ஊட்டி:அழிந்து வரும் பாரம்பரிய கலை யை வளர்ப்பதில், ஊராட்சி பள்ளி மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.வெறும் புத்தக படிப்பு மட்டுமல்லாமல், மாணவ, மாணவியர் மத்தியில் புதைந்துள்ள விளையாட்டு, இசை, கவிதை, கட்டுரை உட்பட பிற திறமைகளை வெளிக் கொணரும் இணை பாடத் திட்டத்தை, பல பள்ளிகள் ஊக்குவிக்கின்றன. அரசு பள்ளிகளை காட்டிலும், உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் இத்தகைய இணை பாட திட்ட முறை செயல்பாட்டில் உள்ளது.
இதில் ஒரு வித்தியாசமான முயற்சியை, மாவட்டத்தில் முதன் முறையாக, அவ்வூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி மேற்கொண்டுள்ளது. இப்பள்ளி மாணவ, மாணவியருக்கு அழிந்து வரும் தமிழ் கலைகளான, பறை இசை மற்றும் சிலம்ப விளையாட்டில் பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கென, பறை இசை உபகரணம், சிலம்பம் ஆகியவற்றை கல்வி அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்புடன், சொந்தமாக வாங்கி, பிரத்யேக பயிற்சியாளர்கள் மூலம், பயிற்சி வழங்கப்படுகிறது.
தலைமையாசிரியர் சவுந்தரராஜன், ஆசிரியர்கள் கீதா மணி, நல்லமுத்து, கோமதி ஆகியோர், இதற்கு முழு அளவில் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். அவர்கள் கூறுகையில்,“பல பள்ளிகளில் கீ போர்டு, கிடார், குதிரையேற்றம் என, மேற்கத்திய திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன; ஆனால், அழிந்து வரும் தமிழ் கலாசாரத்தை காப்பாற்ற வேண்டும் என்பது வெறும் பேச்சளவில் மட்டுமே உள்ளது. எனவே, தமிழ் பாரம்பரியத்தை மாணவ, மாணவியர் மத்தியில் பதித்து, அதில் அவர்களின் திறமையை வளர்க்கும் நோக்கில் தான் பறை இசை மற்றும் சிலம்ப விளையாட்டு பயிற்சியை வழங்கி வருகிறோம்; துவக்கப் பள்ளி மாணவர்கள் கூட, இதனை துல்லியமாக கற்று தேர்ந்து வருகின்றனர். சமவெளி பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் இத்தகைய பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. ஆனால், நீலகிரியில் அத்தகைய பயிற்சிகள் மாணவர்களுக்கு வழங்கப்படுவதில்லை என்ற குறை இதன் மூலம் நீங்கியுள்ளது என்பது எங்களுக்கு பெருமை தரக்கூடிய விஷயம்,” என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE