரெண்டு பேரும், உள்ள போய் பாத்துட்டு வாங்க.'' என்று பழங்களை வாங்கிக்கொண்டு, வெளியே சென்றார்.''அக்கா! இந்த ரோட்டை 'கிராஸ்' பண்றதுக்கு, 'ஸ்கை வாக்' போடுறதுக்கு, ஹாஸ்பிடல் நிர்வாகத்துட்ட மேயர் பேசிருக்காராம். அதே மாதிரி, ஒரு வருஷத்துக்குள்ள, சிட்டியில முக்கியமான அஞ்சு இடத்துல 'ஸ்கை வாக்' அமைச்சிரணும்னு மேயரும், கமிஷனரும் உறுதியா இருக்காங்களாம்.''''சில 'பார்க்'குகளை 'டெவலப்' பண்ணனும், முக்கியமான ரோட்டையெல்லாம் புதுசாப் போடணும்னு ரொம்ப 'ஸ்பீடா' இருக்கிறதா நானும் கேள்விப்பட்டேன்.''''ரெண்டு பேருமே, ஒரு வருஷத்துக்குள்ள ஏதாவது நல்லது பண்ணனும்னு நினைக்கிறாங்க. ஆனா, இங்க இருக்கிற 'டீம்' சரியில்லையே. அதை விட 'பொலிடிக்கல் பிரஷர்' அதிகம்.'' என்றாள் மித்ரா.''நீ சொல்றது உண்மை தான் மித்து. ரோடு வேலை எல்லாமே, ஒரே கான்ட்ராக்டர் தான் செய்யுறாரு. மாவட்டம் முழுக்கவே, ரெண்டு 'சந்திரன்'களோட ஆதிக்கம் தாங்கலைங்கிறாங்க.'' என்றாள் சித்ரா.''அதுல ஒரு 'சந்திர'னையும், வி.ஐ.பி.,ட்ட பி.ஏ.,வா இருக்கிற கார்ப்பரேஷன் இன்ஜினியர் ஒருத்தரையும் ஒரு 'ஸ்பெஷல் டீம்' தீவிரமா கண்காணிக்குதாம். அது ஏதோ 'மேலிடத்து உளவுத்துறை'ங்கிறாங்க.''''இருக்கலாம் மித்து...'அக்ரி' குரூப் மெரட்டுனதை விட, இங்க ஏகப்பட்ட மெரட்டல் நடக்குது. டிரைவர், ஓ.ஏ.,போஸ்ட்டிங்ன்னு எதையெடுத்தாலும் செம்ம காசு பிடுங்கிருக்காங்க. அதை விட, டிரான்ஸ்பர்ல நடந்திருக்கிற வசூலைப் பத்தி விசாரிச்சா, பத்து தமிழ்ப்படம் எடுக்கலாம்.''''இந்த வசூல் குரூப்ல, இ.ஓ., ஒருத்தரும் இருக்காரு. பொள்ளாச்சிக்குப் பக்கத்துதால, ஒரு ஜமீன் ஊர்ல இருக்கிற அந்த இ.ஓ.,தான், டவுன் பஞ்சாயத்துகள்ல நடக்குற கான்ட்ராக்ட், டிரான்ஸ்பர் எல்லாத்துலயும் வசூல் பண்ற வேலையப் பாக்குறாராம்.'' என்றாள் மித்ரா. ''ஆறேழு எம்.எல்.ஏ.,க்கள் சேர்ந்து, எப்பிடியாவது 'அம்மா'வைப் பார்த்து, இங்க நடக்குற பல விஷயங்களைக் கொண்டு போகணும்னு முயற்சி பண்றாங்களாம். ஆனா, வழி தெரியாம திகைக்கிறாங்க.'' என்றாள் சித்ரா.''எம்.எல்.ஏ.,ன்னதும், பல முகங்கள் காட்டுற ஒரு தோழரோட ஞாபகம் வந்துச்சு. அவரு, அவரோட 'லெட்டர் பேடு'கள்ல, மக்கள் பிரச்னைக்காக லெட்டர் எழுதுனதை விட, நில மோசடிக்கும்பலுக்கு ஆதரவா, கொடுத்த 'பெட்டிஷன்'கள் தான் அதிகம்னு உளவுத்துறை சொல்றாங்க.'' என்றாள் மித்ரா.''அதெப்பிடி மித்து, அவுங்க கட்சியில துளைச்சு எடுத்துற மாட்டாங்களா?''''அங்க தான் விஷயமே இருக்கு. 'லீகல் டிஸ்பியூட்'ல இருக்கிற நிலத்தையெல்லாம் தேடிக் கண்டு பிடிச்சு, நிலத்துக்காரங்களுக்கு உதவுறதா இந்த கும்பல் உள்ள போகும். பேருக்கு பணத்தைக் கொடுத்துட்டு, நிலத்தையே பிடுங்க முயற்சி பண்ணும். அப்ப தான், நிலத்துக்காரங்களைப் பத்தி, தாறுமாறா எழுதி, கலெக்டர், கமிஷனர், பல போலீஸ் ஸ்டேஷன்கள்ல 'பெட்டிஷன்' கொடுப்பாரு.''''என்னடி இது, எது மாதிரியும் இல்லாத புது மாதிரியா இருக்கு.'' என்றாள் சித்ரா.''அப்புறம் என்ன நடக்குதுன்னு கேளு... இந்த 'லெட்டர் பேடு'க்கு முக்கியத்துவம் கொடுத்து, அந்த பெட்டிஷனைப் பத்தி விசாரிக்க, அடுத்தடுத்து, பல பேரும் அந்த 'லேண்ட் ஓனரை' கூப்பிடுவாங்க. அதுலயே அவரு பயந்து போய், அந்த கும்பல் கேக்கிற படி எழுதிக் கொடுத்துருவாரு. பின்னால, என்ன நடக்கும்னு நீயே யோசிச்சுக்கோ.'' என்றாள் மித்ரா.''உத்து உத்துப் பார்த்தாலும், துாரத்துல ஒரு வெளிச்சப்புள்ளி கூட தெரிய மாட்டேங்குதே மித்து.'' என்று விரக்தியாய்ப் பேசினாள் சித்ரா.''அப்பிடியெல்லாம் வெறுத்துடாதக்கா...அங்கங்க ஒரு பூப்பூக்குது. நம்ம கார்ப்பரேஷன்ல, புதுசா வந்திருக்கிற சி.எச்.ஓ., டாக்டர், சும்மா தீயா வேலை பாக்குறாராம். கமிஷனரு வேகத்துக்கு அவரு தான், ஒத்து வர்றாராம்.''''இதுக்கு முன்னாடி 'டவுன் ப்ளானிங்'ல இருந்த முக்கியமான ஆபீசர், கமிஷனரு பேரை வச்சு, விளையாடிட்டுப் போயிருக்காரு. இப்ப தான், அது வெளிய வந்திருக்கு.''''அவரை மாத்துறதுக்கு, வேற ஒரு காரணம் சொல்றாங்க. கார்ப்பரேஷன் கன்ட்ரோல்ல இருக்கிற 20 ஷெல்டர்கள்ல, வி.ஐ.பி., சொன்னதாச் சொல்லி, யாருக்கோ அனுமதி கொடுத்திருக்காரு. ஆனா, அவரு சொல்லவே இல்லியாம். அது தெரிஞ்சு தான் அவரை துாக்கிருங்காங்க.''''அதென்னவோ தெரியலை மித்து...ஆனா, இந்த ஹாஸ்பிடலுக்கு எதிர்ல, ரெண்டு ஓட்டல் 'பில்டிங்'குகளுக்கு 'சீல்' வச்சு, அதுல ஒண்ணை மட்டும் திறந்தாங்களே. அதுல நடந்த, அரசியல் மோதலும், அவரோட டிரான்ஸ்பருக்குக் காரணம்கிறாங்க.''''எப்பிடியோ...'இன்சார்ஜ்'ல இருக்கிறவராவது, அடக்கி வாசிச்சா சரி.'' என்றாள் மித்ரா.''மித்து! நம்ம ஊர்ல இன்னொரு முக்கியமான 'டிரான்ஸ்பர்' நடந்திருக்கு. சம்பா ரவை, பருப்பு விலை மேட்டர்ல அடிபட்டாரே, டிஎஸ்ஓ சிதம்பரம். அவரைத் துாக்கிட்டாங்க. பள்ளிக்கூடங்கள்ல, ஏதோ ஸ்பெஷல் புரோக்ராம் நடத்துறதுக்கு, ஒரு டுபாக்கூர் 'கன்ஸ்யூமர்' அமைப்புக்கு, அனுமதி கொடுத்தது தான் முக்கியமான காரணம்கிறாங்க.'' என்றாள் சித்ரா.''பருப்புன்னு சொன்னதும், நம்மூர் வருவாய்த்துறையில முக்கியப் பொறுப்புல இருக்கிற 'செல்வி' ஒருத்தவுங்க, ஞாபகம் வந்துச்சு. ஊருக்குள்ள ஆயிரம் தப்பு நடக்குது. அவுங்க என்னடான்னா, கலெக்டரம்மா வீட்டுக்குப் பின்னால இருக்கிற ரேஷன் கடையில, அஞ்சு கிலோ பருப்பு குறைஞ்சிருக்குன்னு 'பைன்' போட்ருக்காங்க. அதுக்கு எதிர்ல இருக்கிற டீக்கடையில, ரேஷன் சர்க்கரையப் பிடிச்சிருக்காங்க.'' என்றாள் மித்ரா.''இதெல்லாம் பிடிக்கிறாங்க. இதே கலெக்டர் வீட்டுக்கு எதிர்ல, சந்துக்குள்ள இருக்கிற ஒரு பங்களாவுல, 'மசாஜ் சென்டர்'ங்கிற பேருல, அந்த 'தொழில்' பலமா நடக்குது. அதை யாரு பிடிக்கிறதோ தெரியலை.'' என்றாள் சித்ரா.''அக்கா! நீ அந்த லேடி ஆபீசரைப் பத்திச் சொன்னதும், ஹவுசிங் போர்டுல இருக்கிற 'சேச்சி' ஞாபகம் வந்துச்சு. அவுங்க, குடும்பத்துக்காரங்க பேருல மட்டும், கோயம்புத்துார், சென்னையில ஏழெட்டு இடங்கள் இருக்காம். எல்லாமே ஹவுசிங் போர்டு இடம். விசாரிச்சா, பல விஷயங்கள் வெளி வரும்.'' என்றாள் மித்ரா.பேசிக் கொண்டிருக்கும்போதே, 'விசிட்டர்'களுக்கான நேரம் துவங்கி, கதவுகள் திறந்து விடப்பட, இருவரும் வேகவேகமாய் 'லிப்ட்'டைப் பிடிக்க நகர்ந்தார்கள்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X