uratha sindanai | மெல்லக் கொல்லும் விஷம்! அப்சல் -சிந்தனையாளர், எழுத்தாளர்| Dinamalar

மெல்லக் கொல்லும் விஷம்! அப்சல் -சிந்தனையாளர், எழுத்தாளர்

Added : ஏப் 25, 2015 | கருத்துகள் (5)
 மெல்லக் கொல்லும் விஷம்! அப்சல் -சிந்தனையாளர், எழுத்தாளர்

ஊருக்கு ஒதுக்குபுறமாய், ஒரு காலத்தில் சாராயக் கடைகள் இருந்தன. அங்கே குடிக்கச் செல்பவர்கள் மறைந்து, வெட்கப்பட்டு செல்வர். குடிகாரன் என்றால், மக்கள் அவர்களை வெறுத்து ஒதுக்கிய அல்லது பயந்து விலகிய காலம் அது. ஆனால், இன்று டாஸ்மாக் கடைகளுக்கு நடுவே தான் நம் வீடுகளும், கடைகளும் இருக்கின்றன. ஒரு சில கடைகளுக்கு பெண்களே வந்து வாங்கிச் செல்வதையும் பார்க்கிறோம்.

குடித்து விட்டு பைக் ஓட்டினால், கார் ஓட்டினால் வழியில் சோதனை செய்யும் காவல் அதிகாரிகள் அபராதம் விதிக்கின்றனர். அரசே மதுக்கடைகளை நடத்தி விட்டு, குடித்து விட்டு வண்டி ஓட்டுபவர்கள் மீது அபராதம் விதிப்பது முரண்பாடு.இது, இரண்டு பக்கமும் வருமானம் பார்க்கும் செயலாக இருக்கிறது. குடிப்பது தவறானது என்கிற குற்ற உணர்வு, சமூகத்தில் இன்னும் கொஞ்சம் மிச்சமிருக்கிறது.ஆனால், அதைவிட மிகப்பெரிய ஆபத்து, நம் சமூகத்தில் மெதுவாக சத்தமே இல்லாமல் பரவி வருகிறது. சின்ன பெட்டிக் கடைகளில் கூட பான் மசாலா, குட்கா, பான்பராக், சைனி கைனி, மாவா, ஜந்தா பீடா போன்ற போதை வஸ்துக்கள், ஏதோ கம்மர்கட் விற்பதை போல சாதாரணமாக விற்பனையாகிறது. இதை, பெண்கள் மற்றும் சிறுவர்கள் கூட எளிதாக வாங்கி வாயில் மென்று, இதற்கே அடிமையாகி வருகின்றனர்
.
கடந்த, 30 ஆண்டுகளாக, இந்த நஞ்சு கொஞ்சம் கொஞ்சமாக தமிழகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம், குக்கிராமங்களில் கூட பரவி விட்டது. அச்சமயத்தில் பிரபலமாக இருந்த ஒரு சினிமா நடிகர் தான், தன் சொந்த வாழ்விலும், சினிமாவிலும் இதை பிரபலப்படுத்தினார்.அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக வடமாநிலங்களிலிருந்து வந்தவர்களால், இந்த நச்சுப் பொருட்கள் இங்கே பரவியது. இறுதியாக, இப்போது பார்த்தால் அதை விற்காத பெட்டிக் கடைகளே இல்லை. அப்பழக்கமே இல்லாத ஆட்களே இல்லை என்கிற நிலைக்கு நாடு வந்து விட்டது.குறைந்த விலையில் கிடைக்கிறது. மது குடித்தால் போதை வெளியே தெரிந்து விடும். ஆனால், இது உள்ளுக்குள்ளே வேலையை காட்டி, ஒருநாள் அது நம்மைக் கொல்லும் எமனாக மாறும். இந்தியாவில் புகையிலையால் ஏற்படும் வாய் புற்றுநோய் மரணங்கள் இதை நிரூபிக்கின்றன.மிக சமீபத்தில் சுனிதாதோமர் எனும், 28 வயது பெண்மணி, இரு குழந்தைகளுக்கு தாய். புகையிலை பழக்கத்தால், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, இறந்ததும் தான், மறுபடியும் இப்பிரச்னை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எல்லாம் கொஞ்ச நாள் சலசலப்பு தான்; பின் மறந்து போவர்.

எவ்வளவு துாரம் ஒரு பொருளை வாங்காதே என்று சொல்கிறீர்களோ, அதனால், ஆபத்து என்று விளம்பரப்படுத்துகிறீர்களோ, அதன் விற்பனை அதிகமாவது கண்கூடு. அது மட்டுமில்லை. அதை விற்காதே என்று கடைகளுக்கு தடை போட்டால், அவர்கள் அதிக விலைக்கு மறைமுகமாக விற்பர். இதுதான், இங்கே காலம் காலமாய் நடந்து வருகிறது. இந்த நச்சுப் பொருட்களை, ஒட்டு மொத்தமாய் தடை செய்யும் முடிவு தான் இதற்கு தீர்வு. அந்த தைரியம் ஏன் அரசியல்வாதிகளுக்கு இல்லை. ஒரு கொலையை செய்கிறவனை கைது செய்கிறோமே, இப்படி மெல்லக் கொல்லும் விஷம் மூலமாய், பல பேரை கொல்கிறானே அவனுக்கு என்ன தண்டனை? புகையிலை பொருட்களை தடை செய்தால், விவசாயிகள் பாதிக்கப்படுவர் என்று கவலைப்படுகிறார், ஒரு எம்.பி., எத்தனை விவசாயிகள் வாழ்க்கை வறண்டு போய் தற்கொலை செய்து கொண்டனரே, அப்ப எங்கே போச்சு இவர்களின் அக்கறை. உண்மையில் இவர்கள் கவலைப்படுவது ஏழை விவசாயிகளை பற்றி அல்ல. இந்த போதை வஸ்துக்களை உருவாக்கி, கொள்ளை லாபம் பார்க்கும் கோடீஸ்வர தொழில் அதிபர்களின் வளர்ச்சியை பற்றி தான்.இவர்களுக்கு ஓட்டு போட்டு எம்.பி.,யாக்கும் ஏழை மக்கள், தினசரி துயரங்களை மறக்க போதை வஸ்துக்களுக்கு அடிமையாகி, புற்றுநோய் வந்து சிறு வயதிலேயே செத்து தொலைய வேண்டும். ஆனால், இந்த அரசியல்வாதிகளோ, தொழில் அதிபர்களுக்கும், கோடீஸ்வரர்களுக்கும் சேவை செய்து கொண்டிருப்பர்.

இன்னொரு எம்.பி.,யோ, 'புகையிலை மெல்வதற்கும், பீடி, சிகரெட் குடிப்பதற்கும், புற்றுநோய்க்கும் தொடர்பு இல்லை' என்கிறார். இவர் மருத்துவம் அறிந்தவரா? ஆனால், மெத்தப் படித்த மருத்துவர்கள், அறிஞர்கள், அனுபவசாலிகள், 'புற்றுநோய்க்கும், புகையிலைக்கும் தொடர்பு இருக்கிறது' என்று அடித்துச் சொல்கின்றனர்.
புகையிலை, பீடி, சிகரெட் பயன்படுத்துவதால், உயிருக்கு ஆபத்து என்று எழுதுவதாலோ, படமாக காட்டுவதாலோ சித்திரமாக வரைவதாலோ, விளம்பரங்கள் செய்வதாலோ, சினிமாவில், 'டிவி'யில் அந்த மாதிரி காட்சிகள் வரும்போது, 'உடலுக்கு தீங்கானது' என்று, சொற்றொடர் போடுவதாலோ இந்தப் பிரச்னை தீராது.
ஒட்டுமொத்தமாக போதை வஸ்துக்களை தடை செய்வதன் மூலம் தான், இளைய சமுதாயத்தை காப்பாற்ற முடியும். இல்லாவிடில், இன்னும் கொஞ்ச காலத்தில், இளைய தலைமுறையிடையே இந்த பழக்கம் வெகு வேகமாக பரவி, அவர்களை அடிமைப்படுத்தி விடும்.

மேலும், 30 - 40 வயதிலிருக்கும் இளைஞர்களிடையே, இந்த போதை பழக்கத்தினால் புற்றுநோய் பாதிப்பு, 30 சதவீதம், கடந்த சில ஆண்டுகளாய் அதிகரித்துள்ளது. இந்தியாவில் இருக்கும் புற்றுநோயாளிகளில், 40 சதவீதம் பேர் புகையிலை பயன்படுத்துவதால் தான் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.
இதை இப்போதே ஒழிக்காவிட்டால், வருங்காலத்தில் மதுவை விட வேகமாக பரவுவதுடன், அதை விட அதிகமாக அழிவையும் உருவாக்கக்கூடிய போதைப் பொருளாக, இந்த வஸ்துக்கள் தலையெடுக்கும்.வளமான தேசத்தை உருவாக்க, வலுவான இளைஞர்களும், நல்ல சிந்தனை கொண்ட இளைஞர் சமுதாயமும் தான் தேவை. அதனால் தான், விவேகானந்தரும், 'எனக்கு நுாறு இளைஞர்களை தாருங்கள்; நான் நாட்டின் தலைவிதியை மாற்றிக் காட்டுகிறேன்' என்றார்.
இன்று, நுாறு இளைஞர்களுக்கு எங்கே போவது? அவர்கள் வாயிலிருந்து கேள்வி வரக் கூடாது என்று, கவனமாக வேறு ஏதோ ஒன்றை மென்று தின்ன கொடுத்து விட்டது அதிகார வர்க்கம்.ஒரு அணுகுண்டை வீசி ஒரே நொடியில், ஒரு தேசத்தை அழிப்பதை விட ஆபத்தானது, இப்படிப்பட்ட போதை வஸ்துக்களால் கொஞ்சம் கொஞ்சமாக அந்த தேசத்தின் இளைய தலைமுறையை கொல்வது. சிலருடைய லாபத்துக்காக நாம் மவுனமாக இருந்தால், வரலாறு நம்மை மன்னிக்காது.இ-மெயில்: affu16.in@gmail.com

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X