ஆனந்தமாய் வாழ ஆசையா?| Dinamalar

ஆனந்தமாய் வாழ ஆசையா?

Added : ஏப் 24, 2015 | கருத்துகள் (3)
Advertisement
ஆனந்தமாய் வாழ ஆசையா?

யாருக்குத்தான் ஆனந்தமாய் வாழ ஆசை இருக்காது? ஆனால் எப்படி ஆனந்தமாய் வாழ்வது என்பது தான் தெரிய வில்லை. ஆனந்தம் ஆர்ப்பரிக்கும் நிமிடங்களை விட்டுவிட்டுக் கவலைகளின் சவலைப் பிள்ளைகளாய் வருத்தத்தின் நிறுத்தத்தில் நின்றுகொண்டிருக்கிறோமே ஏன்?தங்கக்கடைகளிலும் குழந்தைகள் தேடுவது சாதாரண பலுான்களைத்தான். நிம்மதியான மனமே ஆனந்தத்தின் சந்நிதி; ஆனந்தமனம் இறைவன் உறையும் அரூபபீடம். இடைவிடாமல் ஓடிக்கொண்டிருக்க நாமொன்றும் கடிகார முட்களன்று மனிதர்கள் என்பதை மறவாமலிருப்போம்.வாழ்க்கை என்பது வரமா? சாபமா? என்ற வினாக்கள் வேறு. சீக்குப் பிடித்த சிந்தனைகளின் போக்குப்பிடிக்காமல் துாரநின்று ரசித்துப் பாருங்கள் வாழ்க்கை எவ்வளவு அழகான வரமென்றுபுரியும்.“செல்வம் என்பது சிந்தையின் நிறைவே” என்று குமரகுருபரசுவாமிகள் அழகாக ஆனந்திக்கச் சொன்னதை அறிவோமா?யார்வாழ்வில் சவால்கள் இல்லை? சங்கடங்கள் இல்லை? முள்ளுக்கு மத்தியில்தான் ரோஜா, ராஜாவாகக் கொலுவீற்றிருக்கிறது. கண்ணீரைச் சிந்தும் கண்களுக்கருகில்தான் சிரிப்பைச் சிந்தும் உதடுகள் உற்சாகத்தோடு உட்கார்ந்திருக்கின்றன. எண்ணங்களில் தான் இருக்கின்றன நம் வாழ்வின் நிறைவும் துன்பத்தின் சரிவும்.நம்மூளை நம்மைப்பற்றிச் சிந்திப்பதைவிட மற்றவர்களை மட்டம்தட்ட போடும் திட்டம் தான் அதிகம் எனும் போது மகிழ்ச்சி எப்படி வரும்?நிறைவான மனம் வீடு நிறைக்கும் பொருட்களால் ஆனந்தம் வரப்போவதில்லை; பைநிறைக்கும் பணக்கட்டுகள் ஆனந்தம் தரப்போவதில்லை; நிறைவான மனமே ஆனந்தத்தின் ஆபரணம். வெறுப்பு, புதுசெருப்பு மாதிரி கடித்துக்கொண்டே இருக்கும். யார் மீதும் வெறுப்பின்றி அன்பாயிருப்போம்.உறவுகள் மகிழ்ச்சி வானில் பறக்க உதவும் சிறகுகள். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அவர்களோடு உறவுகளைப் பேணுங்கள். சொந்தமும் பந்தமும் இறைவன் தந்தவரம் என்பதை மறவாதீர்கள்.போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து. பணத்திற்காக ஓடியோடி பிணமாய் அடங்குவதைவிட உள்ளதைக் கொண்டு நல்லதைச் செய்வோமே! மாற்றத்தை ஏற்றுக்கொள்ளாத மனிதர்களுக்கு ஏமாற்றமே எப்போதும் மிஞ்சுகிறது. நல்ல மாற்றங்களை ஏற்றால் ஏற்றம் ஏற்படப்போவது நிச்சயம்.
ஆயுள் முழுக்கக் கற்றுக்கொண்டே இருக்கவும், புதிய அனுபவங்களைப் பெற்றுக்கொண்டே இருப்பதும் வாழ்க்கை என்று உணருங்கள். கிழித்து எறியப்படும் கடந்தகால நாட்களுக்குப் பின்னர்தான் கற்றையாய் புதுநாட்கள் காத்திருக்கின்றன. கடந்து போன ஆண்டின் காலண்டர் அட்டையில்தான் முந்தைய தலைமுறை தேர்வெழுதியது. காலம் நம்மை வீணாக்காமல் கண்ணாய்காக்க வேண்டுமென்றால் எதையும் வீணாக்காமல் பயன்படுத்தக் கற்றுக்கொள்ளுங்கள்.செய்யும் வேலையை ஒழுங்குடனும் மகிழ்வாகவும் நிறைவாகவும் செய்வதும் தியானம் என்று உணருங்கள். சினச்சொற்கள் சிராய்ப்பை உண்டாக்கி, முகம்தெரியா மனிதர்களோடும் வீண் பகையை உண்டாக்கிவிடும். எனவே கந்தகச் சொற்களை விடுத்து கனிவுதரும் கனிச்சொற்களைப் பேசுங்கள்.
நிம்மதியான உறக்கம் :நிம்மதியான உறக்கம் மன இறுக்கம் அறுக்கும். இரவில் கண் விழித்தல் வேண்டாம்; இணைய தரிசனமாயினும் வாட்ஸ்அப் வலம் வருதலாயினும் எல்லையோடிருத்தல் எல்லோருக்கும் நல்லது.ஆயுள் முழுக்க வயிற்றுக்கு உருண்டு உருண்டு உழைத்தாலும் தினமும் ஒருமணி நேரமாவது மனதிற்காகச் செலவிடுங்கள். வானொலி கேளுங்கள், புத்தகம் படியுங்கள், சொற்பொழிவு கேளுங்கள், சிற்பம் பாருங்கள், பாயிரம் பாடுங்கள், சிரிக்கப் பேசுங்கள், பறவை காணுங்கள், பறப்பதாய் உணருங்கள். மனம் விட்டுப் பேசும்போது ரணம் விட்டுப்போய்விடும்.செய்வன திருந்தச் செய்யுங்கள். பழி போடும் குழியாக மாறாதிருங்கள்.தேடலோடு தெருவிறங்குங்கள், வியப்பைத் தேக்கிய விழிகளில்தான் விந்தைக் காட்சிகள் விரைவாய் தெரியும். எல்லா மனிதர்களையும் வேலைகளாகவே பார்க்காதீர்கள். நட்பு பாராட்டவும் நான்குபேர் வேண்டும் என்பதை மறவாதீர்கள். எப்போதும் தராசுத் தட்டுகளோடு அலையாதீர்கள். எல்லோரையும் எடைபோட நாமொன்றும் நடமாடும் எடை மேடைகளில்லை என்பதை உணருங்கள். முழுமையான மனிதர்களோடு மட்டும்தான் முகநக நட்பு என்றால் தனித்தீவாக இருட்டறையில் இருக்கவேண்டியதுதான்.மற்றவர் கருத்திற்கு அளவுக்கதிமாக மதிப்புத்தந்து நம்மை நாம் வருத்திக்கொள்ள வேண்டியதில்லை. அப்படியே புறந்தள்ள வேண்டியதில்லை. நம் எல்லைகள் அறிந்தால் நமக்குத் தொல்லைகள் இல்லை. எல்லோருக்கும் நல்லவராக நடித்துத் தோற்பதைவிட இயல்பாய் இருந்து எப்போதாவது வெல்வது ஏற்புடையதுதான்.பேசும் நேரம் :இல்லாத ஆற்றலை இருப்பதாய் வேடம் போடாதீர்கள். ஒப்பனைகள் கலைந்தால் உள்ளதை ஊரறியும் என்று நம்புங்கள். அடுத்தவர் நம்பிக்கைகளை எள்ளி நகையாடாதீர்கள். நம் நம்பிக்கையை நகையாட நாலுபேர் காத்திருக்கலாம்.
பூவசரம்பூ பீப்பி, நுங்கு வண்டி, பசலிப்பழ நகப்பூச்சு, திருவிழாத் துட்டு, ராட்டினச் சுற்று, மிட்டாய் கைக்கடிகாரம், மரப்பாச்சி பொம்மை, செப்புச் சாமான் விளையாட்டு, பாண்டியாட்டம், பம்பரஆக்கர், பாட்டுப் புத்தகம், கோலிக்காய் விளையாட்டு போன்ற சின்னஞ்சிறு மகிழ்வலைகள் ஆயிரமாயிரம் உண்டு நம்மிடம். ஆனால் அத்தனை மகிழ்ச்சியையும் 'டிவி' தின்று செரித்து நின்று சிரித்துக் கொண்டிருக்கிறதே..பார்க்கும்நேரம் குறைத்து குடும்பத்தாருடன் பேசும்நேரம் அதிகரித்துப் பாருங்கள்... சீரியல் ஓடாமலேயே ஆனந்தம் ஆறாக ஓடும் நம் இல்லத்திலும் நம் உள்ளத்திலும்.
ஆனந்த ஆலயம் :இந்த உலகம் ஆனந்த ஆலயம்; அதில் வசிக்க வந்த நாம் அதை ஒருபோதும் ரசிப்பதில்லை. ஆனந்த அமுதத்தைப் புசித்ததில்லை. குறை காண்பதற்கே நம்குறைவான வாழ்நாட்களைச் செலவழித்துவிட்டுத் திரும்பிப் பார்க்கும்போது வெறுமை ஒன்றே அருமையாகத் தெரிகிறது.தாயின் கதகதப்பான சூட்டில் நிம்மதியாகக் கண்ணயர்ந்து துாங்கிய குழந்தைகளாய் நம் வாழ்வைத் தொடங்கிய நாம், வளரவளரச் சக்கரங்கள் மாட்டிய சக்கரவர்த்திகளாய் மாறியது காலச்சோகம்.காசுக்காகவும் வயிற்றுப் பிழைப்பிற்காகவும் ஓடத்தொடங்கி, ஓட்டத்தை நிறுத்தி வாழப் பார்க்கும்போது வாழ்க்கை முடிய இருக்கும் முன்னறிவிப்பு வருவது எத்தனைத் துயரமானது. எல்லோரையும் திருப்திப்படுத்திவிட்டு நமக்காக நாம் வாழத்தொடங்கும்போது நம்மைவிட்டு எல்லாம் தொலைதுாரம் போய்விட்ட காட்சியைக்காண்பது எத்தனைத் துயரமானது.
ஆனந்த நிமிடங்களை ஆராதிப்போம் அன்றன்றே. அட்டையை உரசியவுடன் இயந்திரத்திலிருந்து வருவதற்கு ஆனந்தம் ஒன்றும் புன்னகை பூதமல்ல. அதுநம் மனதில் உள்ளது, மலராய் உள்ளது, உள்ளத்தில் உள்ளது, உள்ளுக்குள் உள்ளது. இந்த நிமிடத்திலிருந்து நமக்காக வாழத்தொடங்குவோம் ஆனந்தமாக!-முனைவர் சவுந்தர மகாதேவன்,தமிழ்த்துறைத் தலைவர்,சதக்கத்துல்லாஹ் அப்பாகல்லுாரி,திருநெல்வேலி99521 40275வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indian - Bangalore,இந்தியா
24-ஏப்-201523:33:20 IST Report Abuse
Indian மிக அருமையான கட்டுரை.அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று.இன்றைய உலகில் அனைவரும் பணத்தின் பின்னால் ஓடுகிறார்கள் எதற்கும் நேரம் இன்றி.
Rate this:
Share this comment
Cancel
G.Prabakaran - Chennai,இந்தியா
24-ஏப்-201518:08:24 IST Report Abuse
G.Prabakaran அருமையான கருத்துக்களை கொண்ட பதிவு பாராட்டுக்கள்
Rate this:
Share this comment
Cancel
aanthai - Toronto,கனடா
24-ஏப்-201506:47:14 IST Report Abuse
aanthai இன்றைய உலகில் எல்லா வயதினரும் படித்து சிந்திக்க வேண்டிய விஷயம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X