""திருப்பூர் அரசியல், "சென்டிமென்ட்' அரசியலா மாறிட்டு இருக்குது,'' என்றவாறு, அன்றைய நாளிதழ்களை புரட்டினாள் மித்ரா.""அரசியலில் இதெல்லாம் சகஜம்தானே,'' என்றாள் சித்ரா.""பழைய பஸ் ஸ்டாண்ட் ஏரியாவுல, "ஏர் பலூன்' பறக்கவிட்டா பதவிக்கு ஆபத்து வந்திடுதுங்கறது, ஆளுங்கட்சியில் ஒரே பேச்சா இருக்கு. 2006, சட்டசபை தேர்தல் சமயத்துல, ஜெ., படம் போட்ட "ஏர் பலூன்' பறக்க விட்டாங்க. அந்த எலக்ஷன்ல ஆட்சியை இழக்க வேண்டியதா போச்சு. போன வருஷம் ஜெ., பிறந்த நாளுக்கு அவர் படம் போட்ட "ஏர் பலூன்' பறக்க விட்டாங்க. "இப்படி செஞ்சா பதவிக்கு ஆபத்து வரும்; பலூனை இறக்குங்கன்னு சிலர் சொல்லியிருக்காங்க; யாரும் கேட்கலை. ஒரு மாசம் பலூன் பறந்துச்சு; "அம்மா'வுக்கு பதவி போயிடுச்சு பார்த்தீங்களானு, இப்ப, "சென்டிமென்ட்' பட்டிமன்றம் நடத்திட்டு இருக்காங்க,'' என்றாள் மித்ரா.""வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைக்கிறாங்களே; படிவம் கொடுத்தாச்சா,'' என, திடீரென அடுத்த மேட்டருக்கு தாவினாள் சித்ரா.""வீடு வீடா வருவோம்னு சொல்லியிருந்தாங்களே; இனி, வர மாட்டாங்களா?'' என, அப்பாவியாய் கேட்டாள் மித்ரா.""வீடு வீடா வர்ற மாதிரி தெரியலை. கலெக்டர் சொல்லியும் யாரும் கேட்க மாட்டேங்கிறாங்க. "தேர்வு நடக்கற நேரத்துல, இந்த வேலையை பார்த்தா; ஸ்கூல் வேலை பார்க்க முடியாது,'னு சில ஏரியாவுல டீச்சர்ஸ் முரண்டு பிடிச்சிருக்காங்க. மாநகராட்சி ஸ்கூல் டீச்சர்ஸ் மட்டும், கொடுத்த வேலையை செஞ்சதால, நிறையா வாக்காளர்களின் ஆதார் எண் பதிவாகியிருக்குது. மத்த ஏரியாவுல, சிறப்பு முகாம் அன்னைக்குதான் படிவத்தை பூர்த்தி செஞ்சு கொடுத்தாங்க,'' என்றாள் சித்ரா."ஆதார் அட்டை முகாம் பணியில் தொய்வு' என, நாளிதழில் வந்திருந்த செய்தியை படித்த மித்ரா, ""நம்மூரில் ஆதார் அட்டை முகாம் எப்படி போயிட்டு இருக்கு,'' என, கேட்டாள்.""ரொம்ப, ரொம்ப மந்தமாக போயிட்டு இருக்கு. வி.ஐ.பி.,களுக்கு மட்டும் ரகசியமா, கலெக்டர் அலுவலக வளாகத்துல முகாம் நடத்துறாங்க. ஆதாருக்கு பதியாத அரசு அலுவலர்கள் மட்டும், "பயொமெட்ரிக்' பதிவு செஞ்சுட்டு இருக்காங்க. முக்கியமான வி.ஐ.பி.,கள், பெரிய பணக்காரங்களுக்கு, வீட்டுக்கே போயி ஆதார் பதிவு எடுக்குறாங்க,'' என்று சித்ரா முடிப்பதற்குள், ""பணம் ஏதும் வசூலிக்கிறாங்களா,'' என, குறுக்கிட்டாள் மித்ரா.""தலா, 500 ரூபாய் கொடுத்தால், வி.ஐ.பி., வீட்டுக்கு போயி, எடுத்துக் கொடுக்கறதை "மொபைல் டீம்' கவனம் செலுத்திட்டு இருக்கு. தனியார் நிறுவன ஊழியரா இருப்பதால், யார் சொன்னாலும் கேட்பதில்லை. ஆளும்கட்சி கவுன்சிலர்களும், இவர்களது பி.ஏ.,களுக்கும், "சைடு பிஸினஸ்' மாதிரி செஞ்சிட்டு இருக்காங்க,'' என்றாள் சித்ரா.""போலீஸ் ஸ்டேஷனுக்கு ஏதாவது ஒரு வேலைக்கு போனா, மக்களை பாடாபடுத்துறாங்க,'' என, அழுத்துக் கொண்டாள் மித்ரா.""ஏன், என்னாச்சு? ஒங்களுக்குத் தெரிஞ்சவங்க யாரையும் அலைய விட்டாங்களா,'' என சித்ரா கேட்க, ""போன வாரம், வெள்ளியங்காட்டில் ஒருத்தர் குடும்ப பிரச்னையில், வீட்டுக்கு பக்கத்துல இருக்கற கிணத்துல விழுந்து தற்கொலை பண்ணிக்கிட்டார். போலீசார், சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்புனாங்க. "போஸ்ட் மார்டம்' செய்றதுக்கு, போலீசார் சான்று தரணும். பக்கத்து வீடுகளில் வசிக்கும் நண்பர்கள், தெற்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு போயிருக்காங்க. அங்கிருந்த போலீஸ்காரர், 150 ரூபாய்க்கு பேப்பர் வாங்கி வரச் சொல்லியிருக்கார். வாங்கிக்கொடுத்தபின், ஒரு கடை பெயரை சொல்லி, ரெண்டு பேருக்கு டிபன் வாங்கிட்டு வரச்சொல்லியிருக்கார். அந்த கடையில், டிபன் தீர்ந்து போச்சுன்னு போனவர், சற்று நேரத்தில் திரும்பி வந்தார். வேறொரு கடை பேரை சொல்லி, டிபன் வாங்கி வரச் சொல்லியிருக்கார். அவங்களும் வாங்கி வந்து கொடுத்தாங்க. பக்கத்து வீட்டுக்காரர் இறந்துட்டாரே, குடும்பத்துக்கு ஏதாவது உதவி செய்யலாம்னு வந்தா, இப்படி பாடாபடுத்துறாங்களே என புலம்பியவாறு, அவர்கள், சான்று வாங்கிச் சென்றனர்,'' என்றாள் மித்ரா.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE